“ஒரு ஜூஸ் விலை இருபது ரூபா, நீங்க குடிக்காம பிள்ளைக்கி மட்டும் வாங்கி குடுக்குறதால விலை பத்துருவா… அம்மா அப்பா காசுல குடிக்கிற வரைக்கும் பிள்ளைங்க பாதி ஜூஸ்ச குடிக்கட்டும்… சம்பாரிக்க ஆரம்பிச்சதும் முழுசா வாங்கி குடிக்கட்டும்.” என்றார் ரோட்டோரம் தள்ளுவண்டியில் ஜூஸ்கடை நடத்தும் ராமச்சந்திரன்.

கையில காசு இருக்குண்ணே நீங்க முழுசாவே குடுங்க. எனக்கு ஜூஸ் ஒத்துக்காது அதான் வேண்டான்னு சொன்னேன்.

“ஜூஸ் விலைய கேக்கும் விதமே தெரிஞ்சுரும் யாருக்கு பாதி விலையில கொடுக்கனும் யாருக்கு முழு விலையில கொடுக்கனுமுன்னு… இத்தன வருச வியாபாரத்துல இதக்கூட கத்துக்கலன்னா எப்படி.

பெத்தவங்க.. கையில பணம் இருக்கா இல்லையான்னு தெரியாமெ பிள்ளைங்க கை நீட்டிட்டு நின்னுடும். சங்கடப்பட்டு பெத்தவங்க பைய துழாவிட்டு நிப்பாங்க.. விலைவாசி பத்தி குழந்தைக்கி தெரியுமா..? ஆசைபட்டதெல்லாம் சாப்பிட நெனைப்பாங்க. வெவரம் தெரிஞ்சா உலகம் புரிஞ்சிரும் அதுவரைக்கும் குழந்தைக்கி பாதிவிலை.”

ஹைதராபாத்தை பிறப்பிடமாகக் கொண்ட ராமச்சந்திரனுக்கு தென்மாவட்டத்து பரமக்குடிதான் சொந்த ஊரு. முப்பது வயசுல ஐதராபாத் வாழ்க்கைக்கு விடை கொடுத்தவர் அதன் பிறகு சென்னையில தள்ளுவண்டி கடை போட்டு பயணத்தை தொடங்கினார். இப்ப எழுவத்தஞ்சு வயசு கடந்தபின்னும் சோர்வடையா முகமலர்சியும் சுறுசுறுப்பும் நம்மை வெக்கப்படச் செய்யுங்கறதுல சந்தேகமில்ல.

“வாசமில்லா பூக்கடையுமில்ல.. ஈயில்லா ஜூஸ்கடையிமில்ல…” ன்னு யோசித்தேன். ஆனா இந்த ஜூஸ் கடையின் அடையாளமா தள்ளுவண்டி பக்கவாட்டுல கூட ஒரு ஈயக் காணோம்.

அவரும் அவர் தள்ளுவண்டி கடையும் எந்த பிசுபிசுப்பும் இல்லாமல் படு சுத்தமாக உழைப்பின் சாட்சியாக இருந்தது. கையிருப்பை புரிந்து கொண்டு மனிததன்மையோடு அவர் நடந்து கொண்ட விதம் கொஞ்ச நேரம் அவரிடம் பேசினால் இளைப்பாறுவதற்கு சமம் என தோன்றியது.

உங்க நல்ல மனசு வேற யாருக்கும் வாராதுண்ணே.

“அப்புடியெல்லாம் இல்லம்மா.. இரக்க குணம், நல்ல மனசெல்லாம் ஒடம்ப வருத்தி ஒழைக்கிற எல்லார்டையும் இருக்கு. அவங்களுக்கு தெரியும் பத்துரூவா சம்பாதிக்க எத்தன பாடுபடனுமுன்னு. இப்ப வியாபார ஒலகமா போச்சு… அதனால ஒன்னு வாங்கினா ஒன்னு இலவசம் ரெண்டு இலவசம்னு சனங்க மத்தியில இருந்த நல்ல மனச வியாபாரமா ஆக்கிப்புட்டாங்க.”

அடுத்து நான் வாய் திறக்கும் நேரம் பாத்து வேரு ஒருவர் வந்துட்டார்… வந்தவர் நண்பர் போலிருக்கு அவருடன் நெருக்கமாக பேசினார். ஜூசை குடித்துக் கொண்டே நலம் விசாரிப்பில் தொடங்கி அரசியல் வரை நீண்டது அவர்கள் பேச்சு.

வந்தவர் “என்னண்ணே நல்லாருக்கிங்களா. எடம் தரமாட்டேன்னு சொன்ன ஒங்காளு மூக்கறுக்குற மாறி கலைஞருக்கு எப்படி மெரினாவுல எடம் வாங்குனம் பாத்திங்கலா?”

“எங்காளுன்னு சொல்லாதிங்க தம்பி. நானு அ.தி.மு.க காரன் கெடையாது ஏஞ்சின்னம் ரெட்டை இலை அவ்ளதான்… இத பல தடவ உங்களுக்கு சொல்லிட்டேன் நான் எம்.ஜி.ஆர் ரசிகன். அதனால அந்த சின்னத்துக்கு ஓட்டு போடுறேன். கட்சி கிட்சியெல்லாம் எதுவும் கிடையாது.”

நான் போனது ஆதார் அட்டைக்கான அவசர வேலையா. சும்மாவே வாய் பாக்குற பழக்கம் எனக்கு. பேச்சு சுவாரஸ்யமா இருக்கவும் அவசர வேலைய அடுத்த நாள் தள்ளி வச்சுட்டு அங்கேயே பட்டறைய போட்டுட்டேன்.

படிக்க:
♦ சென்னையில் மோர் விற்கும் ஒரிசாவின் அமர் பிரசாத்
♦ சாலையோர பிரம்புக் கடையும் சிறுவனின் சயின்டிஸ்ட் கனவும் !

“தம்பி! உங்களப்போல நானும் கலைஞருக்கு மெரினால எடம் கெடைக்கனும்ன்னு ஆசப்பட்டேன். அதுக்காக அவரு இறந்து போயிட்டாருன்னு  ஒசத்தியா ஒத்துகிட்டேன்னு அர்தம் கெடையாது. கலைஞர் மேலையும் எனக்கு நெறையா கோபம் இருக்கு. “தேனு எடுக்குறவன் பொறங்கைய நக்காமெ இருக்க மாட்டான்”. அதுவும் அரசியல்ல வாய்ப்பு கெடைச்சா சொல்லவே வேண்டாம் மொழங்கை வரைக்கும் நக்குவாய்ங்க. இருந்தாலும் கலைஞர் அறிவும் அனுபவமும் வயசும் மக்களுக்கு கொஞ்சம் செஞ்சுருக்குன்னு ஒத்துக்கிட்டுதான் ஆகனும்.”

“எல்லாரையும் போல நீங்களும் அரசியல் ஒரு சாக்கடன்னு சொல்றீங்க அப்புடிதாணே?”

“அரசியல்வாதிங்களதான் சுத்தமில்லன்னு சொல்றேன் தம்பி. அரசியல்ல எது ஒழுங்கா நடக்குது. நான் போட்ட ‘முதல் ஓட்டே’ கள்ள ஓட்டுதான். அதுவும் அடுத்த மாநிலத்துல. இதுக்கு என்னா சொல்றீங்க.”

அடுத்து கேட்க விடாமல் அலைபேசி அவரை அழைத்தது…

“அண்ணே முக்கியமான காலு.. அப்பரம் பாக்கலாம் ”என சொல்லிட்டு வந்தவர் பொசுக்குன்னு கிளம்பிட்டார்.

டிவி விவாதத்துல கோர்வையா பேசும் போது மைக்க நிறுத்திட்டாப் போல ஆச்சு ஜூஸ் கடைக்காரருக்கு. அவங்க பேச்ச கேட்ட எனக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது போல ஆச்சு.

என்ன செய்ய! விட்ட எடத்துலேருந்து தொடங்குனேன்.

“அது எப்படிண்ணே கட்சி கொள்கை எதுவும் இல்லாமெ ரெட்டலைக்கி ஓட்டு போடும் நீங்க அடுத்த மாநிலத்துல எந்த அடிப்படையில ஓட்டு போட்டிங்க.”

“அங்கையும் எம்.ஜி.ஆர் வச்சுதான் ஓட்டு போட்டேன்.”

“வெளங்குறா மாறி சொல்லுங்கண்ணே.”

“ஹைதராபாத்துல என்.டி.ஆர்- தான் முதலமைச்சரா இருந்தாரு. என்.டி. ராமராவும் நம்ம எம்.ஜி.ஆர் –ரும் தோஸ்து. எம்.ஜி.ஆரு-க்கு தோஸ்துன்னா நமக்கும் தோஸ்த்து. உண்மைய சொல்லனுன்னா விசுவாசமான ரசிகனா இருந்தேன். இப்ப விசுவாசம் எங்க போயி நிக்குதுன்னா ரெட்டலை சின்னத்த எந்த நாயி வச்சுருந்தாலும் அதுக்கு ஓட்டு போட்டு தொலைவோன்னு வந்துருச்சு.”

“என்னண்ணே இப்படி பேசுறீங்க?”

“நீங்களே பாக்கிறிங்க.., அந்தம்மா செத்த பிறகு அ.தி.மு.க -காரன் எந்தன தினுசுல அடிச்சுக்கிறான்னு. இவனுங்களுக்கு கட்சி விசுவாசமெல்லாம் கெடையாது. நம்ம போல மக்களுக்குதான் கட்சி, விசுவாசம் எல்லாம் இருக்கு.

ரசிகர் கூட்டத்தாலதான் அ.தி.மு.க கட்சியே தமிழ் நாட்டுல காலு ஊனுச்சு. அத பாத்துட்டு அடுத்தடுத்து எல்லாரும் சினுமாவுல இருந்தே வர ஆரம்பிச்சுட்டானுங்க. கொள்கை அரசியல் பேசி ஓட்டு வாங்கறத விட சினிமாவுல ஆடிப்பாடி வசனம் போசி சேத்து வச்சுருக்கும் ரசிகர்கள்ட ஈசியா ஓட்டு வாங்கிடலாமுன்னு நெனைக்கிறானுங்க.”

“நீங்க சொல்றத பாத்தா எம்.ஜி.ஆர்., தொடங்கி ரஜினி கமலு வரைக்கும் மக்கள ஆடிப்பாடி மயக்கிறலாங்கற நெனப்புல வாராப் போல சொல்றீங்க.”

“சினிமாவும் அரசியலும் எப்புடி கலந்துருக்குன்னு நான் பொதுவா சொன்னேன். நீங்க பேரோட சொல்றீங்க அவ்வளவுதான். ஆனா இனிமே இப்படியான அரசியலெல்லாம் செல்லுபடி ஆகதுன்னுதான் நெனைக்கிறேன்.”

“அண்ணே நீங்க கோபமும் விரக்தியும் கலந்து பேசுறாப்போல இருக்கு.”

“பின்னே என்னம்மா இந்த ஜூஸ் கடைய வைக்க ஆயிரத்தெட்டு ரூல்ஸ் போட்றாங்க. தள்ளுவண்டி கடையின்னு மாநகராட்சியில பதிஞ்சுருக்கனும். கடை சாமானெல்லாம் சுத்தபத்தமா இருக்குன்னு தர சான்றிதழ் வாங்கியிருக்கனும். வரி கட்டனும். இதுக்கே இத்தன கட்டுப்பாடு இருக்கு அதுக்கு உட்பட்டு நடக்குறேன். இதப்பாருங்க தர சான்றிதழ் எல்லாம் வச்சுருக்கேன்.

ரோட்டு ஓரத்து தள்ளுவண்டி கடைக்காரன் நானு, எனக்கான விதிமுறைகள ஒழுங்கா கடைபிடிக்கிறேன் நேர்மையா நடந்துக்கிறேன். என்னப்போல பல லட்சம் மக்கள ஆளப்போற அவனுகளுக்கு நேர்மை இருக்கனுன்னு நெனைக்கிறது தப்பா.”

“சரிண்ணே இப்ப சொல்லுங்க யாரு வந்தா எல்லாம் சரியாருக்கும்னு நெனைக்கிறிங்க?”

“நீ வேறம்மா என் வாயப் புடுங்குற… வாதத்துக்காக நானு எதிர் பேச்சு பேசலம்மா. நீங்க மக்கள நெனச்சு பாருங்க இவங்க வந்தா நம்ம நெலம மாறிடாதா..? அவங்க வந்தா நம்ம நெலம மாறிடாதான்னு மாத்தி மாத்தி ஓட்ட போட்டு ஜெயிக்க வைக்கிறாங்க. வர்ரவங்க எல்லாருமே சனங்களுக்கு நம்பிக்க துரோகம் செய்றாங்க. இதுல யார நான் கைகாட்றது..?”

சரசம்மா
– சரசம்மா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க