மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 45

மாக்சிம் கார்க்கி
”நாய்க்குப் பிறந்த பயல்களா! நீங்கள் எல்லாம் முட்டாள்கள். உங்களுக்குத் தெரியாத விஷயங்களிலெல்லாம் நீங்கள் தலை கொடுக்கிறீர்கள். இது ஓர் அரசாங்கக் காரியம் தெரியுமா? நீங்கள் எனக்கு நன்றிதான் செலுத்த வேண்டும். நான் உங்களிடம் இவ்வளவு நல்லபடியாய் நடந்து கொண்டதற்காக, நீங்கள் என் முன் மண்டியிட்டு உங்கள் நன்றி விசுவாசத்தைக் காட்ட வேண்டும். உங்கள் அனைவரையும் கடுங்காவல் தண்டனைக்கு ஆளாக்க வேண்டுமென்று நான் நினைத்தால், அப்படியே செய்து முடிக்க எனக்குத் தைரியம் உண்டு.”

தலைகளிலே தொப்பியே வைக்காத சில முஜீக்குகள் மட்டும் அவன் சொன்னதைக் காதில் வாங்கிக் கொண்டார்கள். மேகக்கூட்டங்கள் தணிந்து இறங்கிக் கவிந்த உடனேயே இருள் பரவ ஆரம்பித்தது. அந்த நீலக்கண் முஜீக், தாய் நின்றுகொண்டிருந்த இடத்தை நோக்கி வந்து சேர்ந்தான்.

“என்ன நடக்கிறது என்று பார்த்தீர்களா?”

“ஆமாம்” என்று மெதுவாகச் சொன்னாள் தாய்.

“நீங்கள் இங்கு எதற்கு வந்தீர்கள்?” என்று அவளது கண்களையே பார்த்துக்கொண்டு கேட்டான் அவன்.

”நான் விவசாயிப் பெண்களிடமிருந்து லேஸ்களும், துணிகளும் விலைக்கு வாங்க வந்தேன்.”

அந்த முஜீக் தன் தாடியை மெதுவாகத் தடவிக் கொடுத்தான்.

“எங்கள் பெண்கள் அந்தச் சாமான்களையே நெய்வதில்லையே!” என்று மெல்லக் கூறிக்கொண்டே அந்தக் கட்டிடத்தை ஒரு பார்வை பார்த்தான் அவன்.

தாய் தனது கண்ணால் அவனை ஒருமுறை அளந்து பார்த்தாள். உள்ளே போவதற்கு வசதியான நேரத்தை எதிர்நோக்கி நின்று கொண்டிருந்தாள். அந்த முஜீக்கின் முகம் அழகாகவும் சிந்தனை நிரம்பியதாகவும் இருந்தது. அவனது கண்களில் சோக பாவம் ததும்பியது. அவன் நெடிய உருவமும் அகன்ற தோள்களும் உடையவனாயிருந்தான்; ஒரு சுத்தமான துணிச் சட்டையும் சட்டைக்கு மேல் ஏகப்பட்ட ஒட்டுக்களுடன் கூடிய ஒரு கோட்டும், கபில நிறமான முரட்டுக் கால்சராயும், வெறும் கால்களில் செருப்புக்களும் அணிந்திருந்தான்.

இனந்தெரியாத காரணத்தால் தாய் நிம்மதியோடு ஆழ்ந்து பெருமூச்செறிந்தாள். தட்டுத் தடுமாறும் தனது சிந்தனைகளையும் முந்திக் கொண்டு உந்திவரும் ஓர் உணர்ச்சியால் அவள் திடீரெனப் பேசினாள்:

”இன்றிரவு நான் இங்கே தங்குவதற்கு இடம் கொடுப்பாயா?”

அந்தக் கேள்வி அவளுக்கே எதிர்பாராத சொல்லாக ஒலித்தது. அந்தக் கேள்வியைக் கேட்டவுடனேயே அவளது உடல் முழுவதும் திடீரென இறுகுவது போல் இருந்தது. அவள் நிமிர்ந்து நின்று அந்த மனிதனை உறுதியோடு அசைவற்றுப் பார்த்தாள். என்றாலும் பின்னி முடியும் சிந்தனைகள் அவளது மனத்தை உறுத்திக்கொண்டே இருந்தன.

“நான்தான் நிகலாய் இவானவிச்சின் அழிவுக்குக் காரணமாயிருப்பேன். பாவெலையும் நான் ரொம்ப காலத்துக்குப் பார்க்கவே முடியாது. அவர்கள் என்னை அடிக்கத்தான் போகிறார்கள்!”

அந்த முஜீக் அவசரம் ஏதுமில்லாமல், தரையை நோக்கியவாறே தனது கோட்டை இழுத்துவிட்டுக் கொண்டு நிதானமாகப் பதில் சொன்னான்:

“இரவு தங்குவதற்கா? ஏன் தரமாட்டான்? என் வீடு ஒரு சின்ன ஏழைக் குடில். அவ்வளவுதான்.”

”நல்ல வீடுகளில் இருந்து எனக்குப் பழக்கமேயில்லை” என்றாள் தாய்.

“அப்படியென்றால் சரி” என்று கூறிக்கொண்டே அந்த முஜீத் தலையை உயர்த்தி மீண்டும் தன் கண்களால் அவளை அளந்து நோக்கினான். ஏற்கெனவே இருண்டு விட்டது. அவனது தோற்றத்தில் இருளின் சாயை படிந்திருந்தது. அவனது கண்கள் மங்கிப் பிரகாசித்தன; முகம் அந்தி மயக்க மஞ்சள் வெயிலால் வெளிறித் தோன்றியது.

”சரி, நான் இப்போதே வருகிறேன். தயைசெய்து என்னுடைய டிரங்குப் பெட்டியை கொஞ்சம் தூக்கி வருவாயா?” என்று மெதுவாகச் சொன்னாள் தாய். அப்படிச் சொல்லும்போது அவள் மலை மீதிருந்து சரிந்து விழுவது போல் உணர்ந்தாள்.

”சரி.”

“அவன் தோள்களை உயர்த்தி மீண்டும் தன் கோட்டைச் சரி செய்து கொண்டான்.”

”இதோ வண்டி வந்துவிட்டது” என்றான் அவன்.

ரீபின் அந்த அரசாங்கக் கட்டிடத்தின் முகப்பில் தோன்றினான். அவனது தலையிலும் முகத்திலும் கட்டுகள் போடப்பட்டிருந்தன; அவனது கைகளும் மீண்டும் கட்டப்பட்டிருந்தன.

”போய் வருகிறேன். நல்லவர்களே” என்ற குரல் அந்த குளிரில் அந்தி மயக்க ஒளியினூடே ஒலித்தது. உண்மையை நாடுங்கள், அதைப் பேணிப் பாதுகாருங்கள். உங்களிடம் தூய்மையான பேச்சுப் பேசும் மனிதனை நம்புங்கள். சத்தியத்தைக் காப்பதற்காக போராடத் தயங்காதீர்கள்!”

”உன் வாயை மூடும்” என்று போலீஸ் அதிகாரி கத்தினான். “ஏ, போலீஸ்கார மூடமே குதிரையைத் தட்டி விடு!”

“நீங்கள் எதை இழக்கப் போகிறீர்கள்? உங்கள் வாழ்க்கையை எண்ணிப்பாருங்கள்.”

வண்டி புறப்பட்டுச் சென்றது. இரு போலீஸ்காரர்களுக்கிடையில் ரீபின் உட்கார்ந்திருந்தான். அங்கிருந்தவாறே அவன் சத்தமிட்டான்.

“நீங்கள் ஏன் பட்டினியால் செத்துக் கொண்டேயிருக்க வேண்டும்? உங்களுக்குச் சுதந்திரம் கிடைத்து விட்டால், உங்களுக்கு உணவும் கிடைக்கும், நியாயமும் கிட்டும். போய் வருகிறேன், நல்லவர்களே!’’

வண்டிச் சக்கரங்களின் பலத்த ஒசையாலும், குதிரைகளின் காலடியோசையாலும், போலீஸ் தலைவனின் குரலாலும் ரீபினுடைய குரல் ஆழ்ந்து அமிழ்ந்து போய்விட்டது.

”எல்லாம் முடிந்தது” என்று தலையை அசைத்துக்கொண்டே சொன்னான் அந்த முஜீக். பிறகு தாயின் பக்கம் திரும்பித் தணிந்த குரலில் பேசினான். “எனக்காகக் கடையில் கொஞ்ச நேரம் காத்திருங்கள், நான் இதோ வந்துவிடுகிறேன்.”

தாய் அறைக்குள் சென்று, அந்தக் கடையின் அடுப்புக்கு எதிராக இருந்த மேஜையருகில் உட்கார்ந்தாள். அவள் ஒரு துண்டு ரொட்டியை எடுத்துப் பார்த்துவிட்டு அதைத் தட்டிலேயே வைத்துவிட்டாள். மீண்டும் அவளுக்கு அந்தக் கிறக்க உணர்ச்சி ஏற்பட்டது. அவளால் சாப்பிடக்கூட முடியவில்லை. அவளது உடம்பு குதுகுதுத்துக் காய்ந்து உடலை பலவீனப்படுத்தியது. அந்தக் காய்ச்சல் இருதயத்தின் ரத்த ஓட்டத்தை இழுத்து நிறுத்தி, அவளைக் கிறக்கச் செய்தது. அவளுக்கு முன்னால், அந்த நீலக்கண் முஜீக்கின் முகம் தெரிந்தது. ஆனால் அந்த முகம் பரிபூரணமாகத் தோன்றவில்லை. அதைக் கண்டவுடன் அவநம்பிக்கை உணர்ச்சி மேலிட்டது. அவன் தன்னைக் கைவிட்டுவிடுவான் என்று எண்ணிப் பார்க்க அவள் விரும்பவில்லை. இருந்தாலும் அந்த எண்ணம் அவள் மனத்தில் எப்போதோ குடி புகுந்துவிட்டது. அவளது இதயத்தை ஒரு பளு அழுத்தியது.

“அவன் என்னைக் கவனித்தானே. கவனித்துப் பார்த்து ஊகித்துக் கொண்டானே” என்று அவள் லேசாகச் சிந்தித்தாள்.

அந்த எண்ணம் வளரவில்லை. கிறக்க உணர்ச்சியிலும் குழப்ப உணர்ச்சியிலும் அந்த எண்ணம் முங்கி மூழ்கிப் போய்விட்டது. ஜன்னலுக்கு வெளியே முன்னிருந்த இரைச்சலுக்குப்பதில் இப்போது ஆழ்ந்த அமைதி நிலவியது. அந்த அமைதி அந்தக் கிராமம் முழுவதையும் சுற்றி வட்டமிடும் பயவுணர்ச்சியையும் பாரவுணர்ச்சியையும் பிரதிபலித்துக் காட்டியது. தனிமை உணர்ச்சி பெருகியது. சாம்பலைப் போல் நிறம் கறுத்த ஒர் அந்தி மயக்கத்தை இதயம் முற்றிலும் பரப்பியது.

மீண்டும் அந்த யுவதி வாசல் நடையில் தோன்றினாள்.

”நான் உங்களுக்குப் பொரித்த முட்டை கொண்டுவரட்டுமா?” என்று கேட்டாள்.

”சிரமப்படாதே. எனக்குச் சாப்பிடவே மனமில்லை. அவர்களுடைய கூச்சலும் கும்மாளமும் என்னைப் பயமுறுத்தி விட்டுவிட்டன.

அந்தப் பெண் மேஜையருகே வந்து ரகசியமாக உத்வேகம் நிறைந்த குரலில் பேசினாள்.

”அந்தப் போலீஸ் தலைவன் அவனை எப்படி அடித்தான் தெரியுமா? நீங்கள் அதைப் பார்த்திருக்க வேண்டும். நான் பக்கத்தில்தான் நின்றேன். கன்னத்தில் கொடுத்த அறையில் அவன் பற்கள் உதிர்ந்துவிட்டன. அவன் குபுக்கென்று ரத்தம் கக்கினான். கரிய சிவந்த கட்டியான ரத்தம் அவனது கண்கள் வீங்கிப்போய் மூடிவிட்டன. அவன் ஒரு தார் எண்ணெய்த் தொழிலாளி. அந்தப் போலீஸ் ஸார்ஜெண்டோ மாடி மேலே போய்ப் படுத்துக்கொண்டு நன்றாகக் குடித்து மயங்கிக் கிடந்தான். இன்னும் குடிக்கக் கேட்டான். ஒரு பெரிய சதிக் கூட்டமே இருக்கிறதாம். அவர்களுக்கெல்லாம் இந்தத் தாடிக்கார மனுஷன்தான் தலைவனாம். மூன்று பேர்களைப் பிடித்தார்களாம். ஒருவன் தப்பியோடிவிட்டானாம். இவர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்களென்று ஒரு பள்ளிக்கூட உபாத்தியாயரையும் அவர்கள் பிடித்திருக்கிறார்களாம். இவர்களுக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாதாம்; தேவாலயங்களைக் கொள்ளையடிக்கும்படி மற்றவர்களைத் தூண்டி விடுகிறார்களாம். இவர்கள் இப்படிப்பட்ட ஆசாமிகள்தானாம். எங்கள் கிராமத்து முஜீக்குகள் சிலர் இவர்களுக்காக வருத்தப்பட்டார்கள். சிலர் இவர்களுக்கு இத்தோடு சமாதி கட்டிவிட வேண்டும் என்று சொல்லுகிறார்கள். இந்த மாதிரியான கேவல புத்தி படைத்த முஜீக்குகள் இங்கே அதிகம் பேர் இருக்கிறார்கள்!”

அந்தப் பெண்ணின் தொடர்பிழந்த படபடக்கும் பேச்சைத் தாய் கவனமாகக் கேட்டாள். அதைக் கேட்டு தனது பயத்தையும் பீதியையும் போக்கி வெற்றி காண முனைந்தாள். தனது பேச்சைக் கேட்பதற்கும் ஓர் ஆள் இருக்கிறது என்ற உற்சாகத்தில் அந்தப் பெண் உத்வேகமும் உவகையும் பொங்கித் ததும்ப, ரகசியமான குரலிலேயே பேசத் தொடங்கினாள்.

”இதெல்லாம் வெள்ளாமை விளைச்சல் சரியாக இல்லாததால்தான் ஏற்படுகிறது என்று எங்கள் அப்பா சொல்கிறார். இரண்டு வருஷ காலமாய் இங்கே நிலத்திலே எந்த விளைச்சலும் கிடையாது. இதனால்தான் இத்தகைய முஜீக்குகள் தோன்றுகிறார்கள். கிராமக் கூட்டங்களில் அவர்கள் சண்டைப் பிடிக்கிறார்கள்; கூச்சல் போடுகிறார்கள். ஒரு நாள் வசுகோவ் என்பவன் பொருள்களை, அவன் வரி கட்டவில்லை என்பதற்காக ஏலம் போட்டார்கள். அவனோ ”இதோ உன் வரி” என்று சொல்லிக் கொண்டே நாட்டாண்மைக்காரரின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விடுகிறான்.”

வெளியே பலத்த காலடியோசை கேட்டது. தாய் மேஜையைப் பிடித்தவாறே எழுந்து நின்றாள்.

அந்த நீலக்கண் முஜீக் தனது தொப்பியை எடுக்காமலே உள்ளே வந்தான்.

“உன் பெட்டி எங்கே?”

அவன் அதை லேசாகத் தூக்கி ஆட்டிப் பார்த்தான்.

“காலிப் பெட்டிதான். சரி, மார்க்கா! இவளை என் குடிசைவரை கூட்டிக்கொண்டு போ.”

அவன் திரும்பிப் பார்க்காமலே சென்றான்.

“இன்றிரவு நீங்கள் இந்த ஊரிலா தங்குகிறீர்கள்?” என்று கேட்டாள் அந்தப் பெண்.

“ஆமாம். பின்னால் லேஸ் வாங்க வந்தேன்………”

“இங்கே யாரும் பின்னுவதில்லையே, தின்கோவாவிலும், தாரினாவிலும்தான் நெய்கிறார்கள். இங்கே கிடையாது” என்று விளக்கினாள் அந்த யுவதி.

”நான் நாளைக்கு அங்கே போவேன்…”

“தேநீருக்குக் காசு கொடுத்து முடிந்ததும், தாய் அந்தப் பெண்ணுக்கு, மூன்று கோபெக்குகளை இனாமாகக் கொடுத்தாள். இனாம் கொடுத்ததில் அவளுக்கு ஓர் ஆனந்தம். அவர்கள் வெளியே வந்தார்கள். ஈரம் படிந்த அந்த ரோட்டில் அந்தப் பெண் வெறும் கால்களோடு விடுவிடென்று நடந்து சென்றாள்.

படிக்க:
வினவை ஆதரிப்பது உங்கள் கடமை ! ஒரு நிமிடம் ஒதுக்குங்கள் !!
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் : படிப்பினை என்ன ?

“நீங்கள் விரும்பினால், நான் தாரினாவுக்குச் சென்று அங்குள்ள பெண்களை, அவர்கள் பின்னிய லேஸ்களை எடுத்துக்கொண்டு இங்கு வரச் சொல்கிறேன்” என்றாள் அந்தப் பெண், ”அவர்களே இங்கு வந்துவிடுவார்கள். நீங்கள் அங்கே போக வேண்டியதில்லை. இங்கிருந்து பன்னிரண்டு கிலோமீட்டர் தூரம்தான் இருக்கிறது…….”

“நீ ஒன்றும் கவலைப்படாதே, கண்ணு” என்று கூறிக்கொண்டே அவளோடு சேர்ந்து நடக்க முயன்றாள் தாய். குளிர்ந்த காற்று அவளுக்கு இதம் அளித்தது. ஏதோ ஒரு மங்கிய தீர்மானம் அவளது மனத்துக்குள்ளே வடிவாகி உருபெறுவதாகத் தோன்றியது. அந்த உருவம் மெதுவாக வளர்ந்து வந்தது. அதன் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்ற ஆசையால், அவள் தனக்குத்தானே கேட்டுக்கொண்டிருந்தாள்.

”நான் என்ன செய்ய வேண்டும்? நான் என் இதயத்திலுள்ள எல்லாவற்றையும் திறந்து கூறிவிட்டால்…”

பொழுது ஒரே இருளாகவும் குளிராகவும் ஈரமாகவும் இருந்தது. குடிசைகளின் ஜன்னல்களில் செக்கர் ஒளி மினுமினுத்தது. சிறு சிறு அழுகைக் குரல்களும், கால்நடைகளின் கனைப்பும் அந்த அமைதியினூடே கேட்டன. அந்தக் கிராமம் முழுவதுமே ஏதோ ஓர் இருண்ட பாரவுணர்ச்சியைச் சுமந்து கவலையில் ஆழ்ந்திருப்பதாகத் தோன்றியது.

“இதோ” என்று காட்டினாள் அந்தப் பெண்; ”இரவைக் கழிப்பதற்கு மிகவும் மோசமான இடத்தைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். இவன் மிகவும் ஏழையான முஜீக்.”

அவள் கதவைத் தட்டினாள். கதவு திறந்தவுடன் அவள் தன் தலையை உள்ளே நீட்டிச் சத்தமிட்டாள்.

“தத்யானா அத்தை!”

பிறகு அவள் ஓடிப்போய்விட்டாள்.

“போய்வருகிறேன்” என்ற அவளது குரல் இருளினூடே ஒலித்தது.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க