பிரதமராக பதவி ஏற்று ஐந்தாண்டுகள் முடியவிருக்கிற நிலையில் ஒரே ஒரு முறைகூட பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தாத மோடி, தேர்தல் நெருங்க உள்ளதையொட்டி ஊடகங்களுக்கு ‘எக்ஸ்க்ளூசிவ்’ பேட்டி அளிக்கத் தயாராகி வருகிறார்.  புத்தாண்டு தினத்தன்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பல புளுகு மூட்டைகள், சில திரித்தல்கள், சில முரண்பாடுகள் என பலவற்றை ’கலவையாக’ பேசியிருக்கிறார். மோடியின் நேர்காணல் ஒரு புறத்தில் கடும் எதிர்வினைக்கும் மற்றொரு புறத்தில் கேலி-கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது.

இச்செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் விவசாய கடன் தள்ளுபடி, சர்ஜிக்கல் ஸ்டிரைக், தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் அமைத்துவரும் கூட்டணி, ராமர் கோயில் விவகாரம், முத்தலாக் மசோதா, சபரிமலையில் பெண்கள் நுழைவு உள்ளிட்ட பல விஷயங்களைப் பேசியிருக்கிறார்.  காங்கிரசின் விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பை ‘லாலிபாப்’ என்கிறார்; உச்சநீதிமன்ற தீர்ப்பு இல்லாமல் ராமர் கோயில் கட்ட சட்ட இயற்றுவது  இயலாது என்கிறார்; ஒரே ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக்கால் பாகிஸ்தான் மாறிவிடாது என்கிறார்; எதிர்க்கட்சிகளின் கூட்டணி தன்னை எதிர்த்தே என்கிறார்.

படிக்க:
♦ சிபிஐ மோசடி : மோடியின் அமைச்சர் சௌத்ரியும் என்எஸ்ஏ அஜித் தோவலும் புதுவரவு !
♦ மோடி அமைச்சரவைக் கமிட்டிதான் ரஃபேல் விமான விலையை உயர்த்தியது !

காங்கிரசு கட்சி மோடியின் பேட்டியை ‘நான், எனது, என்னால், எனக்காக’ என பகடி செய்திருக்கிறது. வேலை வாய்ப்பு, கருப்புப் பணம், பணமதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி. உள்ளிட்டவை குறித்து 10 கேள்விகளை தயாரித்துள்ள காங்கிரஸ், இந்தக் கேள்விக்கு பிரதமர் பதிலளிப்பாரா என வினவுகிறது.

மோடியின் நேர்காணல் குறித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ள மக்கள், தன்னுடைய பிம்பம் சரிந்து வருவதை சீர்செய்ய வேண்டிய சூழ்நிலையில் மோடி ஊடகங்களிடம் பேசுவதாக தெரிவித்துள்ளனர்.  மோடியின் ஜோடிக்கப்பட்ட நேர்காணலில் புதிதாக எதுவும் இல்லை என்றும் பலர் கருத்து சொல்லியிடுக்கின்றனர்.

சங்பரிவாரங்கள் வழக்கம்போல, மோடியின் நேர்காணலை ஏகத்துக்கு புகழ்ந்துகொண்டிருக்கும் வேளையில், மோடியின் ஐந்தாண்டு ஆட்சியில் எரிச்சலடைந்திருக்கும் பலர் ட்விட்டரில் பகடி செய்ய ஆரம்பித்துள்ளனர்.

மிருணாள் பாண்டே

மோடி தன்னுடைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நேர்காணலில் எத்தனை முறை ‘நான்’ என்கிற சொல்லை பயன்படுத்திருக்கிறார் என்பதை யாரேனும் எண்ணியிருக்கிறார்களா? எனக் கேட்கிறார் மிருணாள் பாண்டே.

துருவ் ரதீ

“கேள்வி இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம். ஆனால், பதில்கள் அனைத்தும் மன் கி பாத் ரகம். எழுதி தருகிறவர்கள் சிறப்பான கதைகள் எழுத வேண்டும். நேர்கண்டவர் பதிலிலிருந்து கேள்வி கேட்பதை பழக வேண்டும்” என்கிறார் துருவ் ரதீ.

அதுல் கட்ரி

#Modi2019Interview என்ற ஹேஷ்டாகை பார்த்தபோது இறுதியாக நீரவ் மோடிதான் பேட்டியளித்திருக்கிறார் என நினைத்தேன் என்கிறார் எழுத்தாளர் அதுல் கட்ரி.

ஜாய்

ஏ.என்.ஐ எடுத்த நரேந்திர மோடியின் பதில்/கேள்வி நேர்காணலை மிகவும் விரும்புகிறேன். மோடி முதல் எழுதிய பதில்களை கொடுத்திருக்கிறார். அதன் பிறகு ஏ.என்.ஐ. கேள்வி அமைத்திருக்கிறது என்கிறது இந்தப் பதிவு.

ஆகாஷ் பானர்ஜி

நல்லதோ கெட்டதோ மோடி நேர்காணல், ஒன்றை உணர்த்தியிருக்கிறது. அதாவது, மோடி நேர்காணல் அளிக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் என்பதே அது. பிரதமரின் மிகப் பெரிய மக்கள் தொடர்பு சாதனங்களான, ஒருதலைபட்சமான டிவிட்டுகளும், மன் கி பாத் சொற்பொழிவுகளும், அனல் பறக்கும் பேச்சுகளும் தோற்றுவிட்ட நிலையில் மோடி இறங்கி வந்திருக்கிறார் என்கிறார் நகைச்சுவையாளர் ஆகாஷ் பானர்ஜி.

மொயின் நஸ்

மேகாலயாவில் 15 சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டதை தேசிய ஊடகங்கள் மறந்துவிட்டதை சுட்டிக்காட்டும் ஒரு பதிவர், 2014-ஆம் ஆண்டிலிருந்து மனித உயிர்களுக்கு நம் நாட்டில் மதிப்பிருக்கிறதா? மோடி பேரழிவுகளை ஏற்படுத்தியவர் என சுட்டிக்காட்டுகிறார் அந்தப் பதிவர்.

கேள்வியும் நானே பதிலும் நானே மோடியை பகடி செய்கிறது இந்த ட்விட்டர் பதிவு.

முத்தலாக் தடை சட்ட விசயத்தில் அது முசுலீம் பெண்களுக்கு சம உரிமை தருவதாக பேட்டியளித்திருக்கும் மோடி, சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்கிற நீதிமன்ற தீர்ப்பை, பாரம்பரியம் தொடர்பானது என்கிறார். மாதவிடாய் காலத்தில் உள்ள பெண்கள் சபரிமலைக்குச் செல்வதைத்தான் எதிர்ப்பதாகவும் அது சபரிமலையின் பாரம்பரியத்துக்கு எதிரானது எனவும் பேசுகிறார் மோடி. இத்தனை வெளிப்படையான பிற்போக்குத்தனத்தை பேசும் முதல் இந்திய பிரதமர் மோடியாகத்தான் இருப்பார். மோடியின் இரட்டை வேடம், சந்தர்ப்பவாதம் ட்விட்டரில் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

“முசுலீம் நாடுகள்கூட முத்தலாக்-ஐ தடை செய்திருக்கின்றன. பாகிஸ்தானிலும்கூட அது தடை செய்யப்பட்டிருக்கிறது.” என்கிற மோடி, பாகிஸ்தான் போன்ற அடிப்படைவாதிகளிடம் உள்ள சிந்தனைகூட தன்னிடம் (சங்பரிவார் அடிப்படைவாதிகளிடம்) சபரிமலை விசயத்தில் இல்லை என்கிறார். சபரிமலை தீர்ப்பளித்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழுவில் இருந்த நீதிபதி இந்து மல்ஹோத்ராவின் வேறுபட்ட பார்வை (மத கட்டுப்பாடுகளில் தலையிடக்கூடாது என சொன்னார்) குறித்த கேள்விக்கு பதிலளித்த மோடி “ஒரு பெண்ணாக அவர் இந்தக் கருத்தை சொல்லியிருக்கிறார்” என்கிறார்.  அவருடைய கருத்தை எந்தக் கட்சியோடு முடிச்சு போடக்கூடாது எனவும் விளக்கம் தருகிறார்.

மோடியின் இரட்டை வேடம் குறித்து கருத்து தெரிவித்துள்ளா அசாசுதீன் ஓவைசி, “மோடி அனைத்து விசயத்திலும் பாகிஸ்தானை பின்பற்ற நினைக்கிறார்” என விமர்சித்துள்ளார்.

ஜம்மு -காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, ஒன்று முசுலீம்கள் தொடர்பானது. இன்னொன்று அப்படியல்ல. அதனால்தான் தன்னுடைய அரசு முரண்பட்ட பார்வைகளுக்கு மோடி விளக்கமளித்துக்கொண்டிருக்கிறார் என எதிர்வினையாற்றியிருக்கிறார்.

டிவிட்டரில் ஒரு பதிவர், “முசுலீம் பெண்களுக்கு மட்டும் பாலின சமத்துவமா? முத்தலாக் சொன்ன கணவர், மனைவியை கைவிட்டால், உச்சநீதிமன்றத்தின் முன் அந்த முத்தலாக் செல்லாது. முசுலீம் பெண்களுக்கு மட்டும் தன்னை கைவிட்ட கணவனை சிறைக்கும் அனுப்புவது நீதி என்றால், அதை வைத்து இந்துப் பெண்களை கைவிடும் கணவர்களையும் சிறைக்கு அனுப்பலாம் இல்லையா? எனக் கேட்கிறார்.

“இந்தியாவில் இந்து கணவர்களால் கைவிடப்பட்ட இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் இருக்கிறார்கள்.  முத்தலாக் செய்யப்பட்டு கைவிடப்பட்ட பெண்கள் சில ஆயிரங்களில் இருப்பார்கள். எனில், முசுலீம் பெண்களுக்குக் கிடைத்த நீதி, இந்து பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் அல்லவா?” என கேட்கிறார் மற்றொரு டிவிட்டர்வாசி.

’ஹிட்’டடிப்பதற்காக எடுக்கப்பட்ட மோடியின் நேர்காணல் ஊத்திக்கொண்டுள்ளதையே சமூக ஊடக எதிர்வினைகள் காட்டுகின்றன. இதையெல்லாம் பொருட்படுத்தாது அதனால் என்னவென்று துடைத்து போட்டுவிட்டு, அடுத்த செயல்திட்டத்துக்கு தயாராகிக்கொண்டிருக்கும் மோடி கும்பல்.

அனிதா

நன்றி: ஸ்கரால்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க