பாசிச மோடி அரசை அம்பலப்படுத்திய முன்னாள் டிவிட்டர் சி.இ.ஓ!

"விவசாயிகளின் போராட்டம் குறித்தும் அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்து பதிவிடும் பத்திரிகையாளர்களின் கணக்குகளை நீக்கவும் இந்திய அரசு பலமுறை எங்களிடம் (டிவிட்டர்) கோரிக்கை வைத்தது. அதற்குப் பணியாவிட்டால் டிவிட்டரை முடக்குவோம் என்றும் அரசு மிரட்டியது" டிவிட்டரின் முன்னாள் சி.இ.ஓ ஜேக் டார்சி

ருத்துச் சுதந்திரத்தின் மீதான மோடி அரசின் பாசிச நடவடிக்கையை வெளிகொண்டு வந்திருக்கிறார் டிவிட்டர் முன்னாள் சி.இ.ஓ ஜேக் டார்சி. இவரது கூற்று இந்தியா ‘ஜனநாயகத்தின் தாய்’ என்று பீற்றித் திரியும் பாசிச மோடி அரசின் முகத்திரையை நார்நாராகக் கிழித்துத் தொங்கவிட்டிருக்கிறது.

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாகப் போராடியதன் விளைவாய் மோடி அரசு பின்வாங்கியது. விவசாயிகளின் இம்மாபெரும் போராட்டத்தை ஒழித்துக் கட்டும் சதி வேலையில் இறங்கியது மோடி அரசு.

“காங்கிரஸ் தூண்டிவிடும் போராட்டம்”, “காலிஸ்தானிகள் போராடுகிறார்கள்” “மாவோயிஸ்டு பின்னணி” போன்ற நச்சுப் பிரச்சாரத்தைக் கிளப்பிவிடுவதன் மூலம் ஆரம்பத்திலேயே இப்போராட்டத்தைத் தனிமைப்படுத்தி ஒடுக்கிவிடலாம் எனப் பகற்கனவு கண்டது மோடி அரசு. இது வெளிப்படையாக மோடி அரசு செய்த வேலை. மறைமுகவும் பல வேலைகளைச் செய்திருக்கிறது மோடி அரசு. விவசாயிகளின் போராட்டத்தினை ஒடுக்கவும் அவர்களுக்கு ஆதரவாக எழும் சக்திகளை ஒழித்துக் கட்டவும் இறங்கியது. அதில் ஒன்றுதான் டிவிட்டரில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பதிவிடப்படும் பதிவுகளை நீக்க டிவிட்டரை மிரட்டியது.


படிக்க: டிஜிட்டல் ஊடகங்களின் மீதான மோடி அரசின் தாக்குதல்


இதுகுறித்து டிவிட்டரின் முன்னாள் சி.இ.ஓ ஜேக் டார்சி பிரேக்கிங் பாய்ன்ட்ஸ் என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அதில், “மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியாவில் அது போன்ற ஒரு அனுபவம் எனக்குக் கிடைத்தது. விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது டிவிட்டரில் அது குறித்து ஏராளமானோர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். அதில் சில பத்திரிகையாளர்கள் அரசை எதிர்த்து விமர்சித்தனர். விவசாயிகளின் போராட்டம் குறித்தும் அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்து பதிவிடும் பத்திரிகையாளர்களின் கணக்குகளை நீக்கவும் இந்திய அரசு பலமுறை எங்களிடம் (டிவிட்டர்) கோரிக்கை வைத்தது. அதற்குப் பணியாவிட்டால் டிவிட்டரை முடக்குவோம் என்றும் அரசு மிரட்டியது.

எங்களுடைய டிவிட்டருக்கு இந்தியா மிகப்பெரிய சந்தையாக விளங்குகிறது. ஆனால், அரசின் நிர்ப்பந்தத்தை ஏற்காத போது, எங்கள் ஊழியர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படும் என்றும், அரசு சொல்வதை ஏற்காவிட்டால் எங்கள் அலுவலகத்தை மூடிவிடப் போவதாகவும் மிரட்டல் வந்தது. ‘உலகில் பெரிய மக்களாட்சித் தத்துவத்தைக் கொண்ட நாடான இந்தியா’வில்தான் இது நடந்தது. 2021 பிப்ரவரியில், விவசாயிகள் போராட்டம் குறித்த செய்திகளை வெளியிட்ட தனிநபர்களது, அமைப்புகளது, ஊடகங்களது சமூக வலைத்தள பக்கக் கணக்குகள் முடக்கப்பட்டன” என்கிறார் ஜேக் டார்சி.

ஜேக் டார்சியுனுடைய கருத்தினை மறுத்து அதைப் பொய் எனக் குற்றம் சாட்டியிருக்கிறார் மின்னணுவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர். ஆனால் மோடி அரசின் இத்தகைய மறுப்பினை உழைக்கும் மக்களுக்காகச் செயலாற்றும் பத்திரிகையாளர்களும், ஜனநாயக சக்திகளும், உழைக்கும் மக்களும் ஒருபோதும் நம்பப்போவதில்லை.


படிக்க: புதிய தொழில்நுட்ப வரைவு விதிகள்: அறிவிக்கப்படாத எமர்ஜென்சி!


மக்கள் போராட்டத்தை வெளிகொண்டுவரும் பத்திரிகையாளர்கள், சமூக வலைத்தளப்பக்க பதிவுகள் முடக்கினால் விவசாயிகளின் போராட்டத்தை முடக்கிவிட முடியும் எனப் பகற்கனவு கண்ட மோடி அரசின் நடவடிக்கைகளைத் தகர்த்தெறிந்து வெற்றியடைந்தது விவசாயிகளின் மாபெரும் போராட்டம். சமூக ஊடகங்களில் கருத்து போராட்டம் நடத்தும் அதேநேரத்தில் களத்தில் பாசிச பாஜகவை நேரடியாக எதிர்க்க வேண்டியது அவசியம். இதுவே விவசாயிகளின் போராட்டம் நமக்கு உணர்த்தும் கள அனுபவம்.


தாரகை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க