பிரபல யோகா சாமியார் பாபா ராம்தேவ், சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், தற்போதைய அரசியல் நிலவரம் குழப்பமாக இருக்கிறது என்றும் வரும் பாராளுமன்றத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று சொல்வது மிகவும் கடினம் என்று கூறியுள்ளார்.

அரசியலில் இருந்து தான் வெளியேறி விட்டதாக கடந்த 2018, செப்டம்பர் மாதமே அறிவித்த ராம்தேவ் தான் கட்சி சார்பற்றவன் என்றும் வரக்கூடிய சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜ.க-விற்கு பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்றும் கூறியிருந்தார். கடந்த 2014 தேர்தலில் பா.ஜ.க-விற்காக இவர் பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

“தற்போது அரசியல் நிலவரம் கடுமையாக உள்ளது. 2019 பாராளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று நம்மால் கூற முடியாது. ஆனால் கடுமையான போட்டி இருக்கும் என்பது மட்டும் உறுதி. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இரண்டுமே அரசியலில் பலமானவை. தேர்தல் முழுவதுமே போராட்டங்களாகவே இருக்கும்” என்று மதுரையில் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது கூறினார்.

சமீபத்தில் நடந்த முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜ.க பெற்ற தர்ம அடிக்கு இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த கருத்தை இராம்தேவ் கூறியுள்ளார். இந்த தேர்தல்களில் காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் பெற்ற வெற்றிகளும் பாபாவின் கருத்துக்களில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும்.

படிக்க:
♦ ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜக தோல்வி : மகிழ்ச்சியடையலாம் ! எனினும் மெத்தனம் கூடாது !
♦ கேள்வி பதில் : ஓட்டுப் போடுவது மட்டுமே பாஜக – வை தோற்கடிக்கும் ஒரே வழியா ?

பா.ஜ.க-வின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தாலும் நடைமுறையில் பாபா ஒரு முதலாளியாக இருக்கிறார். ஒரு முதலாளிக்கு இலாபம்தான் முதன்மையானது. 2020-ம் ஆண்டிற்குள் ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கு பதஞ்சலி நிறுவனத்தின் உற்பத்தியை பெருக்குவதாக இலக்கு வேறு வைத்திருக்கிறார். இப்போது அடிக்கும் காற்று ஒருவேளை காங்கிரசுக்கு சாதகமாக இருந்தால் என்ன செய்வது. அரசியலில் காற்று எந்த பக்கம் வீசும் என்பதை ஒரு பாமரனை விட பெருமுதலாளிக்கு நன்கு தெரியும்.

இன்னொரு பக்கம் கூட்டணி பிரச்சினைகளையும் பா.ஜ.க சந்தித்து வருகிறது. இராஷ்டிரிய லோக் சமத்தா கட்சி ஏற்கனவே கூட்டணியில் இருந்து முறித்து கொண்ட நிலையில் உத்திரபிரதேசத்தில் கூட்டணி கட்சியான அப்னா தள்-ம் தன்னுடைய அதிருப்தியை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த நான்கு ஆண்டுகளாக இந்துத்துவ கும்பலின் இனவிரோத, மதவிரோத மற்றும் மக்கள் விரோத செயல்கள் எதையும் விமர்சிக்காத பாபாவே இப்படி ஒரு கருத்தை கூறியிருப்பது சங்கிகளின் அடிவயிற்றில் ஆசிட்டையே கரைத்திருக்கும். இருப்பினும் பதஞ்சலி நிறுவனத்தின் மீது ஒரு வருமானவரி சோதனையை ஏவினால் இந்த காவிப் பெருச்சாளி தானே வழிக்கு வரும்! ஏற்கனவே அஸ்ராம் பாபு, நித்தியானந்தா போன்ற ‘பகவான்கள்’ கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளான நிலையில் வட இந்தியாவில் பெரும் செல்வாக்கோடு இருக்கும்  ராம்தேவை பகைப்பதற்கு பாஜக முன்வராது. ஆனால் திரைமறைவில் டீல் பேசி ஒப்பந்தம் போடுவார்கள்! அல்லது மோடிக்கு எதிரான இன்னொரு பாஜக – ஆர்.எஸ்.எஸ் கும்பலின் கோஷ்டிச் சண்டையாகவும் இது இருக்கலாம். எது எப்படியோ இந்துமதவெறியர்களுக்குள்ளும் இப்போது உட்கட்சிச் சண்டை துவங்கியிருக்கிறது.


சுகுமார்
செய்தி ஆதாரம்: அவுட்லுக் மற்றும் ஹஃப்ஃபிங்டன் போஸ்ட்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க