ஆதித் தாய் | அ.முத்துலிங்கம்

ன்று என் வாழ்க்கையில் முக்கியமான நாள். பிறந்தநாள்போல, சோதனையில் சித்தியடைந்த நாள் போல, வேலை கிடைத்த நாள்போல, திருமண நாள் போல, முதல் பிள்ளை பிறந்த நாள்போல முக்கியமானது. என் ஆதித்தாயை கண்டுபிடித்தேன். அதாவது 1,60,000 வருடங்களுக்கு முன்னர் கிழக்கு ஆப்பிரிக்காவில் உதித்த ஒரு தாய்தான் என்னுடைய வம்சத்தின் ஆரம்பம்.

அ. முத்துலிங்கம்
எழுத்தாளர் அ. முத்துலிங்கம்
என்னுடைய வம்ச வழியை அப்படியே பின்னோக்கி 5000 தலைமுறைகள் தள்ளிக்கொண்டே போனால் அந்த தேடல் இந்த தாயாரில் கொண்டுபோய் சேர்க்கும். விஞ்ஞானிகள் இந்த தாயை ஆதித்தாய் Mitochondrial Eve என்று சொல்கிறார்கள்.

National Geographic நடத்தும் genographic project ல் பங்குபெற விரும்பி நான் அவர்களுடன் தொடர்புகொண்டேன். இந்த புரோஜெக்ட் என்னவென்றால் அது உங்கள் மரபணுவை சோதித்து உங்கள் மூதாதையர் எங்கே, எப்பொழுது தோன்றினார்கள், எந்தக் காலகட்டத்தில் இடம்பெயர்ந்தார்கள், அந்தப் பயணம் அவர்களை எங்கே எங்கேயெல்லாம் இட்டுச் சென்றது என்பதை விஞ்ஞானமுறைப்படி ஆராய்ந்து விவரங்களை வரைபடமாகத் தருவார்கள்.

அவர்கள் கேட்டுக்கொண்டபடி என்னுடைய உமிழ்நீரை இரண்டு குப்பிகளில் அடைத்து, 99 டொலர் காசோலையுடன் அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். அந்தப் பரிசோதனை முடிய ஆறு வார காலம் எடுக்கும். நான் பொறுத்திருந்தேன். முடிவுகள் கிடைத்தது இன்றுதான். சோதனையில் இரண்டு வழித்தேடல் உள்ளது. ஒன்று தாய்வழித் தேடல், மற்றது தந்தைவழித் தேடல். தாய்வழித் தேடல் உங்கள் தாயில் ஆரம்பித்து உங்கள் வம்சவழியின் ஊற்றுக்கண்ணை தேடிக்கொண்டே போகும். தந்தைவழித் தேடல் உங்கள் அப்பா, அப்பாவின் அப்பா என்று பின்னோக்கி நகர்ந்து உங்கள் ஆகக்கடைசி தலைமுறையைச் சேர்ந்த தந்தையில் நிற்கும். நான் விண்ணப்பத்தில் கேட்டது தாய்வழித் தேடல்.

மாதிரிப் படம்

கிழக்கு ஆப்பிரிக்காவில் 3.6 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் நிமிர்ந்து நடக்கும் ஆற்றல் பெற்ற முதல் மனிதன் நடமாடியதற்கான சான்றுகள் உள்ளன. தன்சேனியாவில் உள்ள லேரோலி என்ற இடத்தில் நிமிர்ந்து நடந்த இரண்டு மனித காலடித் தடங்களை இன்றைக்கும் பாதுகாக்கிறார்கள். ஒன்று ஆண், மற்றது பெண். அவர்கள் பக்கத்து பக்கத்தில் நடந்து போயிருக்கிறார்கள். பெண்ணின் கால் தடம் கொஞ்சம் ஆழ்ந்து போய் இருப்பதால் அவள் ஒரு குழந்தையை காவினாள் என்பது விஞ்ஞானிகள் ஊகம்.

200,000 வருடங்களுக்கு முன்னர் அதே கிழக்கு ஆப்பிரிக்காவில் அதே ஆதி மனிதர்களிலிருந்து முதல் நவீன மனிதன் Homo sapiens தோன்றினான். இன்றைய மனிதனின் குணாம்சங்கள் கொண்ட முதல் மனிதன் இவன். 40,000 ஆண்டுகள் கழித்து, அதாவது 160,000 ஆண்டுகளுக்கு முன்னர், அதே இடத்தில் ஓர் ஆதித்தாய் தோன்றினாள். இன்று உலகில் வாழும் அத்தனை மனித உயிரும் இந்த ஆதித்தாயில் இருந்தே தோன்றினர். மற்ற தாய்களுக்கு என்ன நடந்தது? இவர்களில் இருந்து தொடங்கிய சந்ததி சங்கிலி இயற்கை உற்பாதத்தில் அழிந்தோ, சந்ததி இல்லாமல் அறுந்தோ போய்விட ஒரேயொரு தாய் மட்டும் எஞ்சினாள். அவளிலிருந்து தொடங்கிய சந்ததிச் சங்கிலி இன்றுவரை தொடர்ந்தது இயற்கையில் கிடைத்த மாபெரும் அதிர்ஷ்டம் என்று சொல்லலாம்.

விஞ்ஞானிகள் எப்படி இந்த தாயை கண்டுபிடித்தார்கள்? ஒரு கதை. நாலாம் வகுப்பு என்று நினைக்கிறேன். சோதனை எழுதும்போது ஒரு மாணவன் ‘சைபீரியா’ என்று எழுதுவதற்கு பதிலாக ‘கைபீரியா’ என்று தவறுதலாக எழுதிவிட்டான். அவனைப் பார்த்து கொப்பியடித்த இன்னொரு மாணவனும் ‘கைபீரியா’ என்றே எழுதினான். அடுத்த மாணவனும். அதற்கு அடுத்தவனும். இப்படியாக நாலு மாணவர்கள் ‘கைபீரியா’ என்று எழுதியதை வைத்து ஆசிரியர் முதல் பிழையை யார் எழுதினார் என்பதை கண்டுபிடித்தார். அதே போல ஆதிமனித மரபணுவில் ஏற்பட்ட ஒரு பிறழ்வு வழிவழியாகத் தொடர்ந்தது. அதை வைத்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து கொண்டு போனபோது எல்லா வழிகளின் ஆரம்பமும் ஒரு தாய் என்பதைக் கண்டுபிடித்தனர்.

எனக்கு Genographic Project அனுப்பிய வரைபடம் ஆதித்தாயில் ஆரம்பித்து என் முன்னோர்கள் எங்கே எங்கேயெல்லாம் புலம்பெயர்ந்து பரவினார்கள் என்பதை துல்லியமாகக் காட்டுகிறது. கிழக்கு ஆப்பிரிக்காவில் உதித்த இந்த தாயிடமிருந்து ஆரம்பத்தில் இரண்டு குழுக்கள் பிரிந்தன. L0, L1 ஆகிய இருகுழுக்களும் ஆப்பிரிக்காவில் பரவின. பல ஆயிரம் வருடங்களுக்கு பின்னர் உருவான L2 குழு மேற்கு ஆப்பிரிக்காவுக்கு பரவியது. 80,000 வருடங்களுக்கு முன்னர் L3 குழு தோன்றியது. இது ஆப்பிரிக்காவின் தெற்குப் பகுதிகளுக்கு பரவியது. 60,000 வருடங்களுக்கு முன்னர் L3 ல் இருந்து இரண்டு  குழுக்கள் பிரிந்தன. இதில் ஒன்று N குழு. இது வடக்கு பக்கமாக விரிந்து பரவி ஐரோப்பாவுக்குள் நுழைந்தது. அடுத்த குழுவான M குழு முதல் முறையாக கடல் தாண்டிய சாகசமான குழு. இது செங்கடலைத் தாண்டி, அரேபியாவைத் தாண்டி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளம், பர்மா, மலேயா, அவுஸ்திரேலியா ஆகிய தூர இடங்களுக்கு பரவியது. என்னுடைய மூதாதையர் இந்த M குழுவைச் சார்ந்தவர்கள் என்று என்னுடைய மரபணு ஆராய்ச்சி சொல்லியது. இதன் பெயர் Haplogroup M.

இந்த குழுவைச் சார்ந்தவர்கள் அதிகமாக அங்க தேசத்திலும் (Bihar) கலிங்க தேசத்திலும் (Orissa) வங்கதேசத்திலும் ( Bengal ) மற்றும் இந்தியாவின் வடபகுதிகளிலும் காணப்படுகிறார்கள். தமிழ் நாட்டிலோ, கேரளத்திலோ, இலங்கையிலோ இருப்பவர்கள் இதன் உபகுழுக்களில் இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. உதாரணமாக உபகுழு M2 தமிழ்நாட்டிலும், உபகுழு M6 கேரளத்திலும், உபகுழு M69 இலங்கையிலும்.

வரலாற்றை முறையாகக் கற்றுத் தேர்ந்த ஒருவரிடம் என் சந்தேகத்தைக் கேட்டேன், தென் இந்தியாவிலோ இலங்கையிலோ Haplogroup M ஏன் காணப்படவில்லையென்று. அவர் விடை மகாவம்சத்தில் இருக்கிறது என்றார். மகாவம்சம் அரைவாசி கட்டுக்கதை அல்லவா என்று நான் கேட்டேன். அவர் சொன்னார். ‘வங்கதேசத்து அரசன் கலிங்க அரசகுமாரியை மணமுடிக்கிறான். அவர்களுக்கு பிறந்த மகள் காட்டுக்குச் சென்று சிங்கத்துடன் கூடி ஒரு மகனையும் மகளையும் பெற்றெடுக்கிறாள்.

படிக்க:
♦ அணு மரபணுவான கதை !
♦ சிறப்புக் கட்டுரை : ஆரியர்கள் வந்தேறிகள்தான் – நிரூபிக்கிறது மரபணுவியல் ஆய்வு !

அவர்கள் பெயர் சிங்கபாகு, சிங்கசிவலி. சிங்கபாகு தகப்பனாகிய சிங்கத்தை கொன்று தன் சகோதரியான சிங்கசிவலியை மணமுடித்து ராச்சியத்தை ஆள்கிறான். அவர்களுக்கு பிறந்த அரசகுமாரனான விஜயனையும் அவனுடைய கூட்டாளிகள் 700 பேரையும் அரசன் ஒரு கப்பலில் நாடு கடத்துகிறான். அவன் இலங்கையில் வந்து இறங்கி அதைக் கைப்பற்றி அரசாண்டான். அவனுடைய வம்சவழி ரத்தத்தில் வங்கமும் கலிங்கமும் இருக்கிறது. உங்களுடையதிலும் இருக்கிறது.’

‘வங்கமும், கலிங்கமும் என்றால் பரவாயில்லை. சிங்கமும் அல்லவா இருக்கிறது?’ என்றேன். என் எதுகையையோ, கேள்வியை அவர் ரசிக்வில்லை. விடையையும் கூறவில்லை.

சரித்திர புத்தகங்களையே வாழ்நாள் முழுக்கப் படித்துவரும் நண்பர் ஒருவர், 1215ல் கலிங்கத்திலிருந்து படையெடுத்து பொலநறுவையை பிடித்து ஆண்ட செகராஜசேகர சிங்கை ஆரியச் சக்கரவர்த்தியின் வழித்தோன்றலாக நான் இருக்கலாம் என்று சொல்கிறார். கலிங்க ரத்தம் மட்டுமல்ல, ராச ரத்தமும் என் உடம்பில் ஓடுகிறது. அதை நம்புவதற்கும் ஆசை கூடுகிறது. யாராவது இந்த துறை விற்பன்னர் இதை ஆராய்ந்தால் எனக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும்.

*****

நான் முன்னரே கூறியமாதிரி என் விண்ணப்பத்தில் தாய்வழி தேடல் என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்கு விடையாகத்தான் மேற்கூறிய வரைபடம் வந்தது. தகப்பன் வழி தேடலையும் நான் கேட்டிருக்கலாம். அது என்னுடைய தகப்பன், தகப்பனின் தகப்பனென்று தேடிக்கொண்டு போய் ஆதித் தகப்பனில் சேர்க்கும். விஞ்ஞானிகள் ஆதித்தாய் இருப்பதுபோல ஓர் ஆதி ஆண் இருப்பதையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு ஆணும் ஓர் ஆதி ஆணிலிருந்து உருவானவர்தான்.

ஒரு மனித உடம்பில் 23 சோடி குரோமசோம்கள் உள்ளன. இதில் ஒரு சோடியில் இரண்டு x குரோமசோம்கள் இருந்தால் அது பெண்; ஒரு சோடி குரோமசோமில் ஒரு  x குரோமசோமும், ஒரு y குரோமசோமும் இருந்தால் அது ஆண். பெண் குழந்தை உற்பத்தியாகும்போது தாயிடமிருந்து ஒரு x ம் தகப்பனிடமிருந்து x ம் பெறும். இரண்டும் சேர்ந்தது பெண். ஆண் குழந்தை உற்பத்தியாகும்போது தாயிடமிருந்து ஒரு x ம் தகப்பனிடமிருந்து ஒரு y ம் பெறும். இரண்டும்  சேர்ந்தது ஆண். y குரோமசோம் தந்தையிடமிருந்து மகனுக்கு மட்டுமே கடத்தப்படும். மகளுக்கு கடத்தப்படுவதில்லை. அதனால்தான் பழைய காலத்து அரசர்கள் வம்சம் தழைக்க மகன் வேண்டும் என்று தவம் கிடந்தார்கள்.

ஆதி ஆணிலிருந்துதான் இன்று உலகத்திலிருக்கும் ஆண்கள் எல்லோரும் தோன்றியிருக்கிறார்கள். விஞ்ஞானிகள் அவனுக்கு இட்ட பெயர் Y chromosomal Adam. இவன்  வாழ்ந்த காலம் 60,000 வருடங்களுக்கு முன்னர் என்று  கணக்கிட்டிருக்கிறார்கள். என்னுடைய அப்பா, அப்பாவின் அப்பா,  அவரின் அப்பா, அவரின் அப்பா என்று 2000 தலைமுறைகள் தேடிக்கொண்டே பின்னோக்கி போனால் அது என்னை இந்த ஒரேயொரு ஆதி ஆணில் கொண்டுபோய் சேர்க்கும். மற்ற ஆண்களுக்கு என்ன நேர்ந்தது என்று கேட்கலாம்? ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களுடைய சந்ததிச் சங்கிலி அறுந்துவிட்டது. எஞ்சியது இது ஒன்றுதான்.

இன்னொரு முக்கியமான கேள்வி உண்டு. ஆதித்தாய் 160,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றினாள். ஆதி ஆண் 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றினான். இடையே 100,000 ஆண்டுகள் ஆண்களே இல்லையா? அப்படியானால் சந்ததி எப்படி பரவியது? ஆணும் பெண்ணும் ஒரே சமயத்தில் வாழ்ந்தார்கள். விஞ்ஞானிகள் தேடிய ஆகப் பிந்திய தாய் 160,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தாள். ஆகப் பிந்திய ஆண் 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தான். அதற்கு முந்தைய தொடர்ச்சிகள் எல்லாம் எப்படியோ அழிந்துபோயின.

ஆதி ஆணில் ஆரம்பித்து எனக்கு முன் வந்த தலைமுறையினர் எங்கேயெல்லாம் புலம்பெயர்ந்து பரவினார்கள் என்று அறியவேண்டுமானால் நான் மறுபடியும் என்னுடைய உமிழ்நீரை இரண்டு குப்பிகளில் அடைத்து Genographic Project க்கு அனுப்பிவைக்கவேண்டும். அப்படி அனுப்பும்போது ‘தந்தை வழி புலம்பெயர்வு’ என்று மறக்காமல் குறிப்பிட்டு 99 டொலர் காசோலையையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். அவர்கள் சோதனையை முடித்துவிட்டு என்னுடைய தப்பன் வழி முன்னோர் எங்கே தொடங்கி எங்கேயெங்கே எல்லாம் நகர்ந்தார்கள் என்ற வரைபடத்தை எனக்கு அனுப்பிவைப்பார்கள். என்னுடைய தகப்பன் பாதையும் தாயின் பாதையும் ஏதோ ஒரு புள்ளியில் சந்தித்திருக்கும். கட்டாயம் கண்டுபிடிக்கவேண்டிய சங்கதிதான். முதலில் என் கைக்கு 99 டொலர் வந்து சேரட்டும்.

நன்றி :அ.முத்துலிங்கம்
எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு:
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

1 மறுமொழி

  1. ஏங்கெல்ஸ் எழுதிய,குடும்பம் என்ற நூலுக்கு மிக முக்கியமான வலு சேர்க்கும் வகையில் இந்த கட்டுரை உள்ளது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க