”உங்கள் வயிறு நிறையா விட்டால் நல்ல இசையைக் கேட்க முடியாது” என்கிறார் உன்னிகிருஷ்ணன். கோவையைச் சேர்ந்த இவர் ‘இசை’ ரசிகர். சென்னையில் நடந்து கொண்டிருக்கும் மார்கழி இசை உற்சவத்திற்கு கோவையில் இருந்து வந்திருப்பவர். கடந்த பல பத்தாண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் மார்கழி இசை உற்சவத்தில் கரகரப்பிரியாவுக்கும் நாட்டக்குறிஞ்சிக்கும் இணையான மவுசு கிழங்கு போண்டாவுக்கும் பில்டர் காபிக்கும் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. அந்தக்காலத்திலிருந்து ஆனந்த விகடனில் வி.எஸ்.வி, சுப்புடு வகையறாக்கள் எழுதி வரும் மார்கழி சீசன் விமர்சனக் கட்டுரைகளில் இது விரிவாக ஆய்வு செய்யப்பட்டிருக்கும்.

எனினும், கடந்த பதினாறு ஆண்டுகளாக சபா கேன்டீன்களின் தீனிப் பட்டியல் வீங்கிப் பருத்திருப்பதன் தாத்பர்யம் குறித்து ஆராய்கிறது ஸ்க்ரோல் இணையதளத்தில் வெளியாகி இருக்கும் இந்தக் கட்டுரை. மேற்படி கட்டுரையில் வாழை இலையின் மேல் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பதார்த்தங்களின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது; ஏறத்தாழ 14 அயிட்டங்கள். கமகங்களின் தாலாட்டுக்கு செருகும் கண்களை தொடை தட்டி எழுப்ப மாமாக்கள் படும் பாடு உலகறிந்ததே. இந்நிலையில் மூக்கு முட்ட தின்றபின் கீர்த்தனைகளின் மீட்டரை அளப்பதற்கு சம்மட்டியால்தான் தாளம் போட வேண்டியிருக்கும். அடுத்த முறையாவது கருநாடக இசையின் எதிர்காலத்தைக் காப்பாற்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சம்மட்டி ஏற்பாடு செய்து கொடுப்பது நலம்.

போகட்டும். சென்னை சபாக்களில் பல பத்தாண்டுகளாக நடத்தப்பட்டு வரும் கருநாடக இசைத் திருவிழாக்களால் இசைத்துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து தரவுகள் ஏதுமில்லை. ஆனால், சங்கத்தை விட சோறுதான் முக்கியம் என்பதை சபா கேன்டீன் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி புள்ளிவிவரங்களோடு நிரூபிப்பதை மேற்படி கட்டுரை தெளிவாக விளக்குகின்றது. தமிழகமெங்கும் இருந்து சிலுக்கு வேட்டி சகிதம் சபா கேன்டீன்களில் குவியும் மயிலை மாமாக்கள் வாழை இலை சாப்பாட்டுக்கு அலைமோதுவதை ரசனையோடு விவரிக்கிறார் கட்டுரை ஆசிரியர்.

வெள்ளைச் சோறு, சாம்பார், ரசம், பாயாசம், கூட்டு, பொரியல், தயிர் என நீளும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள அயிட்டங்கள் ஒவ்வொன்றும் வெளியே கிடைப்பதை விட அதிக விலைக்கு விற்கப்படுகின்றதாம். கீரை வடை, வத்தக்குழம்பு, அக்காரவடிசல் போன்ற வழக்கமான அக்கிரகார அயிட்டங்கள் கடுமையாக சாதகம் புரிய வந்துள்ள வித்துவான்களுக்கும் தொடை தட்ட வந்திருக்கும் இசை ஆர்வலர்களுக்கும் போதிய தெம்பை வழங்குகின்றன.

இவை தவிர தர்பூசணி ரசம், வெஜிடபிள் பாயாசம், பச்சை மிளகாய் அல்வா (!) எலுமிச்சை அல்வா, மோர் உப்புமா போன்ற ஸ்பெஷல் அயிட்டங்களும் உண்டு. இசையில் நடந்ததோ இல்லையோ தீனி விசயத்தில் காத்திரமான ஆராய்ச்சிகள் நடந்திருப்பதை இந்தப் பட்டியல் உறுதிப்படுத்துகின்றது. இத்தனையையும் மூக்குப் பிடிக்க விழுங்கி விட்டு நேயர்கள் விடும் குறட்டை மற்றும் குசு சப்தங்களை கருநாடக சங்கீத பக்கவாத்தியங்களின் பட்டியலில் சேர்க்க முடியுமா என்பதை ஆராய்ந்தால் நிச்சயம் ஆக்கப்பூர்வமான முடிவுகள் ஏதேனும் கிட்டலாம்.

டிசம்பர் சீசன்களில் சபாக்களில் அலைமோதும் கூட்டத்தை ஈர்ப்பது எது என்பதில் இனிமேல் யாருக்கும் சந்தேகம் தோன்ற வாய்ப்பில்லை. மலேசியாவில் இருந்து ஒவ்வொரு டிசம்பர் சீசனுக்கும் சென்னை நோக்கிப் பறந்தோடி வரும் உமா பாலன் என்கிற மாமியின் விளக்கம் இதில் லவலேசம் கூட குழப்பம் ஏற்படாதபடிக்கு விளக்குகிறார். “இங்கே கிடைக்கும் இனிப்புப் பதார்த்தங்கள் சிறப்பாக உள்ளன. அனைத்தும் சுத்தமான நெய்யில் செய்யப்பட்டுள்ளன. அதே போல் நான் ஏதாவது ஒரு சபா கேன்டினில் தின்று கொண்டிருக்கும் போது பக்கத்திலமர்ந்து சாதகம் புரிபவர் இன்னொரு சபா கேன்டினில் கிடைக்கும் வேறு ஒரு பதார்த்தத்தையும் முயற்சித்துப் பார்க்குமாரு பரிந்துரை செய்வார்”.

பதினேழு அயிட்டங்கள் கொண்ட புல் மீல்ஸ் முன்னூறு ரூபாய்; ஒன்பது அயிட்டங்கள் கொண்ட மினி மீல்ஸ் நூற்றி முப்பது ரூபாய் என்கிறது மதராஸ் ம்யூசிக் அகாடெமியின் கேன்டினின் முன் வைக்கப்பட்டுள்ள விலைப்பட்டியல். மேன்மக்களின் கலை என்பதால் இப்படித் தான் இருக்கும் போல. முன்பெல்லாம் இசைக் கச்சேரிக்கான நுழைவுச் சீட்டு இருந்தால் தான் கேன்டினுக்குள் நுழைய முடியுமாம்; இப்போது வெளியார்களுக்கும் திறந்து விடப்பட்டிருப்பதால் கச்சேரிக்கான நுழைவுச் சீட்டு விற்கும் கவுண்டரை விட கேன்டினில் கூட்டம் அள்ளுவதாக கட்டுரையாளர் சொல்கிறார்.

எங்கே கல்லா நிறைகிறது என்பது சபா செயலாளர்களுக்கும் தெரிந்தே இருக்கும். எனவே  கருநாடக இசையின் எதிர்காலம் இனிமேல் சிரம திசையில் நுழையும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இந்த விசயத்தில் நடந்துள்ள ஒரே நல்லது என்கிற வகையில் மவுண்ட்பேட்டன் மணி அய்யருக்கு ஒரு நன்றியை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்வோம். மவுண்ட்பேட்டன் மணி அய்யர் என்பது ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி சபாவில் செயல்படும் கேன்டினின் பெயர் என்பதை முன்பே குறிப்பிட மறந்து விட்டோம் – மேற்படி மவுண்ட்பேட்டன் என்கிற முன்னொட்டு அந்தக் காலத்தில் அன்னாருக்கு இன்னார் சோறாக்கிப் போட்டதால் கிடைத்தது என்பது கொசுறு தகவல்.

♠ ♠ ♠

செவ்வியல் இசை என அறியப்படும் கருநாடக இசை மேற்கத்திய செவ்வியல் இசையில் இருந்து பெரிதும் மாறுபட்டது. மேலும் கர்நாடக இசையின் மூலம் தமிழிசைதான். தமிழிசையிலிருந்து திருடப்பட்டு கர்நாடக இசை என்ற பெயர் சூட்ப்பட்டு கடந்த ஓரிரு நூற்றாண்டுகளுக்குள் மார்க்கெட் செய்யப்பட்ட இசை இது. அந்த சந்தைப்படுத்தலும் வெகு மக்களுக்கானதாக இல்லாமல் மேட்டுக்குடி பிரிவினருக்காகவே செய்யப்பட்டது.

அந்தக் கால அந்தப்புரங்களிலும், பார்ப்பனக் கோவில்களின் துதிப்பாடல்களாக தேவதாசிகளாலும் பாடப்பட்டு வந்த கருநாடக இசை சுமார் ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன் அக்கிரகாரத்திற்கு வந்து சேர்ந்தது. அது இந்து – இந்தியாவின் கலாச்சார அடிப்படைகள் செயற்கையாக உருவாக்கப்பட்டு வந்த காலம்; அதன் கலை வடிவங்களில் ஒன்றாக இணைத்துக் கொள்ளப்பட்ட கருநாடக இசையை பார்ப்பனர்கள் மனமுவந்து வரித்துக் கொண்டதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. என்றாலும் கருநாடக இசையின் ஆன்மாவாக எப்போதும் இருந்து வந்தது மேட்டுக்குடி பண்புகள் என்பதையே சபா கேன்டினில் நிரம்பி வழியும் சிலுக்கு ஜிப்பாக்களும், மடிசார்களும் உணர்த்துகின்றன.

படிக்க:
தமிழிசை மரபு சில குறிப்புகள்
நூல் அறிமுகம் : இசை போதை பொழுதுபோக்கு போராட்டம்

நாடி நரம்பை முறுக்கேற்றும் பறையிசையைக் கேட்பதற்கு வேண்டுமானால் மாட்டுக்கறி தின்ன வேண்டியிருக்கும். ஆனால், கருநாடக இசை வித்துவான்களின் வாய்கள் கோணிக் கொண்டிருப்பதை தரிசிக்கும் துன்பத்திலிருந்து காப்பாற்ற சுத்தமான பசுநெய்யில் செய்யப்பட்ட வெண்பொங்கலால் மட்டும் தானே முடியும்?

சாக்கியன்