நூல் அறிமுகம் : இசை போதை பொழுதுபோக்கு போராட்டம்

காதலைப் பாலியல் வெறியாகவும், மகிழ்ச்சியைக் களிவெறியாட்டமாகவும் துயரத்தை விரக்தியாகவும் மடைமாற்றி விடுவதன் மூலம் மக்களின் இசை ரசனையையும் வாழ்வியல் மதிப்பீடுகளையும், அதனூடாகச் சமூக உணர்வையும் சிதைப்பதில் திரையிசை வெற்றி பெற்றுள்ளது.

நாட்டுப்புற இசையைப் பயன்படுத்திப் புரட்சிகர அரசியலைக் கொண்டு செல்வது. என்ற அளவில்தான் எமது துவக்ககால இசை முயற்சிகள் அமைந்திருந்தன. புதிய முயற்சிகள் ஒவ்வொன்றும் புதிதாய்க் கற்றுக் கொள்ள வேண்டியதன் தேவையை நடைமுறையிலிருந்து எமக்கு உணர்த்தின. புரட்சி செய்வதற்கு இசையறிவு ஒரு கட்டாயமான முன்நிபந்தனை அல்லவெனினும், மக்களை மயக்கத்திலாழ்த்தும் ஒரு போதைப் பொருளாக ஆளும் வர்க்கம் இசையைப் பயன்படுத்தும்போது அதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

காதலைப் பாலியல் வெறியாகவும், மகிழ்ச்சியைக் களிவெறியாட்டமாகவும் துயரத்தை விரக்தியாகவும் மடைமாற்றி விடுவதன் மூலம் மக்களின் இசைரசனையையும் வாழ்வியல் மதிப்பீடுகளையும், அதனூடாகச் சமூக உணர்வையும் சிதைப்பதில் திரையிசை வெற்றி பெற்றுள்ளது. இன்னொருபுறம் காலாவதியாகிப் போன மன உணர்வுகளை வெளியிடும் தியாகய்யர் போன்றோரின் இசை, காலத்தை வென்ற இசையாகவும், திரையிசைக்கு மாற்றாகவும் முன் நிறுத்தப்படுகிறது.

களவாடிய இசையே கர்நாடக இசை என்பதை நாம் புரிந்து கொண்டால் மட்டும் போதாது.

நம் மரபில் எதைக் கொள்வது – எதைத் தள்ளுவது, பிற நாட்டு இசை மரபுகளில் எவற்றைச் செரித்துக் கொண்டு நமது விடுதலைக்கான இசையைப்படைப்பது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்தப் புரிதலின் அடிப்படையில் எழுதப்பட்டவைதான் புதிய கலாச்சாரத்தில் வெளிவந்த இசை விமர்சனக் கட்டுரைகள். அக்கட்டுரைகள் இங்கே நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. கட்டுரையாளர்கள் முறையாக இசை பயின்றவர்கள் இல்லை என்றாலும், அறியாமையிலிருந்து விடுபடும் தம் சொந்த முயற்சியையே வாசகர்கள் அனைவரின் அனுபவமாக மாற்றியுள்ளனர் என்று கூறலாம்.

நுகர்வோனை ரசிகனாக மாற்றுவதும் அடிமையைச் சுதந்திர மனிதனாக மாற்றுவதுமே நமது இலட்சியம். இதை சாதிக்க வேண்டுமெனில் வெகுசன அடிமைத்தனத்தின் ஆன்மாவையும், விடுதலை வேட்கையை வெளிப்படுத்தும் அதன் மொழியையும் நாம் அறிந்திருக்க வேண்டும். அறிந்து கொள்ள முயல்வோம்.

– (பிப்ரவரி 2002 இல் எழுதப்பட்ட, இந்நூலுக்கான முன்னுரையில் புதிய கலாச்சாரம் இதழின் ஆசிரியர் குழு)

… உட்கார் – வாயை மூடு – வாங்கு!

”துணி துவைக்கும் நேரம் மிச்சம் – இந்த எந்திரத்தை வாங்கு; பேருந்தில் செல்லும் நேரம் மிச்சம் – இந்த வண்டியை வாங்கு; சமையல் செய்யும் நேரம் மிச்சம் – இந்த அடுப்பை வாங்கு” என்கின்றன விளம்பரங்கள். மிச்சமான பொழுதை என்ன செய்வது? “பொழுதைப் போக்கு, டி.வி. பார், விளம்பரம் பார், மீண்டும் வாங்கு.”

‘’உட்கார் – வாயை மூடு, வாங்கு’’ (Sit Back, Shut up and Shop) இதுதான் பொழுதுபோக்குத் தொழில் நுகர்வோருக்கு இட்டிருக்கும் கட்டளை. விளம்பரங்களைக் கண்டு வாய் பிளக்கும் சில சந்தர்ப்பங்களைத் தவிர வேறெப்போதும் நுகர்வோர் இந்த கட்டளையை மீறுவதில்லை .

விளம்பரங்களோ பொருளின் பயன்பாட்டை அல்லது அதன் சிறப்புத் தன்மையை விளக்குவதைக் காட்டிலும் அதனைப் பயன் படுத்தும் விளம்பர மாடலின் ஆளுமை, வாழ்க்கைப் பாணி ஆகியவற்றையே மனதில் பதியச் செய்கின்றன. நுகர் பொருளைச் சொந்தமாக்கிக் கொள்வதே தனிமனித ஆளுமையின் அடையாளமாகி விடுகிறது. புலனறிவும் பகுத்தறிவும் தோற்றுவிக்கும் உணர்வுகளெல்லாம் ஒதுக்கப்பட்டு அவற்றின் இடத்தில் ‘உடைமை உணர்வு’ மட்டுமே எஞ்சியிருக்கிறதென்று முதலாளித்துவச் சமூகம் பற்றிக் குறிப்பிட்டார் மார்க்ஸ்.

இந்த நுகர்வு மதத்தின் அப்போஸ்தலர்களான உலகாத்துமாக்களுக்குத் தெரிந்த ‘படைப்புத் திறனுள்ள’ ஒரே நடவடிக்கை நுகர்வதுதான். உண்பது, குடிப்பது, பொழுதுபோக்குவது என்ற தமது பணியை அவர்கள் இடையறாது தொடர்வதனால்தான் நுகர்பொருள் உற்பத்தித் தொழிலில் பலருக்கு வேலைவாய்ப்பை வழங்க முடிகிறது என்பதனால் நுகர்தல் ஒரு ‘சமூக நோக்கத்தையும் பெற்று விடுகிறது.

சரக்கை நுகரும் சரக்கு!

சந்தையின் தேவையைக் கணக்கில் கொண்டு செய்யப்படும் வர்த்தக நடவடிக்கையாக அறிவியல் ஆய்வும் கண்டு பிடிப்பும் மாறி விட்டதைப் போல, சந்தையைக் கவரும் விற்பனைத் தந்திரமே கலை முயற்சிக்குரிய தகுதியைப் பெறுகிறது. கலைக்கும் விளம்பரத்திற்கு மிடையிலான வேறுபாடு மறைந்து விளம்பரமே கலையாகி விடுகிறது

தொலைக்காட்சிப் பார்வையாளர்களை அவர்களது ஓய்வு நேரத்திற்கேற்பவும், வாங்கும் திறனுக்கேற்பவும் பல பிரிவுகளாகப் பிரித்து அவர்கள் ரசிக்கக்கூடிய அல்லது ரசிக்க வேண்டிய நிகழ்ச்சிகளை வழங்குகிறார்கள் விளம்பரதாரர்கள். வாங்கும் திறனும் ரசிக்கும் திறனும் ஒன்றேயாகி விடுகின்றன. தங்கள் பண்டத்தை வாங்கச் செய்வதன் மூலம் ரசிகனை நுகர்வோனாக மாற்றுகிறார்கள் விளம்பரதாரர்கள். ஒளிபரப்பு நேரத்தை, அதாவது தங்கள் பார்வையாளர்களின் ஓய்வு நேரத்தை விளம்பரதாரர்களுக்கு விலைபேசி விற்பதன் மூலம் பார்வையாளர்களையே விற்பனைக்குரிய பண்டமாக்குகின்றன தொலைக்காட்சி நிறுவனங்கள். பண்டமாற்று இவ்வாறு முடிவடைகிறது. நிகழ்ச்சியைப் பார்க்கும் ரசிகன் சரக்கை நுகரும் சரக்காக மாற்றப்படுகிறான்.

படிக்க:
குன்றத்தூர் அபிராமி : கலாச்சார நீதிபதிகளின் தற்குறித் தீர்ப்புகள்
லவ் – பியார் – பிரேமா – காதல் | மு.வி.நந்தினி

முதல் எட்டு மணி நேரத்தில் விருப்பமில்லாமல் தன் உழைப்புத் திறனைக் கூலிக்கு விற்கும் தொழிலாளி, இரண்டாவது எட்டு மணி நேரத்தில் – ஓய்வு நேரத்தில் – விருப்பத்துடன் தன் சிந்தனைத் திறனை இழக்கச் சம்மதிக்கிறான். உழைப்புச் சுரண்டல் எவ்வளவுக் கெவ்வளவு தீவிரமடைகிறதோ அதே விகிதத்தில் ஓய்வுச் சுரண்டலும் தீவிரமடைகிறது. வேலை உத்திரவாதமின்மை, வேலைவாய்ப் பின்மை, உழைப்புச் சுமை, எதிர்காலம் குறித்த நிச்சயமின்மை – இவையெல்லாம் உழைப்புச் சந்தையில் அதிகரிக்க அதிகரிக்க தன் உழைப்பிலிருந்து தொழிலாளி அந்நியமாவதும் உழைப்பின் மீது வெறுப்பு கொள்வதும் அதிகரிக்கிறது. அவனுக்குப் புத்துணர்ச்சியூட்டக் காத்திருக்கும் பொழுது போக்குச் சந்தையும் உடனே தீவிரமாக இயங்கத் தொடங்குகிறது.

ஆட்கொல்லி இசை!

இந்தப் புத்துணர்ச்சி என்பது ஜப்பானியத் தொழிலாளர்களிடம் பழக்கத்திலிருப்பதைப் போல நிகோடின் பானமாகவோ, மாத்திரை வடிவிலோ, வழங்கப்படும் போது அதன் வேதியல் தன்மையையும் அது மனித உடலில் ஆற்றும் வினையையும் மருத்துவரீதியில் விளக்க முடியும். அதுவே இசையாக, ரசனையாக, சித்தாந்தமாக, வாழ்க்கைப் பாணியாகத் தரப்படும் பொழுது? ‘எக்ஸ்டஸி’ எனும் ‘பேரின்ப மாத்திரை’ நரம்பு மண்டலத்தில் தோற்றுவிக்கும் இரசாயன மாற்றம் எப்படி மகிழ்ச்சி எனும் உணர்ச்சியாக மாற்றம் பெறுகிறதோ, அப்படியே இசையும் நம் மீது வினையாற்றுகிறது” என்று இக்கட்டுரையின் முதல் பகுதியில் குறிப்பிட்டிருந்தோம்.

சமீபத்திய (ஆக-2001 இல் வெளிவந்த கட்டுரை இது) ‘டைம்’ வார ஏட்டில் அலபாமா மாநிலத்தைச் (அமெரிக்கா) சேர்ந்த ஜூலியன் என்ற 17 வயதுப் பெண்ணின் மரணம் கிளப்பியுள்ள சர்ச்சையைப் பற்றி ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. அவளது மரணத்திற்குக் காரணம் மிதமிஞ்சிய எக்ஸ்டஸி மாத்திரையா, மிதமிஞ்சிய களிவெறி நடனமா என்ற கேள்வி நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது. அந்த நடன விடுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டதற்கான தடயம் எதுவும் போலீசிடம் இல்லை. ஆனால் எக்ஸ்டஸி மாத்திரை தின்றவர்கள் பற்களை நறநறக்கும்போது பல் பாதுகாப்புக்காகக் கடித்துக் கொள்ளும் ரப்பர் போன்ற பொருள் அவ்விடுதியில் விற்பனை செய்யப்படுவதை ஆதாரமாகக் கொண்டு போதை மருந்து வழக்குப் போட்டிருக்கிறது போலீசு.

“நரம்புகள் முறுக்கேறிப் பற்களை நறநறப்பது என்பது எங்கள் இசை தோற்றுவிக்கும் விளைவு. எனவேதான் அந்த ரப்பர் துண்டுகளை வழங்குகிறோம்” என்று வாதாடுகிறார் விடுதிக்காரர். அவருக்கு ஆதரவாக 2500 நடன விடுதிகள் களத்திலிறங்கியுள்ளன. ஜூலியனின் சாவுக்குக் காரணம் போதை மாத்திரைதானென்று நிரூபிக்கப்பட்டால் விடுதிக்காரருக்குத் தண்டனை உண்டு. இசைதான் என்று முடிவானால் விடுதிக்காரருக்குத் தண்டனை கிடையாது. என்பது மட்டுமல்ல, அந்த ஆட்கொல்லி இசையைத் தடை செய்யவும் முடியாது. ஏனென்றால் அது கருத்துச் சுதந்திரத்தைத் தடை செய்வதாகி விடும்.

படிக்க:
இணைய வணிகம் – மெய்நிகர் போதை | வில்லவன்
மியூசிக்கல்லி செயலி உருவாக்கும் ரசனை எத்தகையது ?

பற்களைக் கடிப்பது, உடம்பை முறுக்குவது போன்ற நடவடிக்கைகளின் மூலம் இந்த இசை ரசிகர்கள் என்ன கருத்தை அல்லது உணர்ச்சியை வெளியிட விரும்புகிறார்கள்? அதே போன்ற இசையைக் கேட்டும், தொலைக்காட்சியில் பார்த்தும் ரசித்துக் கொண்டிருக்கும் நமது இளைஞர்கள் அமெரிக்க இளைஞர்களைப் போலப் பற்களைக் கடித்துக் கொண்டு உடம்பை முறுக்காதது ஏன்? வெளிப்படுத்தப்படாத அந்த உணர்ச்சி காற்றில் கரைந்த கற்பூரமாக அவர்களுக்குள்ளேயிருந்து மறைந்து விடுகிறதா? அல்லது வெளிப்படுவதற்குத் தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறதா?

(நூலிலிருந்து பக்-107-110)

நூல்: இசை : போதை பொழுதுபோக்கு போராட்டம்
(புதிய கலாச்சாரம் கட்டுரைகள்)

வெளியீடு: புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

பேச: 97100 82506, 99411 75876
மின்னஞ்சல்: vinavu@gmail.com, pukatn@gmail.com

பக்கங்கள்: 112
விலை: ரூ.40.00 (அக்-2002 பதிப்பு)

அச்சு நூல்களை அஞ்சல் மூலமாகப் பெற வினவு மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.  மின்னஞ்சல் : vinavu@gmail.com

இதர மின் நூல்கள் வாங்க (e books)

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க