அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 8

பதினேழாம் நூற்றாண்டில் மான்கிரேட்டியன் எனும் பிரெஞ்சு அறிஞர் “அரசியல் பொருளாதாரம்” என்ற வகையினத்தை தனது நூல் தலைப்பிற்கு பயன்படுத்துகிறார். பல்துறை திறமைகளும், பரிமாணங்களும் கொண்ட அவர் சண்டையிலே இறந்து போகிறார். இக்காலத்தில் இங்கிலாந்தின் முதலாளித்து வளர்ச்சியை நேரில் கண்ட மான்கிரேட்டியன், அதே போன்று தனது சொந்த பிரெஞ்சு தேசமும் வளர வேண்டும் என விரும்புகிறார். இதிலிருந்து முதலாளித்துவத்தை ஆதரிக்கும் தேசியவாதக் கருத்துக்கள் தோன்றுவதைக் காண்கிறோம். நிலப்புரத்துவத்தை ஆதரிக்கும் அரசு அமைப்புக்கள் மாற்றப்பட்டு முதலாளித்துவத்தை ஆதரிக்கும் அரசுகள் தோன்றியதை இக்கருத்துடன் இணைத்துப் பார்க்கலாம். இன்னொரு புறம் பிரெஞ்சு அரசனையும், திருச்சபையையும் எதிர்க்கும் புராட்டஸ்டன்ட் கலகக்காரராகவும் இவர் இருந்தார்.
படியுங்கள். கீழே கேள்விகள் இருக்கின்றன. பதிலளிக்க முயலுங்கள்!

நட்புடன்
வினவு

*****

விஞ்ஞானத்துக்குப் பெயர் சூட்டல்

அ.அனிக்கின்
மூக – பொருளாதார நூல்களில் அரசியல் பொருளாதாரம் என்ற இனத்தை முதன் முதலாக உபயோகப்படுத்தியவர் அன்டுவான் டெ மான்கிரெட்டியேன், சினியர் டெ வாட்டெவில். அவர் நான்காம் ஹென்ரி, பதிமூன்றாம் லூயீ ஆகியோரது காலத்தில் வாழ்ந்த பிரெஞ்சு கனவான்; சுமாரான வருமானத்தைக் கொண்டவர்.

அவருடைய வாழ்க்கை அர்ட்டஞானைப் போல வீரசாகசங்கள் நிறைந்ததது. கவிஞர், சண்டையாளர், நாடு கடத்தப்பட்டவர், அரசரோடு உடனிருக்கும் ஊழியர், கிளர்ச்சிக்காரர், அரசாங்கக் குற்றவாளி இப்படிப் பல நிலைகளைக் கடந்து வந்தவர், கடைசியில் தம் எதிரிகள் விரித்த வலையில் சிக்கி வாள் வீச்சுக்கும் துப்பாக்கிப் புகைக்கும் நடுவே அழிந்து போனார். அதுவும் ஒருவகையில் அவருடைய அதிர்ஷ்டமே. ஏனென்றால் அந்தக் கிளர்ச்சிக்காரர் உயிரோடு அகப்பட்டிருந்தால் அவரைச் சித்திரவதை செய்து அவமானப்படுத்திக் கொன்றிருப்பார்கள். அவருடைய பிரேதத்தை கூட அவமதிக்க உத்தரவிடப்பட்டது. அவருடைய உடலை இரும்பால் அடித்து எலும்புகளை நொறுக்கினார்கள்; பிரேதத்தை நெருப்பில் போட்டு அந்தச் சாம்பலைக் காற்றிலே வீசினார்கள்.

அன்டுவான் டெ மான்கிரெட்டியேன்

மான் கிரெட்டியேன் அரசருக்கும் கத்தோலிக்க திருச்சபைக்கும் எதிராகக் கலகம் செய்த பிரெஞ்சு புரோட்டெஸ்டென்டுகளின் (ஹுகெனோட்டுகள்) தலைவர்களில் ஒருவர். அவர் 1621-ம் வருடத்தில் தமது நாற்பத்தைந்து அல்லது நாற்பத்தாறாவது வயதில் மரணமடைந்தார். அவர் எழுதிய அரசியல் பொருளாதார ஆய்வுரை என்ற புத்தகம் 1615-ம் வருடத்தில் ருவான் நகரத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த ஆய்வுரை மறக்கப்பட்டதும் மான்சி ரெட்டியேன் என்ற பெயர் அவமதிக்கப்பட்டதும் வியப்பானவை அல்ல. அவரை முற்றிலும் வெறுத்தவர்களின் அவதூறுமிக்க தீர்ப்புக்களிலிருந்துதான் அவருடைய வாழ்க்கையைப் பற்றி நாம் தெரிந்து கொள்கிறோம் என்பது துரதிர்ஷ்டவசமானதே.

இந்தத் தீர்ப்புகள் மூர்க்கத்தனமான அரசியல், மதப் போராட்டத்தின் முத்திரையைக் கொண்டிருக்கின்றன. அவரை வழிப்பறிக் கொள்ளைக்காரன், கள்ளக் கையெழுத்திடுபவன் என்றும் ஒரு பணக்கார ஹுகெனோட் விதவையைத் திருமணம் செய்து கொள்வதற்காக புரோட்டெஸ்டென்டாக மதம் மாறியதாகச் சொல்லப்படுகின்ற அற்பத்தனமான ஆதாய வேட்டைக்காரன் என்றும் வர்ணித்திருக்கிறார்கள்.

அதற்கு முந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவருக்கு நற்பெயர் மறுபடியும் ஏற்பட்டது; பொருளாதார, அரசியல் சிந்தனை வரலாற்றில் அவருக்கு ஒரு சிறப்பான இடம் ஒதுக்கப்பட்டது. அவருடைய பரிதாபமான முடிவு தற்செயலாக ஏற்படவில்லை என்பதை நாம் இன்று தெளிவாகப் பார்க்கிறோம். அவர் குடிப்பிறப்பால் சாதாரணமானவர் (அவருடைய தகப்பனார் ஒரு மருத்துவர்), சந்தர்ப்பவசமாக கனவான்; விருப்பத்தால் மனிதாபிமானியாகவும் போராட்டக்காரராகவும் இருந்தவர். அவர் ஹுகெனோட்டுகளின் கலகங்களில் – இவை நிலப்பிரபுத்துவ சர்வாதிகார அமைப்பை எதிர்த்து அதனால் அழுத்தப்பட்டிருந்த பிரெஞ்சு முதலாளிகள் நடத்திய வர்க்கப் போராட்டத்தின் வடிவம் என்று ஓரளவுக்குச் சொல்லலாம் – ஒன்றில் பங்கெடுத்துக் கொண்டதை அவருடைய வாழ்க்கையின் தர்க்க ரீதியான விளைவு எனக் கூறலாம்.

அந்தக் காலத்து நிலைமைகளை நினைக்கும் பொழுது அவர் நல்ல கல்வியைப் பெற்றதாகவே சொல்ல வேண்டும். அவர் தமது இருபதாவது வயதில் எழுத்தாளராக முடிவு செய்தார். செவ்வியல் கதையைச் செய்யுள் வடிவத்தில் சோக நாடகமாக எழுதினார். இதன் பிறகு இன்னும் பல கவிதை நூல்களும் நாடகங்களும் எழுதினார். அவர் நார்மண்டியின் வரலாறு என்ற புத்தகத்தையும் எழுதினார் என்று தெரிகிறது. 1605-ம் வருடத்தில் அவர் நன்கு அறிமுகமான எழுத்தாளராக இருக்கும் பொழுது அவருக்கும் மற்றொருவருக்கும் நடந்த சண்டையில் அவருடைய எதிரி மரணமடைந்து விட்டதனால், அவர் நாட்டைவிட்டு இங்கிலாந்துக்கு ஓடினார்.

படிக்க:
♦ சிறப்புக் கட்டுரை : பிரெஞ்சுப் புரட்சி – உலகம் தன் தலை மீது நின்ற காலம் !
♦ கார்ல் மார்க்ஸை மார்க்சியவாதியாக்கிய நகரம் பாரீஸ்

இங்கிலாந்தில் அவர் கழித்த நான்கு வருடங்கள் அவருடைய வாழ்க்கையில் முக்கியமான பங்கு வகித்தன. ஏனென்றால் அங்கே அவர் அதிகமான வளர்ச்சி அடைந்த பொருளாதாரத்தையும் அதிகமான வளர்ச்சியடைந்த முதலாளித்துவ உறவுகளையும் கொண்ட நாட்டைக் கண்டார். அவர் வர்த்தகம், கைத்தொழில், பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றில் தீவிரமான அக்கறை காட்டினார்.

இங்கிலாந்தில் ஒவ்வொன்றையும் பார்க்கும் பொழுது அவர் தன்னுடைய மனக்கண்ணில் அவற்றை பிரான்சுடன் ஒப்பிட்டுப் பார்த்தார். அப்பொழுது பிரான்சை விட்டு ஓடிவந்த ஹுகெனோட்டுகள் பலர் இங்கிலாந்தில் வாழ்ந்தனர். மான்சி ரெட்டியேன் அவர்களைச் சந்தித்தது அவருடைய எதிர்கால வாழ்க்கையில் முக்கியமான பங்கு வகித்ததுபோல் தோன்றுகிறது. இவர்களில் பெரும்பான்மையானவர்கள் கைவினைஞர்கள்; பலர் திறமை மிக்கவர்கள். அவர்களுடைய உழைப்பும் திறமையும் இங்கிலாந்துக்கு அதிகமான லாபத்தைக் கொடுப்பதையும், அவர்களை நாட்டை விட்டுத் துரத்திய பிரான்ஸ் அதிகமான நஷ்டமடைவதையும் அவர் பார்த்தார்.

மான்கிரெட்டியேன் நூலின் அட்டைப்படம்

மான்கிரெட்டியேன் சுதேசித் தொழில்துறை, வர்த்தகம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட ஆதரவாளராக, மூன்றாவது சமூக வகுப்பினரின் துணைவராக பிரான்சுக்குத் திரும்பினார். அங்கே தன் புதிய கருத்துக்களை அமுல்படுத்தத் தொடங்கினார், ஒரு இரும்புப் பட்டறையை ஆரம்பித்து பாரிஸ் நகரத்தில் தன் பொருள்களை விற்பனை செய்யத் தொடங்கினார். அங்கே அவருக்கு ஒரு கடை இருந்தது. ஆனால் தமது ஆய்வுரையை எழுதுவதுதான் அவருடைய முக்கியமான வேலையாக இருந்தது. அதன் தலைப்பு பகட்டாக இருந்ததே தவிர, அது முற்றிலும் நடைமுறைக்கு உதவக் கூடிய கட்டுரைதான்.

அதில் பிரெஞ்சு உற்பத்தியாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் அரசாங்கம் முழு ஆதரவு கொடுக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறியிருந்தார். அந்நியப் பொருள்களின் இறக்குமதி உள்நாட்டு உற்பத்தியை பாதிக்கக் கூடாது என்பதற்காக அந்தப் பொருள்களின் மீது அதிகமான வரி விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் உழைப்பைப் போற்றி, தேசத்தின் செல்வத்தைப் படைக்கின்றதாக அவர் கருதிய பிரதானமான வர்க்கத்தின் புகழ் பாடியிருந்தார். இது அவர் காலத்தில் புதுமையான ஒன்றாகும். “அருமையும் சிறப்பும் கொண்ட கைவினைஞர்கள் ஒரு நாட்டுக்கு மிகவும் உபயோகமானவர்கள்; ஒரு நாட்டுக்கு அவர்கள் மிகவும் அவசியமானவர்கள், கெளரவமானவர்கள் என்று சொல்வதற்குக் கூட நான் துணிவேன்”(1) என்று எழுதியிருந்தார்.

மான்கிரெட்டியேன் வாணிப ஊக்கக் கொள்கையை ஆதரித்தவர்களில் முன்னணியிலிருந்தார். இதைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் சொல்லப்படும். அரசாங்க நிர்வாகத்தின் முக்கியமான நோக்கம் நாட்டின் பொருளாதாரத்தை நன்கு வைத்திருப்பதே என்று அவர் கருதினார். வெளிநாட்டு வர்த்தகத்தின் மூலமாகவே, குறிப்பாக உற்பத்திப் பொருள்களையும் கைத்தொழிற் பொருள்களையும் ஏற்றுமதி செய்வதன் மூலமாகவே ஒரு நாடும் அரசும் (அரசரும்) செல்வத்தைத் திரட்ட முடியும் என்று அவர் கருதினார்.

அவருடைய புத்தகம் வெளிவந்ததும் – அவர் அதை இளைஞரான பதிமூன்றாம் லூயி மன்னருக்கும் அவருடைய தாயாருக்கும் சமர்ப்பணம் செய்திருந்தார் – ஒரு பிரதியை அரசு முத்திரைக் காப்பாளரிடம் (நிதி அமைச்சர்) அன்பளிப்பாகக் கொடுத்தார். அரசருக்கு விசுவாசமாக எழுதப் பட்டிருந்த இந்தப் புத்தகத்தை அரண்மனை வட்டாரத்தினர் ஆரம்பத்தில் நன்கு வரவேற்றதாகத் தெரிகிறது .அதன் ஆசிரியரும் பொருளாதாரத்தைப் பற்றி ஆலோசனை கூறுபவராக ஒரு பாத்திரத்தை வகிக்க ஆரம்பித்தார்; 1617-ம் வருடத்தில் அவர் சட்டில்லான் – சூர்லுவார் என்ற இடத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அநேகமாக இந்த சமயத்தில்தான் அவர் கனவானாக உயர்வு பெற்றிருக்க வேண்டும். அவர் எப்பொழுது புரோட்டெஸ்டென்டாக மதம் மாறினார், ஹுகெனோட் கிளர்ச்சிக்காரர்களின் அணியில் எப்பொழுது சேர்ந்தார் என்பது சரியாகத் தெரியவில்லை.

Luis_XIII-political-economy
பதிமூன்றாம் லூயி

மன்னருடைய ஆட்சியில் தன்னுடைய திட்டங்கள் அமுலாக்கப்படும் என்ற நம்பிக்கையை அவர் ஒருவேளை இழந்திருக்கலாம்; ஆட்சி செய்பவர்கள் ஒரு புதிய மதப் போரை விசிறி விடுவதைக் கண்டு அவர் ஆத்திரமடைந்திருக்கலாம். அல்லது தான் வகுத்துக் கொடுத்த கொள்கைகள் புரோட்டெஸ்டென்டு மதத்துக்கே அதிகப் பொருத்தமானவை என்று அவர் முடிவு செய்திருக்கலாம்; துணிச்சலும் உடன் முடிவு செய்யும் இயல்பும் உடையவராதலால் அந்த மதத்தை ஆதரித்து ஆயுதம் ஏந்தியிருக்கலாம்.

நாம் அரசியல் பொருளாதார ஆய்வுரைக்குத் திரும்புவோம். அவர்  தம்முடைய புத்தகத்துக்கு இப்பெயரைக் கொடுத்தது ஏன்? அதற்கு ஏதாவது விசேஷமான தகுதி இருந்ததா? இல்லை என்றே தோன்றுகிறது. இந்தப் புதிய விஞ்ஞானத்துக்கு ஒரு பெயர் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் சிறிதும் ஏற்படவில்லை. இதுவும் இதைப் போன்ற வேறு சொற்றொடர்களும் அன்றைய மறுமலர்ச்சியுகச்சூழலில் எங்கும் நிறைந்திருந்தன. மறுமலர்ச்சியின்போது மூலச்சிறப்புடைய கலாச்சாரத்தின் கருத்துக்கள், கருதுகோள்கள் பலவும் புதைகுழியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டன; அவற்றுக்குப் புதிய விளக்கங்கூறி, புத்துயிர் கொடுக்கப்பட்டது.

அவருடைய காலத்தில் கல்விச் சிறப்புடைய ஒவ்வொருவரையும் போல மான்கிரெட்டியேன் கிரேக்க, லத்தீன் மொழிகளைக் கற்றிருந்தார்; மூலச்சிறப்புடைய நூல்களைப் பயின்றிருந்தார். அன்றைய உணர்ச்சிப்பாங்கை ஒட்டி அவர் தமது ஆய்வுரையில் இவற்றிலிருந்து அடிக்கடி மேற்கோள் காட்டுகிறார். பொருளாதாரம், பொருளியல் என்ற சொற்களை செனபோன்ட் மற்றும் அரிஸ்டாட்டில் எத்தகைய பொருளில் கையாண்டனர் என்பது அவருக்குத் தெரியும் என்பதில் சந்தேகமில்லை.

பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தாளர்கள் இந்த வார்த்தைகளை வீடு, குடும்பம், சொந்தப் பண்ணை ஆகியவற்றின் நிர்வாகத்தைக் குறிக்கின்ற பொருளில்தான் தொடர்ந்து உபயோகித்தனர். மான்கிரெட்டியேனுக்குச் சிறிது காலத்துக்குப் பிறகு ஒரு ஆங்கிலேயர் பொருளாதாரம் சம்பந்தமான நுண்காட்சிகளும் ஆலோசனைகளும் என்ற தலைப்புடைய புத்தகத்தை வெளியிட்டார். அவர் பொருளாதாரத்தை ”ஒரு மனிதர் தன்னுடைய சொந்த வீட்டையும் வளத்தையும் நன்றாக நிர்வாகம் செய்யும் கலை” என்று குறிப்பிட்டார்; ஒரு கனவான் தனக்கு ஏற்ற மனைவியைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்பன போன்ற பிரச்சினைகளைப் பற்றி எழுதினார். ”இரவிலே ஒத்துப் போகின்ற அளவுக்குப் பகலிலேயும் உபயோகமாக இருக்கக் கூடிய” பெண்ணையே ஒருவர் மனைவியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எழுதினார்.

படிக்க:
♦ ருமேனியாவில் மன்னர் குடும்பமும் பாட்டாளி வர்க்கமான வரலாறு !
♦ வாழ்க்கைதான் எத்தனை விசித்திரமாயிருக்கிறது !

மான்கிரெட்டியேன் ஆர்வம் காட்டிய பொருளாதாரம் இதுவாக இருக்க முடியாது என்பது தெளிவு. அவருடைய சிந்தனைகளெல்லாம் பொருளாதாரம் அரசு, தேசியக் குழுமமாக வளங்கொழிக்கும் திசையில் திரும்பியிருந்தது. அவர் பொருளாதாரம் என்ற வார்த்தையோடு அரசியல் என்ற வார்த்தையையும் சேர்த்து உபயோகித்தது வியப்புத் தருவதல்ல.

மான்கிரெட்டியேனுக்கு நூற்றைம்பது வருடங்களுக்குப் பிறகு அரசியல் பொருளாதாரம் என்பது பிரதானமாக அரசுப் பொருளாதாரத்தைப் பற்றிய விஞ்ஞானமாக, தேசிய அரசுகளின் – இவற்றில் அநேகமாக சர்வாதிகார அரசர்களே ஆட்சி செய்து வந்தார்கள் – பொருளாதாரத்தைப் பற்றிய விஞ்ஞானமாகக் கருதப்பட்டது.

ஆடம்ஸ்மித் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் மூலச்சிறப்புடைய மரபைத் தோற்றுவித்த பிறகுதான் அதனுடைய தன்மை மாறியது; அது பொதுவான பொருளாதார விதிகளைப் பற்றிய, குறிப்பாக வர்க்கங்களுக்கிடையே பொருளாதார உறவுகளைப் பற்றிய விஞ்ஞானமாயிற்று.

மான்கிரெட்டியேன் செய்த பெரும் சேவை அவர் தமது புத்தகத்துக்குச் சூட்டிய பொருத்தமான தலைப்பு அல்ல. அது பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு சிறப்பான முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்ட முதல் புத்தகம் – பிரான்சில் மட்டுமல்ல, ஐரோப்பா முழுவதிலுமே. அது ஆராய்ச்சிக்கென்று ஒரு தனித்துறையை – மற்ற சமூக விஞ்ஞானங்களின் துறைகளிலிருந்து வேறுபட்ட ஒன்றை – ஏற்படுத்தி அதன் எல்லைகளையும் வகுத்துக் கொடுத்தது.

(தொடரும்…)

அடுத்த பகுதியில் பார்க்க இருக்கும் தலைப்பு : அரசியல் பொருளாதாரமும், பொருளாதாரமும்

அடிக்குறிப்பு:
(1) P. Dessaix, Montchrétien et l’économie politique nationale (Paris, 1901, p. 21) என்னும் புத்தகத்திலுள்ள மேற்கோள்.

கேள்விகள்:

 1. மான் கிரேட்டியன் காலத்து பிரெஞ்சு தேச அரசியல் சூழல் குறித்து சிறு குறிப்பு வரைக.
 2. புராட்டஸ்டன்ட் மதப்பிரிவு கத்தோலிக்கத்திலிருந்து பிரிந்து தோன்றியது ஏன்?
 3. மான் கிரேட்டியன் காலத்தில் இங்கிலாந்து, பிரான்சு நாடுகளின் அரசியல் வேறுபாடுகள் என்ன?
 4. சாணக்கியரது அர்த்தசாஸ்திரத்திற்கும், மான்கிரேட்டியன் கருத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?
 5. பெண் குறித்த மான்கிரேட்டியன் கருத்திலிருந்து உங்களுக்குத் தோன்றுவது என்ன?

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ

3 மறுமொழிகள்

 1. மான் கிரேட்டியன் காலத்து பிரெஞ்சு தேச அரசியல் சூழல் குறித்து சிறு குறிப்பு வரைக.
  17 வது நூற்றாண்டில் பிரான்ஸ் ஒரு முடியாட்சியாக இருந்தது. பிரான்சின் மன்னர் லூயிஸ் XVI ”One king, one law, one faith” என்று பறைசாற்றியுள்ளார். அவர் தன்னை முன்னிறுத்தியே அரசாங்கத்தை இயக்கியுள்ளார் ஏறக்குறைய ஜெயலலிதா மோடி மாதிரி. அதே சமயம் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் பொருட்களை உற்பத்தி செய்யதிலும், போக்குவரத்து துறையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக telescope, air pump, pressure cooker போன்றவை. ஒரு பக்கம் அரசனின் பிற்போக்குதனமான செயல்கள் மக்களிடம் திணிக்கப்பட்டு வந்தது மறுபுறம் அறிவியல் கண்டுபிடிக்கப்பட்டு உற்பத்தி பெருக்குவதில் பங்காற்றியுள்ளது.

 2. புராட்டஸ்டன்ட் மதப்பிரிவு கத்தோலிக்கத்திலிருந்து பிரிந்து தோன்றியது ஏன்?
  கத்தோலிக்கம் நிலப்பிரபுத்துவத்தை நிலப்பிரபுத்துவத்தை உயரத்திப்பிட்த்தது
  கத்தோலிக்க திருச்சபை நிலப்பிரபுத்துவதம் கண்டு முதலாளிகள் பிராட்டஸ்டன்ட் மதத்திற்கு ஆதரவளித்தனர்

 3. புராட்டஸ்டன்ட் மதப்பிரிவு கத்தோலிக்கத்திலிருந்து பிரிந்து தோன்றியது ஏன்?
  15ம் நூற்றாண்டுகளில் ரோம் கத்தோலிக்க மத குருமார்களின் செல்வாக்கு அரசனுக்கும் மேல் என்றுதான் இருந்தது. அரச குடும்பத்தினர் மட்டுமல்ல மக்கள் கூட மதகுருமார்களின் ஆதிக்கத்தை எதிர்த்து மாற்றம் கொண்டு வர எண்ணினர். சர்ச்சின் மீதான பாப்சி – யின் ஆதிக்கத்தை வெறுத்தனர். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை மதகுருமார்களின் ஊழல்கள், இரத்த உறவு முறையில் பதவிகள், பாப்சியை விற்கும் அதிகாரம் அதில் சில.

  மேலும் ஆண்டவனின் இரட்சிப்பு குருமார்கள் கையில் தான் இருந்தது ஏறக்குறைய இங்கிருக்கும் பார்ப்பனர்களை நினைவுப்படுத்துகிறது. அதாவது போப் கொடுக்கும் பிரெட்டும் ஒயினும் ஆண்டவனின் இரத்தமும் சதையும் என்பதாக கருத்தப்பட்டது. அதனை எதிர்த்து குரல் கொடுத்தவர் தான் லூதர். அவர் பைபிளை எல்லோரும் படிக்க சொன்னார். போப்பின்றி இறைவனை நாம் அடைய முடியும் என்று பரப்பினார். அப்போது இருந்த சூழலானது போப்பின் அதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்பது மாற்று கருத்துகளை பரப்புவது என்று ஐரோப்பிய முக்கிய நாடுகளில் இவ்வாறு நடைப்பெற்றது. பின்னர் பிராட்ட்ஸ்டண்டுகள் மதம் உருவாக்கப்பட்டது. இது ஞானஸ்தானம் செய்வதை எதிர்த்தனர். பிராட்ட்ஸ்டண்டுகளுக்கும் கத்தோலிக்கும் இடையே கடுமையான போர் ஏற்பட்டது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க