மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 53

மாக்சிம் கார்க்கி
வளது பயம் ஒரு துர்நாற்றம் போல் அவளது தொண்டையில் கமறியெழுந்து அவளைத் திணறச் செய்தது. விசாரணை தினத்தன்று. தனது இதயத்தை அழுத்திக்கொண்டிருக்கும் அந்தப் பெரும் மனப்பாரத்தைச் சுமந்துகொண்டுதான் தாய் நீதிமன்றத்துக்குச் சென்றாள்.

தெருவெல்லாம் சுற்று வட்டாரத் தொழிலாளர் குடியிருப்பிலிருந்து வந்தது. அவளுக்கு அறிமுகமான பல தொழிலாளர்கள் அவளை வரவேற்றார்கள். அவள் வாய்திறந்து எதுவும் பேசாமல் அவர்களுக்குத் தலை வணங்கிக் கொண்டே அந்த ஜனக்கூட்டத்தைக் கடந்து சென்றாள் நீதி மன்றத்திலும் அதற்கு வெளியேயுள்ள நடை வழிகளிலும் விசாரணைக்கைதிகளின் உறவினர்கள் கூடிக் குழுமி, தணிந்த குரலில் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசிக்கொள்ளும் பேச்சு தாய்க்கு அபரிமிதமாகப்பட்டது, அவளுக்கு அது புரியவில்லை . எல்லோரும் ஒரே மாதிரியான சோகத்துக்கு ஆளாகி நின்றார்கள். தாயும் இதை அறிந்திருந்தாள்; அதனால் அவளுக்கு மனப்பாரம்தான் அதிகமாயிற்று.

“என் பக்கத்திலே உட்கார்” என்று ஒரு பெஞ்சில் ஒதுங்கி இடம் கொடுத்துக்கொண்டே கூறினான் சிஸோவ்.

அவள் பணிவோடு உட்கார்ந்து, தன் உடுப்பைச் சரியாக இழுத்து விட்டுக்கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தாள். அவளது கண்முன்னால் பச்சை, சிவப்புப் புள்ளிகளும், கோடுகளும், மஞ்சள் நாடாக்களும் நடனமிட்டன.

”எங்கள் கிரிகோரியை உன் மகன்தான் இதில் இழுத்து விட்டுவிட்டான்” என்று அவளுக்கு அடுத்தாற்போல் இருந்த ஒரு பெண் முனகினாள்.

”வாயை மூடு, நதால்யா!” என்று கோபத்தோடு சொன்னான் சிஸோவ்.

தாய் அந்தப் பெண்ணைப் பார்த்தாள். அவள் தான் சமோய்லவின் தாய். அவளை அடுத்து அவள் கணவன் உட்கார்ந்திருந்தான். சுமூகமான தோற்றமும், மெலிந்த முகமும், வளர்ந்து பெருகிய சிவந்த தாடியும் வழுக்கைத் தலையுமாகக் காட்சியளித்த அவன் தன் கண்களை நெரித்து ஏறிட்டுப் பார்த்தான்; உள்ளுக்குள் பட்டுக்கொண்டிருந்த சிரமத்தால் அவனது தாடி நடுநடுங்கிக்கொண்டிருந்தது.

வெளிப்புறத்திலிருந்து பனி படிந்துள்ள உயர்ந்த ஜன்னல்களின் வழியாக, மங்கிய ஒளி மயக்கம், நீதி மன்றத்துக்குள்ளே பரவி ஒளி செய்தது. ஜன்னல்களுக்கு மத்தியில் அலங்காரமான முலாம் சட்டத்தில் அமைந்த ஜார் அரசனின் சித்திரம் தொங்கிக்கொண்டிருந்தது. அதன் இருபுறத்தையும் கருஞ்சிவப்பான ஜன்னல் திரைகள் மடிமடியாகத் தொங்கி மறைத்துக்கொண்டிருந்தன. அந்தச் சித்திரத்துக்கு முன்னால் பச்சைத் துணியால் மூடப்பட்டிருந்த ஒரு பெரிய மேஜை அந்த ஹாலின் அகலம் முழுவதையுமே வியாபித்துக்கொண்டிருந்தது. கைதிக் கூண்டுகளுக்குப் பின்னால், வலதுபுறச் சுவரையொட்டி இரண்டு மரப்பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன. இடது புறத்தில், கருஞ்சிவப்பு, துணிவைத்துத் தைக்கப்பட்ட கைநாற்காலிகள் இரு வரிசையாகப் போடப்பட்டிருந்தன. தங்க நிறப் பித்தான்களைக் கொண்ட பச்சை உடுப்புக்கள் அணிந்த கோர்ட்டுச் சேவகர்கள் வாய் பேசாது முன்னும் பின்னால் வந்து போய்க்கொண்டிருந்தார்கள். அந்த மப்பும் மந்தாரமும் நிறைந்த சூழ்நிலையில் உள்ளடங்கி ஒலிக்கும் பேச்சுகளும், பற்பல மருந்துகளின் கார நெடியும் கலந்து நிறைந்தன. இவையெல்லாம் – இந்த வர்ண பேதங்கள், பிரகாசம், குரல்கள், நெடி எல்லாம் – கண்ணையும் காதையும் உறுத்தின; சுவாசத்தோடு இதயத்தில் புகுந்து அர்த்தம் ஒன்றுமற்ற பய வேதனையை நிரப்பின.

திடீரென யாரோ உரத்தக் குரலில் பேசினார்கள். தாய் திடுக்கிட்டாள். எல்லோரும் எழுந்து நிற்பதைக் கண்டு அவளும் சிஸோவின் கையைப் பற்றிப் பிடித்தவாறே எழுந்து நின்றாள்.

இடதுபுறமாக இருந்த ஒரு பெரிய கதவு திறந்தது மூக்குக்கண்ணாடி அணிந்த ஒரு வயதான மனிதர் ஆடியசைந்து கொண்டு உள்ளே வந்தார். அவரது சாம்பல் நிறக் கன்னங்களில் மெல்லிய வெள்ளையான கிருதாக்கள் அசைந்து கொடுத்தன. மழுங்கச் செய்யப்பட்ட அவரது மேலுதடு பற்களேயற்ற வாய் ஈறுக்குள் மடிந்து போயிருந்தது. அவரது மோவாயும் தாடையும் அவரது உத்தியோக உடுப்பின் உயர்ந்த காலர்மீது சாய்ந்து கழுத்தே இல்லாதது போல் தோற்றமளித்துக்கொண்டிருந்தது. கொழுத்துத் திரண்ட நெட்டையான வெள்ளை மூஞ்சி இளைஞன் ஒருவன் கை கொடுத்து அவரை மேலேற்றிவிட்டான். அவர்களுக்குப் பின்னால் தங்க நிறக்கரை வைத்துத் தைத்த உத்தியோக உடைகளோடு மூன்று பேர் வந்தார்கள், சாதாரண உடையணிந்து மூன்று பேர் வந்தார்கள்.

அந்த நீண்ட மேஜை முன்னால் அவர்கள் உட்கார்ந்து முடிப்பதற்கே வெகு நேரம் பிடித்தது. அவர்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தவுடன் மழுங்கச் சவரம் செய்து வழவழப்போடு விளங்கும் சோம்பல் முகமுள்ள ஒரு மனிதன் அந்த வயோதிகரின் பக்கம் குனிந்து தனது தடித்த உதடுகளை என்னவோ போல அசைத்துக்கொண்டு, ரகசியமாக ஏதோ சொல்லத் தொடங்கினான். அந்தக் கிழவர் நிமிர்ந்து அவன் கூறுவதை அசையாமல் கேட்டார். அவரது கண்ணாடிக்குப் பின்னால், இரு சிறு புள்ளிகள் மாதிரி தோன்றும் உணர்ச்சியற்ற கண்களைத் தாய் கண்டாள்.

அந்த மேஜையின் ஓரமாகக் கிடந்த எழுதும் சாய்வு மேஜைக்கு அருகே ஒரு நெட்டையான வழுக்கைத் தலை ஆசாமி நின்று கொண்டிருந்தான்; அவன் தொண்டையைக் கனைத்துச் சீர்படுத்திக்கொண்டே தஸ்தாவேஜுக்களைப் புரட்டிக் கொண்டிருந்தான்.

அந்தக் கிழவர் முன்புறமாகக் குனிந்து பேசத்தொடங்கினார். எடுத்த எடுப்பில் அவரது பேச்சு தெளிவாக ஒலித்தது; அப்புறம் அந்தப் பேச்சு அவரது மெல்லிய உதடுகளுக்குள்ளாக மடிந்து உள்வாங்கிப் போய்விட்டது.

”விசாரணை தொடங்குகிறேன் …. அவர்களைக் கொண்டு வாருங்கள்…”

”பார்’ என்று தாயை முழங்கையால் இடித்து நிமிர்ந்து நின்றவாறே மெதுவாகச் சொன்னான் சிஸோவ்.

கைதிக் கூண்டுக்குப் பின்புறமுள்ள கதவு திறந்தது. பளபளக்கும் வாளைத் தோளில் சாத்தியவாறே ஒரு சிப்பாய் வந்தான், அவனைத் தொடர்ந்து பாவெல், அந்திரேய், பியோதர் மாசின் கூஸெவ் சகோதரர்கள். சமோய்லவ், புகின், சோமவ் முதலியோரும். தாய்க்கு அறிமுகமில்லாத ஐந்து இளைஞர்களும் வந்து சேர்ந்தார்கள். பாவெல் அவளைப் பார்த்துப் புன்னகை புரிந்தான். அந்திரேய் பல்லைக் காட்டி, தலையை ஆட்டினான். அவர்களது புன்னகையும், உற்சாகம் நிறைந்த முகங்களும், அசைவுகளும் அந்த நீதிமன்றத்தின் உம்மணா மூஞ்சிச் சூழ்நிலையை மாற்றி அதைத் தளரச் செய்தது. உத்தியோக உடுப்புகளின் பொன்னொளி ஜாலம் மங்கிப் போயிற்று. தைரியம் மீண்டும் தாயிடம் குடிபுகுந்தது. அந்தக் கைதிகள் தம்மோடு கொணர்ந்த அமைதியான தன்னம்பிக்கையும் ஜீவ சக்தியும் அவளுக்கு வலுவூட்டின. அவளுக்குப் பின்னுள்ள பெஞ்சிகளில், இத்தனை நேரமும் சோர்ந்து அசந்து போய் நின்ற மக்கள். தங்களுக்குள் குசுகுசுத்துப் பேசத் தொடங்கினார்கள்.

“அவர்கள் பயப்படவே இல்லை!” என்று சிஸோவ் ரகசியமாகச் சொன்னான். சமோய்லவின் தாயோ உள்ளுக்குள்ளாகப் பொருமத் தொடங்கினாள்.

‘அமைதி” என்று ஒரு கடுமையான குரல் ஒலித்தது.

“முதலிலேயே நான் உங்களை எச்சரித்து விட வேண்டும்…” என்று சொன்னார் அந்தக் கிழவர்.

முன்னாலுள்ள பெஞ்சியின் மீது பாவெலும் அந்திரேயும் ஒருவர் பக்கம் ஒருவராக உட்கார்ந்திருந்தார்கள். அவர்களோடு மாசின், சமோய்லவ். கூஸெவ் சகோதரர்கள் முதலியோரும் உட்கார்ந்திருந்தார்கள். அந்திரேய் தன் தாடியை எடுத்துவிட்டிருந்தான், ஆனால் மீசையை மட்டும் வளரவிட்டிருந்தான். அந்த மீசை வளர்ந்து படிந்து அவனது உருண்டை முகத்தைப் பூனை முகம் மாதிரி காட்டிக்கொண்டிருந்தது. அவனது முகத்தில் ஏதோ ஒரு புதுமை இருந்தது. கூர்மையும் குத்தலும் நிறைந்த பாவம் அவனது முகத்தில் தோன்றியது. கண்களில் ஏதோ ஒரு கருமை தென்பட்டது. மாசினுடைய மேலுதட்டில் இரு கரிய கோடுகள் காணப்பட்டன. அவனது முகம் உப்பி உருண்டு கொண்டிருந்தது. சமோய்லவின் சுருட்டைத் தலை எப்போதும் போலவே இருந்தது. இவான் கூஸெவ் பல்லைக் காட்டிச் சிரித்தான்.

”ஆ பியோதர் பியோதர் என்று தலையைக் குனிந்து கொண்டே முணுமுணுத்தான் கிஸோவ்.

அந்தக் கிழவர் தமது உத்தியோக உடுப்பின் காலருக்குள் அசையாமல் புதைந்து கிடந்த தலையைக் கொஞ்சம் கூட அசைக்காமல், நிமிர்ந்தும் பார்க்காமல் கைதிகளைப் பார்த்து ஏதேதோ கேள்வி கேட்டார், அந்தத் தெளிவற்ற கேள்விக் குரலைத் தாயும் கேட்டுக்கொண்டிருந்தாள். அந்தக் கேள்விகளுக்கு, தன் மகன் கூறிய அமைதியான சுருக்கமான பதில்களையும் அவள் கேட்டாள். பிரதம நீதிபதியும் அவரது சகாக்களும் தன் மகன் விஷயத்தில் குரூரமாகவும் கொடுமையாகவும் நடந்து கொள்ள முடியாது என்று அவளுக்குத் தோன்றியது. அந்த நீண்ட மேஜைக்கு எதிரே இருந்தவர்களின் முகத்தைப் பார்த்து விசாரணையின் முடிவை அவள் ஊகிக்க முயன்றாள்; அவளது ஊகத்தால், அவளது இதயத்தினுள்ளே ஒரு நம்பிக்கை வளர்ச்சி பெற்று ஓங்குவதை அவள் உணர்ந்தாள்.

ஒரு வெள்ளை முக ஆசாமி ஒரு தஸ்தாவேஜை உணர்ச்சியற்று ஒரே குரலில் வாசித்தான். மந்திரத்தால் கட்டுப்பட்டவர்கள் மாதிரி அதைக் கேட்ட ஜனங்கள் ஆடாது அசையாது உட்கார்ந்திருந்தார்கள். விசாரணைக்காக நிற்பவர்களைப் பார்த்து, நாலு வக்கீல்கள் உணர்ச்சியோடும் அமைதியோடும் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களது அசைவுகள் பலமாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தன. அவர்கள் பெரிய கரும் பறவைகளைப்போல் தோன்றினார்கள்.

“நான் யாரையும் கொலை செய்யவில்லை; எதையும் திருடவில்லை. ஆனால் ஒருவரையொருவர் திருடவும், கொலை செய்யவும் தூண்டிவிடும் இந்த வாழ்க்கை அமைப்புத்தான் நான் எதிர்க்கிறேன்…”

அந்தக் கிழ நீதிபதிக்கு அருகில் இருந்த நாற்காலியில் ஒரு கொழுத்த உப நீதிபதி உட்கார்ந்திருந்தார். அவரது சிறு கண்கள் கொழுத்த சதைப் பகுதிக்குள் புதைந்து போயிருந்தன. இன்னொரு கைப் பக்கத்தில் கூனிய தோள்களும் வெளுத்த முகமும், சிவந்த மீசையும் கொண்ட இன்னொரு உப நீதிபதி உட்கார்ந்திருந்தார். அவர் தமது தலையைச் சோர்வோடு நாற்காலியின் பின்புறம் சாய்த்து கண்களைப் பாதி மூடியவாறே சிந்தனையில் ஈடுபட்டிருந்தார். அரசாங்க வக்கீலும் களைப்புணர்ச்சியோடும் எரிச்சலோடும் இருப்பதாகத் தோன்றியது. நீதிபதிகளுக்குப் பின்னால் மூன்று முக்கிய பிரமுகர்கள் உட்கார்ந்திருந்தார்கள், ஒருவர் நகரத்து மேயர் – அவர் கனத்துத் தடித்த ஆசாமி; அவர் தமது கன்னத்தைத் தடவிக்கொடுத்தவாறு உட்கார்ந்திருந்தார். மற்றொருவர் பிரபு வம்சத் தலைவர் –  நரைத்த தலையும் சிவந்த கன்னமும் நீண்ட தாடியும், கவர்ச்சிகரமான விசாலமான கண்களும் கொண்டவர் அவர். அடுத்தாற்போல் ஜில்லா அதிகாரி இருந்தார். பெரிய தொந்தியுள்ள ஆசாமி அவர். தொந்தி விழுந்திருப்பது அவருக்கு மனச்சங்கடத்தை உண்டு பண்ணியது போல் தோன்றியது. ஏனெனில் அவர் தமது கோட்டினால் அந்தத் தொந்தியை எவ்வளவோ மறைக்க முயன்றும், முடியவில்லை .

“இங்கு கைதிகளும் இல்லை . நீதிபதிகளும் இல்லை !” என்று பாவெலின் உறுதியான குரல் ஒலித்தது. ”பிடிபட்டவர்களும் பிடித்தவர்களும்தான் இருக்கிறார்கள்.”

எல்லோரும் அமைதியானார்கள். சில விநாடிகள் வரையிலும் கரகரவென்று எழுதிச் செல்லும் பேனாவின் சத்தத்தையும், அவளது இதயத் துடிப்பையும் தவிர வேறு எதையுமே தாய் கேட்கவில்லை.

பிரதம நீதிபதியும் அடுத்தாற்போல் என்ன நடக்கப்போகிறது என்பதையே கவனித்துக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பதுபோல் தோன்றியது. அவரது உதவி நீதிபதிகளும் நிலையிழந்து அசைந்து கொடுத்தார்கள். முடிவாக அவர் சொன்னார் “ஹம்… அந்திரேய், நஹோத்கா நீங்கள் குற்றவாளி என்று ஒத்துக்கொள்கிறீர்களா?”

படிக்க:
உச்ச நீதிமன்றத்தில் மூன்று குமாரசாமிகள் | சிறப்புக் கட்டுரை
தூத்துக்குடி : ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொங்கல் | புகைப்படங்கள்

அந்திரேய் மெதுவாக எழுந்தான்; நிமிர்ந்து நின்றான். மீசையை இழுத்துவிட்டான், தன் புருவங்களுக்குக் கீழாக, அந்தக் கிழ நீதிபதியைப் பார்த்தான்.

“நான் எப்படி என் குற்றத்தைக் கூற முடியும்?” என்று நிதானமாக இனிமையாக தோள்களை உலுப்பிக் கொண்டே கூறினான் அந்திரேய். “நான் யாரையும் கொலை செய்யவில்லை; எதையும் திருடவில்லை. ஆனால் ஒருவரையொருவர் திருடவும், கொலை செய்யவும் தூண்டிவிடும் இந்த வாழ்க்கை அமைப்புத்தான் நான் எதிர்க்கிறேன்…”

” சுருக்கமாகப் பதில் சொல்க” என்று அந்தக் கிழவர் சிரமப்பட்டுச் சொன்னார்.

தனக்குப் பின்னால் உள்ள பெஞ்சிகளிலுள்ளவர்கள் பரபரத்துக் கொண்டிருப்பதைத் தாயால் உணர்ந்துகொள்ள முடிந்தது. ஜனங்கள் குசுகுசுத்து ரகசியம் பேசினார்கள், அங்குமிங்கும் அசைந்தார்கள். அந்த வெள்ளை மூஞ்சி ஆசாமியின் பேச்சினால் தம் மீது படர்ந்துவிட்ட தூசி தும்புகளைத் துடைத்துவிடுவது போலவும் நடந்துகொண்டார்கள்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

 

1 மறுமொழி

  1. வாக்கியப் பிழை இருக்கிறது, சரிபார்க்கவும்:

    ///அந்தக் கேள்விகளுக்கு, தன் மகன் கூறிய அமைதியான சுருக்கமான பதில்களையும் அவள் கேட்டாள். பிரதம நீதிபதியும் அவரது சகாக்களும்.

    சமோய்லவ் அந்திரேய் தன் தாடியை எடுத்து மீசை வளர்ந்து தன் மகன் விஷயத்தில் குரூரமாகவும் கொடுமையாகவும் நடந்து கொள்ள முடியாது என்று அவளுக்குத் தோன்றியது.///

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க