வ்வளவு கஷ்டப்பட்டு ஒரு புத்தகத் திருவிழாவை நடத்துகிறார்கள். அதில் வந்து, அது நொட்டை இது நொள்ளை என குத்தம் சொல்லிக்கொண்டிருப்பது சரியா… பாஸிட்டிவான  எத்தனையோ விஷயங்கள் இருக்கும்போது ஏன் இந்த அளவுக்கு போட்டு அடிக்கிறீர்கள் என்று சிலபேர் வருத்தப்பட்டார்கள்.

ஆமாம் சரிதான், புத்தகத்திருவிழா நிறைய மாறியிருக்கிறதுதான். நிறைய நல்ல விஷயங்களும் நடக்கிறதுதான். சிற்றரங்கு வைத்து இலக்கியத்துக்கு இடம் கொடுத்திருக்கிறார்கள். ஆவணப்படங்கள் திரையிடுகிறார்கள். ஓரளவு சுமாரான கேன்டீன் வசதிகள், கழிப்பறை வசதிகள் செய்திருக்கிறார்கள்… ஆனால், பத்தாண்டுகளுக்கு முன்பு இப்படியெல்லாம் இல்லை புத்தகத் திருவிழா. சர்வாதிகாரர்களின் வதைமுகாம்களை போல மகா மோசமாக இருக்கும். சரியான காற்றோட்டமிருக்காது, உள்ளே நுழைந்து வெளியே வந்தால் கருகிப்போன சிக்கன் டிக்கா மாதிரி ஆகிவிடுவோம். தண்ணீர் இருக்காது. நாற்றமடிக்கும் மோசமான கழிப்பறைகள் வைத்திருப்பார்கள். குறுகலான பாதைகள் வைத்திருப்பார்கள், உள்ளே நுழைந்தாலே அடுத்தநாள் காய்ச்சலில் படுத்துவிடவேண்டியதுதான்.

இந்த சிக்கல்களை எல்லாம் ஆண்டுதோறும் யாராவது திட்டித்திட்டிதான் இப்போது இந்த அளவுக்கு நிலைமை சரியாகி இருக்கிறது. இல்லையென்றால் பபாஸியார்கள் இன்னும் இன்னும் நிலைமையை மோசாமாக்கிக்கொண்டே போவார்கள். இந்தமுறை பார்க்கிங்கில் அடித்து விரட்டுகிறார்கள் என எஸ்ரா தொடங்கி பத்துபேர் சொன்னால்தான் அடுத்தமுறை பார்க்கிங் கான்ட்ராக்டரிடம் கொஞ்சம் பார்த்து நடங்கப்பா என அறிவுறுத்துவார்கள். உலகின் அத்தனை மெத்தனங்களை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்த ஓர் மாபெரும் அமைப்பு இந்த பபாஸி!

படிக்க:
தில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா ?
என்னுடைய நம்பிக்கை நொறுங்கிய நிலையில் இருக்கிறேன் : ஆனந்த் தெல்தும்ப்டே கடிதம்

இந்த முறை கவனித்திருப்பீர்கள், ஒவ்வொரு சந்திலும் தண்ணீர் கேன் வைத்திருக்கிறார்கள். உள்ளேயே காபி கிடைக்க ஏற்பாடு நடந்திருக்கிறது. எல்லா கடைகளிலும் டெபிட்கார்ட் பில்லிங் இருக்கிறது. இதெல்லாம் சமீபத்திய மாற்றங்கள். ஆனாலும் அதிலும் சில பிரச்னைகள் இருக்கவே செய்தன. தண்ணீர் குண்டா வைத்தவர்கள் டம்ளர் வைக்க வேண்டுமில்லையா… அது எங்குமே இல்லை. இதுதான் அந்த பபாஸி மெத்தனம். இதெல்லாமா கவனிக்க முடியும் என்று கேட்டால்… இதையெல்லாம்தான் கவனிக்க வேண்டும். வாசகனின் காசு மட்டும் வேண்டும்… அவனுடைய கஷ்டங்களை கவனிக்க வேண்டாமா?

சிற்றரங்கு என ஒன்றை வைத்திருக்கிறார்கள். இங்குதான் தமிழின் முக்கியமான அத்தனை நிஜ எழுத்தாளர்களும் பேசுகிறார்கள். பெரிய அரங்கு என்பது சோக்கு சுந்தரன்களின் கோட்டை. அங்கே எப்போதாவதுதான் எழுத்தாளர்கள் மேடையேறுவார்கள். மற்றபடி அது இலக்கியத்துக்கு தொடர்பற்ற ஏரியா… இப்படிப்பட்ட சிற்றரங்கை ஏன் கழிப்பறையை போல யாருக்குமே தெரியாத ஒரு மர்மமான இடத்தில் வைத்திருக்கிறார்கள். அதை எல்லோருக்கும் தெரிகிற இடத்தில் வைத்தால் என்ன ஆகிவிடப்போகிறது? இதை யாராவது கேட்க வேண்டும். இப்படி ஒரு சிற்றரங்கு கடந்த காலங்களில் கிடையாது. மனுஷ்யபுத்திரன் மாதிரி நிறையபேர் போராடிதான் அப்படி ஒன்றையே கொண்டுவந்தார்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது.

மொத்தம் எட்டு நீண்ட வரிசைகள் கொண்ட பெரிய பாதைகள் கொண்டது புத்தகத் திருவிழா அரங்கு. ஒவ்வொரு வரிசையும் அரைகிலோமீட்டருக்கு குறையாமல் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக ஒரு சுற்றுக்கு நான்கு அல்லது ஐந்து கிலோமீட்டர்கள் நடக்கவேண்டும். அதுவும் மிதமான வேகத்தில்… வேக நடையைவிட மிதமான வேகத்தில் நடப்பதால் அதிக கால்வலி உண்டாகும். என்னதான் சுவாரஸ்யான நூல்களை பார்த்துக்கொண்டே நடந்தாலும்… வலி நிச்சயமாக இருக்கும். நல்ல உடல்வாகுள்ளவர்களுக்கு சிக்கலில்லை. பொதுவாக வாசிப்பாளர்கள் அத்தனை பலசாலிகளாக இருப்பதில்லை. எனவே அவர்கள் ஆங்காங்கே அமர்ந்து ரெஸ்ட் எடுக்க உட்கார ஏற்பாடுகள் செய்யலாம். பல ஆண்டுகளாக அப்படி ஒரு ஏற்பாடே அரங்கில் கிடையாது. எங்காவது ஸ்டாலில் காலி சேர்களில் உட்கார்ந்து பாருங்கள்… கடைக்காரர்கள் எல்லாம் பதறிப்போய் திருடர்களை போல டீல் பண்ணுவார்கள்.

ஒரு நூலை வாங்குபவர் அந்த நூலை பத்து பக்கங்களாவது படித்துவிட்டு வாங்குவதுதான் சரியாக இருக்கும். இது காய்கறியோ மொபைல் போனோ அல்ல… 200 ரூபாய் கொடுத்து வாங்குகிற நூலின் நான்கு பக்கங்களையாவது படிக்கிற அவகாசம் வேண்டும். அதற்கான வசதிகள் நம் கடைகளில் இருக்கிறதா? கிடையாது. அப்படியே நின்றுகொண்டே பார்த்து நின்றுகொண்டே நகரவேண்டியதுதான். சாப்ட்வேர் விற்கிறவன் சேர் போட்டு வைத்திருக்கிறான்… உங்களுக்கு என்ன?

அடுத்து நிறைய நூல்கள் வாங்குகிறவர்கள்… பல பத்து கிலோ எடையுள்ள நூல்களையும் கைகளில் சுமந்தபடியேதான் நடக்கவேண்டும். சாதாரண சிறிய சூப்பர் மார்க்கெட்டில் கூட சுமை வண்டிகள் தருகிறார்கள். இவ்வளவு செலவழித்து நூல்கள் வாங்குகிறவர்களுக்கு அப்படி ஒரு ஏற்பாடு வேண்டாமா… உள்ளேயே வயதானவர்கள், நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகள் சுற்றிப்பார்க்க வீல்சேர் வசதிகளும் கிடையாது. அப்படி வருகிறவர்களுக்கு உதவுகிற வாலண்டியர்களும் இல்லை.

இதையெல்லாம் இப்போதுதான் கேட்கிறோம். அடுத்த பத்தாண்டுகளில் மாற்றம் வரலாம். என்ன, அதுவரை வாசகர்கள் மிச்சம் மீதியாவது இருக்கவேண்டும் !

முகநூலில்: Athisha Vino (அதிஷா)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க