மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 54

மாக்சிம் கார்க்கி
சிஸோவ் பெஞ்சில் உட்கார்ந்தவாறே ஏதோ வாய்க்குள் முனகிக்கொண்டான்.

“என்ன விஷயம்?” என்று கேட்டாள் தாய்.

“ஒன்றும் பிரமாதமில்லை. ஜனங்கள் முட்டாள்கள்….” மணி அடித்தது.

“அமைதி, ஒழுங்கு!”

எல்லோரும் மீண்டும் ஒருமுறை எழுந்து நின்றார்கள். நீதிபதிகள் ஒவ்வொருவராக வந்து தத்தம் ஆசனங்களில் அமர்ந்துகொண்டார்கள். கைதிகளையும் அவர்கள் இடத்துக்குக் கொண்டுவந்து சேர்த்தார்கள்.

“கவனி!” என்று ரகசியமாகக் கூறினான் சிஸோவ். ”அரசாங்க வக்கீல் பேசப் போகிறார்.”

தாய் தன் உடம்பு முழுவதையும் முன்னால் தள்ளிக் குனிந்து கொண்டு, ஏதோ ஒரு பயங்கரத்தைப் புதிதாக எதிர்பார்ப்பதுபோல் ஆர்வத்தோடு கவனித்தாள்.

அரசாங்க வக்கீல் நீதிபதிகளுக்கு ஒரு பக்கமாக எழுந்து நின்று மேஜை மீது ஒரு கையை ஊன்றியவாறு அவர்களைப் பார்த்துத் திரும்பினார். ஒரு பெருமூச்சோடும், வலது கையின் வீச்சோடும் அவர் பேசத் தொடங்கினார். அவரது பேச்சின் ஆரம்பத்தைத் தாயால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவரது குரல் கனத்து மெதுவாக, ஆனால் ஒழுங்கற்று, சமயங்களில் துரிதமாகவும் சமயங்களில் மந்தமாகவும் ஒலித்தது. சிறிது நேரத்துக்கு அவரது பேச்சு மெதுவாகவும் ஆயாசத்தோடும், சிரமத்தோடும் ஒலித்தது. திடீரென்று அந்தப் பேச்சு கும்மென்று இரைந்தெழுந்து சர்க்கரைக் கட்டியை மொய்க்கும் ஈக்கூட்டத்தைப்போல் ரீங்காரித்து விம்மியது. அந்தப் பேச்சில் எந்தக் கெடுதியும் இருப்பதாகத் தாய்க்குத் தோன்றவில்லை. அந்த வார்த்தைகள் பனியைப் போலக் குளிர்ந்தும், சாம்பலைப் போலக் கறுத்தும், கவிந்து குவிந்து மூடும் தூசியைப் போல் அந்த அறையில் கொஞ்சங் கொஞ்சமாக விழுந்து நிரம்பிக் கொண்டிருந்தன. வார்த்தை அலங்காரமும், உணர்ச்சியின் வறட்சியும் கொண்ட அந்தப் பேச்சு பாவெலையும் அவனது தோழர்களையும் கொஞ்சம் கூடத் தொட்டதாகத் தெரியவில்லை. எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. அவர்கள் தம் பாட்டுக்கு உட்கார்ந்து அமைதியாகவும், நிதானமாகவும் தமக்குள் பேசிக்கொண்டார்கள்; புன்னகை புரிந்தார்கள்; பொங்கி வரும் சிரிப்பை மறைப்பதற்காக முகத்தைச் சுழித்துக்கொண்டார்கள்.

”அவன் பொய் சொல்கிறான்!” என்றான் சிஸோல்.

அவள் அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அவள் அரசாங்க வக்கீலின் பேச்சையே கேட்டுக்கொண்டிருந்தாள்; அவர் எல்லாக் கைதிகளையுமே பாரபட்சமில்லாமல் சகட்டுமேனிக்குக் குற்றம் சாட்டிப் பேசுவதை அவள் உணர்ந்தறிந்தாள். பாவெலைப் பற்றிப் பேசிய பின் பியோதரைப் பற்றியும் பேசினார். பியோதரைப் பற்றிய பேச்சை முடிக்கப்போகும் தருணத்தில், புகினைப் பற்றிய பேச்சைத் தொடங்கினார். இப்படியாக அவர்கள் அனைவரையும் ஒரே கோணிச் சாக்குக்குள் பிடித்துத் தள்ளி மூட்டை கட்டுவதுபோல் இருந்தது அவரது பேச்சு. ஆனால் அந்தப் பேச்சின் வெளி அர்த்தத்தைக் கண்டு அவளுக்குத் திருப்தி ஏற்படவில்லை. அந்த மேலோட்டமான அர்த்தபாவம் அவளைத் தொடவும் இல்லை; கலக்கமுறச் செய்யவும் இல்லை. அவள் இன்னும் ஏதோ ஒரு பெரிய பயங்கரத்தை எதிர்பார்த்தாள், அந்தப் பயங்கரத்தை அந்த வார்த்தைகளின் உள்ளர்த்தத்திலும், அரசாங்க வக்கீலின் முகத்திலும், கண்களிலும், குரலிலும், லாவகமாக வீசி விளாசும் அவரது வெள்ளைக் கரத்திலும் துருவித் துருவித் தேடிக்கொண்டிருந்தாள். இருந்தாலும் அதில் ஏதோ பயங்கரமிருப்பதாகத் தோன்றியது. அதை அவள் உணர்ந்தாள். எனினும் அதை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை; அதை உருவாக்கிக் காண முடியவில்லை. அவளது இதயம் எப்படித்தான் எச்சரித்த போதிலும் அவளால் அதை இனம் காணமுடியவில்லை.

அவள் நீதிபதிகளைப் பார்த்தாள். அந்தப் பேச்சைக் கேட்டு அவர்கள் அலுத்துப் போய்விட்டார்கள் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெளிவாகத் தெரிந்தது. அவர்களது உயிரற்ற சாம்பல் நிற, மஞ்சள் மூஞ்சிகளில் எந்தவித உணர்ச்சியுமே பிரதிபலிக்கவில்லை. அரசாங்க வக்கீலின் பேச்சு கண்ணுக்குத் தெரியாத ஒரு பனி மூட்டத்தைப் பரப்பியது. அந்தப் பனிமூட்டம் நீதிபதிகளின் மீது அடர்ந்து கவிந்தது. அலுப்போடும் வேண்டா வெறுப்போடும் காத்திருக்கும்படி, அவர்களை நிர்ப்பந்தித்தது. பிரதம நீதிபதி தமது ஆசனத்திலேயே உறைந்து போய்விட்டார். இடையிடையே எப்போதாவது மட்டும் அவரது கண்ணாடிக்குள்ளாகத் தெரியும் கரும்புள்ளிக் கண்கள் உணர்ச்சியற்று அகல விரிந்து மூடின.

இந்த மாதிரியான உயிரற்ற வெறுப்புணர்ச்சியையும், உணர்ச்சியற்ற பற்றின்மையையும் கண்டு தனக்குள் தானே கேட்டுக்கொண்டாள்.

“இவர்களா தீர்ப்புக் கூறப் போகிறார்கள்?”

இந்தக் கேள்வி அவளது இதயத்தை குன்றிக் குறுகச் செய்தது. அவளது இதயத்திலிருந்த பய பீதியைப் பிதுக்கி வெளித்தள்ளி, வேதனை தரும் அவமான உணர்ச்சியைக் குடி புகுத்தியது.

அரசாங்க வக்கீலின் பேச்சு எதிர்பாராதவிதமாகத் திடீரென நின்றுவிட்டது. அவர் விருட்டென இரண்டடி முன்னால் வந்து நீதிபதிகளுக்கு வணக்கம் செலுத்தினார்; தமது கைகளைத் தேய்த்துக் கொடுத்துக்கொண்டே உட்கார்ந்தார். பிரபுவம்சத் தலைவர் அவரைப் பார்த்துத் தலையை ஆட்டி, கண்களை உருட்டி விழித்தார். நகர மேயர் அவரோடு கை குலுக்குவதற்காகத் தம் கரத்தை நீட்டினார்; ஜில்லா அதிகாரி தமது தொந்தியையே பார்த்தார்; லேசாகப் புன்னகை புரிந்து கொண்டார்.

ஆனால் நீதிபதிகளோ இந்தப் பேச்சினால் எந்தவிதத்திலும் மகிழ்வுற்றதாகத் தெரியவில்லை. அவர்கள் அசையாது உட்கார்ந்திருந்தார்கள்.

அந்தக் கிழ நீதிபதி தம் முகத்துக்கு நேராக ஒரு காகிதத்தை உயர்த்திப் பிடித்துப் பார்த்தவாறே பேசினார். “இப்பொழுது பெதசெயெவ், மார்க்கவ், சகாரவ் மூவர் தரப்பு வக்கீலும் பேசலாம்.”

நிகலாயின் வீட்டில் தாய் பார்த்திருந்த அந்த வக்கீல் எழுந்து நின்றார். சுமூகமான தோற்றம் கொண்ட பரந்த முகமும், சிவந்த புருவங்களுக்குக் கீழாகத் துருத்தி நின்று, இரு கத்தி முனைகளைப் போல் பளபளத்து. கத்திரியைப்போல் எதையும் வெட்டித் தள்ளி நோக்கும் சிறு கண்களும் கொண்டிருந்தார் அவர். அவர் உரத்த குரலில் தெளிவாக நிதானமாகப் பேசினார். எனினும் அவரது பேச்சையும் தாயால் உணர்ந்து புரிந்துகொள்ள முடியவில்லை.

”அவர் சொன்னது புரிகிறதா?” என்று அவள் காதில் ரகசியமாகக் கேட்டான் சிஸோவ். “புரிகிறதா? அந்தக் கைதிகளெல்லாம் மிகவும் மனமுடைந்து போய் நினைவிழந்து போனதாகக் கூறுகிறார். பியோதரைத்தான் சொல்லுகிறாரோ?”

அவளது மனத்தில் நிரம்பியிருந்த அதிருப்தி உணர்ச்சியால் அவளால் பதில் கூடக் கூற முடியவில்லை. அவளது அவமான உணர்ச்சி விரிந்து பெருகி, இதயத்தையே ஒரு பெரும் பாரத்தோடு அழுத்திக் கொண்டிருந்தது. தான் ஏன் நியாயத்தை எதிர்பார்த்தாள் என்பது பெலகேயாவுக்கு அப்போதுதான் தெளிவாயிற்று. தன்னுடைய மகனது சத்தியத்தை, அந்த நீதிபதிகளின் நியாய சத்தியத்துக்கு எதிராக நேர்மையோடு துல்லியமாக எடை போடுவதைக் காண முடியும் என்று அவள் எதிர்பார்த்தாள். அந்த நீதிபதிகள் அவன் இப்படிச் செய்வதற்குரிய காரண காரியங்களைப் பற்றி, அவனது சிந்தனைகளையும் செயல்களையும் கூர்ந்து கவனித்து அவனைச் சரமாரியாக, இடைவிடாது, கேள்விகள் கேட்பார்கள் என்று அவள் எதிர்பார்த்தாள். அவன் கூறுவதைக் கேட்டு, அதன் உண்மையை அவர்களும் கண்டறிந்து, உற்சாகத்தோடு உரத்த குரலில் “இவன் சொல்வதுதான் உண்மை!” என்று நியாயபூர்வமாகச் சொல்லிவிடுவார்கள்!” என்றும் எதிர்பார்த்தாள்.

அந்த அறை முழுவதும் ஒரு புத்துணர்ச்சி பரவிக் கலகலத்தது. குத்தலான வார்த்தைகளால் அந்த வக்கீல் அந்த நீதிபதிகளின் தடித்த உணர்ச்சிகளைக் கிளறிவிட்டபோது, ஜனக் கூட்டத்திடையே ஓர் ஆக்கிரமிப்புச் சக்தி கட்டிழந்து பரவுவதுபோல் தோன்றியது.

ஆனால் அவள் எதிர்பார்த்தது எதுவுமே நடக்கவில்லை விசாரணைக்காகக் கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருக்கும் அந்தக் கைதிகளுக்கும் அந்த நீதிபதிகளின் கண்ணோட்டத்துக்கும் வெகுதூரம் என்றே தோன்றியது. மேலும் அந்த நீதிபதிகளை அந்தக் கைதிகள் ஒரு பொருட்டாக மதித்ததாகவும் தோன்றவில்லை. ஆயாசத்தினால், தாய்க்கு அந்த விசாரணையிலேயே அக்கறையற்று அலுத்துப் போய்விட்டது. அங்கு ஒலிக்கும் பேச்சுக்களைக் கேட்காமல் அவள் தனக்குத்தானே கூறிக்கொண்டாள்:

“இதையா விசாரணை என்கிறீர்கள்?”

“அவர்களுக்கு வேணும்!” என்று அதை ஆமோதித்து ரகசியமாகக் கூறினான் சிஸோவ்.

இப்போது வேறொரு வக்கீல் பேசிக்கொண்டிருந்தார். அவர் ஏளனபாவத்தோடு துடிப்பாகத் தோன்றும் வெளுத்த முகம் கொண்ட குட்டை ஆசாமி. அவரது பேச்சில் நீதிபதிகள் அடிக்கடி குறுக்கிட்டுப் பேசினார்கள்.

அரசாங்க வக்கீல் கோபத்தோடு துள்ளி எழுந்து, ஏதோ ஒரு நியாய ஒழுங்கைச் சுட்டிக் காட்டினார். உடனே அந்த ஆட்சேபணையைக் கிழ நீதிபதி ஏற்றுக்கொண்டார். பிரதிவாதித் தரப்பு வக்கீல் அவர் கூறியதைத் தலைவணங்கி மரியாதையோடு கேட்டுக்கொண்டு, தமது பேச்சை மேலும் தொடங்கினார்.

”விடாதே. அடி முடி காணும் வரையிலும் விடாதே!” என்று சொன்னான் சிஸோவ்.

அந்த அறை முழுவதும் ஒரு புத்துணர்ச்சி பரவிக் கலகலத்தது. குத்தலான வார்த்தைகளால் அந்த வக்கீல் அந்த நீதிபதிகளின் தடித்த உணர்ச்சிகளைக் கிளறிவிட்டபோது, ஜனக் கூட்டத்திடையே ஓர் ஆக்கிரமிப்புச் சக்தி கட்டிழந்து பரவுவதுபோல் தோன்றியது. நீதிபதிகள் ஒருவருக்கொருவர் நெருங்கிக்கொண்டு, அந்த வக்கீலின் வாசகத்தால் தமக்கு ஏற்படும் வேதனை உணர்ச்சியைத் தாங்கிக்கொண்டு உம்மென்று முறைத்துக்கொண்டிருந்தார்கள்.

பாவெல் எழுந்திருந்தான். திடீரென அந்த அறை முழுவதிலும் அமைதி நிலவியது. தாய் தன் உடம்பை முன்னால் தள்ளிக்கொண்டு பார்த்தாள். பாவெல் மிகுந்த அமைதியோடு பேசத் தொடங்கினான்.

படிக்க:
ரஜினி படம் குறித்து வாய் திறக்க மாட்டேன் ! அம்பலப்பட்ட எச். ராஜா ! மரணமாஸ் ஆடியோ !
என்னுடைய நம்பிக்கை நொறுங்கிய நிலையில் இருக்கிறேன் : ஆனந்த் தெல்தும்ப்டே கடிதம்

”கட்சியின் அங்கத்தினன் என்ற முறையில், நான் என் கட்சியின் தீர்ப்பைத்தான் அங்கீகரிக்கிறேன். எனவே என் குற்றமின்மையைப் பற்றி எதுவுமே பேசத் தயாராயில்லை. ஆனால், என் தோழர்களின் வேண்டுகோளுக்காக, என்னைப்போலவே தங்கள் சார்பிலும் வாதாட மறுத்துவிட்ட தோழர்களின் வேண்டுகோளுக்காக, நீங்கள் புரிந்துகொள்ளாத சில விஷயங்களை நான் விளக்கிச் சொல்ல முயல்கிறேன். சோஷல் – டெமாக்ரஸி என்ற பெயரால் எங்கள் இயக்கம் ஆட்சி அதிகாரத்துக்கு எதிராகக் கிளர்ச்சி செய்கிறது என அரசாங்க வக்கீல் குறிப்பிட்டார். நாங்கள் அனைவருமே ஜார் அரசனைக் கவிழ்க்க முயலும் கூட்டத்தார் என்றே அவர் எங்களைப் பற்றி எப்போதும் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். ஆனால் உங்களுக்கு நான் ஒரு விஷயத்தைத் தெளிவாக்கிவிட வேண்டும். மன்னராட்சி ஒன்றே ஒன்று மட்டும்தான் நமது நாட்டினைப் பிணைத்துக் கட்டியிருக்கும் விலங்கு என்று நாங்கள் கருதவில்லை. ஆனால், அதுதான் முதல் விலங்கு; அதுதான் நம் கைக்கு விரைவில் எட்டக்கூடிய விலங்கு; அந்த விலங்கைத் தறித்து மக்களை விடுவிக்க வேண்டியது எங்கள் கடமை.”

அவனது உறுதிவாய்ந்த குரலின் ஓங்காரத்தால் அந்த அறையின் அமைதி மேலும் அழுத்தமாகத் தோன்றியது. அந்த அறையின் சுவர்களே பின்வாங்கி விசாலம் அடைவது போலத் தோன்றியது. உயர்ந்ததொரு இடத்துக்குச் சென்றுவிட்டவனைப்போல் பாவெல் காட்சி அளித்தான்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க