ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடத் தனிச் சட்டம் இயற்று !

நாசகார ஸ்டெர்லைட் ஆலையினைத் தமிழகத்தில் இருந்து அகற்ற தூத்துக்குடி மக்களோடு இணைந்து தமிழகமே குரல் எழுப்புகிறது. தாமிர உருக்காலையினைத் தமிழகத்தில் தடைசெய்யும் சிறப்புச் சட்டத்தினைத் தமிழகச் சட்டமன்றத்தில் இயற்றக் கோருகிறது, தமிழகம்.

மக்களின் கருத்தைக் கேட்காமலேயே இரண்டாவது ஆலையைத் தொடங்கும் முயற்சியில் ஸ்டெர்லைட் வெற்றி பெற்றதையடுத்துதான், ஆலையினை நிரந்தரமாக மூடக் கோரித் தொடர் போராட்டங்களை நடத்தத் தொடங்கினர், தூத்துக்குடி நகர மக்கள்.

இத்தொடர் போராட்டத்தால், ஆலை இயங்குவதற்கான அனுமதியினை நீட்டிக்க இயலாது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. அதேசமயம், மின்சாரம் துண்டிக்கப்படாததால், இந்த உத்தரவு காகித உத்தரவாகவே இருந்தது.

இப்பித்தலாட்டத்தினை உணர்ந்த தூத்துக்குடி மக்கள் ஆலை மூடப்படும் வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டுப் போராடுவது எனத் தீர்மானித்து, கடந்த மே 22 அன்று ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். அமைதியான முறையில் நடந்த இந்தப் பேரணியைத் துப்பாக்கிச் சூடு நடத்தி இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது, தமிழக அரசு. இதன் காரணமாக ஆளும் அ.தி.மு.க. அரசின் மீது தமிழகமெங்கும் எழுந்த வெறுப்பையும் கோபத்தையும் தணிக்கும் முகமாக ஆலையை நிரந்தரமாக மூடும் பலவீனமான அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த ஆணையை ரத்து செய்து, ஆலையினைத் திறக்கலாம் எனப் பசுமைத் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பினைத் தமிழக மக்கள் ஏற்கவில்லை. கருப்புக் கொடி, சிறுவர்கள் பேரணி, மாவட்ட ஆட்சியரிடம் சென்று கேள்வி கேட்பது என தூத்துக்குடி மக்கள் இத்தீர்ப்புக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.

இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் முறையிடுவோம் என ஒருபுறம் பொதுமக்களைச் சமாதானப்படுத்தும் எடப்பாடி பழனிச்சாமி அரசு, மறுபுறமோ தீர்ப்பு வெளியான நாள் முதலாகவே தூத்துக்குடியை போலீசின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவந்து, ஊர் ஊராக, தெருத்தெருவாக போலீசைக் குவித்து மக்களை மிரட்டி வருகிறது.

படிக்க:
தூத்துக்குடி : போராட்டத்தின் விளைநிலம் !
♦ தூத்துக்குடியில் ஆய்வுக்குழு முன்பு வேதாந்தா நடத்திய சதிகள் ! வீடியோ

கருப்புக் கொடி விற்கத் தடை, விற்பனை செய்த கடைக்காரர் மீது போலீசு தாக்குதல், போராட்ட முன்னணியாளர்கள் எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து வேவு பார்ப்பது, மீனவர் அமைப்புகள், வணிகர் சங்கத்தினரைச் சந்தித்தால் கைது, சிறுவர்கள் பேரணியாகச் சென்றதற்கு வழக்கு, துண்டு பிரசுரங்கள் விநியோகித்த மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது என அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது தமிழக அரசு.

இன்னொருபுறத்தில், வேதாந்தா நிர்வாகம் கோவில் நன்கொடை, கல்வி உதவித் தொகை, மகளிர் சுய உதவிக்குழு கடன் அடைப்பு எனப் பணத்தினை வாரியிறைத்து மக்களை ஊழல்படுத்தும், மக்களைப் பிளவுபடுத்தும் அதனின் சதிக்கு துணை போகிறது.

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதித்த பசுமைத் தீர்ப்பாய ஆணையைக் கண்டித்து தூத்துக்குடி நகர மக்கள் தெருக்கள், வீடுகள் எங்கும் கருப்புக் கொடி கட்டி நடத்திய போராட்டம்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அரசு தரப்பைத் தவிர, வேறு யாரையும் கேட்காமலேயே தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆய்வுக் குழுவோ மக்கள் தரப்பு நியாயங்களை ஒப்புக்குக் கேட்டுவிட்டு, தன் முன்னால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் முன்வைக்கப்பட்ட சான்றுகளுக்கும் பதிலளிக்காமலேயே ஆலையினைத் திறக்கலாம் எனப் பரிந்துரைத்தது. தூத்துக்குடியின் நாலரை இலட்சம் மக்கள் ஆலையினைத் திறக்க வேண்டாம் என அளித்த மனுக்கள் குப்பைத் தொட்டிக்குத்தான் சென்றன.

ஸ்டெர்லைட் ஆலை தங்களது நலனுக்கு உகந்தது இல்லை என மக்கள் கூறும்போது கார்ப்பரேட் நலனைப் பற்றி பேசுகிறார்கள், நீதிபதிகள். கொள்கை முடிவெடுத்து ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக வெளியேற்று என்று மக்கள் காட்டும் வழியில் செல்ல மறுக்கிறது தமிழக அரசு.

மக்களின் போராட்டத்தினால் ஸ்டெர்லைட் மூடப்படுமானால், அது ஒட்டுமொத்த கார்ப்பரேட் அதிகாரத்திற்கும் விடப்படும் சவாலாக இருக்காதா என்ன? இதனால்தான் சற்று தள்ளிப்போட்டும், துப்பாக்கிச்சூட்டை நினைவுபடுத்தும் வகையில் மக்களை அச்சுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலையினைத் திறக்க வன்மத்துடனும் சதித்தனத்தோடும் செயல்படுகிறது, அரசு-வேதாந்தா கூட்டணி.

– பாவலன்.

புதிய ஜனநாயகம், ஜனவரி 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க