ஸ்டெர்லைட்டை திறக்க சொல்கிற பசுமை தீர்ப்பாய உத்தரவு கிடக்கட்டும்…. தமிழக அரசே.…. மேல்முறையீடு என்று ஏமாற்றாதே ! தனிச்சட்டம் இயற்று! ஸ்டெர்லைட்டை விரட்டு!! என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மதுரை மண்டலம் சார்பாக கடந்த டிசம்பர்- 30 அன்று அரங்கக்கூட்டம் நடைபெற்றது.

இந்த அரங்கக்கூட்டத்தில் பங்கேற்ற நாணல் நண்பர்கள் குழுவை சேர்ந்த தோழர் துளிர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர் கனியமுதன் ஆகியோர் ஆற்றிய உரை.

தோழர் துளிர், நாணல் நண்பர்கள் குழு.

“இயற்கையை பாதுகாக்க போராடிய நம்முடைய பெரும்பாட்டன் நம்மாழ்வாருடைய நினைவு தினத்தில் தியாகிகளான 14 பேரின் பலிகொடுத்த பெருந்துயரோடுதான் உங்களுக்கு முன் பேசுகின்றேன். புரட்சிக்கவிஞர் காசி ஆனந்தனின் வரிகளில் சொன்னால் ”இது வாழ்வதற்காக வந்த உயிர் அல்ல, சாவதற்காக வந்த உயிர்” ஜாலியன் வாலாபாக்கின் 100 ஆம் ஆண்டை அதிகாரவர்க்கம் 14 பேரை படுகொலை செய்து இனி ஜாலியன் வாலா பாக் போன்ற ஒடுக்குமுறைதான் தீர்வு என்பதை எச்சரிக்கை செய்கிறது. ஆனால், நாம் நேர்மைறையில் பல்வேறு தியாகம் செய்து உருவான இச்சமூகத்தை எப்பாடுபட்டும் காக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது என்பதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

இந்த ஆலை மக்களின் போராட்டங்களை ஒட்டி அவசர கதியில் அரசு மூடும் போது உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரே கொள்கை முடிவெடுத்து ஆலையை மூடினால்தான் இந்த உத்தரவு நிற்கும் என்று சொன்ன போது அதிமுக அமைச்சர்கள் உச்ச நீதிமன்றம் அல்ல உலக நீதிமன்றமே சென்றாலும் ஆலையை திறக்க முடியாது என்றனர். ஆனால் இப்போது திறந்தாகி விட்டது. இதற்கும் அமைச்சர்கள் பல்வேறு விளக்கங்களை கூறுவார்கள். மீடியா அதையே வேறு வார்த்தைகளில் சொல்லிச்சொல்லி மக்களை பழக்கப்படுத்தும். ஆனால் வெறும் பிரேக்கிங் நியூஸ் மட்டுமே பார்த்து சமூகத்தை புரிந்து கொண்டுள்ள சாமானிய மக்களிடம் இதற்கு பின் உள்ள அரசியலை, சதியை புரியவைக்கும் விதத்தில் கொண்டு செல்ல வேண்டும்.

மேலும் நான் இதை இன்னொரு இனப்படுகொலையாக பார்க்கின்றேன். ஏனென்றால் தமிழ் சமூகம் மத்திய அரசிற்கு சவாலாக பலகட்ட எதிர்ப்புகளை தொடர்ந்து அளித்து வருகிறது. வரலாற்றில் தொடர்ச்சியாக இதை பற்றிய பதிவுகள் இருக்கிறது.

உதாரணத்திற்கு வ.உ.சி யின் சுதேசி கப்பல் நிறுவனத்திற்கு ஆதரவாக பிரிட்டீஸ் நாவிகேசன் நிறுவன கப்பலை துறைமுகத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவுவரை 100 நாட்டு படகுகளில் சென்று விரட்டியடித்தனர் தூத்துக்குடி மீனவர்கள். இதை பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் பதிவுசெய்துள்ளார். மேலும் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிருந்தே தூத்துக்குடியின் முத்துநகரம் என்ற சிறப்பையும் அதனுடைய வர்த்தக திறனையும் தமிழ் இலக்கியங்களிலேயே பதிவு செய்துள்ளார்கள். மார்க்கபோலோ போன்ற உலக பயணம் மேற்கொண்டவர்கள் பலர் கூட இதை குறிப்பிட்டுள்ளனர்.

இன்னொரு புறம் தமிழக அரசின் ஒரு சட்டம் கூட தூத்துக்குடியை ஒரு பல்லுயிர் வாழ் கடற்பரப்பாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் இவ்வாறு ஜி.ஒ. போட்ட மாநில அரசாங்கமே மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய கந்தக அமில கசிவை ஏற்படுத்தக்கூடிய நிறுவனத்தை அனுமதித்துள்ளது. மத்திய அரசு இவர்களுடைய கருத்தை எள்ளளவும் பரிசீலிக்கவில்லை. தற்போது அங்கே நிலவரம் என்ன? மக்கள் எதற்காக போராடுகிறார்கள். புற்று நோய், கருச்சிதைவு, கரு வளர்ச்சியின்மை, மருத்துவர்களே ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து தூரமாக வந்து குடியேறுங்கள் என்று கூறும் அளவிற்கு உள்ளது.

ஆலையில் வேலை பார்க்கும் ஒரு வயதான தொழிலாளர் நான் ஆலையில் வேலை பார்க்கும் போது அடிக்கடி கண் எரிச்சல் ஏற்படும். கண்களில் தண்ணீரை அடிக்கடி ஊற்றித்தான் வேலை பார்ப்பேன். இப்போது பெருமளவு பார்வை போய்விட்டது. ஏதோ நிழற்படம் பார்ப்பது போல்தான் பார்த்து காலத்தை கழித்துகொண்டு இருக்கிறேன் என்று கூறுகிறார். ஒரு விவசாயி இதனால் பாதிக்கப்பட்டு அவருடைய வார்த்தைகளில் 7 மரக்கா மாத்திரை சாப்பிடுவதாக கூறுகிறார். இப்படி எல்லாம் பாதிப்பு வருகிறது என்பதால் ஒரு கட்டத்திற்கு மேல்தான் போராட்டம் அடுத்த படிநிலைக்கு செல்கிறது.

படிக்க:
ஒரு ஐடி இளைஞர் பணி நீக்கத்தை எதிர்த்து வென்ற அனுபவம் !
சபரிமலை பெண்கள் நுழைவு : கேரளாவை கலவர பூமியாக்கத் துடிக்கும் பாஜக !

இதையெல்லாம் சமீபத்தில் வெளிவந்துள்ள தோழர் முகிலனின் 20 நிமிட காணொளி பதிவுசெய்துள்ளது. ஆனால் எதிர்தரப்பினரோ காப்பருக்கும் வேலை வாய்ப்பிற்கும் என்ன செய்வீர்கள் எனக் கேட்கிறார்கள். என்ன பெரிய வேலை வாய்ப்பு. 1200 நிரந்தர வேலை, 3500 கண்ட்ராக்ட் வேலை, அதிலும் 65% வெளி மாநிலத்தவர்கள். இப்படியான செய்திகளை சாமான்ய மக்களிடம் கொண்டு செல்லவேண்டும்” எனப்பேசினார்.

தோழர் கனியமுதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி.

” சிறப்பு சட்டம் இயற்றுங்கள், கொள்கை முடிவை எடுங்கள் என்றோம் ஆனால் இவர்கள் அதை செய்யவில்லை. பின் என்ன வழி. மக்கள் திரள் போராட்டம்தான் ஒரே வழி. தூத்துக்குடி மக்கள் 14 பேர் இறந்த பின்பும் இன்றும் போராட அவர்கள் தயார். ஆனால், அங்கிருந்து வரக்கூடிய அடக்குமுறை பற்றிய செய்திகள் அவர்கள் நினைத்தாலும் போராட முடியாத அளவிற்கு அரசின் அடக்குமுறை தீவிரமாக இருக்கிறது என்பதை காட்டுகிறது. போராட்டத்தை வழிநடத்திய மக்கள் அதிகாரம் போன்ற பல அமைப்பை சேர்ந்தவர்கள் தூத்துக்குடியில் நுழையவே தடை. எனவே இதை நாம் பிற மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

ஸ்டெர்லைட் மட்டுமா மக்களில் வாழ்வியலை காவு வாங்குகிறது, எத்தனை எத்தனை ஆலைகள், திட்டங்கள் மக்களை நடைபிணங்களாக்குகிறது. எனவே ஆட்சியாளர்களை அம்பலப்படுத்துவது மட்டும் நமது வேலை அல்ல மக்களை உணர்வூட்டுவதும்தான் நமது வேலை. ஊர் ஊராக சென்று பரப்புரை செய்து மக்களை அணிதிரட்டுவதுதான் கார்ப்பரேட் நிறுவனங்களை விரட்டும் ஒரே வழி. அதற்கான பரப்புரைகளில் மக்கள் அதிகாரம் அமைப்பிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி என்றும் உறுதுணையாக இருக்கும்” என பேசினார்.

மக்கள் அதிகாரம்
தகவல்
மதுரை.

(இக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய மற்ற பேச்சாளர்களின் உரைகள் அடுத்தடுத்த பதிவுகளில் இடம்பெறும்)

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க