புராணக் குப்பைகள் அறிவியலாகுமா ? உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா ?

கருத்தரங்கம்,
அன்னை மணியம்மையார் அரங்கம்,
பெரியார் திடல், சென்னை.
25.01.2019, மாலை 5.30

நிகழ்ச்சி நிரல்:

தலைமை:
பேராசிரியர் வீ. அரசு,
மேனாள் தமிழ்த்துறை தலைவர்,
சென்னைப் பல்கலைக் கழகம்,
ஒருங்கிணைப்பாளர், CCCE – சென்னை.

சமூகநீதியை ஒழிக்கும் உயர்சாதி இடஒதுக்கீடு
பேராசிரியர் கதிரவன்,
உயிரி தொழிநுட்பத்துறை,
சென்னைப் பால்கலைக்கழகம்.

மாணவர்களை மூடர்களாக்கும் இந்துத்துவ சக்திகள்
மருத்துவர் எழிலன்,
இளைஞர் இயக்கம்.

இந்திய அறிவியல் மாநாட்டில் போலி அறிவியல்
பேராசிரியர் முருகன்,
மேனாள் இயற்பியல்துறை தலைவர்,
விவேகானந்தா கல்லூரி, சென்னை,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

அறிவியக்கத்தின் அவசியம்
முனைவர் ரமேஷ்,
CCCE-சென்னை.

நன்றியுரை:
முனைவர் சாமிநாதன்

பேரா.ஆனந்த் தெல்தும்டே மீதான கைது நடவடிக்கையைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படும்.

ன்பார்ந்த மாணவர்களே, நண்பர்களே!

சமீபத்தில் நடைபெற்ற இந்திய அறிவியல் பேராயத்தின் (Indian science congress) 106-வது மாநாட்டில் பேசிய ஆந்திரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜி. நாகேஸ்வரராவ் பின்வரும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். கௌரவர்கள் சோதனைக் குழாய் தொழில்நுட்பம் மூலம் பிறந்தவர்கள்; டார்வினது பரிணாம கோட்பாட்டிற்கு முன்னரே விஷ்ணு பத்து அவதாரங்களை எடுத்தவர்; ஏவுகணைகளை ராமர் அந்த காலத்திலேயே பயன்படுத்தியவர்: ராவணன் 24 வகையான விமானங்களைப் பயன்படுத்தினார் என்றெல்லாம் அவர் பேசினார். கண்ணன் ஜகதள கிருஷ்ணன் என்பவர் ஐசக் நியூட்டன் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டினுடைய இயற்பியல் கோட்பாடு தவறு என்றும் பேசியிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் புவியீர்ப்பு அலைகளுக்கு (Gravitational wave) நரேந்திர மோடி அலைகள் என்று பெயரிடப்படும் என அறிவித்துள்ளார். அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இல்லாதவற்றை வேதம்/புராணங்களில் உள்ள குருட்டுத் தனமான செய்திகளை அறிவியல்-தொழில்நுட்பம் என்று இவ்விருவரும் பேசியுள்ளனர்.

இதுபோன்ற போலி அறிவியல் கருத்துக்களையும் புராணக் குப்பைகளையும் அறிவியல் என்று கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அறிவியல் பேராயத்திலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் இந்துத்துவ ஆதரவு வெறியர்கள் பேசிவருகின்றனர். கடந்த வருடம் நடைபெற்ற இந்திய அறிவியல் பேராயத்தில் பேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஸவர்தன், ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நிறை ஆற்றல் சமன்பாடு (E=mc2) பற்றி வேதங்களிலேயே உள்ளதாக, பேராசிரியர் ஸ்டீபன் ஹக்கிங் சொன்னதாகப் பொய்யுரைத்தார். அனைத்திற்கும் மேலாக 2014 அக்டோபரில் மருத்துவர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, மகாபாரதம் மற்றும் வேதங்களில் genetic engineering, plastic Surgery போன்ற தொழில்நுட்பங்கள் இருந்துள்ளன என்றும் கூறினார். இதற்கு கர்ணனையும், விநாயகரையும் உதாரணம் காட்டி பேசியிருந்தார். வேதங்கள் மற்றும் புராணங்களில் அனைத்தும் உள்ளன என்று உளறும் இந்துத்துவ கும்பல் ரஃபேல் போர் விமானங்களுக்காக பிரான்ஸ் நாட்டிடம் ஒப்பந்தம் போடுவது ஏன்?

ஐ.ஐ.டி, என்.ஐ.டி. மற்றும் அனைத்து பொறியியல் கல்லூரிகளில் சமஸ்கிருதம், புராணக் கதைகள் ஆகியவற்றை கட்டாயப் பாடமாக்கியுள்ளனர். புராணங்களை அறிவியல் என்று இவர்கள் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளனர். பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகிய நிறுவனங்களின் உயர் பதவிகளில் RSS கருத்தாளர்களையே பணியமர்த்தம் செய்து வருகின்றனர். இதன் மூலம் இந்துத்துவ திணிப்பை மோடி அரசு தொடர்ந்து செய்துவருகிறது. இந்நடவடிக்கைகளுக்கு வலுசேர்க்கும் விதமாக தற்போது 10% உயர்சாதி இடஒதுக்கீட்டைக் கல்வித்துறையில் அமல்படுத்தியுள்ளார்கள். சமூகநீதி சார்ந்த போராட்டங்களால் பெறப்பட்ட இடஒதுக்கீட்டை நீர்த்துபோக மோடி அரசு பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை முன்வைக்கிறது. இதன் மூலம் சமூக படிநிலைகளில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்ட – தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூகத்திலிருந்து உயர்கல்வி பயில வருபவர்களை தடுத்து நிறுத்த திட்டமிடுகிறார்கள்.

இந்நடவடிக்கைகள் தேசிய இனங்களின் மொழி, பண்பாட்டு அடையாளங்களை அழித்து ஒற்றைப் பண்பாட்டை நோக்கி நகர்த்துவற்கு உதவும். பகுத்தறிவு மற்றும் அறிவியல் முறையிலான கண்ணோட்டத்தை கல்வி புலத்திலிருந்து துடைத்தெறிவதற்கும் இது வழிவகுக்கும், சாதி, வர்ணாசிரம முறை ஆகியவற்றை மனரீதியாக ஏற்றுக்கொள்ளும் அபாயம் இதன் மூலம் நிகழும், சுரண்டல், அடிமைத்தனம் ஆகியவற்றை மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோரிடத்தில் நியாயப்படுத்தும் தன்மையும் உருவாக்கப்படும். இத்தகைய பிற்போக்குத் தனங்களுக்கும் அதற்கு காரணமான இந்துத்துவ திணிப்புக்கும் எதிராக பேராசிரியர்களும் கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களும் பெற்றோர்களும் மாணவரமைப்புகளும் இணைந்து குரல்கொடுப்பதும் அதைப்பற்றிவிவாதிப்பதும் நமது சமூகக் கடமையாகும்.

இது குறித்து விவாதிப்பதற்கான ஒரு மேடைதான், பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு. வாருங்கள் கலந்துரையாடுவோம்!

இவண்:
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு

(Co-ordination Committee for Common Education)
சென்னை 72993 61319, 94443 80211

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க