மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 55

மாக்சிம் கார்க்கி

அவள் மகன், அவளுக்குத் தெரியாத எதையும் சொல்லிவிடவில்லை. அவனது சிந்தனைகளெல்லாம் அவளுக்கும் பரிச்சயமானவைதாம். என்றாலும் இங்கே, நீதிமன்றத்தின் முன்னிலையில், அவனது கொள்கையின் மீது அவளுக்கு ஓர் அதிசயக் கவர்ச்சி முதன் முதலாக ஏற்படுவதை அவள் உணர்ந்தாள். பாவெலுடைய அமைதியைக் கண்டு அவள் வியப்படைந்தாள். அவளது கொள்கையிலும் அதன் இறுதி வெற்றியிலும் முழு நம்பிக்கை கொள்ளும் ஒரு நட்சத்திர ஒளியைப் போலவே அவள் அவனது பேச்சைத் தன் இதயத்துக்குள் பத்திரப்படுத்தி வைத்தாள்.

இனிமேல் அந்த நீதிபதிகள் அனைவரும் அவனோடு காரசாரமான விவாதத்தில் இறங்கி, அவன் கூறுவதையெல்லாம் கோபாவேசமாக மறுத்துக்கூறி, தங்களது சொந்த சிந்தனைகளை வலியுறுத்துவார்கள் என்று தாய் எதிர்பார்த்தாள். ஆனால் அந்திரேய் ஆடியசைந்து கொண்டே எழுந்திருந்தான். தனது புருவங்களுக்குக் கீழாக அந்த நீதிபதிகளைக் கவனித்துப் பார்த்தான். பிறகு பேசத் தொடங்கினான்.

”பிரதிவாதிப் பெரியோர்களே…”

”நீங்கள் நீதிபதிகளைப் பார்த்துத்தான் பேச வேண்டும். பிரதிவாதிகளை நோக்கியல்ல!” என்று அந்தச் சீக்காளி நீதிபதி கோபத்தோடு உரக்கக் கத்தினார். அந்திரேயின் முகத்தில் ஒரு குறும்புத்தனமான உணர்ச்சி பிரதிபலித்ததைத் தாய் கண்டுகொண்டாள். அவனது மீசைகள் அசைந்து துடித்தன; கண்களில் ஒரு பூனைக்கண் பிரகாசம் தோன்றியதைத் தாய் கண்டாள். அவன் தனது தலையை மெலிந்த நீண்ட கரத்தால் பரபரவென்று தேய்த்துவிட்டுக்கொண்டான்; பெரு மூச்செறிந்தான்.

”அப்படியா?” என்றான் அவன். ”நான் இதுவரை உங்களை நீதிபதிகளாகக் கருதவில்லை. பிரதிவாதிகளாகவே கருதிவிட்டேன்!”

”விஷயத்தைப் பற்றி மட்டுமே பேசுங்கள்!” என்று அந்தக் கிழ நீதிபதி வறண்ட குரலில் எச்சரித்தார்.

”விஷயத்தையா? ரொம்ப சரி. உங்களை நேர்மையும் கௌரவமும் சுதந்திரமும் கொண்ட உண்மையான நீதிபதிகளாகக் கருதிக் கொள்வதென்று நான் என் மனத்தைப் பலவந்தப்படுத்தி ஒப்புக்கொள்ளச் செய்துவிட்டேன்……..”

”நீதிமன்றத்துக்கு உங்கள் விமர்சனம் எதுவும் தேவையில்லை!”

“ஓஹோ, அப்படியா? ரொம்ப சரி. நான் எப்படியாவது பேசுகிறேன். நீங்கள் எல்லாம் ‘உன்னது’, ‘என்னது’ என்ற வித்தியாசம் பாராத, பாரபட்சமற்ற விருப்பு வெறுப்பற்ற நடுநிலைமையாளர்கள் என்றே வைத்துக்கொள்வோம். சரி, உங்கள் முன்னால் இரண்டு பேரை இழுத்துக்கொண்டு வருகிறார்கள். ஒருவன் சொல்கிறான்: ‘அவன் என்னைக் கொள்ளையடித்ததுமில்லாமல் என்னைக் கூழாய் அடித்து நொறுக்கிவிட்டான்’ என்கிறான். இன்னொருவன் எனக்கு ஜனங்களைக் கொள்ளையடிக்க உரிமை உண்டு; என்னிடம் சொந்தமாக ஒரு துப்பாக்கி இருப்பதால் அவனைக் கூழாக அடித்து நொறுக்கவும் செய்வேன்’ என்கிறான்…….”

“வழக்கைப் பற்றி ஏதும் பேசத் தெரியாதா?” என்று குரலை உயர்த்திக்கொண்டு கேட்டார் அந்தக் கிழ நீதிபதி. அவரது கரம் நடுங்கியது. அவர் கோபப்படுவதைக் கண்டு, தாய்க்குச் சந்தோஷமாயிருந்தது. ஆனால் அந்திரேய் நடந்து கொள்ளும் விதம் தான் அவளுக்குப் பிடிக்கவில்லை. அவனது பேச்சு தன் மகனுடைய பேச்சோடு இணைந்து செல்வதாகத் தோன்றவில்லை. அவர்களது விவாதமெல்லாம் கண்ணியமும் கண்டிப்பும் நிறைந்ததாக இருக்க வேண்டுமென அவள் விரும்பினாள்.

அந்த ஹஹோல் தான் பேசத் தொடங்குவதற்கு முன்னால் அந்தக் கிழவரை வாய்பேசாது பார்த்தான்.

”விஷயத்தை மட்டுமா?” என்று நெற்றியைத் தடவிக்கொண்டே சொன்னான். ”நான் ஏன் அதைப் பற்றி உங்களிடம் பேச வேண்டும்? உங்களுக்கு இப்போது என்னென்ன தெரிய வேண்டுமோ, அதையெல்லாம்தான் என் தோழன் எடுத்துக் கூறிவிட்டானே. மற்ற விஷயங்களை முறை வரும்போது மற்றவர்கள் உங்களுக்குச் சொல்வார்கள்…”

அந்தக் கிழ நீதிபதி நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டு சத்தமிட்டார்.

”நீங்கள் பேசியது போதும்!” அடுத்து – கிரிகோரிய் சமோய்லவ்!

ஹஹோல் கப்பென்று உதடுகளை மூடிக்கொண்டு பெஞ்சின் மீது சாவதானமாக உட்கார்ந்தான். சமோய்லவ் தனது சுருட்டைத் தலையைச் சிலுப்பிவிட்டுக்கொண்டு எழுந்திருந்தான்.

“அரசாங்க வக்கீல் என்னுடைய தோழர்களைக் காட்டுமிராண்டிகள் என்றும், நாகரிகத்தின் எதிரிகள் என்றும் கூறினார்……..”

“உங்கள் விசாரணையைப் பொறுத்த விஷயத்தை மட்டும் பேசுங்கள்.”

“இதுவும் அதைப் பொறுத்த விஷயம்தான். யோக்கியப் பொறுப்புள்ளவர்களைப் பொறுத்த விஷயங்கள்தான் எல்லாம். அவர்கள் சம்பந்தப்படாத எந்த விஷயமும் இல்லை. தயை செய்து நான் பேசுவதில் குறுக்கிட வேண்டாம். உங்கள் நாகரிகம் எது? அதைத்தான் நானும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.”

“உங்களோடு விவாதம் பண்ணுவதற்காக இங்கு நாங்கள் வரவில்லை. உங்கள் வேலையைப் பாருங்கள்!” என்று பல்லைக் காட்டிக்கொண்டே சொன்னார் அந்தக் கிழவர்.

அந்திரேயின் நடத்தை அந்த நீதிபதிகளிடத்தில் ஒரு மாறுதலை உண்டுபண்ணியிருந்தது. அவனது வார்த்தைகள் அவர்களிடமிருந்து எதையோ உரித்தெடுத்துவிட்டதுபோல் தோன்றியது. அவர்களது சாம்பல் நிற முகங்கள் கறுத்துக் கறைபடிந்தன. கண்களில் உணர்ச்சியற்ற பசிய ஒளி மினுமினுத்தது. பாவெலின் பேச்சினால் அவர்களுக்கு எரிச்சல்தான் உண்டாயிற்று. எனினும் அவர்கள் அவனை மதிக்கும்படியான நிர்ப்பந்தத்தை உண்டாக்கிவிட்டது, அவனது பேச்சு. அதனால் அவர்கள் தங்களது எரிச்சலைக்கூட வெளிக்காட்டாமல் உள்ளடக்கிக்கொண்டு தவித்தார்கள். அந்த ஹஹோலோ அவர்களது இந்தப் பாசாங்குத் திரையைக் கிழித்தெறிந்து, அவர்களது அந்தரங்க உணர்ச்சியை வெளிக் கிளப்பிவிட்டுவிட்டான். அவர்கள் ஒருவருக்கொருவர் குசுகுசுத்துப் பேசினார்கள்; முகத்தை விகாரமாகக் கோணிக் கொண்டார்கள்; நிலைகொள்ளாமல் துறுதுறுத்தார்கள்.

”நீங்கள் மக்களை உளவாளிகளாகப் பழக்கிவிடுகிறீர்கள், இளம் யுவதிகளையும் பெண்களையும் கெடுக்கிறீர்கள்; மனிதர்களைத் திருடர்களாகவும் கொலைகாரர்களாகவும் மாற்றிவிடுகிறீர்கள்; மதுபானத்தால் மக்களை விஷமூட்டிக் கொல்கிறீர்கள். சர்வதேச யுத்தங்கள், பொய் பித்தலாட்டங்கள், விபச்சாரம், காட்டுமிராண்டித்தனம் – இதுதான் உங்கள் நாகரிகம். இந்த மாதிரியான நாகரிகத்துக்கு நாங்கள் எதிரிகள்!”

‘நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்…….” என்று சத்தமிட்டார் அந்தக் கிழவர். ஆனால் சமோய்லவோ முகம் சிவக்க, கண்கள் பிரகாசிக்க எதிர்த்துச் சத்தமிட்டான்.

”நீங்கள் எந்த மக்களைச் சிறையிலே தள்ளி நாசப்படுத்துகிறீர்களோ, பைத்தியம் பிடிக்கச் செய்கிறீர்களோ அந்த மக்கள் குலத்தின் நாகரிகத்தைத்தான் நாங்கள் மதிக்கிறோம்; ஆதரிக்கின்றோம்; கெளரவிக்கிறோம்……”

”பேசியது போதும், சரி. அடுத்தது – பியோதர் மாசின்!”

பியோதர் முள் குத்தியது போலத் துள்ளியெழுந்து நிமிர்ந்து நின்றான்.

”நான் – நான் சத்தியம் செய்கிறேன். நீங்கள் எங்கள்மீது ஏற்கெனவே தீர்ப்புச் செய்துவிட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும்” என்று அவன் மூச்சுத் திணறிக்கொண்டே சொன்னான். அவனது கண்களைத் தவிர முகம் முழுவதும் வெளிறிட்டுப்போனதாகத் தோன்றியது. அவன் தன் கையை நீட்டி உயர்த்திக்கொண்டே கத்தினான். “நான் ஆணையிட்டுச் சொல்லுகிறேன். நீங்கள் என்னை எங்கெங்கு அனுப்பினாலும் சரி, அங்கிருந்து நான் எப்படியாவது தப்பிவந்து என் சேவையை என்றென்றும். என் வாழ்நாள் பூராவும் தொடர்ந்து நடத்துவேன். இது சத்தியம்!”

சிஸோவ் உரத்து முனகிக்கொண்டே, தன் இருப்பிடத்தைவிட்டு அசைந்து உட்கார்ந்தான். ஜனக்கூட்டத்திடையே ஒரு விசித்திரமான முணுமுணுப்பு எதிரொலித்தது. அது திக்பிரமையுணர்ச்சியில் கலந்து அமிழ்ந்தது. ஒரு பெண் பொருமிக் குமுறியழுதாள். யாரோ திடீரென இருமலுக்கு ஆளாகிப் புகைந்தார்கள். போலீஸ்காரர்கள் கைதிகளை மங்கிய வியப்புணர்ச்சியோடு பார்த்தார்கள்; ஜனங்களைக் கோபத்தோடு பார்த்தார்கள். நீதிபதிகள் முன்னும் பின்னும் அசைந்தாடினார்கள். அந்தக் கிழட்டு நீதிபதி வாய்விட்டுக் கத்தினார்.

“அடுத்தது – இவான் கூஸெவ்!”

”நான் சொல்வதற்கு எதுவும் இல்லை!”

”அடுத்தது – வசீலி கூஸெவ்!”

”எனக்கும் ஒன்றும் இல்லை”

”பியோதர் புகின்!”

வெளுத்து நிறமிழந்து போயிருந்த புகின் சிரமத்தோடு எழுந்திருந்து, தன் தலையை உலுக்கிவிட்டுக்கொண்டு பேசினான்.

”நீங்கள் உங்களைப் பார்த்தே நாணித் தலைகுனிய வேண்டும். எனக்குக் கல்வியறிவு இல்லைதான். என்றாலும் எது நியாயம் என்பது எனக்குத் தெரியும்.” அவன் தன் கையைத் தலைக்கு மேலாக உயர்த்தி, மௌனமானான். கண்களைப் பாதி மூடியவாறு தூரத்தொலையிலுள்ள எதையோ கூர்ந்து கவனிப்பது போலப் பார்த்தான்.

“இதென்ன இது?” என்று எரிச்சல் கலந்த வியப்போடு கூறிக்கொண்டே அந்தக் கிழ நீதிபதி நாற்காலியில் சாய்ந்தார்.

“ப்பூ! நீங்கள் நாசமாய்ப் போக!……”

புகின் வெறுப்போடு கீழே உட்கார்ந்தான். அவனது இருண்ட வார்த்தைகளில் ஏதோ ஒரு புதுமையும் ஏதோ ஒரு பெரிய முக்கியத்துவமும், எதையோ பழித்துக் கூறும் துக்க உணர்ச்சியும், அப்பாவித்தனமும் பொதிந்திருந்தான். எல்லோருமே இதை உணர்ந்துகொண்டார்கள். நீதிபதிகள்கூட, அவன் கூறியதைவிடத் தெளிவானதான ஓர் எதிரொலியை எதிர்பார்ப்பது போலத் தம் செவிகளைக் கூர்ந்து சாய்த்தார்கள். அசைவற்ற அமைதி அங்கு நிலவியது. இடையிடையே அழுகைக்குரல் கேட்பதைத் தவிர அந்த மெளனத்துக்கு வேறு இடைஞ்சல் எதுவும் ஏற்படவே இல்லை. கடைசியாக, அரசாங்க வக்கீல் தமது தோள்களைக் குலுக்கிக் கொண்டு லேசாகச் சிரித்தார். பிரபுவம்சத் தலைவர் இருமினார்; மீண்டும் அந்த நீதிமன்றத்தில் ரகசியப் பேச்சுக்களின் கசமுசப்புக்குரல் முணுமுணுக்கத் தொடங்கியது.

”நீதிபதிகள் பேசப்போகிறார்களா?” என சிஸோவைப் பார்த்து மெதுவாகக் கேட்டாள் தாய்.

“எல்லாம் முடிந்துவிட்டது – இனிமேல் தீர்ப்பு மட்டும்தான் பாக்கி……”

”இவ்வளவுதானா? வேறொன்றும் இல்லையா?”

”இல்லை.”

அவளால் அதை நம்ப முடியவில்லை.

சமோய்லவின் தாய் தனது இடத்தில் நிலைகொள்ளாமல் தவித்துப் புழுங்கினாள். பெலகேயாவை முழங்கையாலும் தோளாலும் இடித்துத் தள்ளினாள்.

“இதென்ன இது? இப்படியா நடக்கும்?” என்று தன் கணவனை நோக்கிக் கேட்டாள் அவள்.

“நீதான் பார்த்தாயே. இப்படித்தான் நடக்கும்.”

“கிரிகோரியுக்கு என்ன தண்டனை கொடுப்பார்கள்?”

”சும்மா இரு.”

ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பிளவை, ஏதோ ஒரு முறிவை, ஏதோ ஒரு குழப்பத்தை உணர்ந்திருந்தார்கள். அடிமுடி காண முடியாத ஏதோ ஒரு சொக்கப்பனையின் ஒளியை, அதனுடைய இனம் தெரியாத அர்த்த பாவத்தை, அதனது தடுத்து நிறுத்த முடியாத அசுர சக்தியைக் கவனித்துக்கொண்டிருப்பதுபோல் ஜனங்கள் அனைவரும் ஒன்றுமே புரியாமல் விழித்துக்கொண்டிருந்தார்கள். திடீரெனத் தங்கள் முன் தோன்றிய மகத்தான விஷயத்தைப் புரிந்து கொள்ள முடியாமல், தங்களுக்குப் புரிந்த சின்னஞ்சிறு விஷயங்களைப் பற்றி மட்டும் ஏதேதோ உணர்ச்சிகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள்.

படிக்க:
♦ தாய் பாகம் 12 : இவன் சோஷலிஸ்ட் ! முட்டாள் அல்ல
♦ எங்களுக்கு நீதி வழங்கும்படி உங்களுக்கு மக்கள் உரிமை வழங்கியிருக்கிறார்களா ?

”இதைக் கேளு. அவர்கள் ஏன் இவர்களைப் பேசவிடுவதில்லை?” என்று புகினின் மூத்த சகோதரன் சிறிது உரக்கக் கேட்டான். ”அரசாங்க வக்கீலை மட்டும் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் பேசவிடுகிறார்களே……..”

பெஞ்சுகளுக்குப் பக்கத்தில் நின்ற ஓர் அதிகாரி ஜனக்கூட்டத்தை நோக்கித் தன் கையை நீட்டி அவர்களைக் கையமர்த்தினான்.

”அமைதி… அமைதி” என்றான் அவன்.

சமோய்லாவின் தந்தை பின்னால் சாய்ந்து கொண்டு மனைவியின் முதுகிற்குப்பின் உடைந்த வார்த்தைகளில் ஏதேதோ முணுமுணுக்கத் தொடங்கினான்.

“ரொம்ப சரி – அவர்கள் குற்றவாளிகளென்றே வைத்துக் கொள்வோம். இருந்தாலும் தங்கள் கட்சியை எடுத்துரைப்பதற்கும் அவர்களுக்குச் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டாமா? அவர்கள் யாருக்கு எதிராகக் கிளம்புகிறார்கள்? நான் அதைத் தெரிந்து கொள்ள வேண்டும். எனக்கும் என் இதயத்தில் சில சொந்த அபிப்பிராயங்கள் உண்டு…”

”உஷ்!” என்று சமோய்லவின் தந்தையை நோக்கி விரலை நீட்டி எச்சரிக்கை செய்தான் அதிகாரி.

சிஸோவ் வருத்தத்தோடு தலையை அசைத்துக்கொண்டான்.

தாய் தனது பார்வையை அந்த நீதிபதிகளின் மீதிருந்து அகற்றவே இல்லை. அவர்கள் வெளிக்குத் தெரியாமல் தமக்குள் பேசிக்கொள்ளும்போது அவர்கள் ஆத்திர உணர்ச்சி அதிகரித்து வருவதையே அவள் கவனித்துக்கொண்டிருந்தாள். அவர்களது உணர்ச்சியற்ற மெலிந்த குரல்கள் தாயின் முகத்தைத் தொட்டன; அவளது கன்னங்களைத் துடிக்கச் செய்தன. அவளது வாயிலே ஏதோ ஓர் அருவருக்கத்தக்க கசப்பு ருசியை உண்டாக்கின. குதுகுதுக்கும் ரத்தமும், ஜீவ சக்தியும் நிறைந்து துடிக்கும் தனது மகனையும் அவனது தோழர்களையும் பற்றி, அவர்களிடம் உடம்புகளைப் பற்றி, அந்த இளைஞர்களின் தசைகளையும் அவயவங்களையும் பற்றியே அவர்கள் பேசிக்கொண்டிருப்பதாக தாய்க்குத் தோன்றியது. அந்த உடம்புகளைக் காணும் அவர்களது உள்ளத்தில் பிச்சைக்காரர்களின் கேவலமான பகைமை உணர்ச்சியும் நோய்ப்பட்டு நொம்பலமானவர்களின் பேராசையுணர்ச்சியுமே இடம்பெற்று வளர்ந்தன.

இன்பத்தை அறியவும் ஆக்கவும் சக்தி படைத்த, வேலை செய்யவும் செல்வத்தை ஆக்கவும் பெருக்கவும் சக்தி படைத்த, அந்த இளைஞர்களது உடல்களைப் பார்த்துப் பார்த்து வருத்தத்தோடு தங்கள் நாக்குகளைக் சப்புக் கொட்டிக்கொண்டார்கள். ஆனால் இந்த உடல்வளம் பெற்ற இளைஞர்களோ இனி ஒதுக்கப்பட்டுப் போனார்கள். அதாவது இனிமேல் அந்த உடல் வளத்தை யாரும் தங்கள் உடமையாகக் கருத முடியாது. அதைச் சுரண்டி வாழ முடியாது; தின்று வாழ முடியாது. இந்தக் காரணத்தினால்தான் அந்தக் கிழட்டு நீதிபதிகளின் மனத்திலே பழிவாங்கும் சோக எரிச்சல் மூண்டது.

தம் முன்னால் புதிய இரைப்பிராணி வரும்போது அதை எட்டிப்பிடிக்கத் தெம்பும் திராணியும் அற்றுப்போய் மெலிந்து வாடும் காட்டு மிருகத்தைப்போல், பிற மிருகங்களின் பலத்தை அமுங்கடித்து அவற்றைத் தமக்கு இரையாக்கித் தின்பதற்குச் சக்தியற்றுப் போய் அந்த இரைப்பிராணிகள் தம்மிடமிருந்து தப்பி நடமாடுவதைக் கண்டு, அவற்றைப் பிடித்து அடிக்கத் திராணியற்று அவற்றை நோக்கி உறுமுவதோடும் ஊளையிடுவதோடும் திருப்தியடையும் காட்டுமிருகத்தைப் போல் அவர்களும், தங்களது ஆட்சிக்குள் சிக்காது தப்பிக்கும் அந்த இளைஞர்களைப் பார்த்து பழிகொள்ளும் துன்ப உணர்வுடன் கொட்டாவி விட்டுக் குமுறிக் கொண்டிருந்தார்கள்.

இந்த மாதிரியான குரூரமான, விபரீதமான எண்ணங்கள் எல்லாம் நீதிபதிகளையே கவனித்துக்கொண்டிருந்த தாயின் மனத்தில் தெள்ளத் தெளிவாக உருப்பெற்றுத் தோன்றிக் கொண்டிருந்தன. தங்களது இந்தப் பேராசை உணர்ச்சியையும், ஒரு காலத்தில் தங்களது மிருகப் பசியைத் தணித்துக் கொள்வதற்கு வழி தெரிந்து வைத்திருந்து, இன்று பலமிழந்துபோன மிருகங்களின் உறுமலைப் போன்ற ஆண்மையற்ற மூர்க்க பாவத்தையும், அவர்கள் அனைவரும் மூடி மறைக்க விரும்பவில்லை என்றே அவளுக்குத் தோன்றியது.

பெண்மை உணர்ச்சியும் தாய்மையுணர்ச்சியும், கலந்து நிறைந்த தாய்க்கோ தனது மகனது சரீரம் என்றென்றும் இனிமை பயப்பதாக, ஆத்மா என்று சொல்லப்படுகிறதே, அதைவிட அருமையானதாகவே இருந்து வந்திருக்கிறது. எனவே அந்தப் பசிவெறி கொண்ட மங்கிய கண்கள் அவனது முகத்தின் மீதும், மார்பின் மீதும் தோள்களின் மீதும், கைககளின் மீதும் ஊர்ந்து தவழ்ந்து, அவனது உயிர்ப்பு நிறைந்த சதைக் கோளத்தின் உணர்வை நாடி, அவன் உடம்போடு ஒட்டி உராய்ந்து தமது உடம்பிலும், தங்களது தொய்ந்து தொள தொளத்துப் போன தசைக் கோளங்களிலும், வலியிழந்துபோன நரம்புகளிலும் புது வலுவை ஏற்றிக் கொள்ளும் விருப்பத்தோடு பற்றிப் பிடித்துப் பார்த்துக்கொண்டிருப்பதாகவே அவளுக்குப் பயங்கரமாய்த் தோன்றியது.

அந்த இளைஞர்களுக்குத் தண்டனை விதிப்பதற்கும் தாமே ஆளாகி, அவர்களது உடம்புகளைத் நாம் என்றென்றும் இழப்பதற்கும் தயாராகிவிட்ட அந்த இளைஞர்களை எண்ணியெண்ணி அந்த நீதிபதிகள், ஊறிவரும் பகைமை பேராசை முதலியவற்றின் உறுத்தலால், ஒரு புதிய துடிப்புக்கு ஆளாயினர். அவர்களது இந்த உணர்ச்சியற்ற இனிமையற்ற பார்வையைப் பாவெலும் உணர்ந்து கொண்டது போலவே அவளுக்குத் தோன்றியது. எனவேதான் அவன் அவளை ஒரு நடுக்கத்தோடு பார்ப்பதாக அவள் உணர்ந்தாள்.

பாவெல் அவளை அமைதியோடும் அன்போடும், கண்ணில் களைப்பின் சாயை படர்ந்து பரவப் பார்த்தான். இடையிடையே அவன் அவளை நோக்கித் தலையை அசைத்துப் புன்னகை செய்தான்.

”சீக்கிரமே – விடுதலை!” என்ற வார்த்தைகளே அவனது புன்னகையின் அர்த்த பாவமாகத் தோன்றியது. அந்தப் புன்னகை அவளைத் தொட்டுத் தடவி அமைதியளித்தது.

திடீரென்று அந்த நீதிபதிகள் எழுந்திருந்தார்கள். தாயும் தன்னை அறியாமலே எழுந்து நின்றாள்.

“அதோ அவர்கள் போகப் போகிறார்கள்” என்றான் சிஸோவ்.

”தீர்ப்புச் செய்யவா?” என்று கேட்டாள் தாய்.

“ஆமாம்.”

அவள் கொண்டிருந்த உணர்ச்சிப் பரவசம் திடீரென இற்று முறிந்து, அவளுக்குக் களைப்புணர்ச்சியினால் ஏற்படும் மயக்க உணர்ச்சி மேலோங்கியது. அவளது புருவங்கள் நடுங்கின. நெற்றியில் முத்து முத்தாக வியர்வைத் துளிகள் பூத்துத் துளிர்த்தன. அவளது இதயத்திலே துயரமும் அதிருப்தியும் நிறைந்த மனப்பாரம் ஏறியமர்ந்தது; அந்த மனப்பார உணர்ச்சி திடீரென்று அவள் மனதில் நீதிமன்றத்தின் மீதும் நீதிபதிகள் மீதும் ஒரு கசப்புணர்ச்சியை உண்டாக்கிவிட்டது. தலையை வலிப்பதாக உணர்ந்தாள் அவள். எனவே தன் கையினால் நெற்றியை அழுத்திப் பிடித்துத் தேய்த்தவாறே அவள் நிமிர்ந்து பார்த்தாள்.

கைதிக் கூண்டுகளை நெருங்கிச் சென்ற கைதிகளின் உறவினர்களையும் பேச்சுக் குரலின் ரீங்காரம் நிரம்பிய நீதிமன்றத்தையும் அவள் பார்த்தாள். அவளும் பாவெலிடம் சென்றாள். அவன் கையை அழுத்திப் பிடித்தாள். பல்வகையுணர்ச்சிகளின் குழப்ப நிலைக்கு ஆளாகி, அதனால் எழுந்த வேதனையோடும் இன்பத்தோடும் அவள் பொங்கிப் பொங்கி அழுதாள். பாவெல் அவளிடம் அன்போடு பேசினான். ஹஹோலோ சிரித்துக் கேலி பண்ணினான்.

எல்லாப் பெண்களுமே அழுதார்கள். சோகத்தால் அழுவதைவிட, பழக்கத்தின் காரணமாகத்தான் அவர்கள் அழுது தீர்த்தார்கள். எதிர்பாராதவிதமாக எங்கிருந்தோ வந்து தம்மைத் தாக்கிய சோக வேதனை எதுவும் அவர்களுக்கு இல்லை. தங்களது குழந்தைகளைப் பிரிய வேண்டியிருக்கிறதே என்ற வருத்தத்தால்தான் அவர்கள் அழுதார்கள். அன்றைய தினத்தின் நிகழ்ச்சிகளைப் பார்த்துப் பார்த்து அந்த வருத்த உணர்ச்சிகூட ஓரளவு சமனப்பட்டுப் போயிருந்தது. தந்தைமார்களும் தாய்மார்களும் தங்கள் பிள்ளைகளைக் குழம்பிப்போன பல்வகை உணர்ச்சியோடு பார்த்தார்கள்.

பெரியவர்களாகிய நாங்கள் அந்த இளைஞர்களைவிட உயர்ந்தவர்கள் என்ற வழக்கமான எண்ணத்தோடு, அந்த இளைஞர்களின் காரியங்களில் அவநம்பிக்கை உணர்ச்சியோடுதான் அவர்கள் பார்த்தார்கள். எனினும் அவர்கள் அந்த இளைஞர்களுக்கு ஒருவிதத்தில் மரியாதையும் காட்டினார்கள். புதியதொரு நல்வாழ்வைச் சமைப்பதைப் பற்றிக் கொஞ்சங்கூடப் பயமில்லாமலும் தைரியத்தோடும் அந்த இளைஞர்கள் எடுத்துக்கூறிய விஷயம் அவர்களது மனத்திலோ ஒரு பெரும் வியப்பை ஏற்படுத்தியிருந்தது. எனவே அந்த வியப்புணர்ச்சிக்கு ஆளாகி, இனிமேல் தாம் எந்தவிதமாக வாழ வேண்டும் என்ற கவலைக்கு ஆளாகிச் சிந்தித்துச் சிந்தித்துச் சோர்ந்தார்கள் அந்தப் பெற்றோர்கள். உணர்ச்சிகளை உருவாக்கி வெளியிட முடியாத ஏலாத் தன்மையால் அந்த உணர்ச்சிகள் உள்ளுக்குள்ளேயே அழுந்திப் போயின. எனவே அவர்கள் சர்வ சாதாரணமான விஷயங்களைப் பற்றி, துணிமணி, உடம்பைப் பார்த்துக்கொள்ளுதல் முதலிய விஷயங்களைப் பற்றி என்னென்னவோ பேசிக்கொண்டார்கள்.

புகினின் மூத்த சகோதரன் தன் தம்பிக்கு எதையோ விளக்கிச் சொல்வதற்காக, கையை ஆட்டிக்கொண்டிருந்தான்.

“நியாயம் – இதுதான் வேண்டும். வேறொன்றுமில்லை!”

“நமது மைனாவைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்” என்று பதிலளித்தான் புகின்.

”பார்த்துக் கொள்கிறேன்”

சிஸோவ் தன் மருமகனின் கையைப்பிடித்துச் சொன்னான்:

”நல்லது, பியோதர், அப்படியென்றால் நீ எங்களை விட்டுப் பிரிந்து செல்லப் போகிறாயா?….”

பியோதர் தன் மாமனின் பக்கமாகக் குனிந்து அவன் காதில் ஏதோ ரகசியமாகச் சொல்லிவிட்டு, குறும்புத்தனமாகப் புன்னகை செய்தான். அங்கு காவல் நின்ற காவலாளியும் புன்னகை செய்தான். ஆனால் மறுகணமே அவன் தன் முகத்தை வக்கிரமாக வைத்துக் கொண்டு தொண்டையைக் கனைத்துச் சீர்படுத்திக்கொண்டான்.

மற்றப் பெண்கள் பேசியது போலவே தாயும் தன் மகனிடம் துணிமணிகளைப் பற்றியும், அவனது தேக சுகத்தைப் பற்றியுமே பேசினாள். எனினும் அவளது உள்ளத்தில் சாஷாவைப் பற்றியும் தன்னைப் பற்றியும் அவனைப் பற்றியும் ஆயிரமாயிரம் கேள்விகள் நிரம்பிப் புடைத்து விம்மிக்கொண்டிருந்தன. இதற்கெல்லாம் மேலாக, அவள் தன் மகன் மீது கொண்ட பாசவுணர்ச்சியால் ஏதோ ஒரு பாரவுணர்ச்சி நெஞ்சில் குடிபுகுந்தது. அவள் அவனை மகிழ்வித்து, அவனது இதயத்தைத் தன் இதயத்தால் தொட்டுவிட விரும்பினாள்.

ஏதோ நடக்கப்போகிறது என்றிருந்த பய பீதியுணர்ச்சி மறைந்து போய்விட்டது. அதற்குப் பதிலாக அந்த நீதிபதிகளைப் பற்றிய நினைவு எழும்போது ஒரு நடுக்க உணர்ச்சியும், அவளது மனத்தின் மூலையிலே சில இருண்ட எண்ணங்களுமே தோன்றிக்கொண்டிருந்தன. தன்னுள்ளே ஒரு புதிய பிரகாசம் பொருந்திய இன்ப உணர்ச்சி பிறப்பதை அவள் உணர்ந்தாள். அதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே அவள் குழம்பித் தவித்தாள். ஹஹோல் எல்லோரிடமும் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு, தான் பாவெலிடம் காட்டும் பாசவுணர்ச்சியைவிட, அவனிடமேதான் அதிகமான பாசம் கொள்ள வேண்டும் என்பதை அவள் உணர்ந்து அவனிடம் திரும்பிப் பேசினாள்.

”உங்கள் விசாரணையை நான் அப்படியொன்றும் பெரிதாக நினைக்கவில்லை!”

”ஏன் அம்மா?” என்று நன்றியுணர்வோடு புன்னகை செய்து கொண்டே கேட்டான் அவன். “பசு கிழடேயானாலும் பாலின் ருசி போகுமோ?….”

“அதைப் பற்றிப் பயப்படுவதற்கே ஒன்றுமில்லை. ஆனால் இந்த விசாரணையால் யார் சொல்வது சரி, யார் சொல்வது தப்பு என்பது வெளிவரவேயில்லை என்று அவள் தயக்கத்தோடு கூறினாள்.

“ஓஹோ, அதுவா? அதைத்தான் நீங்கள் எதிர்பார்த்தீர்களா?” என்று சொன்னான் அந்திரேய். ”அவர்கள் உண்மையைத் தேடிக் காண்பதில் அக்கறை கொண்டவர்கள் என்று நினைத்தீர்களா?”

”இது ரொம்பப் பயங்கரமாயிருக்குமென்று நான் நினைத்தேன்” என்று பெருமூச்சோடும் புன்னகையோடும் சொன்னாள் அவள்.

“அமைதி! ஒழுங்கு!”

எல்லோரும் அவரவர் இடத்துக்கு ஓடிப்போனார்கள்.

பிரதம நீதிபதி தமது கையொன்றை மேஜை மீது ஊன்றிக் குனிந்தவாறு மறு கையால் தமது முகத்துக்கு நேராக ஒரு காகிதத்தை எடுத்துப் பிடித்தார், மெலிந்து இரையும் குரலில் அதை வாசித்தார்.

”அவர் தீர்ப்பை வாசிக்கிறார்” என்றான் சிஸோவ்.

அந்த அறை முழுவதும் அமைதியாயிருந்தது. ஒவ்வொருவரும் அந்தக் கிழவரையே இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டே எழுந்தார்கள். ஏதோ கண்ணுக்குப் புலனாகாது, கையிலே தாங்கிய அசைவற்ற தடியைப் போல், அவர் தோற்றம் அளித்தார். மற்ற நீதிபதிகளும் எழுந்து நின்றார்கள். அந்த ஜில்லா அதிகாரியும் எழுந்தார். தலையை ஒரு பக்கமாகச் சாய்த்து, கண்களை முகட்டை நோக்கித் திருப்பியவாறே நின்றார். நகர மேயர் தமது மார்பைக் கைகளால் கட்டிக் கொண்டு நின்றார். பிரபுவம்சத் தலைவர் தமது தாடியைத் தடவிக்கொடுத்தார். நோயாளி நீதிபதியும், கொழுத்த முகம் கொண்ட அவரது சகாவும், அரசாங்க வக்கீலும் கைதிகள் நின்ற திசையையே பார்த்துக்கொண்டு நின்றார்கள். நீதிபதிகளுக்குப் பின்புறத்தில் தொங்கிய சித்திரத்திலிருந்து, செக்கச் சிவந்த உடையணிந்த ஜாரரசன் தனது வெளுத்த முகத்தில் வெறுப்புத் தொனிக்கப் பார்த்துக்கொண்டிருந்தான். சித்திரத்திலுள்ள அந்த முகத்தின் மீது ஒரு பூச்சி ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.

”தேசாந்திர சிட்சை!” என்று ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் சொன்னான் சிஸோவ். “நல்லதாய்ப் போயிற்று. கடவுள் புண்ணியத்தில் இது ஒருவழியாய் முடிந்தது. தேசாந்திரத்தில் கடும் உழைப்பு என்றார்கள். அது எப்படியும் ஒத்துப்போய்விடும். அம்மா, வீணாகக் கவலைப்படாதே.”

”அது எப்படியிருக்கும் என்பது எனக்குத் தெரியும்” என்று சோர்ந்த குரலில் சொன்னாள் தாய்.

“எப்படியும் போகட்டும். நமக்குத்தான் என்னென்ன நடக்கும் என்பது தெரியுமே. அது எப்படியிருக்கும் என்பதைப் பற்றிப் பேசுவானேன்?”

அவன் கைதிகளின் பக்கமாகத் திரும்பினான்; அதற்குள் காவலாளிகள் கைதிகளைக் கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள்.

”போய் வா, பியோதர்” என்று அவன் கத்தினான். ”எல்லோரும் போய் வாருங்கள். கடவுள் உங்களுக்குக் கருணை புரியட்டும்!”

தாய் தன் மகனையும் மற்றவர்களையும் பார்த்து மெளனமாகத் தலையை ஆட்டினாள். அவள் வாய்விட்டு அழ விரும்பினாள், ஆனால் அழுவதற்கோ வெட்கப்பட்டாள்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க