சோசலிச அரசுகளின் அரசியல் சார்ந்த சரிவுகளைக் கண்டு மகிழ்ச்சியுற்ற முதலாளிய மீட்பர்கள் அச்சரிவை சோசலிசப் பொருளாதார அமைப்பின் வீழ்ச்சியாக மட்டுமே அதிகம் விமர்சித்தனர். கிழக்கு ஜெர்மனியின் சுவர் உடைப்பு, சோவியத் ஒன்றியத்தின் தகர்வு, சீனாவின் முதலாளிய மீட்பு போன்றவற்றை தூக்கிப் பிடித்துக் கொண்டாடியது ஒருபுறம், மறுபுறம் உலகமயமாக்கல் மூலம் வரப்போகும் செழிப்பான வாழ்க்கை என்கின்ற மாயை. கடந்த 30 ஆண்டுகளாக இதை உருமியடித்த ஊடகங்களும் முதலாளிய அறிஞர்களும் இன்று அமைதியாக முணுமுணுக்கின்றனர்.

அமெரிக்காவும், அய்ரோப்பாவும் முட்டி நிற்கும் சுவர் இரும்பாலானது என்பது இப்பொழுதுதான் அவர்களுக்கு உறைக்கத் துவங்கியுள்ளது. இவர்களால் சவக்குழிக்கு அனுப்பப்பட்டு விட்டதாகக் கூறப்பட்ட மார்க்சிடம் மீண்டும் அவர்களே தீர்வைத் தேடுகின்றனர். மீண்டும் மார்க்சியத்தை இந்தப் பின்னணியில் பயில்வது அவசியம். (நூலுக்கான பதிப்புரையிலிருந்து)

*****

ஸ்ட்வன் மெசரோசின் மூலதனத்தின் அமைப்பு நெருக்கடி என்னும் நூலில் உள்ள இரண்டு நேர்காணல்களின் மொழியாக்கமே இந்தச் சிறு நூல். முதலாளிய அமைப்பின் நெருக்கடி பற்றி சோசலிஸ்ட் ரெவ்யூ இதழில் வந்த நேர்காணலிலும், இந்தச் சூழலில் நம் முன் உள்ள கடமைகள் பற்றி டிபேட் சோசலிஸ்டா இதழில் வந்த நேர்காணலிலும் அவர் பேசுகிறார்.

…. உலகம் முழுவதும் முதலாளியம் தனது இலாப வெறிக்காக இன்று மனித சமூகத்தை ஓட்டாண்டியாக்கி வருகிறது : பூமியிலுள்ள இயற்கை வளங்களைக் கொடூரமாகவும், வேகமாகவும் அழித்து வருகிறது. அதன் மூலம் எதிர்கால மனித சமூகத்தின் இருப்புக்கான அடிப்படையையே அழித்து வருகிறது. உலக முதலாளியத்திற்குத் தலைமை தாங்கும் அமெரிக்கா தனது இலாபத்திற்காக ஆக்கிரமிப்பு யுத்தங்களில் ஈடுபட்டு வருகிறது. தனது இலாபத்திற்காக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் அது தயாராக உள்ளது. இவ்வகையில் முதலாளியத்தின் இலாபவெறி இன்று மனித குலத்தை அழிவின் எல்லைக்குக் கொண்டு சென்றுள்ளது. இவை எல்லாம் முதலாளிய அமைப்பில் உள்ள நெருக்கடியின் விளைவுகள் என்கிறார் மெசரோஸ்.

இந்தப் பின்னணியில்தான் நாம் இந்தியப் பொருளாதாரத்தையும் காண வேண்டும். இந்தப் புவிக் கோளத்தின் மீதுள்ள எந்த ஒரு நாடும் உலகு தழுவிய பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. இந்தியா அதற்கு விதி விலக்காக இருக்க முடியாது.

ஏகாதிபத்திய ஆக்டோபசின் கால்களில் சிக்கிக் கொண்டுள்ள இந்தியப் பொருளாதாரம் இன்று பெரும் நெருக்கடியில் மாட்டிக் கொண்டுள்ளது. பொதுச் சொத்துக்களைத் தனியார் முதலாளிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தல், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் விவசாயிகளின் நிலங்களைக் கைப்பற்றி அவர்களைப் பஞ்சை பராரியாக்குதல், இலாப நோக்கத்திற்காகக் கட்டுப்பாடற்ற பொருள் இறக்குமதி, அந்நிய மூலதனத்திற்கு கதவை அகலத் திறந்துவிட்டதன் மூலம் இந்திய மக்களின் உபரி உழைப்பு இலாபமாக வெளிநாடுகளுக்கு வெளியேறுதல், அந்நிய நிதி நிறுவனங்கள் இந்தியப் பங்குச் சந்தையைக் கொள்ளையடிக்க வழிவகுத்தல், உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி, பண வீக்கம், ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி, விலைவாசி ஏற்றம், நடப்புக் கணக்கில் கடும் பற்றாக்குறை, இலட்சம் கோடிகள் என்ற அளவில் ஊழல் இவைதான் இன்றைய இந்தியப் பொருளாதாரத்தின் சித்திரம்.

1990-களின் உலகமயமாக்கலும், தாராளமயமாக்கலும், தனியார்மயமாக்கலும் இந்தியாவைச் சொர்க்க பூமியாக்கிவிடும் என ஒளிமயமான சித்திரங்களைத் தீட்டிய முதலாளிய ஊடகங்கள் இன்று ஒப்பாரி வைக்கின்றன. அழுது புலம்புகின்றன. ஏதாவது அதிசயம் நடந்து இந்த கடுமையான நெருக்கடியிலிருந்து நாம் தப்பிக்க முடியாதா என முதலாளியப் பொருளாதார மேதைகள் ஏங்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஆட்சியாளர்களோ பொருளாதாரத்தின் இந்தச் சீரழிந்த நிலைக்குக் காரணமான ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு முடிவுகட்டாமல் மேன்மேலும் அந்நிய மூலதனத்திற்கு கதவைத் திறந்து விடுவதன் மூலம் நமது மக்களை மேன்மேலும் அழிக்கவும் வழி வகுத்து வருகின்றனர். மக்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் மீது எழுந்துள்ள அதிருப்தியையும், கோபத்தையும் திசை திருப்பவும், சாந்தப்படுத்தவும் கிராமப்புற வேலை உத்திரவாதத் திட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம், அம்மா உணவகம் போன்ற கீனிசிய ஒடுக்கு எடுக்கும் வேலைகளைச் செய்து வருகின்றனர்.

ஆனால், உலகம் தழுவிய அளவில் இன்று முதலாளியம் எதிர்கொண்டுள்ள நெருக்கடி ஆழமானது என்கிறார் மெசரோஸ். இது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்பொழுது முதலாளியம் எதிர்கொள்ளும் நெருக்கடி போன்றதல்ல….

படிக்க:
சோசலிச சமூகம் அமைப்பதற்கான போராட்டத்தில் மாவோவின் பங்களிப்பு !
நவம்பர் புரட்சி 100 ஆண்டு நிறைவு : கம்யூனிசம் வெல்லும் !

…. பாராளுமன்றவாதத்திலும், தொழிற்சங்கவாதத்திலும் வீழ்ந்துள்ள சீர்திருத்தவாதத் தலைமையிலிருந்து பாட்டாளி வர்க்கம் விடுபட வேண்டும். இன்று பாட்டாளி வர்க்கத்தின் செயல்பாடு தொழிற்சங்கக் கிளை என்றும் அரசியல் கிளை என்றும் இரு பிரிவுகளாக உள்ளன. தொழிற்சங்கக் கிளை கூலி உயர்வுப் போராட்டத்தோடு தமது நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொள்கிறது. பாட்டாளி வர்க்கத்தின் சீர்திருத்தவாத அரசியல் பிரிவோ முதலாளியப் பாராளுமன்றத்தின் விதிகளுக்கு உட்பட்டு மூலதனத்தின் நலனுக்குச் சேவை செய்வதாக மாறி விடுகிறது. மூலதனத்தின் ஆதிக்கத்திலிருந்து கூலி அடிமைத்தனத்தை விடுவிக்க வேண்டும் என்ற ஒட்டு மொத்த சமூக விடுதலைக்கான இலட்சியம் கை விடப்பட்டுள்ளது….  (இந்நூலின் மொழிபெயர்ப்பாளர் குறிப்பிலிருந்து…)

நூல்: முதலாளிய அமைப்பின் நெருக்கடியும் நம் முன் உள்ள கடமைகளும்
ஆசிரியர்: இஸ்ட்வன் மெசரோஸ்
தமிழில்: மு.வசந்தகுமார்

வெளியீடு: விடியல் பதிப்பகம்,
23/5, ஏ.கே.ஜி.நகர், 3-வது தெரு, உப்பிலிபாளையம் அஞ்சல்,
கோயம்புத்தூர் – 641015.
தொலைபேசி: 0422-2576772, 9789457941

பக்கங்கள்: 64
விலை: ரூ 35.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க: noolulagam

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க