தினேஷ், ஒரு விவசாயி ஆனது ஒரு விபத்தாக நடந்தது. திருத்தணி அரசு கல்லூரியில் பி.எஸ்ஸி இயற்பியல் படித்து முடித்ததும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை படித்தார். ஒரு போலீசு வழக்கு காரணமாக அவரால் வழக்கறிஞர் ஆக முடியவில்லை என்கிறார். பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் போதையில் தன்னை தாக்கியதாகவும் வேறுவழியில்லாமல் அதை தடுக்கும்பொருட்டு திரும்பித் தாக்கியதாகவும் சொல்கிறார் தினேஷ்.

தனது குடும்பத்துக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலம்தான் இவருடைய வருமான ஆதாரம்.

மாதிரி படம்

தனக்கு அருகில் இருந்த ஆனந்தன் உள்ளிட்ட பலர் கத்திரிக்காய் விளைவித்து கிலோ ரூ. 30க்கு விற்பதைப் பார்த்தார் தினேஷ்.  எண்ணைய் கத்திரிக்காய், கொத்சு, பொடி கத்திரிக்காய், கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு என குறைந்தபட்சம் 15 பிரபலமான உணவு பதார்த்தங்கள் கத்திரிக்காயை வைத்து தயாரிக்கப்படுகின்றன என்பதால் தமிழ்நாட்டில் கத்திரிக்காய்க்கு எப்போதுமே தேவை இருக்கும் என்கிற முடிவில் தனது நிலத்தில் கத்திரிக்காய் பயிரிட்டார் தினேஷ்.

இதற்காக தினேஷ் ரூ. 40 ஆயிரத்தை முதலீடு செய்தார். ஆனால், கத்திரிக்காய்களின் விளைச்சல் ஜீரோ.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கத்திரிக்காய் விளைச்சலை முற்றிலுமாக பாதிக்கும் ஆறு நோய்களை இனம் கண்டுள்ளது.  இந்தப் பல்கலைக்கழக இணையதளம் இந்த நோய்களைத் தாங்கக்கூடிய சில கத்திரிக்காய் வகைகளை விவசாயிகளுக்கு பரிந்துரைத்துள்ளது. ஆனால், தினேஷுக்கு இந்த நோய்கள் குறித்தோ அவற்றை எப்படி கட்டுப்படுத்துவது என்றோ எதுவும் தெரியவில்லை.

“நோய் வந்தவுடன், ஒரு செடியை பிடிங்கிக் கொண்டுபோய் பூச்சிமருந்து விற்கும் கடைக்காரரிடம் காட்டினேன். அவர் ஒரு பூச்சிக்கொல்லி மருந்தை கொடுத்தார். இந்தப் பகுதியில் இருந்த 10 விவசாயிகளில் 2 பேர் மட்டுமே இந்த நோயை ஒழித்து, தங்களுடைய விளைச்சலை காப்பாற்றினார்கள். எட்டு பேரால் முடியவில்லை” என்கிறார் தினேஷ்.

மாதிரி படம்

தினேஷுக்கு அந்த 10 விவசாயிகளும் எந்த பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்தார்கள் என்பதும் தெரியவில்லை. அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளின் பெயரும் அவருக்கு நினைவில்லை.

அதன் பிறகு, அந்த இளம் விவசாயி வெண்டைக்காய் விளைவித்தார். ஆனால், அவை நல்ல விலைக்கு விற்கப்படவில்லை. அடுத்து, அவருக்கு பண்ணை மீன் வளர்ப்பு செய்யும்படி பரிந்துரைக்கப்பட்டது. விரால், கட்லா, ரோஹு போன்ற மீன் வகைகளை வளர்த்து இடைத்தரகர்களிடம் கிலோ ரூ. 80க்கு விற்க முடியும். இந்த முறை பண்ணைக் குட்டைகள் உருவாக்க ரூ. 50 ஆயிரத்தை முதலீடு செய்தார்.

மீன்கள் வளர்ந்தன; சிறப்பாக வளர்ந்தன. ஒரு நாள் அத்தனையும் காணாமல் போயின.

“இங்கே திருட்டு அதிகம்.  மக்கள் திருட்டுத்தனமாக உள்ளே போய் மீன்களை பிடித்துக்கொண்டு போய்விடுகிறார்கள். குட்டைகளை எல்லா நேரத்திலும் பாதுகாக்க முடிவதில்லை. ஒருமுறை காவலரை நியமித்து பார்த்தேன். ஆனால், அவரும் திருடர்களுடன் சேர்ந்து மீன்களை பிடித்துக்கொண்டு ஓடிவிட்டார்” என்கிறார்.

படிக்க:
நோக்கியா : கையளவு தொலைபேசியில் கடலளவு கொள்ளை !
ஆயிரம் தொழிலாளிகள் டிஸ்மிஸ் ! நோக்கியாவின் பயங்கரவாதம் !

உள்ளூர் வட்டிக்காரர்களிடம் ரூ. 4 லட்சம் கடனை தற்போது சுமந்து கொண்டிருக்கிறார் தினேஷ். வட்டியாக மட்டும் ரூ. 12 ஆயிரத்தை மாதந்தோறும் அவர் கட்ட வேண்டும். ஒரு நிலையான, விவசாயம் அல்லாத வருவாய் கிடைத்தால் அவருக்கு வாழ்க்கை எளிதாக இருக்கும். இப்போது தனது மனைவி கல்பனாவை நம்பியிருக்கிறார். கல்பனா ஒரு ஸ்டேஷனரி கடையுடன் இணைந்த போட்டோ ஸ்டுடியோ-வில் பணியாற்றுகிறார்.

அந்தக் கடை நோக்கிச் செல்லும் சாலை, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள பூண்டி ஏரியைக் கடந்து போகிறது. அது இந்த டவுனிலிருந்து 70 கி.மீ. தூரத்தில் உள்ளது.  வழியில் ஒரு பெரிய திருமண பேனர் வைக்கப்பட்டிருந்தது.  திருமண இணையரின் இடதுபுறம், நடிகர் விஜய் முரசு கொட்டுகிறார். விஜய்யின் அப்பாவும் அந்த பேனரில் இடம்பெற்றிருக்கிறார்.  பேனரின் வலதுபுறம் இரண்டு பேரின் படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பேனர்களை வைத்தவர்களாக அவர்கள் இருக்கக்கூடும். சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடியதற்காக கொண்டாடப்படும், இந்தியாவின் அரசியலமைப்பை வடிவமைத்த பீமாராவ் அம்பேத்கரின்  படங்களும் உள்ளன.  சந்தையில் அம்பேத்கரின் சிலைகள் இருப்பதை பல இடங்களில் காண முடிந்தது.

சந்தைப்பகுதியில் கல்பனாவின் கடை, பேருந்து நிலையத்துக்கு அடுத்து இருந்தது. போட்டோ ஆல்பங்களை உருவாக்குவது, ஸ்டிக்கர் பொட்டு, வளையல், பேனா மற்றும் பென்சில்களை விற்பதுதான் அவருக்கான பணி!

சில ஆண்டுகளுக்கு முன் விவசாயப் பணியிலிருந்து தொழிற்சாலை பணிக்கு போன பின், வாழ்க்கை நன்றாகவே இருந்தது. சென்னையிலிருந்து 200கி.மீ தள்ளியிருக்கும் அரியலூர் மாவட்டத்தில் அவர் வளர்ந்தார். அவருடன் பிறந்தவர்கள் எட்டு பேர். அவர்களுக்கு சொந்தமாக நிலம் இல்லை. விவசாய கூலி வேலைக்கு அவர் போனார்.  அவருடைய ஐந்து சகோதரிகளும் முந்திரி தொழிற்சாலையில் முந்திரி ஓடுகளை உடைக்கும் பணிக்கும், நல்ல முந்திரிகளை பொறுக்கி எடுக்கும் பணிக்கும் போனார்கள்.

கையளவு தொலைபேசியில் கடலளவு கொள்ளையடித்துச் சென்ற நோக்கியா நிறுவனம். (கோப்புப் படம்)

ஒரு நாள், நோக்கியா நிறுவனம் பணிக்கு ஆட்களை தேர்வு செய்து கொண்டிருப்பதாக தொலைக்காட்சி விளம்பரத்தை பார்த்தார் கல்பனா. அவர் விண்ணப்பித்தார். எட்டாயிரம் நிரந்தர ஊழியர்களுடன் உலகின் மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு ஆலையாக இருந்த நோக்கியாவின் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் பணியும் கிடைத்தது.  அப்போது இந்த நிறுவனம் மாதத்துக்கு 15 மில்லியன் போன்களை தயாரித்தது. ஆனால், தமிழக அரசுடன் ரூ. 17,658 கோடி ரூபாய் அளவிலான இரண்டு வரி முறைகேடுகளில் ஈடுபட்ட காரணத்தால், இந்த நிறுவனம் ஆலையை மூடிவிட்டு வியட்நாமுக்குச் சென்றுவிட்டது. இதனால் பல தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள்.

2009-ம் ஆண்டு கல்பனா இந்நிறுவனத்தில் சேர்ந்தபோது ரூ. 3500 மாத சம்பளம் பெற்றார். 2014-ம் ஆண்டு வேலையை இழக்கும்போது அவர் வாங்கிய சம்பளம் 16,500 ரூபாய்.

கல்பனா தற்போது பணியாற்றும் கடை குடும்பத்தைக் காப்பாற்றும் பொருட்டு எடுக்கப்பட்ட முயற்சி. அவர் போதுமானதை இதுவரை சம்பாதிக்கவில்லை. “நான் போட்ட பணத்தை திரும்ப எடுக்கிறேன். விற்கும்போது கிடைக்கும் பணம், மீண்டும் போட்டு, வளையல்களை வாங்குவதற்கே முதலீடு செய்கிறேன்” என்கிறார் கல்பனா.

குறிப்பு : பத்திரிகையாளர் கவுதம் தாஸ் எழுதிய Jobonomics: India’s Employment Crisis and What the Future Holds என்ற நூலிலிருந்து சில பகுதிகளை இங்கு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இயற்கை விவசாயம், விவசாயத்தில் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்பது போன்ற பசுமைவிகடன் வகையறா மினுமினுப்புப் படங்களை நம்பி, விவசாயம் பணம் கொழிக்கும் தொழில் போலவும், விவரம் தெரியாத விவசாயிகள் மட்டுமே தோல்வி அடைவது போலவும் எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு தினேஷின் வாழ்க்கை ஒரு முன்னெச்சரிக்கை

நன்றி : தி வயர்
தமிழாக்கம் :  கலைமதி