தூய்மை இந்தியா வரியை ஒழித்த பிறகும் ரூ.2,000 கோடிக்கும் மேல் வசூலித்த மோடி அரசு !

பொருட்கள் மற்றும் சேவைகள் வரியை (GST) அறிமுகப்படுத்திய 2017, ஜூலை 1 முதல் தூய்மை இந்தியா வரியை மோடி அரசு நீக்கியது. ஆனாலும் தொடர்ந்து கிட்டத்தட்ட ரூ. 2,100 கோடி தூய்மை இந்தியா வரியை மோடி அரசு வசூலித்ததை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தி வயர் இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது.

2017, ஏப்ரல் 1 முதல் 2018, மார்ச் 31 வரை தூய்மை இந்தியா பெயரில் ரூ. 4,242.07 கோடி வசூலிக்கப்பட்டதாக தலைமை செயலகம் (The Directorate General) கூறியுள்ளது. ஏப்ரல் 1 முதல் இந்த வரி வழக்கொழிக்கப்பட்ட ஜூலை 1 வரை ரூ. 2,357.14 கோடி வசூலிக்கப்பட்டதாகவும் அதன் பிறகு 2018, மார்ச் வரை ரூ. 1,884.93 கோடி வசூலிக்கப்பட்டதாகவும் நிதியமைச்சகம் பதிலளித்திருந்தது. அதேபோல 2018, ஏப்ரல் முதல் டிசம்பர் வரை ரூ. 182.25 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது.

தூய்மை இந்தியா வரி முதன்முதலில் 2015-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த பிறகு ஒவ்வொரு சேவைக்கும் 0.5% கூடுதலாக வசூலிக்கப்பட்டு வந்தது. மேலும் 2015 மற்றும் 2018 -க்கு இடையில் ரூ. 20,632.91 கோடி தூய்மை இந்தியா வரியாக வசூலிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. 2015-16 நிதியாண்டில் ரூ. 3,901.83 கோடியும் 2016-17-ம் நிதியாண்டில் ரூ. 12,306.76 கோடியும், 2017-18-ம் நிதியாண்டில் ரூ. 4,242.07 கோடியும், 2018-19-ம் நிதியாண்டில் ரூ. 182.25 கோடியும் வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இப்படி வரியை நீக்கிய பிறகும் சட்டத்திற்கு புறம்பாக வசூலிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாயை தூய்மை இந்தியா திட்டத்திற்காக (ஊரக) கழிவறைகள், சமுதாய தூய்மைப்பாடு வளாகங்கள், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை நிலையங்கள் நிறுவுவதற்கும், கல்வி, சமூக மற்றும் நிர்வாக செலவீனங்களுக்காக செலவிடப்பட்டதாகவும் மைய அரசு கூறுகிறது.

படிக்க:
♦ மோடியின் தூய்மை இந்தியாவில் துப்புரவுப் பணியாளர்கள் கொல்லப்பட்டதற்கே கணக்கில்லை !
♦ திருச்சி மாநாடு அனுமதி மறுப்பு : ரஃபேல் ஊழல் பாடலை கோவன் பாடக் கூடாதாம் ! இதோ அந்தப் பாடல் !

ஆனால் மேலவையில் எழுப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த இணையமைச்சர் சிவ்பிரதாப் சுக்லா 2017, ஜூலை 1-ம் தேதி முதல் தூய்மை இந்தியா வரி ஒழிக்கப்பட்டதாகக் கூறினார்.  பொருள்கள் மற்றும் சேவைகள் வரியை நடைமுறைப்படுத்துவதற்காக ஜூலை 1-ம் தேதி முதல் தூய்மை இந்தியா வரி ஒழிக்கப்பட போவதாக 2017, ஜூன் 2 -ம் தேதி வெளியான அறிக்கையில் நிதியமைச்சகமும் கூறியிருந்தது.

வரி எங்கே செலவிடப்பட்டது என்று அரசு கூறவில்லை :

தூய்மை இந்தியா வரி எங்கே எப்படி செலவிடப்பட்டது என்பது குறித்து ‘தி வயர்’ இணையதளத்திற்கு நிதியமைச்சகம் அளித்த பதிலில் இல்லை. மேலும் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் அனுப்பிய பதிலில் ஒதுக்கப்பட்ட தொகை மற்றும் செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என்று மட்டுமே இருந்தது.

மேலும், 2015-16-ம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட ரூ. 2,400 கோடி முழுமையாக செலவிடப்பட்டதாக கூறியது. அதேபோல, 2016-17-ம் ஆண்டில் ரூ.10,500 கோடியும் 2017-18 -ம் ஆண்டில் ரூ. 3,400 கோடியும் செலவிடப்பட்டது என்று கூறியது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அதே நேரத்தில் எந்தெந்த புதிய/பழைய திட்டங்களுக்காக நிதி செலவிடப்பட்டது என்று தெரியப்படுத்தவில்லை. சட்டப்படி, தூய்மை இந்தியா வரியானது முதலில் இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி வங்கி கணக்கிற்கு (Consolidated Fund of India) செல்ல வேண்டும். பிறகு அதிலிருந்து தூய்மை இந்தியா நிதிக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து தான் தூய்மை இந்தியாவின் பல்வேறு புதிய/பழைய திட்டங்களுக்கு நிதி அனுப்பப்படுகிறது.

குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சககம் அனுப்பிய பதிலின் படி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வசூலான வரியில் நான்கில் ஒரு பங்கு அமைச்சகத்திற்கு அனுப்பப்படவில்லை. வசூலான ரூ. 20,600 கோடியில் ரூ. 16,300 கோடி மட்டுமே அமைச்சகத்திற்கு கிடைத்துள்ளது. மீதித்தொகையான ரூ. 4,300 கோடி என்ன ஆனது என்று தெரியவில்லை. இதை இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் (A Comptroller and Auditor General) 2017-ம் ஆண்டு அறிக்கையும் உறுதிப்படுத்துகிறது.

தலைமை தணிக்கையாளரின் அறிக்கையின் படி வசூலிக்கப்பட்ட ரூ. 16,401 கோடியில் ரூ. 12,400 கோடி (75%) மட்டுமே இந்திய தேசிய பாதுகாப்பு நிதி கணக்கிற்கு செலுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. மீதி 4,000 கோடி ரூபாயின் கதி என்னவென்று தெரியவில்லை.

  சுகுமார்
செய்தி ஆதாரம்: தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க