ழிவுகளை மனிதனே அகற்றும் அவலம் இந்தியா முழுவதும் இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இத்தகைய மோசமான பணியில் ஈடுபடுகையில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

கடந்த பிப்ரவரி 12, 2019 அன்று பாராளுமன்றத்தில் கேரள காங்கிரஸ் எம்.பி முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய சமூகநலத்துறை அமைச்சர் ராம்தாஸ் அதாவலே இத்தகவலைத் தெரிவித்தார்.

கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரைக்குமான ஐந்தாண்டு காலத்தில் தமிழகத்தில் மட்டும் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை நேரடியாக ஈடுபடுத்துகையில் 144 மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்று அதாவலே தெரிவித்துள்ளார். இந்த மரணங்களின் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ள உத்தரப் பிரதேசத்தில் சுமார் 71 பேர் மரணமடைந்துள்ளனர்.

கர்நாடகா, ராஜஸ்தான், டில்லி ஆகிய மாநிலங்களைத் தவிர வேறு எந்த மாநிலங்களிலும் கழிவகற்றும் பணியில் மனிதர்களை பணிக்கமர்த்தியவர்களின் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்படவில்லை என்றும் அதாவலே தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவல்களை பாராளுமன்றத்தில் அமைச்சர் கூறியதற்கு இரண்டு வாரங்களுக்கும் முன்புதான், தமிழகத்தில் இரண்டு துப்புரவுப் பணியாளர்கள் செப்டிக் டேங்கை சுத்தம் செய்கையில் மூச்சுத் திணறி மரணமடைந்தனர்.

“தமிழகத்தில் 8 மாவட்டங்களில் உள்ள 8 மாநகரங்களில் மட்டும் சுமார் 3000 பேர் கழிவை அகற்றும் பணியில் நேரடியாக ஈடுபடுத்தப்படுகின்றனர்” என்கிறார் சஃபாய் கரம்சாரி அந்தோலன் என்ற நாடுதழுவிய துப்புரவுப் பணியாளர்களுக்கான தன்னார்வ தொண்டு அமைப்பின் தமிழகத் தலைவர் சாமுவேல் வேளாங்கண்ணி.

இந்தக் கணக்கெடுப்பு இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் நடத்தப்பட்டது. ஆனால் இன்றுவரை தமிழக அரசு கழிவுகளை அகற்றும் பணியில் நேரடியாக ஈடுபடும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பை எடுக்கவே இல்லை. கழிவுகளை மனிதனே அள்ளுதல் தடைச்சட்ட விதிகளின்படி அரசு இந்த கணக்கெடுப்பை எடுத்திருக்க வேண்டும். ஆனால் இதுவரையில் எடுக்கவில்லை.

படிக்க:
கார்ப்பரேட் – காவி பாசிசம்.. எதிர்த்து நில் ! ஏன் இந்த மாநாடு ?
♦ மோடியின் தூய்மை இந்தியாவில் துப்புரவுப் பணியாளர்கள் கொல்லப்பட்டதற்கே கணக்கில்லை !

மேலும் இங்கு நிலவும் சாதிய அடிப்படையிலான வேலைப் பிரிவினை குறித்து சுட்டிக் காட்டிய அவர், இங்கு தலித்துகள் மட்டுமே கழிவுகளை அகற்றும் பணியில் இருத்தி வைக்கப்பட்டிருப்பதையும் குறிப்பிடுகிறார். “அவர்கள் வேறு வேலை தேடினாலும், அவர்களுக்கு அவ்வேலைகள் மறுக்கப்படுவதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளன” என்கிறார்.

மேலும், “இத்தொழிலாளர்கள் தங்களை கழிவுகளை மனிதன் அகற்றுவதற்கான தடை மற்றும் மறுவாழ்வுச் சட்டத்தின் கீழ் தங்களைப் பதிவு செய்து கொள்ள தாமாகவே விண்ணப்பப் படிவங்களை நிரப்பித் தந்தாலும், அரசு அதிகாரிகள் அதனை எடுத்துக் கொள்வதில்லை.” என்கிறார்.

“இவ்வாறு பதிவு செய்வதன் மூலம், அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் சில பலன்களை இத்தொழிலாளர்கள் பெற முடியும். அவ்வாறு பதிவு செய்யும் கழிவகற்றும் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத் தொகையாக ரூ.40,000 அரசாங்கத்திடமிருந்து பெற முடியும். மேலும் அவர்களது குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் அவர்களது குடும்பத்தினர் பிற வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கான ஆதரவு போன்ற நலன்களைப் பெற முடியும்” என்கிறார் சாமுவேல்.

கழிவுகளை மனிதனே அகற்றும் அவலநிலைக்கு முற்றுப் புள்ளி வைக்க மாற்றுகள் இருக்கத்தான் செய்கின்றன. தஞ்சை மாவட்டதின் கும்பகோணம் நகராட்சி கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல், இப்பணியைச் செய்வதற்கு இயந்திரங்களை உபயோகிக்கிறது. செயல்முறைப்படுத்தத் தொடங்கியது முதல் கடந்த 8 மாதங்களாக இத்திட்டம் வெற்றிகரமாக நடந்தேறியிருக்கிறது என்கிறார் நகராட்சி கமிசனர் உமா மகேஸ்வரி. “தற்போது ஒரு இயந்திரம் மட்டுமே உள்ளது. மாதத்திற்கு சராசரியாக 250 சாக்கடைக் குழிகளை சுத்தம் செய்கிறது. துப்புரவுப் பணியாளர்களுக்கு இந்த இயந்திரத்தை இயக்குவதற்குப் பழகிக் கொடுத்து விட்டதால், அவர்கள் வாழ்வாதாரம் இழப்பது என்ற பேச்சுக்கும் இடமில்லை.” என்கிறார்.

கும்பகோணம் நகராட்சியைப் போன்ற முயற்சிகள் வெகு குறைவானதாகவே இருக்கின்றன. சாக்கடைக் குழிகள், செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்யும் பணியில் அரசாங்கத் துறைகளைத் தவிர தனியார்களும் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களும் முழுக்க முழுக்க மனிதர்களையே இப்பணியில் ஈடுபடுத்துகின்றனர்.

மிக அதிகமான மரணங்கள் தனியார் குடியிருப்புகள், அடுக்குமாடிக் கட்டிடங்களில் சுத்தம் செய்கையில்தான் நிகழ்கின்றன என்ற கசப்பான உண்மையைச் சுட்டிக் காட்டுகிறார் சாமுவேல்.  தனியாரைப் பொறுத்தவரையில், கழிவகற்றும் லாரியின் மூலமாக சுத்தம் செய்வதா, மனிதர்களை உபயோகிப்பதா என தெரிவு செய்ய வேண்டிய நிலையில் அவர்கள் மனிதர்களையே தெரிவு செய்கிறார்கள். ஏனெனில் எது செலவு குறைவானதாக இருக்கிறதோ அதையே அவர்கள் தேர்வு செய்கிறார்கள்.

“ஒரு செப்டிக் டேங்கை சுத்தம் செய்ய லாரி மூலமாக எடுத்தால் ரூ.5000 வரை செலவாகிறது. ஆனால் மனிதர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்தும் போது வெறும் ரூ.1000 – ரூ.1500 வரையில்தான் செலவாகும். ஆகவே பணியமர்த்துபவர்கள் செலவை கணக்கில் கொண்டு சட்டத்தை மீறி செயல்படுகிறார்கள்” என்கிறார் சாமுவேல்.

இத்தகைய வேலையில் மனிதர்களை ஈடுபடுத்துவது குற்றம் என்பதை குறிப்பான குடியிருப்பு மற்றும் கட்டிட உரிமையாளர்கள் தெரிந்து வைத்துள்ளனரா என்ற கேள்விக்கு, கிட்டத்தட்ட இல்லை என்கிறார் சாமுவேல். ”இத்தகைய பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்துவது தண்டிக்கத்தக்க பெரும் குற்றம். ஆனால் இவ்வாறு சட்டத்தை மீறுவதன் விளைவுகளை அவர்கள் அறியவில்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்” என்கிறார்

ஒரு மனிதரை சாக்கடை அல்லது செப்டிக் டேங்குகளில் கழிவகற்றும் பணிகளில் ஈடுபடுத்துகையில் அவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், ஒருவர் சுத்தம் செய்கையில் அவருக்கு உதவியாக கூடுதலாக 3 பேர், இதய செயல்பாட்டை தூண்டுவதற்கான கருவி, உடனிருப்பவரில் ஒருவருக்காவது முதலுதவி கொடுப்பது குறித்து தெரிந்திருக்க வேண்டும். இவையனைத்தும் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள். ஆனால் சமீபத்தில் நிகழ்ந்த மரணங்கள் குறித்த ஆரம்பகட்ட விசாரணையில், இவை எதுவும் பின்பற்றப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

“இந்த சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் இது இத்தொழிலாளர்களை இத்தொழிலிலிருந்து வெளியில் கொண்டுவர ஏற்படுத்தப்பட்டது. தொழிலாளர்கள் இறந்த பிறகு அவர்களுக்கு வெறுமனே இழப்பீடு தருவதைவிட அவர்களது மரணத்தைத் தடுப்பதற்கான, அவர்களை இந்நிலையிலிருந்து வெளியே கொண்டுவருவதறகான வேலைகளைச் செய்ய வேண்டும்” என்கிறார் சாமுவேல்.

வினவு செய்திப் பிரிவு
கட்டுரையாளர்  : மேகா காவிரி
தமிழாக்கம்  : நந்தன்

நன்றி  : தி நியூஸ் மினிட்

 

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க