டந்த 2017 -ம் ஆண்டு  தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில் 2018-ம் ஆண்டுக்குள் தொழு நோயை முற்றிலுமாக ஒழித்துவிடுவோம் என மத்திய அரசாங்கம் அறிவித்தது. ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆன பின்பும் இலக்கை அடையவில்லை

கண்கூடாக காணக்கூடிய உருமாறுதலை ஏற்படுத்தும் தொழுநோயை இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒழித்துவிடுவோம்  என மத்திய அரசின் 2019-ம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை இயக்குனர் ஜெனரல் அனில் குமார் இதுகுறித்து கூறுகையில், “கண்கூடாக காணக்கூடிய உருமாறுதலை ஏற்படுத்தும் தொழுநோயை 2020-ம்  ஆண்டுக்குள் ஒழிக்க உலக சுகாதார நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. ஆனால் நாம் அதற்கு முன்னதாகவே அக்டோபர் 2, 2019-க்குள் அந்த இலக்கை அடைந்துவிடுவோம். தொழுநோயை முற்றிலுமாக ஒழித்து விடுவோம்” என்றார்.

தொழுநோயை முற்றிலுமாக ஒழித்தல் என்பது 10 இலட்சத்திற்கு ஒருவருக்கு மட்டுமே தொழுநோய் இருப்பது எனும் நிலையையே குறிக்கும். கண்கூடாக காணக்கூடிய உருமாறுதல்களை ஏற்படுத்தும் தொழுநோயை, “இரண்டாம் கட்ட முடக்கு நிலை” என குறிப்பிடுகின்றனர்.

கடந்த ஜனவரி 25, 2019-ல் தான் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் உலக அளவிலான  தொழு நோயாளிகளின் எண்ணிக்கை 2 லட்சம் என்றும், அதில் பாதிக்கும் மேலானோர் இந்தியாவிலும் இருக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறது. இதுவும், 2018-ம் ஆண்டு இலக்கை எட்டமுடியாமல் போனதும் பொது சுகாதார பார்வையாளர்களின் அக்கறைக்குரிய பிரச்சினையாகும். ஒரு வேளை இந்தியா தனது இலக்கை எட்ட முடியவில்லை எனில், அது உலக அளவிலான தொழுநோயாளிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்திருக்கும்.

படிக்க:
♦ கோமாதா குண்டர்களால் இறைச்சி – தோல் ஏற்றுமதி கடும் சரிவு ! ஊரகப் பொருளாதாரம் வீழ்ச்சி !
♦ சரஸ்வதி மாமியை மனித மதத்திற்கு மாற்றிய ஹாஜீரா பீவி ! அவசியம் படிக்க !

தொழுநோய் பாதிப்பின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, இந்த நோய் வெளியே தெரிவதற்கு மிக அதிகமான காலம் ஆகும் என்பதுதான். சராசரியாக ஆறு ஆண்டுகள் கழித்துதான் இந்த நோய் வெளியே இருப்பதற்கான அறிகுறி தெரியவரும். இணை இயக்குனர் ஜெனரல் குமார் இது குறித்து கூறுகையில், “நாங்கள் இந்த நோயை கண்டுபிடிப்பதற்காக சிறப்பான வகையில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறோம். இதன் காரணமாக நாங்கள் தொடர்ந்து பல்வேறு புதிய பாதிப்புகளை கண்டுபிடிக்க முடிகிறது. ஏனெனில் தொழுநோய் ஒரு நபருக்குள் பல ஆண்டுகள் மறைந்திருக்கக் கூடியது” என்றார். தொழு நோய் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்குவதையும், பாரபட்சம் பார்ப்பதையும் முடிவுக்கு கொண்டு வருவதற்காக சாசகவா இந்தியா தொழுநோய் அறக்கட்டளையால் நடத்தப்பட்ட ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது இவ்வாறு கூறினார்

இந்தியாவில் தொழுநோய் தாக்குதல் குறித்த புள்ளி விவரங்கள் ஏற்றத் தாழ்வோடு இருக்கின்றன.

கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் புற்றுநோயின் தாக்கம் மற்றும் அதன் அறிகுறிகளைக் கண்டுபிடிப்பது தேக்கத்தில் இருந்தது. 2016-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் புதியதாக சுமார் 35 ஆயிரம் தொழு நோய் பாதிப்புகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இது ஊக்கம் அளிக்க கூடியதாக இருக்கலாம். ஆனால் நாம் கவலைப்பட வேண்டியது என்னவெனில், கண்கூடாக பார்க்கக்கூடிய உருமாறுதல் ஏற்பட்ட தொழு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுதான்.  ஒவ்வொரு ஆண்டும் இது அதிகரித்துவருகிறது. இதனடிப்படையில் பார்க்கையில் இன்னும் வெளித்தெரியாத நிலையில் இருக்கும் தொழுநோய் பாதிப்பும்அதிகமாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

படிக்க:
♦ வல்லரசு இந்தியாவின் சாதனை : உலகளவில் புதிய தொழு நோயாளிகளில் 60% இந்தியர்கள் !
♦ செங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன்பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா ?

தொழுநோய் பாதிப்பு வெளிப்படுவதற்கு முன்னர் அதன் அதிகமான அடைகாப்புக்காலம் காரணமாக பல நோய் தாக்குதல்கள் வெளியில் தெரியாமலேயே இருக்கின்றன. மேலும் நோய்த் தாக்குதலின் எண்ணிக்கை திடீரென அதிகமாகவோ குறைவாகவோ மாறாது. முடக்கநிலை ஏற்படுவதைத் தவிர்க்கவும், தொழுநோய் பரவுவதைத் தடுக்கவும், இந்நோயை விரைவாக கண்டுபிடிப்பது முக்கியானது. ஏனெனில் முடக்கநிலை என்பது இந்நோய்த் தாக்குதலின் மிகத் தீவிரமான விளைவாகும்.

இதுகுறித்து குமார் கூறுகையில், “உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ள இலக்கான 2020-ம் ஆண்டு என்பது மிகவும் நெருக்கமானது. பெரும்பாலான நாடுகள் இந்த இலக்கை அடைய முடியாமல் போகலாம். ஆனால் நாம் அந்த இலக்கை கண்டிப்பாக அடைந்துவிடுவோம். அதில் உறுதியாக இருக்கிறேன்” என்கிறார்.

எதிர்வரும் 2020-ம் ஆண்டுக்குள் அனைத்து நாடுகளும் தொழுநோயின்  இரண்டாம் கட்ட முடக்கு நிலையை ஒழித்து, தொழு நோய் பாதிப்பை 10 லட்சத்திற்கு ஒருவர் என்ற அளவுக்கு குறைக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எதிர்பார்க்கிறது. இந்தியாவில் தற்போது இது 10 லட்சத்திற்கு 2.4 என்ற அளவில் இருக்கிறது. இதுகுறித்து குமார் கூறுகையில், “நாம் செயலூக்கமான பரப்புரையை 2016-ல் துவக்கும்போது இந்த அளவு 10 லட்சத்திற்கு 4.5 என்ற அளவில் இருந்தது. இதன் அடிப்படையில் பார்க்கையில் நாம் இரண்டு ஆண்டுக்குள் பிரச்சினையை சரி பாதியாக குறைத்திருக்கிறோம்.” என்றார்

ஆதார் அட்டை இல்லாத காரணத்தினால், தொழு நோயால் பாதிப்படைந்தவர்களுக்கு அரசாங்கத்தின் பல்வேறு நலத்திட்டங்கள், மறுக்கப்படுகின்றன என்பதை கடந்த ஆண்டு தி வயர் இணையதளம் அம்பலப்படுத்தியது. ஆதார் அட்டையை பொருத்தவரையில் அதற்கு கைரேகையும், கருவிழி பதிவும் அவசியமாக இருக்கிறது. தொழு நோய், நோயாளிகளின் கைகளை பாதித்துவிடுவதால், இத்தகைய உடல்கூறு தகவல்களை ஆதார் அட்டைக்காக கொடுக்க அவர்களுக்கு சாத்தியம் இல்லை. ஆகவே அவர்களால் ஆதார் அட்டை பெற முடிவதில்லை.

இந்தியாவில் பல்வேறு சுகாதார திட்டங்கள், நோயாளிகளுக்கான நலத்திட்டங்களை ஆதார் எண்ணோடு இணைக்க துவங்கிவிட்டன. உதாரணத்திற்கு காசநோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரூ. 500 நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அப்பணம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து குமார் கூறுகையில், “தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களது உரிமைகள் மறுக்கப்படுவது இல்லை.” என்றார். மேலும், “தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் நாங்கள் இந்த சேவையை வழங்கி வருகிறோம் அவர்கள் ஆதார் அட்டை வைத்து இருக்கிறார்களா இல்லையா என்பது ஒரு பொருட்டில்லை. ஒவ்வொருவரும் இந்த சேவையை பெற்று வருகின்றனர்” என்றார்.

தொழுநோய் குணப்படுத்தக் கூடியதே எனினும், இந்நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் மீது பாரபட்சம் காட்டுவதும் அவர்கள் புறக்கணிக்கப்படுவதும் இன்னமும் நீடிக்கிறது. கடந்த ஜனவரி மாதத் தொடக்கத்தில் பாராளுமன்றம், இந்திய தனிநபர் திருமணச் சட்டத்தில் ஒரு திருத்தத்தை மேற்கொண்டது. அதன்படி விவாகரத்து பெறுவதற்கு தொழுநோயை ஒரு காரணமாக சொல்லலாம் என்ற விதியை ரத்து செய்து, சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

கவனம் கொடுக்கப்படாத வெப்ப மண்டல நோயாகவே தொழுநோய் கருதப்படுகிறது. இந்தியாவில் காசநோய் மற்றும் மலேரியாவிற்கு ஒதுக்கப்படும் ஆராய்ச்சி நிதி மற்றும் சிறப்புக் கவனமும் தொழுநோய்க்கு கொடுக்கப்படுவதில்லை. காசநோய் குறித்த ஆய்வுக்கு ரூ.147 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள சூழலில், தொழுநோய் குறித்த ஆய்வுக்கு வெறுமனே ரூ.39 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. உலக அளவிலும் கூட தொழுநோய் குறித்த ஆய்வுக்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டுள்ளது. உலக அளவில், தொழுநோய்க்கான ஆய்வு நிதி குறைக்கப்பட்டு வருகையில், கடந்த 2017-ம் ஆண்டு இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் முன்னெப்போதையும் விட மிக அதிகமான நிதியை ஒதுக்கி உள்ளதாக சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது

நோயை ஒழிப்பது குறித்த இந்தியாவின் இலக்குகள் எப்போதும் உயர்ந்ததாகவே இருக்கின்றன. தொழுநோயை ஒழிப்பதற்கு உலக சுகாதார நிறுவனம் 2020-ம் ஆண்டு இலக்கு வைக்கையில், அதற்கு முன்னதாகவே ஒழித்துவிட இலக்கு வைத்துள்ளது இந்தியா. அதே போல, காச நோயை ஒழிக்க உலக சுகாதார நி்றுவனம் 2030-ம் ஆண்டு இலக்கு வைத்திருக்கையில், வரும் 2025-ம் ஆண்டிலேயே  ஒழித்துவிட இலக்கு வைத்திருக்கிறது இந்தியா. ஆனால்,  உலகம் முழுவதும் புதியதாக பீடித்திருக்கும், ஒரு கோடியே நாலு லட்சம் காச நோய் தாக்குதல்களில் சுமார் 27% இந்தியாவில் நிகழ்கின்றன என்பதுதான் நிலைமை.

வினவு செய்திப் பிரிவு
கட்டுரையாளர்     : அனு பூயன்
தமிழாக்கம்        : நந்தன்
செய்தி ஆதாரம் : தி வயர் 

2 மறுமொழிகள்

 1. தொழுநோயைவிட கொடுமையானது, அவர்களை இந்த சமூகம் புறக்கணிப்பது. இதுநாள் வரை இந்திய சட்டத்திலேயே தொழுநோய் இருப்பவர்களுக்கு சொத்தில் பங்கில்லை. நோயுள்ளவரை விவாகரத்தும் செய்துவிடலாம் என்பதே இதற்கு சாட்சி. தற்போது சட்டத்தை அவர்களது கண்ணீர் மாற்றியுள்ளது.

  அறிவியல்பூர்வமாக நோய்க்கான கிருமி (லிப்ரே) என்று நிறுவப்பட்டாலும், இந்து மத பார்பனியம் முன் ஜென்ம பாவம் என்று அவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்க வைத்துள்ளது

  கருப்பு பணத்தையே பிஜேபியால ஒழிக்க முடியல. இதுல தொழுநோயை இவர்கள் ஒழிப்பார்களா? தொழுநோயாளிகள வேணுனா ஒழிப்பார்கள்.

  இந்தியாவின் சட்ட ஆணையம் அதன் சமீபத்திய அறிக்கையில், தொழுநோய் நோயாளிகள் தங்கள் கிராமங்களில் நில உரிமைகள் வழங்கப்பட வேண்டும் மற்றும் பல்வேறு தனிப்பட்ட சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும்.

  உடல்நல பராமரிப்பு, போதுமான வீடு, கல்வி, வேலைவாய்ப்பு அத்தகைய அடிப்படை வசதிகள் ஆகியவற்றை அணுகுவது போன்ற நடவடிக்கைகளை கமிஷன் பரிந்துரைக்கிறது.

  ஆனால்,2007 ஆம் ஆண்டு (ஐ.சி.ஆர்.சி.ஆர்பிடி) ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கையொப்பமிட்டு ஒப்படைத்த பின்னர், பழைய தொழுநோய் சட்டங்களை மாற்றவோ அல்லது நீக்கவோ இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை அல்லது தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எதிரான பாகுபாட்டை அகற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அதே அறிக்கை கூறுகிறது.

  உண்மை இப்படியிருக்கும் போது, தொழுநோயை ஒழிப்போம் என்று ஆண்டுத்தோறும் தொழுநோய் எதிர்ப்பு வாரத்தில் வெற்று விளம்பரமே நடக்கிறது. ஒதுக்கும் சொற்ப பட்ஜெட்டும் இதற்கு அழிக்கிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க