ந்துத்துவ காவிகளின் தேசபக்தி இத்தனை சீக்கிரம் வெளுக்கும் என பொதுமக்கள் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள். தனது அரசின் அஜாக்கிரதையால் 44 வீரர்கள் உயிர் போயிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறது மோடி அரசு.

வீராவேசத்துடன் காஷ்மீர் பள்ளத்தாக்கில் யாரும் இல்லாத இடத்தில் குண்டுகளை வீசிவிட்டு 400 பேரை கொன்றுவிட்டோம் என தனது பரிவாரங்களைக் கொண்டு பொய்களை கிளப்பிவிட்டது. சொன்ன 24 மணி நேரத்துக்குள் அதுவும் பொய் என நிரூபணமாகிவிட்டநிலையில், பாகிஸ்தானுடன் ‘போர்’ புரிய இரண்டு விமானங்களை அனுப்பியது. அதில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் திரும்பிவந்ததாகவும் இரண்டு விதமான தகவல்கள் வந்துகொண்டிருக்கிருக்கும்போது, மற்றொரு வீரரை பாகிஸ்தான் சிறை பிடித்தது.

மோடியின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 அட்டர் ஃபிளாப் ஆகிவிட்டது. ஆனால், இது தேர்தல் காலம் ஆயிற்றே… உள்ளூர் தமிழிசை, பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்த எடியூரப்பா முதல் அமித் ஷா-மோடி போன்ற பாஜக பெருந்தலைகள் வரை, நடக்காத சர்ஜிக்கல் ஸ்டிரைக்குக்கு இந்தியர்களிடன் வாக்கு கேட்க ஆரம்பித்துள்ளனர்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை “உயிரிழந்த 40 வீரர்களுக்காக தமிழகம் – புதுவையிலுள்ள  40 தொகுதிகளில் பாஜக-வினருக்கு வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும்” என்றார்.

படிக்க:
போர் ஆயுதத் தரகர்களுக்கானது ! புல்வாமா தீவிரவாத தாக்குதலை கண்டிக்கும் பாகிஸ்தான் இளைஞர்கள் !
♦ அர்னாப் – மாலனை பாகிஸ்தானுடன் போருக்கு அனுப்புங்கள் : சமூக ஊடகங்களில் மக்கள் கோரிக்கை !

முதலமைச்சராக இருந்தபோதே  ஊழல் வழக்கில் சிறை சென்று வரலாறு படைத்த கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா, அம்மாநிலத்தில் உள்ள 28 தொகுதியில் 22-ல் தங்களை மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் என பேசியிருக்கிறார்.

“நேற்று பாகிஸ்தான் பகுதிக்குள் சென்று மூன்று தீவிரவாத முகாம்களை அழித்துவிட்டோம். இது மோடி அலையை நாட்டில் உருவாக்கிவிட்டது. இந்த அலையை மக்களவை தேர்தலில் பார்க்கலாம். பாஜகவுக்கு 22 தொகுதிகளில் இதனால் வெற்றி கிடைக்கும்” என செய்தியாளர்களிடம் பேசும்போது பெருமிதமாக தெரிவித்திருக்கிறார் எடியூரப்பா.

“40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக மோடி தைரியமாக பாகிஸ்தானுக்கு பாடம் நடத்தியிருக்கிறார். ஒவ்வொரு சொட்டு ரத்ததுக்கும் பழிவாங்குவேன் என சொன்னதைப் போல செய்துவிட்டார். இதை எதிர்க்கட்சிகள்கூட வரவேற்கின்றன” என்றார்.  மோடியின் ‘தைரியமான’ செயல் ஆளில்லா இடத்தில் குண்டு போட்டதுதான் என்பது அதே மக்களுக்கு தெரிந்துவிட்டது என்பதை ஊழல் நாயகன் எடியூரப்பா கவனமாக தவிர்க்கிறார்.

பாஜக-வின் பிக் பாஸ் அமித் ஷா, உத்தர பிரதேசத்தின் காசியபூரில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ‘தீவிரவாதத்துக்கு எங்களைத் தவிர யார் முடிவு கட்டுவார்?’ என வீர உரையாற்றினார்.

“விமானப்படை தாக்குதல் மூலம் நாட்டை பாதுகாக்கும் பொருட்டு எந்த எல்லையுக்கும் செல்லத் தயார் என்பதை உலகத்துக்கு அறிவித்துள்ளோம்” என்றவர், “இந்தியாவின் வெற்றிகரமான சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் விமான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க நினைத்தால் பாகிஸ்தான் ஒரு முறைக்கு பத்து முறை யோசிக்க வேண்டும்” என்றும் பேசினார்.

இன்று பாஜக பூத் ஏஜெண்டுகளுடன் வீடியோ கான்பிரன்சிங்கில் பேசிய மோடி, ‘நாம் ஒன்றாக இணைந்து, போரிடுவோம்.. வாழும் பணிசெய்வோம்.. வெல்வோம்!’ என உணர்ச்சி பொங்க பேசினார். ஒரு பிரதமர் என்ற வகையில் இந்திய விமானப்படை தாக்குதல் குறித்த வதந்திகள், சர்ச்சைகள் குறித்து விளக்கம் அளிக்க துப்பில்லாமல், தேர்தல் பரப்புரை கூட்டத்தில் அமர்ந்துகொண்டு நாங்கள் ஒன்றாக  இணைந்து நிற்போம் என்கிறார் மோடி.

பிரதமர் பதவிக்குள்ள குறைந்தபட்ச மாண்பைக்கூட தர இயலாத நிலையில்தான் இந்துத்துவ கூட்டம் உள்ளது. ஐந்தாண்டுகால தோல்வியை போர் வெறி கூச்சலில் வென்றுவிடலாம் என திட்டமிடுகிறது பாஜக கும்பல். மக்களை மழுங்கடிக்கும் இவர்களுடைய தேச பக்தி கூச்சலை மக்கள் முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும்.

வினவு செய்திப் பிரிவு
தமிழாக்கம்: அனிதா

நன்றி:  நியூஸ் 18த வயர் 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க