இலங்கையில் சர்வதேச மகளிர் தினம் !

னைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகப் பெண்களே அணிதிரள்வீர் !

ஏற்பாடு :
பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பு
சமூக மேம்பாட்டுக் கழகம்
சமூக மேம்பாட்டு இணையம்

பொதுக்கூட்டம்:
இடம்: கவிஞர் முருகையன் கேட்போர் கூடம்,
தேசிய கலை இலக்கியப் பேரவை,
இல. 62, கே.கே.எஸ். வீதி,
கொக்குவில் சந்தி.

காலம்: 10-03-2019 பிற்பகல் 3:30 மணி

மலையகத்தில் :
இடம் : ஹட்டன் நகர சபை மண்டபம்
காலம் : 09-03-2019 சனிக்கிழமை காலை 09.30 மணி

சர்வதேச மகளிர் தினம்…

ண்டுதோறும் மார்ச் 8, சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகின்றது. 1975-ம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகள் சபை இந்த தினத்தை சர்வதேச பெண்கள் தினமாக அறிவிருத்திருந்த போதும், இந்நாளின் வரலாறு 1917-ம் ஆண்டு சுமார் இரண்டு லட்சம் ரஷ்யப் பெண்கள், ஜார் மன்னரின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த நிகழ்வை நினைவுகூரும் நாளாகும். ஜார் ஆட்சிக்காலத்தில் முதலாம் உலகப்போரின் விளைவாக , பல்லாயிரக்கணக்கான ரஷ்ய ஆண்கள் மடிந்தனர்; காணாமல் ஆக்கப்பட்டனர்; பஞ்சம் தலைவிரித்தாடியது; இதனால் தமது கணவனை போருக்கு பலிகொடுத்துவிட்டு குழந்தைகள் பசியில் வாடுவதை பொறுக்க முடியாத பெண்கள், “ரொட்டிக்காகவும், போருக்கு எதிராகவும்” என்ற தொனிப் பொருளை மையமாகக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பெண்கள் எழுச்சியின் தொடர்ச்சியாகவே மாபெரும் ரஷ்ய அக்டோபர் புரட்சி ஏற்பட்டது. அதற்கு நன்றிகூறும் விதமாக, லெனின் தலைமையிலான சோவியத் அரசு மார்ச் 8-ம் திகதியை மகளிர் தினமாக அறிவித்து ரஷ்யப் பெண்களை கெளரவித்தது.

சோவியத் ஆட்சி
சோவியத்தில் ஆட்சி அதிகாரத்தில் அனைவருக்கும் வாய்ப்பு

இன்று பெண்கள் அனுபவிக்கும் மகப்பேற்று விடுமுறை, பாலூட்டும் தாய்மாருக்கான நேரச்சலுகை உட்பட பல்வேறு உரிமைகள் ரஷ்ய சோஷலிச புரட்சி எமக்கு பெற்றுத் தந்த உரிமைகளாகும்.

ஆனாலும், தமது பல்வேறு உரிமைகளுக்காக உலகெங்கிலுமுள்ள பல்வேறு நாடுகளிலும் பெண்கள் இன்றும் போராடிக் கொண்டிருக்கின்றனர். இலங்கையில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமது நாள் சம்பளம் ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் பல மாதங்களாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர்; அதே போல யுத்தத்தில் காணமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத் தரும்படி போராடிக் கொண்டிருக்கின்றனர்; தமது பூர்வீக வாழ்விடங்களை மீட்டுத் தரும்படி கேப்பாபிளவு, சிலாவத்துறை மக்கள் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்கின்றனர்; புத்தளம் பிரதேசத்தில் கொழும்பு, வெளிநாட்டு திண்மக் கழிவுகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்;

இந்த எல்லா போராட்டங்களிலும் சளைக்காமல் ஓர்மத்துடன் தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பது பெண்களே….

கேரளாவில் தமது உரிமைகளைக் காக்க இலட்சக்கணக்கான பெண்கள் ஒருங்கிணைந்து நடத்திய மனித சங்கிலி

10-லிருந்து 50 வயதுடைய பெண்களையும் ஐயப்பன் கோயில் தரிசனத்திற்காக அனுமதிக்க வேண்டும் என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும் கூட , வழிபாட்டுக்கு சென்ற பெண்களுக்கு ஆணாதிக்க மதவாத சக்திகள் தாக்குதல் நடத்தினர். இதற்கெதிராக, தமது வழிபாட்டு உரிமைக்காக, சுமார் 5 லட்சம் கேரள பெண்கள் திரண்டெழுந்து மனித சங்கிலி போராட்டத்தை நடத்தி தமது உரிமைகளை பெற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்விலிருந்து புலனாவது என்ன?

சட்டங்களில், காகிதங்களில் இருக்கும் பெண்களின் உரிமைகள் நடைமுறைக்கு வர வேண்டுமானால் கூட பெண்கள் போராட வேண்டியிருக்கிறது. பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் வெறும் காகிதங்களில் மட்டுமே இருக்கின்றன.

பல்கலைக்கழக விரிவுரையாளரான போதநாயகி, ஹட்டன் GSM தனியார் வைத்தியசாலை தாதி சாந்தினி உட்பட பல பெண்கள் குடும்ப மற்றும் வேலையிடத்தில் நிகழும் வன்முறைகளால் அத்துமீறல்களால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

குடும்ப உறுப்பினர்களினால்தான் பெண்களுக்கெதிரான அதிக வன்முறைகள் இடம்பெறுகின்றன. அவை முறைப்பாட்டிற்கு கூட வருவதில்லை. பொருளாதார உழைப்பிலும் குடும்ப உழைப்பிலுமாக பெண்கள் இரட்டைச் சுரண்டலுக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதுபற்றி முதலாளித்துவ சட்டங்கள் கண்டுகொள்வதில்லை.

படிக்க:
♦ உழைக்கும் மகளிர் தினம் – சர்வதேச கருத்துப் படங்கள்
♦ புத்தகத்தைப் பார்த்து புதுக்கோலம் போடுவதல்ல மகளிர் தினம் !

அதைப்பற்றி பேசினால் முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் இருப்பிற்கு அச்சுறுத்தலாகும் என்பதால், பெண் விடுதலை என்பதை மேட்டுக்குடி பெண்களின் பார்வையில் அவர்களின் கோரிக்கைகளை மட்டுமே முன்னிறுத்துகின்றனர். உழைக்கும் பெண்களின் கோரிக்கைகள் புறம்தள்ளி விடுகின்றனர்.

உண்மையில் உழைக்கும் பெண்களின் விடுதலை சமூக விடுதலையுடன் இணைந்திருக்கிறது. உழைக்காத பெண்கள் என எவருமே இல்லை; என்ன சில பெண்களிற்கு உழைப்பிற்கான ஊதியம் கிடைக்கிறது, பணப்பெறுமதி இருக்கிறது. பணப்பெறுமதியற்ற குடும்ப உழைப்பில் பெண்களின் ஆயுளும் ஆரோக்கியமும் தேய்ந்து மடிந்து போவதை எவரும் கண்டுகொள்வதில்லை.

1990-களில் வெனிசூலா நாட்டின் இல்லத்தரசிகள் , தமது குடும்ப உழைப்பையும் சமூக உழைப்பாக கருதி தமக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வெற்றி கண்டனர்.

குடும்ப உழைப்பில் 8 மணி நேரம் என்ற நேர வரையறை இல்லை. காலை கண் விழித்ததிலிருந்து உறங்கச் செல்லும்வரை ஓய்வற்ற உழைப்பில் பெண்கள் சலிப்பின்றி உழைப்பது பற்றி எந்த கவலையும் யாருக்கும் இல்லை.

இன்று பெண்கள் பொருளாதார உழைப்பிலும் ஈடுபடுகின்ற போதிலும் குடும்ப உழைப்பு எனும் இரட்டைச் சுமையாலும் அல்லாடுகின்றனர். அதை போல பணியிடங்களில் ஆண்களுக்கு நிகரான சம்பளம் வழங்கப்படாமல் சுரண்டப்படுகின்றனர். பாலியல் வசவுகள் , பாலியல் அத்துமறல்கள் என பணியிடங்களில் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகின்றனர். இவற்றிற்கு எதிர்பபு தெரிவித்து குரல் உயர்த்துபவர்கள் தனிப்பட்ட பழிவாங்கல்கள் மூலம் அச்சுறுத்துகின்றனர். இதற்கு பயந்து பல்வேறு வன்முறைகள் வெளிவருவது கூட இல்லை.

இலங்கையில் யுத்தத்தின் காரணமாக சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தலைமையேற்ற குடும்பங்களில் நிரந்தர வேலை இன்மை, வறுமை காரணமாக பெண்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகியிருக்கின்றனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி நுண்கடன் நிறுவனங்கள் பெண்களை மேலும் சுரண்டுகின்றனர். நுண்கடன் நிறுவனங்களின் அத்துமீறல்களால் பல பெண்கள் தற்கொலையின் விளிம்பிற்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

உழைக்கும் பெண்களே…

உலகெங்கிலுமுள்ள பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு சட்டத்தின் மூலம் பெற்றுக்கொண்ட தீர்வுகள் சொற்பமே…

அவை பெண்களின் ஓர்மமான விடாப்பிடியான போராட்டங்களின் மூலமே பெற்றுக்கொள்ளப்பட்டன. பெண்கள் அமைப்பாவதும் , அவ்வமைப்புக்குள் தமது அனுபவங்களை , துன்பங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் தீர்வுகளை தேட முயற்சிப்பதுமே எமக்கான விடுதலைக்கான திறவுகோலாகும்.

“நீங்கள் நடக்கத் தொடங்கும் வரை உங்கள் கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பது உங்களுக்கே தெரியாது” என்ற ரோசா லக்சம்பர்க் கூற்றின் படி, எமது விடுதலைக்காக எமது கால்கள் நகரும் போதுதான் எம்மைச் சுற்றிலுமுள்ள அடிமைச் சஙகிலிகளை நாம் உணரத் தொடங்குவோம்.

அவ்வாறு உணரத் தொடங்கும் போது எம்மை சரியான திசையில் வழிநடத்த அமைப்பாக்கம் பெறுவதுதான் பெண்களின் இன்றைய அடிப்படைத் தேவையாகும்.
பெண்களை அடக்குமுறைகளின் கட்டுப்பாட்டிற்குள் தனித்தனி தீவாக வைத்திருக்கும் வரை நமக்கு விடுதலை என்பது எட்டாக் கனியே…

படிக்க:
♦ மதத்தின் தடைகளைத் தகர்த்து கால்பந்து விளையாட்டில் சாதிக்கும் ஈரான் பெண்கள்
♦ தாய்மை அடையாளத்தை போருக்கான ஆயுதமாக மாற்றுவோம் ! பெண்கள் உரைகள் – படங்கள்

திருமணமானபின், தமது உணர்வுகளை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளக் கூட தோழிகளின்றி, மனவுளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் பெண்கள் அநேகம்.
வெளிப்படையாக பேசிக்கொள்ள யாருமின்றி போவது மாபெரும் துன்பம்.
இதைக் களைய பெண்கள் முன்வர வேண்டும். தம்மை அமைப்பாக்கிக் கொண்டு , தமக்கு எதிரான குடும்ப, சமூக, அரச வன்முறைகளை இனம்கண்டு களைய, போராட அணிதிரள வேண்டும்.

பெண் விடுதலைச் சிந்தனைகள் அமைப்பானது பெண்கள் மீதான அனைத்து வன்முறைகளுக்கும் எதிராக அமைப்பாக்கம் பெற்றுப் போராட, உங்களை அறைகூவி அழைக்கிறது.

“சும்மா கிடைக்க சுதந்திரம் என்பது சுக்கா மிளகா கிளியே” என்ற பாரதிதாசனின் கேள்விக்கேற்ப எமக்கான விடுதலையை நாம் சும்மா பெற்றுவிட முடியாது.

இதுவரை பெறப்பட்ட அனைத்து உரிமைகளும் யாரோ போராடி எமக்கு வாங்கித் தந்தவைகளே… எமக்கும் எமது அடுத்த சந்ததிக்குமான விடுதலைக்கான போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும்.

அமைப்பாக்கம் பெற்ற போராட்டங்கள் மூலம் போராடுவோம்!
விடுதலைக்கான கதவுகளைத் திறப்போம்!

முகநூலில்:
பெண் விடுதலைச் சிந்தனைகள் அமைப்பு

மோகனதர்ஷினி, ஒருங்கிணைப்பாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க