எது மருத்துவம் ?

வீன மருத்துவம் (Modern Medicine) எப்படி வளர்ந்து வந்திருக்கிறது என்பதை விளக்கும்  இரு படங்கள். முதலாவது படம் 1962-ம் ஆண்டு ஒரு ‘சிறு பிள்ளை வைத்திய’ நிபுணரினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள மருந்துச் சிட்டினது பிரதி.

இரண்டாவது படம் குறை மாதத்தில் அதாவது கருத்தரித்து 26 வாரங்களில் (6 மாத குறைப்பிரசவம்) பிறந்த முதிராச் சிசுவின் பிறந்த நிலைத் தோற்றத்தையும், நான்கு மாதங்கள் பூர்த்தியான இன்றைய தோற்றத்தையும் காட்டி நிற்கின்றது.

இவை இரண்டிற்கும் என்ன சம்பந்தம்  என்று நீங்கள் யோசிப்பது வாஸ்தவம்தான். கடந்த  ஐம்பது ஆண்டுகளில் மருத்துவத்துறை கண்ட வளர்ச்சியின் அளவை இதை விட தெளிவாக கட்டுரையிலும் சொல்ல முடியாது. இற்றைக்கு 10 ஆண்டுகளுக்கு முன் குறை மாதத்தில் அபார்ஸன் ஆகி விட்டது, உயிர் வாழ முடியாதது என்று  குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட அல்லது குழியிலே போடப்பட்ட குழந்தைகள்  எல்லாம் இன்றைய  நவீன மருத்துவ விஞ்ஞானத்தின்  உதவியினால்  நன்றாக பராமரிக்கப்பட்டு கண்ணாடிப் பெட்டியிலிருந்து  (incubator)   நல்ல வளர்ச்சி  அடைந்த குழந்தைகளாக  வெளியேறி வருகின்றன.

நவீன மருத்துவம் கூடாது,  இயற்கை வழி, பாட்டி வழி வைத்தியம் மட்டுமே ஆரோக்கியமானது என்று  நம்பியிருந்திருந்தால் இந்தக் குழந்தையும் இன்று இயற்கை எய்தி, உக்கி நல்ல சேதன உரமாக மாறியிருக்கும். இக் குழந்தையின் தாயும் பிள்ளை  இல்லாத மலடி என்ற வசைச் சொல்லோடு செத்துத் செத்து வாழ்ந்து கொண்டிருப்பாள்.  அது போல நானும்  எனது தந்தை வழி பரம்பரைத் தொழிலான யூனானி வைத்தியத்தையும், அந்த தேன்பாணியையும், அந்த எலுமிச்சை சாற்றையும்  இன்றும் மருந்தாக கொடுத்துக் கொண்டிருந்திருப்பேனோ தெரியாது. (இதைத் தான் அன்றைய சிறு பிள்ளை நிபுணரும் கொடுத்திருக்கிறார். படம் 1-ஐ பார்க்க)

படிக்க:
ஏழைத்தாயின் மகன் # 2 – நீரவ் மோடியின் லண்டன் ‘அகதி’ வாழ்க்கை !
♦ அறிவியல் பார்வையில் ஹோமியோபதி – சித்தா – ஆயர்வேதம் – யுனானி

இன்றைய நவீன மருத்துவமும்  அடிப்படையில் ஆயுர்வேத, யூனானி, அக்குபஞ்சர் போன்ற மற்றைய  எல்லா மருத்துவ முறைகள் போலவும் அதே இயற்கை மருந்துகளான இலை, குழைகளை, மரச்சாறுகளை, தேன் போன்ற பாணிகளை அடிப்படையாக கொண்டவை தான். ஆனால்  கால ஓட்டத்தில் அது மற்றைய எல்லா மருத்துவ முறைகளை விடவும் முன்னணி பெற்றுள்ளமைக்கு இரண்டு அம்சங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஆராய்ச்சியும் தேடலும் (Research and Development) அதோனோடிணைந்த  விஞ்ஞானபூர்வ வைத்திய முறைமைகளும் (Evidence Based Treatment) தான் அந்த முதலாவது முக்கிய அம்சம். இன்றைய  இந்த நவீன மருத்துவத்துவத்துறையை மற்றைய எல்லா மருத்துவ முறைகளை விடவும் மிகப்பெரிய அளவில் முன்னேறியதாக வளர்த்து எடுத்திருக்கின்ற மிக முக்கியமான காரணியும்  இதுவாகத்தான் இருக்கிறது.

இந்த ஒரு இயல்புதான் இந்த மருத்துவத்தின் தனிச்சிறப்பாகவும் காணப்படுகிறது.  இதனால் இந்த மருத்துவத்தில் யாரும் எதையும் கண்டபடி அடித்து விட முடியாது. வாயில் வருவதையும், பேப்பரில் வாசிப்பதையும், பேஸ்புக்கில் வருவதையும் எவரும் மருத்துவம் என்று இங்கே செய்து விட முடியாது. நவீன மருத்துவத்தில் மருந்து  அல்லது மருத்துவம் என்று சொல்லப்படுகின்ற, செய்யப்பட்டுகின்ற ஒவ்வொரு வைத்திய முறைகளும், Treatmentகளும்  கண்டிப்பாக  உரிய  ஆய்வுத் தராதரங்களை கொண்டிருக்க வேண்டும்(Research  Evidence).

அது போலவே அந்த வைத்திய முறை அந்த நோய்களைப் சுகப்படுத்தியதற்கான சான்றுகளையும் நிரூபிக்க வேண்டும்  (Evidence Based). இவை இரண்டையும்  எந்த மருத்துவ முறை கொண்டிருந்தாலும் அதை நவீன மருத்துவம் இரு கரம் நீட்டி வரவேற்கும்,  உச்சி முகர்ந்து ஏற்றுக் கொள்ளும், தலையில் வைத்துக் கொண்டாடும்.

இது கீழைத்தேச நடைமுறை, இது திப்புன் நபவி, இது ரிஷிகளின் வழக்கம்  என்று ஒதுக்கும், வேறுபாடுகள் காட்டும் தன்மை இங்கே கிடையாது. அது போலவே மேற் சொன்ன இரு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யாத  எந்த மருத்துவ முறையும்  இங்கே நிராகரிக்கப்படும், அது மேற்கத்தேய முறையாக இருப்பினும் சரியே. இந்த ஒரு அடிப்படைதான் இந்த மருத்துவத்தின்  வெற்றிக்கான ஆதாரமாக விளங்குகிறது.

உதாரணத்திற்கு சொல்வதானால் “பப்பாளிச் சாறு குடித்தால் டெங்கு சுகப்படும்” என்ற  இந்த ஸோ கால்ட் “மருத்துவ  ஆலோசனை” பட்டி தொட்டியெல்லாம் மிகப்பிரபலமான ஒன்று. இப்பொழுது இது ஏற்றுக் கொள்ளப்படும் மருத்துவ முறைதானா என்பதை சோதித்தறிய மேற்ச்சொன்ன இரு நிபந்தனைகளையும் இது பூர்த்தி செய்கிறதா என்று பார்த்தாலே போதும், உண்மை விளங்கி விடும். இந்த  அடிப்படை அளவு கோலை எந்த மருத்துவமுறையிலும் உரை கல்லாக பாவித்தால் நிறைய மருத்துவம் சார்ந்த போலிகளின் சாயம் வெளுத்துவிடும்.

இன்றைய நவீன மருத்துவத்தின் வெற்றிக்கான இரண்டாவது மிகப் பெரிய அம்சம்  நோய்க்காரணிகளை இனம்கண்டு மருத்துவம் செய்தல். அதற்காக வேண்டி பொறியியல், பௌதீகவியல், இரசாயனவியல், கணிதவியல், தொழில்நுட்பவியல், சமூகவியல் போன்ற இன்னும் பல துறைகளிலும் உள்ள உள்ளீடுகளை, கண்டுபிடிப்புகளை இந்த மருத்துவ துறைக்குள் அனுமதித்து மருத்துவத்தின் ஒரு பகுதியாக  அதை ஏற்றுக்கொண்டிருத்தல். இந்த  இயல்பு மற்றைய மருத்துவ துறைகளில் இல்லாமை தான் இந்த  நவீன மருத்துவத்தின் வியாபித்த வெற்றிக்கு அஸ்திவாரமாக அமைந்திருக்கிறது. இந்தப் பல் துறை உள்ளீடுகள்  நோய் நிலைகளை துல்லியமாக இனம் காணவும், அதனை மிகச் சிறப்பாக தீர்க்கவும் மிகப் பெரும் உதவிகளை செய்து வருகின்றன.

படிக்க:
♦ பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?
♦ பாஜகவின் மத வெறிப் பிரச்சாரத்தில் மண்ணள்ளிப் போட்ட சர்ஃப் எக்செல் விளம்பரம் !

மாற்று மருத்துவங்களான ஆயுர்வேதா, யூனானி, சித்தா, ஹோமியோபதி போன்ற  எல்லாமே ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன் கொடி கட்டிப் பறந்த மருத்துவ முறைகள்தான் என்பதையும் நாம் மறந்து விடலாகாது. உரிய ஆய்வுகள், ஆராய்ச்சிகள், முறையான கற்பித்தல்கள் இல்லாத காரணத்தினால்  இவைகள் வழக்கொழிந்து வருகின்றன என்பது ஏற்றுக் கொண்டே ஆக வேண்டிய உண்மை.

எனினும்  இந்த எல்லா மருத்துவ  முறைகளின் அடிப்படையிலிருந்து வளர்ந்த  இன்றைய நவீன மருத்துவம் அதிலுள்ளவர்களின் விஞ்ஞான பூர்வமான தேடல்களாலும், ஆய்வுகளாலும் இன்னும் இன்னும் வளர்ந்து வருகின்றன ஒரு பேரரசாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்தப் பேரரசுக்குள் சில பண முதலைகளும், மருத்துவ மாஃபியாக்களும் தங்களது வியாபாரத்தை விருத்தி செய்யும் வழி வகைகளைத் தேடி  அலைந்து கொண்டிருக்கின்றன என்ற யதார்த்தத்தையும் நாம்  உணர்ந்து செயல்பட வேண்டியிருக்கிறது  என்பதுதான், இதன் மற்றைய பக்கத்தில் உள்ள கசப்பான உண்மையாக இருக்கிறது.

மருத்துவர் பி.எம். அர்சத் அகமத் MBBS(RUH) MD PEAD (COL)
Senior Registrar in Peadiatrics, 
Lady Ridgeway Hospital for Children
Colombo, Srilanka