நெல்லையில கந்துவட்டி கொடும தாங்க முடியாம கலெக்ட்ரு ஆபீசு முன்னாடியே தீயில கருகின இசக்கிமுத்து குடும்பத்த அம்புட்டு சீக்கிரம் நம்மாள மறந்துட முடயாது. குடிச்ச பாலு கொடும்புல (வாயில்) இருக்க அந்த பிஞ்சு… உசுரு பிரிஞ்ச கோரத்த இன்னைக்கி நெனச்சாலும் மனசு திக்குனுருக்கு.

அதே ஊரு (திருநெல்வேலி), அதே கந்துவட்டி, அதே நெருப்பு வேற.. வேற காரணத்துக்காக முத்துமாரிங்கற பொண்ணையும் சுட்டுருக்கு.

பாதையோரமா கருப்படி விக்கிற பொண்ணு முத்துமாரி. தீயில வெந்து ஒடம்பு பூறா கருப்பாவும், கழுத்து நரம்பு அத்தனையும் தொண்டைக்கும் நெஞ்சுக்குமா அறுந்து தெரிச்சிற்றாப் போல இழுத்துகிட்டு நிக்கும்.

அந்த பொண்ண தாண்டி போரப்ப வாரப்பல்லாம் பேசனுமுன்னு தோனும். அன்னைக்கி அதுக்கு தோதான நேரம் அமஞ்சது. தாழ்பா கொண்டி இல்லாத மாநகராட்சி கழிப்பிடத்துகு உள்ள போயிவர, நாங்க ரெண்டேரும் ஒருத்தருக்கு ஒருத்தரு வெளிய காவலுக்கு நின்னதால நெருக்கமானோம்.

“பொண்ணுக்கு பொண்ணு பொறாமெப்படனும் அம்புட்டு அழகாருப்பேன். இன்னைக்கி அப்புடி நான் சொன்னா நம்புவீங்களா நீங்க.?”

கண்டிப்பா. உங்க உருவம் உருகொலைய காரணமாருந்த ஊரும்.. ஒறவுந்தாங்க அசிங்கம். ஒழச்சு பொழைக்கிற நீங்க என்னைக்கிமே அழகுதான்.”

“அடுத்த மொற நீங்க வா..ர்ரப்ப என்னோட பழய போட்டவ காட்றேன் பாருங்க ஆச்சர்ய படுவீங்க. அது ஒரு காலம்!… தாமரபரணி ஆத்துல ஆட்டம் போட்டுட்டு, ஊரச்சுத்தி வெளையாண்டு திரிஞ்சுட்டு, படிப்பு மண்டையில ஏறாம, பள்ளிக்கூட வாத்தியாருட்ட அடிய வாங்கிட்டு பெயிலாப் போன அந்த பதினாரு வயசோட போச்சு அழகெல்லாம்.

பருவம் வந்த பெறவு..தான் அழகப்பத்துன நெனப்பு, ஆசை எல்லாம் பொம்பளைக்கி வரும். பதினாரு வயசுல வயசுக்கு வந்து பதினேழு வயசுல கல்யாணம் முடிச்சு பதினெட்டு வயசுல இப்படி கரிக்கட்டையா பொசுங்கிட்டேன். அல்ப ஆயிசுல பொட்டுன்னு போறாப்போல பருவா வயசுலேயே அழகு அலங்கோலமா ஆயிடுச்சு.”

பிரச்சனை இல்லாத பொம்பள பொழப்பு ஏது? அதுக்கோசரம் தற்கொலை பன்னிக்க நெனைக்கலாமா நீங்க?”

“தற்கொலையா? இப்புடி இருக்கையிலயும் இழுத்து போத்திகிட்டு யாவாரம் பாக்குறே என்ன போயி இப்புடி கேட்டுபுட்டிங்க. அந்தமாதிரி கோழ கெடையாது நானு. சொந்த மாமா பையனுக்கு தான் கட்டிக்குடுத்தாங்க. அவனுக்கு வேற பொண்ணு மேல ஆசை. அதுக்கு எடஞ்சலா இருப்பேன்னு நெனச்சானொ என்னவோ தூங்கின எம்மேல மன்னெண்ணைய ஊத்தி கொளுத்திட்டான்.

சொந்தத்துல குடுத்தா பொண்ணு சொகுசா வாழுன்னு எங்க அம்மா நெனச்சுச்சு. எங்க அம்மா ஆசையெல்லாம் மொதலுக்கே மோசமா போச்சு. வீட்டுக்கு ஒரே பொண்ணு நானு எங்க அம்மா அண்ணனுங்க எல்லாம் உயிர கொடுத்து என்ன காப்பாத்துனாங்க.

படிக்க:
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?
♦ பாரதி : ஒரு அபலையின் கதை! – சந்தனமுல்லை

அவன் மேல போலீசு கம்ளேண்டு கொடுக்க சொல்லி ஊருக்குள்ள பல பேரு சொன்னாங்க. அவனோட அக்கா இன்ஸ்பெக்டரு, இன்னொரக்கா டீச்சரு, அண்ணனுக்கு ஆஸ்பத்திரியில வேலை எல்லாருமே அரசாங்கத்து உத்தியோகம் நமக்கு ஞாயம் கெடைக்கிமா சொல்லுங்க. மேக்கொண்டு செலவு செய்யிற அளவுக்கு தெம்பும் கொடையாது. ஆண்டவனே நீ கேளுன்னு சொல்லிட்டு வந்துட்டோம்”

திருநெல்வேலியில இருந்து சென்னைக்கி எப்படி வந்தீங்க?”

“ரயில்லதான்” பழைய ஜோக்குதான் ஆனா அத சொல்லிட்டு அழகா சிரிச்சது அந்த பொண்ணு.

அட போங்க! சொல்லுங்கன்னா கலாய்க்கிறீங்க

“அண்ண..ங்களுக்கு கல்யாணம் ஆனதும் நானும் அம்மாவும் தனியாதான் இருந்தோம். நாலு லட்சம் பொறுமானம் உள்ள வீடு இருந்துச்சு. தெனசரி வருமானத்துக்கு ஒரு எடத்துல வேலைக்கி போனேன். எந்த பிரச்சனையும் இல்லாம அப்போதைக்கி நல்லபடியா போயிட்டு இருந்துச்சு.

எங்க சாதிய (தேவர்) சேந்த பொண்ணு ஒருத்தி வட்டிக்கி கடன் வாங்குனா. அதுக்கு சாட்சி கையழுத்து போட்டேன். வாங்குன கடனுக்கு ஒரு வருசம் போல வட்டி கட்டிட்டுருந்தவ திடீர்னு காதலிச்ச பையனோட ஓடிட்டா. அவ காதல் கீதல்னு நெனப்புல இருந்தான்னு நம்பளுக்கு தெரியாது.

எங்க சாதியில காதலிச்சாலே ஆவாது… இதுல சாதிமாறி காதலிச்சா ஏத்துப்பாங்கலா. பயந்து போயி கண்ணுக்கு எட்டாத தூரமா ஓடிட்டா. அந்த பொண்ண பெத்தவங்களும் தேடுனாங்க, நாங்களும் தேடுனோம் இப்ப வர எங்க இருக்கான்னே தெரியல.

நீதான் வெத்து பேப்பர்ல கையெழுத்து போட்டுருக்க பணத்துக்கு நீதான் பெருப்புன்னு கடன குடுத்தவ..ன் வாசல்ல வந்து நின்னுட்டான். வட்டிகடன்னு தெரியும் கந்துவட்டின்னு தெரியாது. ஏதோ ரெண்டு போப்பர்ல கையழுத்து போட்டதால பெரும் பிரச்சனையா போச்சு. எங்களால எதுத்து நிக்க முடியல. வீட்ட வித்து, நகைய வித்து, தெரிஞ்சவங்க கிட்ட கடன வாங்கி கந்துவட்டிய குடுத்து முடிச்சோம். வாங்குனது அம்பதாயிரம் வட்டியும் மொதலுமா அவனுக்கு நாங்க தெண்ட..ம் அழுதது ஆறு லட்சம்.

கல்யாணமும் இந்த கதியாச்சு. இருந்த வீடும் போச்சு. இனிமே இந்த பொட்டபுள்ள எங்குட்டு போவாலோன்னு நெனச்சு நெனச்சு அழுது அம்மாவுக்கு பிரம்ம புடுச்சு போச்சு. வீட வித்த அன்னியிலேருந்து 46 நாளு சாப்புடாம கெடந்து உயிர விட்டுடுச்சு.

என்ன செய்றது ஏது செய்றதுன்னு ஒன்னும் புரியல. கண்ண தொறந்தாலே பயமாருந்துச்சு. நமக்கு கீழ எத்தனையோ கோடி பேத்துக்கு இந்த கதி அதுக்குன்னு சொனங்கி படுத்துட கூடாதுன்னு தைரியத்த கூட்டிகிட்டேன்.  கல்யாணம்… நெருப்பு… கடனு… அம்மா… எல்லாத்தயும் ஒரு பக்கம் ஒதுக்கி வச்சுட்டு அண்ணெங் குடும்பத்தோட சேந்து சென்னைக்கி வந்துட்டோம்.”

அடுக்கடுக்கா எப்புடிதான் இத்தன வலிய தாங்கினியலோ. எத்தனையோ எடஞ்சலுக்கு மத்தியில மனசு உறுதியா வாழ்ற ஒங்களப்போயி தற்கொல அப்புடி இப்புடி சொல்லிப்புட்டேனே!.. ப்ச்..”

“நான் விக்கிற கருப்பட்டிதாங்க நாக்குல எச்சி ஊறும் இனிப்பு. எங்கதயோ.. மொகம் சுழிக்கிற கசப்பு. அதுக்கு நீங்க என்ன பண்ண முடியும்.”

படிக்க:
♦ தேன் மிட்டாய் போல இனிக்காது எங்கள் வாழ்க்கை !
♦ பிள்ளைய பெத்துட்டு வாழ்க்கைய வெறுத்து ஓட முடியுமா ?

எனக்கு கூறே கெடையாது திரும்பவும் அதையே நெனவுபடுத்துறெ.. பாருங்க. பொறவு அங்கன ஊருக்குல்லேயே இருந்தா அதே நெனப்பு வருமுன்னு இங்க சென்னைக்கி வந்தியலா

“எடத்த மாத்துனா நெனப்பு போயிருமா என்னா? பொழப்ப தேடிதாங்க இங்க கூடி வந்தோம்.

பெரியம்மா பையங்க இங்கனக்குள்ள கருப்பட்டி யாவாரம் பாத்தாங்க. அவங்க கூட நாங்களும் சேந்துகிட்டோம். அண்ணெ.. மாசத்துக்கு ஒருக்கா திருந..வேலி போயி கருப்பட்டி காச்சுர எடத்துல தேவையான கருப்பட்டிய எடுத்துட்டு வந்துருவாரு. அதெ பிரிச்சு எடுத்து ஆளுக்கொரு பக்கமா நாங்க யாவாரம் பாத்துப்போம்.

ஒரு வீட வாடகைக்கி எடுத்து எட்டு பேரு தங்கியிருக்கோம். வருமானம் தனி. வாடக.. சமையலு.. சாப்பாட்டு செலவு.. எல்லாம் பொதுவுல. சேந்துருக்கதால செலவு கம்மி. பாதுகாப்பா இருக்கு. ஒரு நா இருநூறு.. முன்னுறு கெடைக்கும் திடிர்னு ஆயிரமும் கெடைக்கும். புடிமானமா சொல்லனுன்னா ஒரு நாளைக்கி நானூறு மேனி கெடைக்கும்.

ரெண்டு வருசமா யாவாரம் பாத்து செலவு போக கந்துவட்டி கடன அடைக்க வாங்குன ஒரு லட்சம் பணத்துல அம்பதாயிரத்த அடச்சுருக்கேன். ஏதோ நல்ல மனுசங்க அந்த நேரத்துல வட்டியில்லாமெ கடங்குடுத்து ஒதவுனாங்க. உயிரு இருக்கும்மட்டும் மறக்க மாட்டேன்.”

“ரெண்டு குடும்பத்த சேந்தவங்க சேந்துருந்தாலே நீயா.. நானா..ன்னு சிக்கல் வந்துருமே பலபேரு கூடிருக்குற எடத்துல நெலமய எப்புடி சமாளிப்பீங்க.?”

“சண்ட சச்சரவு இருந்தாதா.. அது குடும்பம், இல்லாட்டி எப்புடி. கோவம் வந்தா திருப்பிக்க வேண்டியதான் பொறவு சந்தோசமா கூடிக்க வேண்டியதான். ஒரு கூட்டுல பறவைங்க எறதேடிட்டு பொழுதுக்கா கூடு திரும்பையில ஒன்னோட ஒன்னு கொத்திகிட்டு அடிச்சுக்கும்… ஆனா காலையில மறுபடியும் சந்தோசமா எற தேட ஆறம்பிக்கும். அது போலதான் மனுச வாழ்க்கையும்.”

இத்தன வலிய தாங்கி வைராக்கியமா வாழ்கையில போராடுற ஒங்களப் பாத்து நெறையா கத்துக்கனும்...”

சரசம்மா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க