”தெய்வம் தொழாஅள்” என்ற குறளானது பெண்அடிமைத்தனம் அல்ல,
மாறாக இது ஒரு பார்ப்பனிய எதிர்ப்புக்கலகக் குரல் – வி.இ.குகநாதன்

ள்ளுவரின் பின்வரும் குறளானது பெரிதும் அறியப்பட்ட ஒன்றாகும்.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை. (குறள் : 55)

இந்தக் குறளிற்கான விளக்கத்தினைப் பலரும் “வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!” என்ற பொருள் படவே கூறிவருகின்றார்கள். உண்மையிலேயே கணவனைக் கடவுளிலும் மேலாக வழிபடச்சொல்லும் ஒரு பெண் அடிமைத்தனக் குறளாகவா இக் குறள் உள்ளது எனப் பார்ப்போம். கணவனை வழிபடச்சொல்லுகின்றார் என வைத்தாலும் ஏன் கடவுளைக் கும்பிட வேண்டாம் என்கின்றார்? ஒருவேளை கடவுளையே கும்பிடவேண்டாம் எனப் பகுத்தறிவு பேசுகின்றார் என்றால், அந்தப் பகுத்தறிவு பெண் அடிமைத்தனத்தை வலியுறுத்துமா? போன்ற நியாயமான கேள்விகள் எழுகின்றன. பிறப்பால் எல்லோரும் சமன் (பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்) என்று கூறிய வள்ளுவர் எவ்வாறு பிறப்பினடிப்படையிலான பால் வேறுபாட்டினை நியாயப்படுத்துவார்? மேற்கூறிய காரணங்களால், குறித்த இக் குறளிற்கு ஏற்கனவே பலர் கூறிய விளக்கம் பொருத்தமற்றது எனத் துணிந்து கூறலாம்.

எனவேதான் இக் குறளிற்கான விளக்கத்தினை வேறு வகையில் பார்க்கவேண்டியுள்ளது. இக் குறளினை எளிமை கருதி மூன்று பகுதிகளாப் பிரித்துப் பொருள் கண்டு, பின்னர் முழுமையாகப் பார்ப்போம்.

“தெய்வம் தொழாஅள் ; கொழுநன் தொழுதெழுவாள் ;
பெய்யெனப் பெய்யும் மழை.”

இந்த மூன்றுபகுதிகளிற்குமான பொருளை பின்னிருந்து முன்னாகப் பார்ப்போம் (இது ஒரு வகையில் தேர்வில் எளிமையான கேள்விகளை முதலில் அணுகுவது போன்ற ஒரு முறை).

பெய்யெனப் பெய்யும் மழை :

“பெய் எனப் பெய்யும்” மழை என்பதற்கு “மனைவி ஆணையிட மழை பெய்யும்” என்பது போன்றே இதுவரைப் பலராலும் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிற்குப் பொருந்தாத “மந்திரம் ஓத மாங்காய் வரும்” போன்ற கருத்தை வள்ளுவர் வேறு எங்குமே கூறாதபோது, இந்த விளக்கம் பொருத்தமில்லை என்பதே எனது கருத்து. பொதுவாக இன்றும் பெரு மழை பெய்யும்போது பேச்சுவழக்கில் “மழை பெய்யோ பெய் எனப் பெய்தது” என்கின்றோம். இங்கு பெய் என்று கூறியவுடன் பெய்கின்றது என்ற பொருள் அல்லவே. அதுபோன்றே இங்கும் ‘’பெய் எனப் பெய்யும்’’ என்பதனைத் தேவைப்படும்போது பெய்யும் மழை என்றே கொள்ள வேண்டும். மழை பொதுவாக நன்மை தருவது என்றாலும், பொருத்தமற்ற நேரங்களில் பெய்யும் மழையால் உழவர்களிற்கு அழிவும் ஏற்படலாம். எனவேதான் பொருத்தமான நேரத்தில் பெய்யும் மழை முதன்மை பெறுகின்றது. இன்னும் விளக்கமாகச் சொன்னால், உழவர் மழை பெய்ய வேண்டும் என நினைக்கும்போது மழை பெய்தால், அதுவே சிறப்பானது, அத்தகைய மழையினையே வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.

படிக்க:
பொள்ளாச்சி பாலியல் வன்முறையை எதிர்க்கும் ஃபேஸ்புக் பதிவுகள் !
பாசிசத்தின் இயற்கைக் கூட்டாளிதான் பாஜக | தோழர் மருதையன் உரை | காணொளி

திருக்குறள் இடம்பெறும் பதினெண் கீழ் கணக்கு நூல்கள் எனும் அதே தொகுதியினுள் இடம்பெறும் இன்னொரு நூலான நல்லாதனார் எழுதிய திரிகடுகம் நூலிலும் ‘’பெய் எனப் பெய்யும் மழை’’ என்ற தொடர் உள்ளது (இவ்விரு நூல்களுமே காலத்தால் ஏறக்குறைய சமனானவை).

‘’கொண்டான் குறிப்பு அறிவாள் பெண்டாட்டி; கொண்டன
செய் வகை செய்வான் தவசி; கொடிது ஒரீஇ
நல்லவை செய்வான் அரசன்; இவர் மூவர்
பெய் எனப் பெய்யும் மழை’’ திரிகடுகம் (96) – நல்லாதனார்

இங்கு அன்பால், அறிவால் ஆளும் பெண்டாட்டி (பெண்டு + ஆட்டி = பெண்டாட்டி), தவசி (தன் நெறிக்கு உண்டான நோன்புகளை, முறைப்படி செய்து முடிப்பான் தவசி), மக்களுக்கு வரும் கொடுமைகளை நீக்கி நல்லது செய்யும் அரசன் ஆகிய மூவரும் எந்தவித பயனும் கருதாமல் தேவைப்படும் போது பெய்யும் மழைக்குச் சமனானவர்கள் என்ற பொருளிலேயே பாடல் இடம்பெற்றுள்ளது (இங்கு தவசியோ அல்லது அரசனோ கணவனை வழிபடுபவர்கள் அல்ல). எனவே, இதே விளக்கத்தினையே நாம் குறளில் இடம்பெறும் பெய் எனப் பெய்யும் மழைக்கும் கொடுக்கலாம்.
கொழுநன் தொழுதெழுவாள்:

இத்தொடரில் கொழுநன், தொழு, எழுவாள் ஆகிய மூன்று சொற்களின் பொருள்களைப் பார்ப்போம். இங்கு கொழுநன் என்பது கணவனையும், எழுதல் என்பது படுக்கையிலிருந்து எழுந்திருத்தல் என்பதையும் குறிக்கும் என்பது பல உரையாசிரியர்கள் கூறியது போன்று சரியானவையே. எஞ்சியிருக்கும் ‘’தொழு’’ என்ற வினைச்சொல்லிற்கான பொருளிலேயே இக் குறளிற்கான விளக்கத்திற்கான திறவுகோலே உண்டு. ‘’தொழு’’ என்ற சொல்லினை ‘’வழிபடு’’ என்றே பலரும் கருதியிருந்தனர். இங்கு அச் சொல்லிற்கு வேறு பொருள் இருக்கின்றதா? எனப் பார்ப்போம். தொழு என்ற வினைச்சொல்லிற்கு பல்வேறு வகைகளில் பொருள் கொள்ளலாம் எனினும் இங்கு பொருத்தமாக வருவது சேர்தல் / இணைதல் என்பதாகும். இதனைச் சற்று விரிவாகவே பார்ப்போம்.

இன்று பொதுவாகப் பயன்படுத்தப்படும் தொகுதி (கூட்டம்) என்ற சொல் தொழுதி என்ற சொல்லின் மருவிய வடிவமேயாகும். ‘’பைங்கால் கொக்கின் மென் பறைத் தொழுதி’’ என்ற பாடலில் (நெடுநல்வாடை-15) மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் கூறும் தொழுதி என்ற சொல்லும், ‘’பருவத் தேனசைஇப் பல்பறைத் தொழுதி’’ (குறுந்தொகை-175) என்ற பாடலிலும் இச் சொல்லின் (தொழுதி) பயன்பாட்டினைக் காணலாம். இவற்றில் தொழுதி என்ற சொல் கூட்டம் (இணைந்து வாழுமிடம்) என்ற பொருளிலேயே இடம்பெற்றுள்ளது. பெயர்ச்சொற்கள் எல்லாம் வினைச்சொல் அடியினை ஒட்டியே பிறக்கின்றன என்ற தமிழறிஞர்களின் கருத்துப்படி, இங்கு தொழுதி என்ற சொல்லிற்கு அடிப்படையாக அமைந்த வினைச்சொல் ‘’தொழு’’ (சேரல்) என்பதேயாகும். இன்றும் மாடுகள் வாழுமிடத்தை ‘’தொழுவம்’’ என்று அழைக்கின்றோம்.

“தொழுவினிற் புலியானான்’’ (கம்பராமாயணம் மூலபல-181) என்ற பாடலில் கம்பர் விலங்குகள் சேர்ந்து வாழுமிடத்தை தொழு என்கின்றார். ‘’தொழு’’ என்ற சொல் இணையர் (கணவன்-மனைவி) சேர்ந்து வாழ்வதனைக் குறிக்கும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு சீவக சிந்தாமணியில் உள்ளது.

தொழுவில் தோன்றிய தோமறு கேவலக்
கிழவன் மூது எயில் போல் கிளர்வுற்றதே
– சீவக சிந்தாமணி-856

இப் பாடலில் ‘’தொழுவில் தோன்றிய’’ என்பதற்கு ‘’இல் வாழ்வில் உண்டான’’ என்ற பொருளே கொள்ளப்படுகின்றது (இங்கு தொழு = இல்வாழ்வுச் சேரல்). இதனைக் கொண்டு தொழுதல் என்பதனைச் சேரல் (புணர்தல்) எனவும் கூறலாம். உங்களிற்கு இந்த ‘’தொழு’’ என்ற சொல் இப்போது என்னவாயிற்று என்ற கேள்வி எழலாம். இப்போது ‘’தொழு’’ என்ற அந்த வினைச்சொல் ‘’தொகு’’ என்ற வினைச்சொல்லாக மருவியுள்ளது (மழவு – மகவு, முழை – முகை போன்று மருவியுள்ளது). இன்றும் ‘’தொகு’’ என்ற சொல்லிற்கு சேர்த்தல் என்ற பொருள் உள்ளபோதும், மனிதர்களின் இல்லறச் சேரலை அச்சொல் இப்போது குறிப்பதில்லை. அதே போன்று ‘’தொழு’’ என்றால் இப்போது ‘’வழிபடு’’ என்ற பொருளே பெருமளவிற்குப் பயன்படுத்தப்படுவதாலேயே, குறளிற்கான விளக்கத்தில் குளறுபடி நடந்துவிட்டது. உண்மையில் குறளின் விளக்கத்தினை நாம் அந்தக்காலப் பொருளிலேயே (இல்வாழ்வுச் சேரல்) கொள்ளவேண்டும்.

மேற்கூறிய விளக்கங்களின்படி, ‘’கொழுநன் தொழுதெழுவாள்’’ என்பது கணவனுடன் சேர்த்து (புணர்ந்து) படுக்கையிலிருந்து துயில் எழுபவள் என்ற பொருளே கொள்ளவேண்டும்.

தெய்வம் தொழாஅள்:

இப்போது குறளின் மூன்றாவது பகுதிக்கு வந்தால், இங்கு ‘’தொழாஅள்’’ என்பது ‘’சேர மாட்டாள்’’ என்ற பொருளில் (நாம் ஏற்கனவே பார்த்த விளக்கத்தின்படி) வரும். இங்கு நாம் பொருள் காண வேண்டியது `தெய்வம்` என்ற சொல்லிற்கே ஆகும். தெய்வம் என்னும் சொல் திருக்குறளில் ஆறு இடங்களில் பயின்றுவருகிறது. இங்கு நாம் முதன்மையாகப் பார்க்கும் ‘’தெய்வம் தொழாஅள்’’ என்ற குறள் தவிர்த்த ஏனைய ஐந்து குறள்களையும், அவற்றில் தெய்வம் என்ற சொல்லினை என்ன பொருளில் பயன்படுத்துகின்றார் எனவும் பார்ப்போம்.

“தெய்வத்தால் ஆகா(து) எனினும்
முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்” – (குறள்: 619)
{தெய்வம் = ஊழ்}

“குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.” – (குறள்: 1023)
{தெய்வம் = ஊழ்}

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.” (குறள்: 50)
{தெய்வம் = வாழ்வாங்கு வாழ்ந்தோர்}

“தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை” (குறள்: 43)
{தெய்வம் = வாழ்வாங்கு வாழ்வோர்}

“ஐயப் படாஅ(து), அகத்த(து) உணர்வானைத்,
தெய்வத்தோ(டு) ஒப்பக் கொளல்” (குறள்: 702)
{ தெய்வம் = ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்ல மனிதன்}

மேலே ‘’தெய்வம்’’ என்ற சொல் இடம்பெறும் ஐந்து குறள்களிலும், அச் சொல்லானது வெவ்வேறு பொருள்களில் இடம்பெற்றுள்ளது என்பதனைக் காணலாம். இந்த வகையில் ஆறாவது குறளிலும் (குறள்: 55) தெய்வம் என்ற சொல் வேறொரு பொருள் கொள்ளலாம் என்பது தெளிவாகின்றது.

இப்போது திருக்குறள் எழுதப்பட்ட காலத்தினை கவனத்திற்கொள்ள வேண்டும். ஏற்கெனவே நான் இன்னொரு கட்டுரையில் (வினவு இணையத்தளத்தில் இடம்பெற்ற திருக்குறளைத் திரிக்க முனையும் பார்ப்பனியம் : பரிமேலழகர் முதல் நாகசாமி வரை ) குறிப்பிட்டது போல, ரிக் வேத கருத்து தமிழ் மண்ணையும் வந்துசேர்ந்த காலத்திலேயே திருக்குறள் எழுதப்படுகின்றது. எனவே, வள்ளுவர் இந்தத் திருக்குறளில் (குறள்: 55) குறிப்பிடும் தெய்வம் வேதம் குறிப்பிடும் வைதீக – பார்ப்பனிய தெய்வமே ஆகும். எவ்வாறு முன்னைய குறள்களில் ஆசீவகக் கருத்தான ஊழ் என்பதனை தெய்வமாகவும், வேறு இடங்களில் தமிழரின் நீத்தார் வழிபாட்டினைத் (வாழ்வாங்கு வாழ்ந்து நீத்தார்) தெய்வமாகவும் கொண்டாரோ, அதேபோன்று இங்கு வைதீகத் தெய்வத்தினைக் குறிப்பிடுகின்றார் (இத்தகைய வெவ்வேறு தெய்வங்கள் எல்லாம் தமிழர்களிடையே அன்று காணப்பட்டமையாலேயே, அத்தகைய வெவ்வேறான தெய்வங்களை வெவ்வேறு குறள்களில் வள்ளுவர் கையாளுகின்றார்). சரி, அந்த வைதீக தெய்வம் யாதென வேதத்தின் வழியே பார்ப்போம்.

தெய்வாதீனம் ஜகத் ஸர்வம் = உலகம், தெய்வப் பிடியில்
மந்திராதீனம் ச தேவதா = தெய்வமோ, மந்திரத்தின் பிடியில்
தே மந்த்ரம் பிராமணா தீனம் = மந்திரமோ, பிராமணப் பிடியில்
பிராமணோ மம தேவதா = பிராமணர்களே, நம் தெய்வங்கள்!

ஆம், அந்த வைதீக தெய்வம் பார்ப்பனரே ஆகும். இந்தப் பார்ப்பனக் கடவுளிற்கும், ‘’தொழாஅள்’’ என்பதற்கும் என்ன தொடர்பு? என யோசிக்கின்றீர்களா? இதற்கு இன்றும் திருமணங்களில் ஓதப்படும் வடமொழி மந்திரமான “ஸோம: ப்ரதமோ…” (மந்திரத்தையும், அதற்கான விளக்கத்தினையும் படத்தில் காண்க) என்பதனை அறியவேண்டும். இந்த மந்திரமானது ரிக் வேதத்தில் (Rig veda 10, 7:85) இருந்து தொகுக்கப்பட்டவையே. சூர்யா என்ற தேவப் பெண்ணிற்கு ஒன்றின் பின் ஒன்றாக பல தேவர்களுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அப்போது சொல்லப்பட்டவையே இத் திருமண மந்திரங்கள். இதனையே இன்றும் திருமணங்களில் பார்ப்பனர்கள் ஓதிவருகின்றார்கள்.

இதற்கு வேறு விளக்கங்கள் கொடுக்க அண்மைக்காலத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், இராமானுசர், ஆளவந்தார் (யாமுனாசார்யர்) போன்ற வேத விற்பனர்கள் தெளிவாகவே விளக்கியுள்ளார்கள். இன்று வெறும் மந்திரங்களாகவே உள்ள இந்த இழிநிலையினை பார்ப்பனர்கள் ஒரு காலத்தில் நடைமுறைப்படுத்தவே முனைந்துள்ளார்கள். இதனை நாம் இன்றும் கேரளாவிலுள்ள தறவாடு முறையின் எச்சங்களின் மூலம் அறிந்துகொள்ளலாம். மற்றொரு கேரளா முறை “கெட்டு கல்யாணம்’’.

(“கெட்டு கல்யாணம்” என்ற சடங்கு முடிந்த உடனேயே தனது மகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ளப் பலருக்கும் பெண்ணைப் பெற்ற தாயே அழைப்பு விடுவாள். அதில் நம்பூதிரிகளுக்கு முதல் உரிமை கொடுக்கப்படும்). கேரளாவிற்கு ஏன் போகவேண்டும். தமிழ்நாட்டிலேயே எமக்கு கடந்த காலத்தில் “இயற்பகை நாயனார்” என்ற எடுத்துக்காட்டு உண்டு. 63 நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனார் கதை கேள்விப்பட்டுள்ளீர்களா? சிவாச்சாரியார் ஒருவர் நாயனாரின் மனைவியினைக் கேட்டபோது, நாயனார் கூட்டிக்கொடுத்தது மட்டுமல்லாமல், குறுக்கே வந்த உறவினர்களையும் வெட்டிச் சாய்த்தவர்.

படிக்க:
உனக்கு கீதை எங்களுக்கு சங்க இலக்கியம் – பழ. கருப்பையா
திருக்குறளில் நடந்த திருவிளையாடல்கள் | பொ. வேல்சாமி

சிலர், சிவனே பிராமண வேடத்தில் வந்ததாகவும் கூறுவார்கள். இவ்வாறு தெய்வத்தின் வடிவம், தேவர்களின் (சோமன், கந்தர்வன், அக்னி ) வடிவம் தாமே என, வேதத்தினைக் காட்டி பார்ப்பனர்கள் தமிழ் மணப்பெண்களை புணர முனைந்திருந்தார்கள். (இந்த தறவாடு, இயற்பகை நாயனார் போன்ற நிகழ்வுகள் யாவும் குறளிற்குக் காலத்தால் பிந்தியவை என்றாலும், அவை கடந்த கால நடைமுறைகளின் / நடைமுறைப்படுத்த முயன்றவற்றின் எச்சங்களே). இதனாலேயே பார்ப்பனர்கள் தமது சாதி தவிர்த்த ஏனையோரினை சூத்திரர்கள் என அழைப்பார்கள். இங்கு “சூத்திரர்” என்பது “வைப்பாட்டி மக்கள்” என்றே பொருள் கொள்ளப்படும் என மறைமலை அடிகளார் தனது நூலான “தமிழர் மதம்” என்ற நூலின் 52-வது பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.

இவற்றை எல்லாம் சேர்த்துப் பார்க்கும்போது ‘’தெய்வம் தொழாஅள்’’ என்ற தொடர் தெளிவாக விளங்கும் என்று நினைக்கின்றேன். அதாவது வள்ளுவர் இங்கு வேதங்கள் கூறுவது போன்று பார்ப்பனத் தெய்வத்துடன் தொழ (புணர) வேண்டாம் என்று கூறுகின்றார்.

குறளின் விளக்கம்:

இப்போது மேலே பார்த்த மூன்று பிரிவுகளையும் ஒன்றாக்கினால் குறளின் விளக்கம் தெளிவாகும். (பார்ப்பனத்) தெய்வத்துடன் புணராமல், கணவனுடன் சேர்ந்திருந்து துயில் எழும் மனைவியானவள் தேவைப்படும்போது பெய்யும் மழை போன்றவள் என்பதே இக்குறளின் விளக்கமாகும்.

பார்த்தீர்களா! பெண் அடிமைத்தனத்தை வலியுறுத்தும் ஒரு பிற்போக்குத்தனமான குறள் என்று இதுநாள் வரை நாம் கருதியிருந்த ஒரு குறளானது, உண்மையில் எவ்வளவு முற்போக்குத்தனமான பார்ப்பனிய எதிர்ப்புக்குரலாக அமைந்துள்ளது என.

குறிப்பு: இக் கட்டுரையானது பேரா. ந. கிருஷ்ணன், ராமானுஜ தாத்தாச்சாரியார், முனைவர் இரவி சங்கர் கண்ணபிரான் ஆகியோரது பல்வேறுபட்ட எழுத்துகளிற்கு நன்றிக்கடன் பட்டுள்ளது.

வி.இ. குகநாதன்

`