பொள்ளாச்சி பாலியல் வன்முறை குறித்த முகநூல் பதிவுகள் தொகுப்பு …

ருநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் பொள்ளாச்சியில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் பலர் கொந்தளிப்புடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் தொடர்புடைய குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது என்றும் எழுதிவருகின்றனர். சில முகநூல் பதிவுகளை இங்கே தொகுத்திருக்கிறோம்…

இரா.கலையரசு

பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் குற்ற எண்.59/2019 ஆக இந்திய தண்டனை சட்டம் 354A, 354B, 392, தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66-E மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 4 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட பிரிவுகளின் கீழ் 7 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க வாய்ப்புள்ளது. ஆனால், வழக்கில் ஆரம்பத்தில் கோவை மாவட்ட காவல்துறையினர் செய்த தவறுகள், வரும் காலத்தில் சிபிஐ அல்லது வேறு எந்த புலானாய்வு அமைப்புகள் விசாரித்தாலும் எதிரிகளுக்கு சாதகமாகத்தான் முடியப் போகின்றது.

1. எதிரிகளை பொள்ளாச்சி காவல் துறையினர் அவர்களுடைய காவலுக்கு (Police Custody) எடுத்து விசாரிக்கவில்லை. அவ்வாறு விசாரணைக்கு எடுத்து ஏன் விசாரிக்கவில்லை. அவர்களை எது தடுத்தது. அவ்வாறு விசாரித்திருந்தால் தான் அவர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் யார் யார், சம்பந்தப்பட்டுள்ள பிற நபர்கள் யார், மிரட்டி பெறப்பட்ட பணம் மற்றும் நகையினை எங்கே வைத்துள்ளார்கள் என்ற விவரம் தெரிந்திருக்கும். ஆனால், அப்படி எந்த ஒரு விசாரணையும் நடத்த பெறவில்லை. ஒருவர் கைது செய்யப்பட்டு 15 நாட்களுக்குள் தான் காவல்துறை விசாரணைக்கு எடுக்க முடியும். வேறு எந்த விசாரணை அமைப்புக்கு மாற்றப்பட்டாலும் காவலுக்கு எடுத்து விசாரிக்க முடியாது.

2. குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 161-ன் படி பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தினை பெண் காவல் அதிகாரிதான் விசாரித்திருக்க வேண்டும். ஆனால், வழக்கு பதிவு செய்து விசாரித்தது பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய ஆண் காவல் ஆய்வாளர். அவர் எப்படி பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரித்திருப்பார். எப்படி அந்த பெண்ணும் தயக்கம் இல்லாமல் வாக்குமூலம் கொடுத்திருக்கும்.

3. பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரினை வெளியிடக்கூடாது என பல்வேறு தீர்ப்புகளும் வழிகாட்டுதல்களும் உள்ளன. ஆனால், கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திகுறிப்பில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரினை வெளியிட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பிற பெண்களும் புகார் கொடுக்க நிச்சயம் தயங்குவார்கள். ஏன் வேண்டுமென்றே காவல் துறையினர் அப்படி செய்தார்கள்.

4. காவல் துறையினர் ஆரம்பம் முதலே இந்த வழக்கினை சரியான முறையில் கையாளவில்லை என்றே தோன்றுகின்றது. காவல் கண்காணிப்பாளர் நான்கு வீடியோக்கள் மட்டும்தான் என உறுதிபட கூறுகின்றார். விசாரணை முடியும் முன்பே அவருக்கு இந்த விசயம் எப்படி தெரிய வந்தது. அவரை பொள்ளாச்சி எம்.பி. சந்தித்துவிட்டு செல்கின்றார். எம்.எல்.ஏ. வெளிப்படையாக புகார் கொடுக்கின்றார். ஆனால், அவர்கள் கொடுத்த புகார் மனு என்னவென்று பொது வெளியில் வைக்கவில்லை?.

5. ஆளும் கட்சியினை சார்ந்த நபர் புகார் கொடுத்த பெண்ணின் அண்ணனை அடித்ததாக கைது செய்யப்பட்டு உடனடியாக விடுதலையும் செய்யப்படுள்ளார். ஆனால், அவரின் பெயர் ஏன் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்படவில்லை? அதற்கு எந்த அரசியல்வாதி காரணம்?

6. தற்போது பாதிக்கப்பட்ட பெண், பொள்ளாச்சியில் ஒருவரும் உதவவில்லை ஆளும்கட்சி தலையீட்டில்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கூறுகின்றார். அப்படியென்றால் சம்பவம் நடந்து 12 நாட்கள் நடவடிக்கை எடுக்காமல் பொள்ளாச்சி காவல் துறையினரை தடுத்த நபர்கள் யார்?

இந்திய வரலாற்றில் இல்லாதவகையில் ஒரு பாலியல் வழக்கினை குண்டர் சட்டத்தில் போட்டு, உடனே சிபிசிஐடிக்கு மாற்றி, அடுத்த 5 மணிநேரத்தில் சிபிஐக்கு மாற்றியது, பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் மட்டுமே நடந்திருக்கும்.

7. முக்கிய எதிரி திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் ஆகியோரினை பிடித்து சில நபர்கள் விசாரிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வந்துள்ளன. அவர்கள் காவல் துறையினரிடம் ஒப்படைத்த பிறகு திருநாவுக்கரசினை கைது செய்யாமல் விடுவித்த அதிகாரி யார்? யாருடைய உத்திரவின் பேரில் அவ்வாறு செயல்பட்டார். திருநாவுக்கரசின் அம்மா தனது மகன் தலைமறைவாகவில்லை, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளான் என 12.03.2019 அன்று பொள்ளாச்சி நீதிமன்றத்தில் எடுத்த வீடியோவில் கூறியுள்ளார். பிறகு எப்படி காவல் துறையினர் திருநாவுக்கரசு தலைமறைவு என கூறினார்கள்?

8. எஸ்.பி. புகார் வந்தால் மட்டுமே விசாரிப்போம் என்கிறார்கள். இந்த மாதிரி வழக்குகளில் காவல் துறையினர் புகார்தாரர்களை தேடிப்போக வேண்டும்.. வழக்கு முறையாக விசாரணை செய்யப்படவில்லை. எதிரிகள் காவலில் எடுத்து விசாரிக்ப்படவில்லை. அவர்கள் தொடர்பு குறித்து விசாரிக்கப்படவில்லை. யாரை காப்பாற்ற இப்படி செய்கின்றார்கள்?

மொத்தத்தில் காவல் துறையினரின் நடவடிக்கைகள் எதிரிகளுக்கு சார்பாகவே உள்ளது. இனிமேல் வேறு ஏஜென்சிக்கு விசாரணை மாற்றப்பட்டாலும் இவர்கள் செய்த தவறுகளால் நீதி கிடைப்பது அரிதுதான்.

நாச்சியாள் சுகந்தி:

இந்திய வரலாற்றில் இல்லாதவகையில் ஒரு பாலியல் வழக்கினை குண்டர் சட்டத்தில் போட்டு, உடனே சிபிசிஐடிக்கு மாற்றி, அடுத்த 5 மணிநேரத்தில் சிபிஐக்கு மாற்றியது, பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் மட்டுமே நடந்திருக்கும். முரணா, அதிசயமா, மாற்றமா? புரியவில்லை.

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது குறித்து மகிழ்ச்சிதான். இதுவரை சிபிஐ-ஆல் விசாரிக்கப்பட்ட வழக்குகளில் எல்லாம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்துள்ளதா? கை புண்ணுக்கு எதற்கு கண்ணாடி? சிபிஐ ஒரு வழக்கை முறையாக விசாரித்து இருந்தால் ஏன் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 28 வருடங்கள் 7 பேர் தண்டனை அனுபவித்துக்கொண்டு இருப்பர்?

சரி, இந்த சிபிஐ அமைப்புதான் எப்படிபப்ட்டது? கடந்த ஜனவரி மாதம் சிபிஐ இயக்குநர்கள் மாறி மாறி பதவி மாற்றப்படட்தும், உச்சநீதிமன்றமே தலையிட்டதும் அந்த இயக்குநர்களில் ஒருவர் சிபிஐ அமைப்பை மத்திய அரசு கட்டுப்படுத்துகிறது என்று குற்றம்சாட்டியதும் இன்னும் யாருக்கும் மறந்திருக்காது.

உலவும் பல மூடநம்பிக்கைகளில் இதுவும் ஒன்று. சிபிசிஐடிக்கோ அல்லது சிபிஐக்கோ வழக்கு சென்றால் நீதி கிடைக்கும் என்று, ஒரு வெங்காயமும் கிடைக்காது என்பதைத்தான் விஷ்ணுபிரியா ஐபிஎஸ் வழக்கில் உணர்ந்துகொண்டோம்.

சபரிராஜன் என்கிற குற்றவாளி முழுநேர ஆர்.எஸ்.எஸ். ஊழியராம். அதனால், அழுத்தம் அரை டவுசர்களிடமிருந்தும் அரை டவுசர்களின் தலைமை மோகன் பகவத் , அமித்ஷா, மோடியிடமிருந்தும் வராது என்பதற்கு யார் உத்திரவாதம்?

அதேவேளையில், வாச்சாத்தி வழக்கில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி நீதியை நிலைநாட்டிய இடதுசாரிகளின் போராட்டம் காலம் முழுவதுக்குமான நம்பிக்கையை அளிக்கவல்லது. இந்த வழக்கையும் நீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகு சிபிஐ தான் விசாரித்தது. 215 பேருக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தது.

இதை அரசியல் ஆக்காதீர்கள் என கதறும் பொள்ளாச்சி ஜெயராமன், நேற்றிலிருந்து இரண்டு முறை ஊடகங்களைச் சந்த்தித்து ஏன் விளக்கம் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்? கன்னத்து அறை புகழ், பாலியல் சீண்டல் புகழ் எஸ்.பி பாண்டியராஜன் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என சொல்வது போல், இதில் அரசியல் தலையீடு இல்லை என அழுத்திக் கூறுகிறார்?

சபரிராஜன் என்கிற குற்றவாளி முழுநேர ஆர்.எஸ்.எஸ். ஊழியராம். அதனால், அழுத்தம் அரை டவுசர்களிடமிருந்தும் அரை டவுசர்களின் தலைமை மோகன் பகவத் , அமித்ஷா, மோடியிடமிருந்தும் வராது என்பதற்கு யார் உத்திரவாதம்?

இந்த பதற்றத்தை உத்திரவாதப்படுத்துகிறது, பாதிக்கப்படட் பெண்ணின் ஆடியோ என சுற்றும் பதிவு. அதில் ஏன் ஜெயராமன் பெயர் திரும்பத்திரும்ப சொல்லப்படுகிறது? ஜெயராமன் மீடியாக்களுக்கு சொன்ன விஷயத்தை அந்த பெண்குரல் எப்படி அச்சுப்பிசகாமல் சொல்கிறது?

படிக்க:
எவனோ கூப்புட்டா கார்ல ஏறிடறதா ? பெண்களைக் குறை சொல்லும் சமூகம் !
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?

நம்புவோம், இந்த வழக்கில் நீதி கிடைக்கும். வாச்சாத்திப் பெண்களுக்கு கிடைத்ததைப் போல, காலம் தாழ்த்தப்பட்ட நீதி எனினும் நிச்சயம் கிடைக்கும் என நம்புவோம். அதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த வழக்குக் குறித்து சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் பேசி, குரல் கொடுத்து, அரசியலாக்கி நீதியைப் பெற்றுத் தர வேண்டும். குறிப்பாக அனைத்துக் கட்சிகளுமே.

நம்புவதுத் தவிர வேறு எதுவுமே நம் கையில் இல்லையே!

அதிஷா

ஒரு ரேப் போதுமாக இருக்கிறது தங்களுடைய துருப்பிடித்த யோனிப் பூட்டு அறிவுரைகளோடு ஆணாதிக்க சைக்கோக்கள் கிளம்ப… பேஸ்புக்கில் அக்கவுண்ட் வைத்துக்கொள்ளாதே, ஆண்களிடம் சாட் பண்ணாதே, டிக்டாக் வீடியோ பண்ணாதே, பெரியாரியம் மார்க்ஸியம் தலித்தியம் கற்றுத்தருவதாகக் கூறி ஏமாற்றிவிடுவான், உலக சினிமா பாக்காதே…  ஆண்களோடு ஊர்சுற்றாதே, ட்ரெக்கிங் போகாதே, போராட்டத்திற்குப் போகாதே, ஷால் போடு… எவ்வளவு அறிவுரை.

அறிவுரைகளைக் காண அருவருப்பாக இருக்கிறது. இதன் தொடர்ச்சிதான் பெண்கள் கல்லூரிக்குப் போகக்கூடாது, காதல் பண்ணக்கூடாது, புத்தகம் படிக்கக் கூடாது மாதிரியான வக்கிர எண்ணங்கள் எல்லாமே. பெண்கள் என்ன செய்ய வேண்டும் என இந்த உலகமகா உத்தம ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள் . 24 மணிநேரமும் உள்தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு ஃப்ரிட்ஜூக்குள் போய் கால்மடக்கி உட்கார்ந்து கொள்ள வேண்டுமா? வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடவேண்டுமா.

பர்தா போட்டுக்கொண்டால் ரேப் நடக்காது என்று சொல்கிற மதவாத முட்டாள்களுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு. ஒட்டுமொத்த ஆண்சமூகமுமே குற்றவாளிகள் என்று சித்தரிப்பது இன்னொருவகை பைத்தியகாரத்தனம். எத்தனையோ ஆண் குற்றவாளிகள் இருந்தும் இரண்டு பாலினத்தவர்களிடையேயான பரஸ்பர நம்பிக்கையில்தான் பல கோடி ஆண்டுகளாக இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. இதை சாக்காக வைத்துக்கொண்டு அடிப்படைவாத அறிவிலிகளைப்போல காதலுக்கு எதிராக ஆண்பெண் நட்புக்கு எதிரான பரப்புரைகளை முன்னெடுப்பது இன்னும் கேவலம்… பாதுகாப்பாக இரு என்று அறிவுரை சொல்வது வேறு… ஆனால், குனிந்த தலை நிமிராமல் கட்டைவிரல் பார்த்து நட, அடக்க ஒடுக்கமாக இரு என்பது வேறு. அடிப்படைவாத மயிராண்டிகள் சொல்வது முடங்கிவிடு என்பதுதான்.

பேஸ்புக்கில் அக்கவுண்ட் வைத்துக்கொள்ளாதே, ஆண்களிடம் சாட் பண்ணாதே, டிக்டாக் வீடியோ பண்ணாதே, பெரியாரியம் மார்க்ஸியம் தலித்தியம் கற்றுத்தருவதாகக் கூறி ஏமாற்றிவிடுவான், உலக சினிமா பாக்காதே…  ஆண்களோடு ஊர்சுற்றாதே, ட்ரெக்கிங் போகாதே, போராட்டத்திற்குப் போகாதே, ஷால் போடு… எவ்வளவு அறிவுரை.

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் பெரும்பாலான ஒற்றுமை ஒன்று உண்டு. இந்த அயோக்கியர்களின் முக்கியமான ஆயுதமே குழந்தைகளுக்கு தங்கள் பெற்றோர்கள் மீது இருக்கிற அச்சம்தான். உலகிலேயே குழந்தைகள் தன் வீட்டில் போய் எதையாவது சொன்னால் குழந்தைகளையே சந்தேகித்து அவர்களையே குற்றவாளியாக்கி மிரட்டுகிற வினோதமான சமூகம் நம்முடையது. இந்த பாலியல் சைக்கோக்கள் இதைத்தான் பயன்படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். குழந்தைகளின் தவறுகளுக்காக காத்திருப்பார்கள். அந்த தவறை பெற்றோரிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டுவார்கள். தங்களிடம் பணியவைப்பார்கள். இதில் அந்தக்குழந்தையின் குற்றம் என்ன இருக்கிறது. பொள்ளாச்சியில் நடந்திருப்பதும் அவ்வகை குற்றமே.

குழந்தைகள் மீதான குற்றங்களில் மட்டுமல்ல பெண்கள் மீது நடக்கிற பெரும்பான்மை சைபர் குற்றங்களில் நடப்பது இதுதான். பொள்ளாச்சி வன்கொடுமையில் நடந்ததும் இவ்வகை குற்றம்தான். இந்த வீடியோவை வெளியிட்டால், இந்த புகைப்படத்தை இணையத்தில் பரவவிட்டால் வீட்டில் என்ன சொல்வார்களோ, சமூகம் தன்னை என்ன நினைக்குமோ என்கிற அச்சம்தான் இந்தப்பெண்களை எல்லாம் முடக்கிவிடுகிறது. இதுதான் இந்த குற்றவாளிகளுக்கு வசதியாக இருக்கிறது. இந்தியாவில் பாலியல் வன்கொடுமை ஒன்றில் மட்டும்தான் குற்றவாளிகளை விட்டுவிட்டு பாதிக்கப்பட்டவரை தண்டிக்கிற வினோத வழக்கமெல்லாம் வைத்திருக்கிறோம். Victim Shaming-ஐ ஒழிக்காமல் ஒரு மண்ணாங்கட்டி மாற்றத்தையும் நம்மால் உருவாக்கிவிட முடியாது.

நாம் தொடங்கவேண்டிய இடம் வீடு. குழந்தைகள் எத்தகைய தவறு செய்திருந்தாலும் அதை வீட்டில் வந்து உரையாடுவதற்கான வெளியை உருவாக்க வேண்டும். நாம் சொன்னால் பெற்றோர்கள் காதுகொடுத்து கேட்பார்கள் என்கிற நம்பிக்கையை விதைக்கவேண்டும். நாம் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ளாமல் போய்விடுவார்களோ என்கிற அச்சம் உருவாகிவிடாத படி சிறுவயதிலிருந்தே வளர்க்க வேண்டும். பாலின பேதங்களின்றி வளர்க்க வேண்டும். ஆம்பளை சிங்கம், பொம்பளை மயில்… என்றெல்லாம் பிதற்றிக்கொண்டிருக்கக் கூடாது.

தவறு செய்தாலும் அதை திருத்திக்கொள்வதற்கான வாய்ப்பையும், பரவால்ல பாத்துக்கலாம் என்று தோள் தட்டிக்கொடுக்கிற நம்பிக்கையும்தான் இவ்வகை குற்றங்களை தடுக்கும். ஏனெனில், என்னதான் கல்வி வந்தாலும் இன்னமும் இங்கே சாதி இருக்கிறது, மதவெறி இருக்கிறது, ஆணாதிக்கம் இருக்கிறது. அதற்கெல்லாம் மேல் இவ்வகை பாலியல் மனநோயாளிகள் எல்லா காலத்திலும் இருந்திருக்கிறார்கள். இருப்பார்கள்.

லக்ஷ்மி சரவணகுமார்:

இரண்டு வருடங்களுக்கு முன்னால் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்ந்து பொது இடங்களில் பெண்களின் மீது பாலியல் அத்துமீறல் செய்த வழக்கில் கைதானவர். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளியின் மனநிலையைப் புரிந்து கொள்கிறார்.அவரது தீர்ப்பில் இப்படி ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார்.

‘பெண்கள் குறித்தான எந்தவித அடிப்படை புரிதல்களும் இல்லாமல் நீங்கள் வளர்க்கப்பட்டிருக்கிறீர்கள். உங்களுக்கு குறைந்தபட்சம் பெண்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதே சிக்கலாய் உள்ளது. பதினைந்து நாட்களுக்கு கொடைக்கானல் மதர் தெரஸா பெண்கள் கல்லூரி வளாகத்தில் அவர்களோடு தங்கி நன்னடத்தைக் கடிதம் பெற்று வரவேண்டுமென’’ இந்த வழக்கிற்கு பிறகு அந்த மனிதன் என்னவானார் என்பது தெரியாது. ஆனால், அந்த நீதிபதி குறிப்பிட்ட மிக முக்கியமான விஷயம் நீ பெண்கள் குறித்த எந்தவிதமான புரிதல்களும் இல்லாமல் வளர்க்கப்பட்டிருக்கிறாய். இது இந்தியச் சூழலில் 90 சதவிகித ஆண்களுக்கு பொருந்தும். ( என்னையும் சேர்த்து.)

இங்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு எல்லையில் தங்களின் யோக்கியத்தனத்தையும் அயோக்கியத்தனத்தையும் நிறுத்திக் கொள்கிறார்கள். பெண்கள் ஒரு குடும்பத்தின் தனிப்பெரும்பான்மை சொத்தாக பார்க்கப்படுவதிலிருந்து தான் அவர்களின் மீதான எல்லா வன்முறைகளும் துவங்குகிறது. அப்பாவுக்கு பணிந்து போகும் அம்மாவை அக்காவை தங்கைகளை பார்த்து வளரும் ஒருவன் பருவ வயதில் அப்பாவைப் போலவே மாறுகிறான். பெண்கள் தனது விருப்பங்களுக்கு கட்டுப்பட்டவர்கள் என்கிற மனோபாவம் மிகச் சிறிய வயதிலிருந்தே ஆண்களுக்கு ஆழமாக மனதில் ஊன்றி வளர்ந்து விடுகிறது. குடும்பத்தில் பொதுவெளியிலென எல்லா இடங்களிலும் ஆண் ஆணாகவே மாறிப்போவதற்கான முதல் காரணம் அவன் குடும்பம் அவனை சரியான புரிதல்களோடு வளர்ப்பதில்லை.

இந்த உலகமகா உத்தம ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள் . 24 மணிநேரமும் உள்தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு ஃப்ரிட்ஜூக்குள் போய் கால்மடக்கி உட்கார்ந்து கொள்ள வேண்டுமா? வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடவேண்டுமா.

2005-ம் வருடத்தின் மாட்டுப் பொங்கல் நாள். அப்போது ஒரு மருத்துவமனையோடு சேர்ந்த என்.ஜி.ஓ. வில் வேலை செய்து கொண்டிருந்தேன். மாலை நேரம், ஆட்டோவில் ஒரு பெண்ணைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். நாற்பது வயதிருக்கும். இடைக்குக் கீழ் உடையெங்கும் குருதி. பாதி மயக்கநிலை. பதறியடித்து அவரைத் தூக்கிக் கொண்டு போய் சிகிச்சைக்கு அனுப்பினோம். விசாரித்த போது அவர் பாலியல் தொழிலாளி என்று தெரிந்தது. முந்தைய நாள் மாலை இரண்டு இளைஞர்கள் அவரை அழைத்துக் கொண்டு ஊருக்கு வெளியிலிருக்கும் கன்மாய்க்கு சென்றிருக்கிறார்கள். இவர்கள் உறவு கொள்ளும் போது பக்கத்து கிராமத்திலிருந்த ஆண்கள் கொஞ்சம் பேர் அங்கு வர இவர்கள் பயந்து அங்கிருந்து ஓடிவிட்டார்கள். அதன்பிறகு 16 பேர் சேர்ந்து தொடர்ந்து மாறி மாறி அந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கியுள்ளார்கள். இறுதியாக ஒருவன் முற்றிய போதையில் அந்தப் பெண்ணின் குறியில் க்ளிட்டை கடித்து துப்பியிருக்கிறான். கேட்கும் போது தலை சுற்றி மயக்கம் வந்தது.

தன்னை நம்பி வரும் ஒரு பெண்ணுக்கான குறைந்தபட்ச பாதுகாப்பைக் கூட தரமுடியாத அளவிற்கு முட்டாள்தனமும் கோழைத்தனமும் நிரம்பிய இவர்களைப் போன்று இன்னும் எத்தனை பேர். கூட்டாக சேர்ந்து பாலியல் வன்முறை செய்வது யதார்த்தமானது, அதுவொரு சுவையென இவர்களை எது நம்பச் செய்கிறது? பொள்ளாச்சி பாலியல் வன்முறை தொடர்பான வீடியோவை என்னால் முழுமையாய் பார்க்க முடியவில்லை. அந்தப் பெண்களின் அலறல் ஒன்றாய் நூறாய் ஆயிரமாய் எதிரொலிக்கிறது. தெரிந்த பழகிய ஒவ்வொரு பெண்களின் குரல்களும் அதன் பின்னால் இருப்பதான வேதனை மனமெங்கும் எழுந்தபடியே இருக்கிறது. பாலியல் ரீதியிலான வன்முறைக்கு இணங்க வைப்பதற்காக ஒரு இளம் பெண்ணை பெல்ட்டால் அடிப்பதும் அந்தப் பெண் அடிக்க வேண்டாமென கெஞ்சுவதும் இதெல்லாம் ஒரு சாதாரண மனிதன் செய்யக் கூடியதுதானா என்கிற அச்சத்தை உருவாக்குகிறது.

அதிலும் ‘உன்ன நம்பித்தானடா வந்தேன், லூசாடா நீ இப்டிலாம் பன்ற? ‘ என அந்தப் பெண் சொல்லும் நொடியில் வீடியோவை நிறுத்திவிட்டேன். அவள் அவனை எத்தனை நேசித்திருந்தால் இதை சொல்லி இருக்கக்கூடும். ஒரு மனிதன் தான் எதிர்கொள்ளும் எந்தப் பெண்ணையும் நேசிக்காமல் ஏமாற்றிக் கொண்டே இருக்கிறான் என்றால் பெண்கள் குறித்து வாழ்க்கை குறித்து அவனது புரிதல் தான் என்ன? இவர்கள் எப்படி தங்கள் வீட்டுப் பெண்களை தோழிகளை இயல்பாக பார்ப்பார்கள்? இந்தக் குற்றவாளிகளில் சாதாரண ஆட்களில் இருந்து பெரும் அரசியல்வாதிகள் வரை பட்டியல் நீண்டபடி இருப்பது ஒரு அதிர்ச்சியென்றால் அவர்கள் என்னென்ன காரியத்திற்கெல்லாம் இதை செய்திருக்கிறார்கள் என்பதை கொஞ்சம் நெருங்கி விசாரித்தால் அதைவிடவும் அதிர்ச்சியாக இருக்கிறது.

பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு நண்பருடன் இது குறித்து பேசிக் கொண்டிருக்கையில் இந்த கேங் பொள்ளாச்சியின் முக்கிய பிரமுகர் ஒருவரின் மனைவியை இதேபோல் தங்கள் வலையில் வீழ்த்தி வீடியோவும் எடுத்து அதிலிருந்து மீள வேண்டுமானால் எண்பது லட்ச ரூபாய் தர வேண்டுமென மிரட்டி வாங்கி இருக்கிறார்கள். இதுவெறும் சாம்பிள்தான். இதுபோல் ஏராளமான ப்ளாக் மெயில்கள் ஒருபுறமென்றால் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்களை அரசியல்வாதிகளுக்கு இரையாக்குவது இன்னொரு வகை. இதில் ஆளுங்கட்சியின் பல முக்கியஸ்தர்களும் அடக்கம்.

பெண்களை இத்தனை துட்சமாக நினைக்கும் ஒரு கட்சி மாநிலத்தை ஆண்டால் மயிரா விளங்கும்? கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவர்கள், மாணவிகள் குடும்பப் பெண்கள் என இவர்கள் யாரையும் விட்டுவைக்கவில்லை. இத்தனையாண்டு காலம் யாரிடமும் மாட்டிக் கொள்ளாமல் இவர்களால் இதை செய்ய முடிந்திருக்கிறதென்றால் இவர்களுக்குப் பின்னால் இருந்து யாரோ பலமாக சப்போர்ட் செய்கிறார்கள் என்பதுதான் தெளிவாக விளங்குகிறது.

ஒரு சமூகத்தில் குடும்பம் அரசு யாவும் பெண்கள் குறித்த புரிதல்கள் இல்லாமல் இருப்பதை முற்றிய மனநோய் என்று சொல்வதா? கூட்டு வன்முறை என்று சொல்வதா?

ஒரு சமூகத்தில் குடும்பம் அரசு யாவும் பெண்கள் குறித்த புரிதல்கள் இல்லாமல் இருப்பதை முற்றிய மனநோய் என்று சொல்வதா? கூட்டு வன்முறை என்று சொல்வதா? இதுபோன்ற பாலியல் குற்றங்களுக்கான அதிகபட்ச தண்டனைகள் என்ன? அல்லது எப்போது இவர்களுக்கான நீதி கிடைக்கும்? தனக்கு உடமையில்லாத ஒரு பெண்ணின் உடல் மீது எல்லாவிதமான வன்முறைகளையும் செய்துவிட்டு அதுகுறித்து எந்தவிதமான குற்றவுணர்வுகளுமில்லாமல் அலையும் இவர்களோடு சேர்ந்த ஒவ்வொருவரையுமே நாம் சந்தேகிக்கத்தானே வேண்டும்.

பரஸ்பரம் புரிந்துணர்வுடன் நடக்கும் ஒவ்வொரு காதலின் மீதும் உடல் உறவுகள் மீதும் சந்தேகங்களையும் அவருவருப்புகளையும் இவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். இரண்டு பேர் பொதுவெளியில் நேசத்தோடு இருப்பதை பார்க்க முடியாதளவிற்கு சூழலை மாற்றிப் போட்டிருக்கிறார்கள். மாலை அயலகத்திலிருந்து அழைத்த நண்பர் ஒருவர் ஏன் உங்கள் தேசத்தில் மனிதர்கள் இத்தனை மனச்சிக்கல் கொண்டவர்களாய் இருக்கிறார்களென வருத்தப்பட்டார். இந்த சம்பவம் ஏற்படுத்திய பாதிப்பில் அவர் மருத்துவமனை சென்று வந்திருக்கிறார்.

300-க்கும் மேற்பட்ட பெண்கள் என பத்திரிக்கைகள் சாதாரணமாக சொல்லும் போது நமக்குத் தெரிந்த நம்மோடு இருக்கும் பெண்கள் எல்லாம் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள் என்கிற நம்பிக்கைகள் எல்லாம் உடைந்து நொறுங்குகிறது. பாலியல் குற்றங்களை புரிகிற ஆண்கள் தனியாக எங்கிருந்தோ வருகிறவர்கள் அல்ல, நம்வீட்டில் நம் தெருவில் நமக்குத் தெரிந்தவர்களில் இருந்துதான் உருவாகிறார்கள். நம்மோடு இயல்பாக பழகும் இவர்கள் எல்லோருக்கும் சகிக்கமுடியாத இன்னொரு பக்கமுண்டு. பெண்களை இத்தனை இழிவாக நடத்தக்கூடிய இவர்களால் எந்தக் குற்றங்களையும் எளிதாக செய்ய முடியும்.

பாலியல் குற்றங்களை புரிகிற ஆண்கள் தனியாக எங்கிருந்தோ வருகிறவர்கள் அல்ல, நம்வீட்டில் நம் தெருவில் நமக்குத் தெரிந்தவர்களில் இருந்துதான் உருவாகிறார்கள். நம்மோடு இயல்பாக பழகும் இவர்கள் எல்லோருக்கும் சகிக்கமுடியாத இன்னொரு பக்கமுண்டு.

நேசத்தை தேடி வந்த ஒரு பெண்ணை கூட்டு பாலியல் வன்முறை செய்து அடித்து துன்புறுத்துகிறவனை முதலில் மனிதன் என்று சொல்வது சரியா? எதிர்பாலினத்தின் மீதான பாலியல் இச்சை, காதல் இதுவெல்லாம் இயல்பான விஷயங்கள். இவை எந்தப் புள்ளியில் சாடிஸமாக மாறுகிறது. ஆயிரத்தில் ஒன்றல்ல, இலட்சத்தில் ஒரு முறைதான் பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது. பல வழக்குகள் என்னவாகின்றன என்பதே தெரியவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளின் வரிசையில் நாம் முதலாவதாக இருக்கிறோம் என்று பெருமையொடு சொல்லிக் கொள்ளலாம்.

நீங்கள் எதிர்கொள்ளும் பத்தில் நான்கு பெண்கள் ஏதோவொரு சமயம் பாலியல் அத்துமீறலை எதிர்கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம். எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்று கூடி இந்தப் பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவும் போராட வேண்டும். ஏனெனில், இந்த பிரச்சனை நம் குடும்ப அமைப்புகளின் அடிப்படியை சிதைக்கக் கூடியதொன்று. பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்படுவதோடு அவை விரைவாக விசாரிக்கப்பட்டு நீதி வழங்குவதற்கான வழிகளை உருவாக்க வேண்டும். குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச் சொல்லிக் குடுப்பதைப் போலவே, சிறு வயதிலிருந்தே பெண்களுடனான நட்பு அவர்களைப் புரிந்து கொள்வது குறித்து சரியான முறையில் கற்றுக் கொடுப்பதற்கான வழிகளை ஏற்படுத்த வேண்டும். இந்த அநீதிகளுக்குப் பின்னாலிருக்கும் ஒவ்வொருவரும் தண்டிக்கப்பட வேண்டுமென்றால் இடைவிடாத போராட்டம் மட்டுமே ஒரே தீர்வு.

ராஜசங்கீதன்:

பெண்ணை குடும்பத்தின் சொத்தாக நினைக்கும் நிலப்பிரபுத்துவ முறையும் நுகரும் பண்டமாக ஆக்கும் கார்ப்பரேட் மூலதனமும் ஒன்றிணைந்திருக்கும் காலத்தில் பெண் இன்னுமே அதிக ஒடுக்குமுறைக்கும் பிற்போக்குக்கும் ஆளாகிறாள்.

உயிரியல் ரீதியாக எழும் விருப்பங்களின் பின் பின்னப்படுகிற குடும்பத்தின் கவுரவமும் கார்ப்பரேட்டின் சுதந்திரக் கனவும் அவளுக்கான சுமைகளை அதிகமாக்குகிறது.

‘என்னை விட்டுடுங்க’ என ஒரு பெண் கதறும் சம்பவத்தின் மறுமுனையில் ‘என் மகன் நல்லவன்’ என கதறும் தாயும் நிற்கிறாள். ஒரு இழி சம்பவத்தின் இரு முனைகளிலும் பெண்ணையே கையறுநிலையில் நிற்க வைத்து வேடிக்கை பார்க்கிறது ஆண் கட்டிய சமூகம்.

பெண்ணின் உண்மையான விடுதலை குடும்பத்திலிருந்தும் நுகர்வு உற்பத்தியிலும் இருந்துதான் தொடங்குகிறது. ஆண் கட்டிய அதிகாரத்தை மறுப்பதிலிருந்துதான் தொடங்குகிறது.

அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக பேட்டி கொடுக்கும் எஸ்பி விசாரணை தொடங்கும் முன்னமே அரசியல் தொடர்பு இல்லை என அறிவிக்கும் அளவுக்கு தீர்க்கதரிசனம் கொண்டிருக்கிறார். எந்தெந்த அதிகார மட்டங்களுக்கு இந்த கோரம் நீண்டிருக்கிறது என அறியப்பட வேண்டும். மொத்தமாக இந்த அதிகார அமைப்பு கவிழ வேண்டும். கோவையின் மீசை முறுக்குகளின் கவுரவத்தை அம்பலம் ஏற்றப்பட வேண்டும்.

பெண்ணுரிமை மற்றும் விடுதலையில் அரசின் பங்கை கட்டாயமாக்க வலியுறுத்துவோம். இச்சம்பவம் சமூகத்தின் இழிவு எனில், இந்த இழிவில் பங்கெடுத்திருக்கும் ஆளும் அரசை பொறுப்பேற்க வைப்போம்.

பெண்ணின் விடுதலையே சமூக விடுதலை. ஆண், பெண் சமத்துவமே சமூகத்தின் சமத்துவம். ஆகவே வா. திரளுவோம்.

சுசிலா:

பொள்ளாச்சி பாலியல் வழக்கில், அதிர்ச்சிதரும் பல தகவல்கள் வருகின்றன. இதுல என்ன கொடுமையென்றால், 2 ஆண்டுகளுக்கு முன்பே இதைப்பற்றி புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. உள்ளூர் காவல்துறை இதனை அலட்சியமாக உதாசீனப்படுத்தியிருக்கிறது. இதை அப்போதே பரிசீலினை செய்து, விசாரிக்கப்பட்டிருந்தால், கடந்த இரண்டு ஆண்டுகள் நடந்த குற்றங்களையாவது தடுத்திருக்க முடியும். இது உண்மையில் அலட்சியமா அல்லது யாரை காப்பாற்ற அரசு மூடிமறைத்திருக்கிறது என்ற உண்மை வெளிவரவேண்டும். அரசியல் பிரமுகர்கள், பெரும்புள்ளிகள் என பலர் இதில் தொடர்புடையவர்களாக இருப்பார்கள் போல… அதனால் தான் இப்போதும் புகார் கொடுத்த உடனே, நடவடிக்கை எடுக்காமல், காலம் தாழ்த்தியுள்ளனர். புகார்கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கியுள்ளனர். புகார்கொடுத்தவர் பெயரை வெளியில் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.

இவர்கள் எப்படி நம்பி போனார்கள்’ என்ற கேள்வியை தயவுசெய்து முன்வைக்காதீர்கள்.’ நம்பிவந்த பெண்ணை இப்படி சீரழித்திருக்கிறார்களே ‘ என்ற கேள்வியை முன்வையுங்கள். அப்போது தான் உங்கள் வீட்டு ஆண்பிள்ளைகள் கொஞ்சமாவது சிந்திப்பார்கள்!

இப்போது என்னவென்றால், எதிர்க்கட்சிகள், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாகவும், தேர்தல் சமயம் என்பதாலும், இந்த நால்வரை குண்டர்சட்டத்தில் அவசரம் அவசரமாக, போட்டிருக்கிறது. மேலும், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்ட சிலமணி நேரங்களிலேயே, சிபிஐ க்கு பரிந்துரைத்திருக்கிறது தமிழக அரசு.!

ஆனால், விசாரணை நேர்மையாக நடந்தால் மட்டுமே உண்மைகள் வெளிவர வாய்ப்பிருக்கிறது. பாதிக்கபட்டபெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும், மீண்டும் இதுபோல் கொடூரக்குற்றங்கள் நடைபெறாவண்ணம் தடுக்கப்படவேண்டும்.!

கடைசியாக, சில ஆண்களுக்கும், பெண்களுக்கும், பெற்றோர்களுக்கும் :

இந்த பெண்கள் மீதும் தவறு இருக்கிறது. இவர்கள் எப்படி நம்பி போனார்கள்’ என்ற கேள்வியை தயவுசெய்து முன்வைக்காதீர்கள்.’ நம்பிவந்த பெண்ணை இப்படி சீரழித்திருக்கிறார்களே ‘ என்ற கேள்வியை முன்வையுங்கள். அப்போது தான் உங்கள் வீட்டு ஆண்பிள்ளைகள் கொஞ்சமாவது சிந்திப்பார்கள்!

இரா. முருகவேள்:

பொள்ளாச்சியில் நடந்திருப்பது ஒரு குற்றச் செயல். ஒரு குற்றக் கும்பல் தங்களது கேளிக்கைக்காகவும், அதிகாரம் படைத்தவர்களின் நுகர்வுக்காகவும், மிரட்டிப் பணம் பறிக்கவும் பெண்களைக் கொடூரமாக வதைத்து வந்திருக்கிறது.

இந்த அயோக்கியர்களோடு, விடுதிகளை நடத்துபவர்கள், தரகர்கள் என்று ஒரு வலைப்பின்னல் இதில் இயங்குகிறது. பொள்ளாச்சியில் இத்தகைய கும்பல்கள் எப்போதுமே இருந்து வந்துள்ளன என்று தோழரும் வழக்குரைஞருமான இளங்கோவன் கூறுகிறார்.

தமிழகம் முழுவதும் உள்ள இத்தகைய கும்பல்களைப் பிடிப்பதும் இக் கொடுமைக்கு முடிவுகட்டுவதுமே சமூகத்தின் முன்னுள்ள கடமை. சமூக வலைத்தளங்களில் மக்கள் வெளிப்படுத்திய கோபமே இந்த வழக்கை ஊற்றி மூட இருந்த அரசைத் தடுத்து நிறுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஒட்டு மொத்த ஆண் சமூகமும் குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டும்; எல்லோருக்கும் இதில் பொறுப்பு உண்டு; எல்லா ஆண்களும் குற்றவாளிகள் தான் என்பது போன்ற பதிவுகள் இணைந்து நிற்க வேண்டியவர்களை விலகிப் போகச் செய்யும்.

பெண்ணியம், பெண்விடுதலை என்பவை குறித்து எந்தவிதமான கருத்தும் இல்லாத, ஒருவர் கூட இந்த நிகழ்வுகளால் சீற்றம் கொண்டு போராட முன்வந்தால் அவரையும் இணைத்துக் கொள்ள வேண்டுமே தவிர சங்கடமான கேள்விகள் எழுப்புவது திரண்டு வரும் மக்கள் சக்தியை பலவீனப்படுத்தவே செய்யும்.

சாத்தியமான அனைவரையும் இணைப்பதும், எதிரிகளைத் தவிர மற்ற அனைவரும் நண்பர்கள் என்பதுமே ஐய்க்கிய முன்னணி தந்திரம். அதுவே மக்கள் விரோதிகளைத் தனிமைப்படுத்தும்.

கொடுங்குற்றவாளிகளைத் தண்டிப்பதும் தடுத்து நிறுத்துவதுமே இப்போதுள்ள பணி. ஆண் – பெண் உறவுகளில் சமத்துவமும் முழுமையான ஜனநாயகமும் எந்த ஒரு நல்ல சமூகத்துக்கும் முக்கியமான இலட்சியமாகும். இரண்டும் ஒரு நீண்ட நெடிய பாதையில் அடுத்தடுத்த கட்டங்கள். ஒன்றிற்காக ஒன்றைப் புறக்கணிக்க முடியாது.

இளங்கோ கிருஷ்ணன்:

“நான் எதுக்கு வெட்கப்படணும்; நீங்கதான் வெட்கப்படணும்… என் மகன் நிரபராதி” என்று பொங்குகிறார் திருநாவுக்கரசின் தாய். உடனே ஆவேசமாக அவரைத் திட்டித் தீர்க்கிறார்கள் இங்கே. மறுபுறம் புனிதமான தாய் பாசம் அதைக் கொச்சைப்படுத்தாதீர்கள் என்கிறார்கள் வேறு சிலர். நம் சமூகம் இதற்கு மேல் சீழ்பிடித்து நாற முடியாது.

அந்தத் தாய் செய்தது எவ்வகையிலும் ஏற்புடையது இல்லை நமக்கு. ஆனால், வேறு எப்படி அவர் நடப்பார். என் மகன் குற்றவாளி எனக் கூனிக்குறுகி அழுவார் என்று நினைத்தீர்களா? அதெல்லாம் நமது சினிமாக்களிலும் நாவல்களிலுமே சாத்தியம். நடைமுறையில் பெரும்பாலான தாய்மார்கள் இங்கு இப்படித்தான். ஜெயிலுக்குள் இருக்கும் மகனுக்கு பீடிக்கட்டு கொடுத்துவிடுவதெல்லாம் இங்கு சர்வ சாதாரணம்.

அவளுக எதுக்கு வந்தாங்க என்று நேற்று சில மேதைகள் கேட்டன அல்லவா? அதையேதான் தாய் மனமும் கேட்கும். நம் சமூகத்தின் குரூரமான எதார்த்தம் இது. தாய் என்று இல்லை. அந்தக் குற்றவாளி குடும்பத்தினர் அனைவரின் மனநிலையுமே இதுவாய் இருந்தாலும் நாம் வியக்க ஒன்றும் இல்லை. அவ்வளவு சமூக சுரணையற்று வாழப் பழகிவிட்டன நம் குடும்பங்கள்.

குடும்பத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம். குடும்பமும் தனி மனிதனுக்காக எதையும் செய்யும் எனும் ஏற்பாட்டில் சமூகம் என்பதன் விழுமியங்கள் எல்லாம் பொய்த்துவிடும்.

அறமார்ந்த விழுமியங்களை போதித்து தம் பிள்ளைகளை வளர்க்கும் குடும்பங்களும் இருக்கவே இருக்கின்றன. ஆனால், ஒரு பிரச்சனை என்று வந்தால் அந்தக் குடும்பம் நீதியின் பக்கம் நிற்பது என்பது எல்லாம் அரிதான குணங்களாகிவிட்டன. எப்படியாவது தன் குடும்ப உறுப்பினரைக் காத்தால் போதும் என்றே பெரும்பாலான குடும்பங்கள் நினைக்கின்றன.

சமூகம் x குடும்பம் என்று இரு எதிர்வுகள். இதற்கு இடையிலான உறவுகளை எப்படி சிவிக் முதிர்ச்சியோடு கையாள வேண்டும் என்பதை எல்லாம் நாம் போதுமான அளவு வளர்க்கத் தவறிவிட்டோம். தனி மனிதர்களை, குடும்பங்களோடு இணைத்து, குடும்பத்தை சாதியோடு இணைத்து, அவற்றை மதங்களோடு இணைத்து குடும்பம் என்ற அமைப்பையே சீர்குலைத்து வைத்திருக்கிறோம்.

சமூகம் என்பது குடும்பத்திலிருந்து ஒருவன் கிளம்பிப் போய் வேட்டையாடி வருவது. குடும்பத்தால் வென்றெடுக்கப்பட வேண்டியது என்ற மனநிலையை ஆழமாக வளர்த்துக்கொண்டுள்ளோம்.

குடும்பம் என்பதன் விரிவான வடிவமே சமூகம். சமூகத்தின் மீச்சிறு அலகே குடும்பம் என்பதை எல்லாம் உணர்வுப்பூர்வமாய் நாம் புரிந்ததே இல்லை.

படிக்க:
பொள்ளாச்சி மாணவிகளை சீரழித்த அதிமுக பொறுக்கிகளை தூக்கிலிடு ! தமிழகமெங்கும் போராட்டம் !
கரூர் : காவிக் கும்பலை கதறவிட்ட மக்கள் அதிகாரம் டீ – சர்ட் !

திருநாவுக்கரசின் தந்தை ஒரு லேவாதேவித் தொழில் செய்பவராம். இன்னொரு குடும்பத்திடமிருந்து அராஜகமாய் அடித்துப் பிடிங்கி வட்டிக் காசை கொண்டு வந்து தரும் கணவனிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல் அதை வாங்கி பீரோவில் வைத்துப் பூட்டும் ஒரு மனைவிக்கு சக குடும்பம் பற்றி என்ன உணர்வு இருக்கும்.

இன்னொரு குடும்பத்தின் உணவுத்தட்டிலிருந்து தன்னுடைய செல்வத்தைத் திரட்டிக்கொண்டு வெற்றியுடன் வீடு திரும்பும் குடும்பத் தலைவனுக்குத்தான் என்ன விழுமியம் இருக்க முடியும். அதை அவர்கள் வெளிப்படுத்தவில்லை என ஆதங்கப்பட…

குடும்பத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம். குடும்பமும் தனி மனிதனுக்காக எதையும் செய்யும் எனும் ஏற்பாட்டில் சமூகம் என்பதன் விழுமியங்கள் எல்லாம் பொய்த்துவிடும்.

வி. சபேசன்:

முன்னர் தமிழ்ச் சினிமாக்களில் ஒரு ரவுடிக் கதாநாயகன் மீது கதாநாயகிக்கு நல்லெண்ணம் வர வேண்டும் என்பதற்காக ஒரு வசனத்தை வைப்பார்கள். ‘விபச்சாரியைக் கூட அனுமதி இல்லாமல் நான் தொட மாட்டேன்’ என்று கதாநாயகன் வசனம் பேசுவான். இதைக் கேட்டதுமே கதாநாயகிக்கு அவன் மீது காதல் வந்து விடும்.

ரஜினிகாந்த் நடித்த ‘தங்க மகன்’ படத்தில் ஒரு காட்சி வரும். பூர்ணிமா ரஜினிகாந்தை கேலி செய்து பாட்டுப் பாடுவார். ‘ஆம்பிளையோ இவன் சோதிக்க வேணும்’ என்று வரி வருகின்ற போது ரஜினிகாந்த் கொதித்து எழுவார். பூர்ணிமாவை வன்புணருவதற்காக துரத்துவார். புதைகுழியில் ரஜினிகாந்த் விழுந்து விட, பூர்ணிமா அவரைக் காப்பாற்றி, தன்னை வன்புணரத் துரத்தியது நியாயம்தான் என்றும் சொல்லி, ரஜினி மீது காதல் வசப்படவும் செய்வார்.

ஒரு பெண்ணுக்கு காதலையும் காமத்தையும் தேடவும், நாடவும் முற்று முழுதான உரிமை இருக்கிறது. இந்தத் தேடல்கள் அவளிடம் அத்துமீறுகின்ற உரிமையை ஆணுக்கு வழங்கி விடாது.

இப்பொழுதெல்லாம் மேற்படியான வசனங்களோ, அல்லது காட்சிகளோ தமிழ்ச் சினிமாவில் வருவது இல்லை. பெண்ணுக்கு அவளுடைய உடல் சார்ந்து இருக்கின்ற உரிமை பற்றிய சிந்தனை தமிழ் சமூகத்தில் வளர்ந்திருப்பதே அதற்குக் காரணம் என்று நம்பியிருந்தேன்.

ஆனால், பொள்ளாச்சி சம்பவத்திற்கு பெண்களை குற்றஞ்சாட்டுபவர்களும் பரவலாக இருப்பதைப் பார்க்கின்ற போது, இந்தக் கூமுட்டைகள் இன்னும் திருந்தவில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

ஒரு பெண்ணுக்கு காதலையும் காமத்தையும் தேடவும், நாடவும் முற்று முழுதான உரிமை இருக்கிறது. இந்தத் தேடல்கள் அவளிடம் அத்துமீறுகின்ற உரிமையை ஆணுக்கு வழங்கி விடாது. அவளுடைய உடல் மீதான முழு உரிமையையும் அவளே கொண்டிருக்கிறாள்.

காதல், காமம், நட்பு, ஈர்ப்பு என்று ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு பெண் ஒரு ஆணுடன் பொது இடத்திலோ, தனியிடத்திலோ சந்திப்பது அவளுடைய உரிமை.

பெண்ணுக்கு உள்ள இந்த உரிமைகளை சமூகம் ஏற்கின்ற போதுதான் பொள்ளாச்சி போன்ற சம்பவங்கள் குறையும். இந்த உரிமைகளை சமூகம் ஏற்கவில்லை என்பதையே பொள்ளாச்சியின் குற்றவாளிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்தி, பெண்களை தொடர்ந்தும் மிரட்டி பணிய வைக்கின்றார்கள். பெண்கள் பணிந்து போகின்றார்கள். அல்லது தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட பெண்கள் மீது குற்றம் சாட்டுபவர்கள் அந்த பெண்களை வன்கொடுமை செய்தவர்களுக்கும், செய்பவர்களுக்கும் துணை நிற்கின்ற குற்றத்தை செய்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ளல் வேண்டும்.

கிருஷ்ண பிரபு:

துயர் நடுவில்…

சக மனிதர்களை உடலளவிலோ மனதளவிலோ காயப்படுத்தியும் கட்டாயப்படுத்தியும் காரியம் சாதித்தல் அரக்கக் குணத்திற்கு ஒப்பானது. நாம் முகமூடி அணிந்த மனிதர்களுடன்தான் உறவாடுகிறோம்.

பத்திரிகை, சினிமா, இலக்கியம், நுண்கலைகள் என எல்லா இடத்திலும் அத்துமீறல்கள் இருக்கிறது.

பாலியல் இன்பம் என்பது விருப்பத்துடன் சேர்த்து சம்மதத்தையும் கோரி நிற்பது. அதை அதிகாரப் படிநிலை கொண்டு அபகரிக்க நினைப்பதும் மிரட்டுவதும்தான் பிரச்சனையாகிறது. பொள்ளாட்சி சம்பவம் #MeToo குரல்களின் நீட்சி.

200 பெண்களின் 1500 ஆபாசக் காணொளிகள் என்பது மிரள வைக்கும் செய்தியாக இருக்கிறது. இந்த ஏழு ஆண்டுகளில் அதில் எத்தனை எத்தனைக் காணொளி வீடியோக்கள் நம் வாட்ஸ் ஆப் குழுமங்களில் வந்து போனதோ, தெரியவில்லை.

எந்த விதப் பயிற்சியும் மேற்பார்வையும் பாதுகாப்பும் முதிர்ச்சியும் அளிக்காமல்தான் நாம் ஒரு தலைமுறைக்கே டிஜிட்டல் ஆயுதத்தைக் கைகளில் திணித்திருக்கிறோம்.

கைமீறிப் போகும் விஷயங்களைக் கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கைதான் பார்க்க முடிகிறது. பொள்ளாட்சி சம்பவம் பெருந்துயர்.

தொகுப்பு:

2 மறுமொழிகள்

  1. குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும் தான் .. அதில் மாற்று கருத்தில்லை .. எனினும், பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் உள்ள தவறுகளையும் சுட்டி காட்டி தான் ஆக வேண்டும்.. இது Victimizing செய்வது கிடையாது , இனி இது போன்று யாரும் ஏமாற கூடாது என்பதற்கு தான் இதனை சொல்வதற்கு காரணம்.

    2 லட்சம் போடுங்கள் இரண்டே ஆண்டுகளில் 5 லட்சமாக திருப்பி தருகிறோம் என்கிற நிதி நிறுவன ஆசை வார்த்தை மோசடிகளில் அப்பாவி மக்கள் தான் பாதிக்க படுகிறார்கள், ஏமாற்றுபவனுக்கு தண்டனை கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம் .. ஆனால் இனி ஏமாறாமல் இருக்க, மக்கள் என்ன செய்தார்கள் எப்படி வலையில் விழுந்தார்கள் என்பதை ஒரு விமர்சனமாக அவர்கள் மீது வைக்க தான் ஆக வேண்டும் .. அது அவர்களை போல வேறு யாரும் இனி ஏமாற கூடாது என்கிற நல்லெண்ணத்தில் தான் சொல்ல படுகிறது. அதனை போன்று தான் இதுவும் … விழுப்புணர்வை பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தான் தொடங்கவும் முடியும் உருவாக்கவும் முடியும் ..

    வாச்சாத்தி சம்பவத்திலோ அல்லது டெல்லி நிர்பயா வழக்கிலோ யாரவது பாதிக்கபட்டவர்களை குறை கூறினார்களா??? ஈழத்தில் போர் நடந்த பொழுது சிங்களபடை தமிழ் பெண்களை குதறி எடுத்த பொழுது அல்லது காஸ்மீரில், வடகிழக்கு மாநிலங்களில் இந்திய பாதுகாப்புப்படை பெண்களை பாலியல் வல்லுறவு செய்து ஆட்டம் போட்ட போது யாரவது பாதிக்கபட்டவர்களை குறை கூறினார்களா இதில் மட்டும் விமர்சனம் செய்கிறார்கள் என்றால் அதற்க்கு காரணம், தவறு இரண்டு பக்கமும் இருக்கின்றது அதில் பெண்கள் பக்கம் 30 விழுக்காடாவது இருக்கவே செய்கின்றது .. இது குறை சொல்லவது கிடையாது, மாறாக பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தான் சமூகம் தனக்கான விழிப்புணர்வை கற்றுக் கொள்ள முடியும் .. இன்னும் கொஞ்ச நாளில் மக்கள் இந்த விஷயத்தை மறந்து தேர்தல் ஜூம்லாவில் தங்கள் பார்வையை திருப்பி விடுவார்கள் .. அதற்குள் இதை பற்றி அனைத்து கோணங்களிலும் ஆய்வு செய்தே மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி தான் தீர வேண்டும் ..நன்றி ..

  2. இதே வினவு தளத்தில் ஆண்டாளை பற்றி எந்தளவுக்கு கீழ்த்தரமாக பேச முடியும்மொ அந்தளவுக்கு கீழ்த்தரமாக பேசியது நினைவுக்கு வருகிறது. இவர்கள் எல்லாம் பெண் உரிமையை பற்றி பேசுவது என்பது தான் காலத்தின் கொடுமை 🙁

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க