“புள்ளைகளுக்கு அறிவில்லையா? படிக்கிற புள்ளைகதானே? எவனோ கூப்புட்டா கார்ல ஏறிடறதா?

இதுக்குதான் புள்ளைகளுக்கு செல்போனே குடுக்கக்கூடாது. எல்லாம் இந்த செல்போன், வாட்ஸ்அப், பேஸ்புக்கால வந்ததுதான்.

அப்பா – அம்மாக்கு புத்தியில்ல? புள்ளைக என்ன செய்யுது, எங்க போகுது வருது, புள்ளைககிட்டே என்ன மாதிரி மாற்றம் தெரியுதுன்னு கவனிக்க வேணாமா?

இதுக்குத்தான் புள்ளைகளை காலாகாலத்துல கட்டிக் குடுத்துடணும்கிறது. சும்மா சுதந்திரம் அது இதுன்னு பேசறதைவிட, படிப்புக்குச் செலவு செய்யற காசுல கல்யாணத்தைப் பண்ணி வச்சுட்டுப்போலாம்.”

ப்ளா… ப்ளா… வாதங்களுடன் உபதேசங்கள் நிறையவே வரும். இவ்வளவு உபதேசங்களும் சொல்கிற யாரையும் பாருங்கள் – ஆண் பிள்ளைகளை உருப்படியாக வளர்க்க வேண்டும் என்று சொல்லவே மாட்டார்கள்.

இதுபோன்ற குற்றச் செயல்களில் விக்டிம்களுக்குத்தான் உபதேசங்கள் குவியும். போகட்டும்…

செல்போனைக் கொடுக்கும்போதே செல்போனை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுக்க வேண்டியதுதான். குட் டச் – பேட் டச் மாதிரி சமூக வலைதளங்கள் குறித்தும் எச்சரிக்க வேண்டியதுதான். பெற்றோராக பிள்ளைகளை கவனிக்கவும் வேண்டியதுதான்.

விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள், குழு உரையாடல்கள் நடத்துங்கள். பாலியல் கல்வி கொடுங்கள். இவை எல்லாம் எப்போதும் செய்ய வேண்டிய விஷயங்கள்தான் செய்யுங்கள்.

ஆனால் இப்போது பேச வேண்டியது – அந்தக் கொடூரக் குற்றவாளிகளை கூண்டோடு மொத்தமாகக் கைது செய்ய வேண்டும், ஆளும்கட்சிக்காரன் என்பதற்காக காவல்துறை மழுப்பல் வேலையில் ஈடுபடாமல் இருக்க நிர்ப்பந்திக்க வேண்டும். வெட்கம்கெட்ட அரசாங்கத்தையும், இதைப்பற்றி கண்டுகொள்ளாமல் கள்ளமவுனம் சாதிக்கும் ஊடகங்களையும் உரித்துத் தொங்க விட வேண்டும். குற்றவாளிகளை சட்டத்தின் முன்னால் நிறுத்தி கடும் தண்டனைகளை வாங்கித்தர வேண்டும்.

படிக்க:
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?
நுகர்வு வெறி ஏவிவிடும் பாலியல் வன்கொடுமை

ஏனென்றால், இது வெறும் பாலியல் குற்றம் மட்டுமல்ல. காலம் காலமாக நிலவிவரும் சமூக வழக்கங்களிலிருந்தும் தளைகளிலிருந்தும் விடுபட்டு இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக எழுந்து நிற்க முயன்று கொண்டிருக்கும் பெண் சமூகத்தை, மேலே குறிப்பிட்ட வாதங்களால் மீண்டும் பழைய குழிக்குள்ளேயே தள்ளிவிடக்கூடிய படுபாதகச் செயல்.

உண்மையில் சொல்லப்போனால், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பதே சரியாக இருக்கும். ஆனால் சிபிஐ-யை ஆட்டுவிக்கிற பாஜக அரசும், தமிழக ஆட்சியில் இருக்கும் அதிமுக-வும், இந்த கொடூரச் சம்பவங்களின் பங்குதாரர்களாக இருக்கும் ஜாதிக் கட்சியினரும் கூட்டாக இருக்கும்போது சிபிஐ வேண்டும் என்று கோருவதில் பயன் விளையுமா என்ன?

நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் விசாரணை நடந்தால்தான் முழு உண்மைகள் வெளிவரும்.

#Arrest_Pollachi_Rapists

நன்றி : ஃபேஸ்புக்கில் ஷாஜகான்