நீதிமன்றத்தில் அல்ல ! போராட்டத்தில்தான் தீர்வு ! | வழக்கறிஞர் பாலன் உரை | காணொளி

ஒருபுறத்தில் மக்களை ஒடுக்குவதற்கான சட்டங்களை அங்கீகரிக்கும் நீதிமன்றம், மறுபக்கத்தில் அனைத்து மக்கள் நலத் திட்டங்கள் ரத்து செய்யப்படுவதையும் அங்கீகரிக்கிறது - வழக்கறிஞர் பாலன் உரை

திருச்சியில் கடந்த பிப்ரவரி மாதம் 23 அன்று, கார்ப்பரேட் – காவி பாசிசம் – எதிர்த்து நில் ! மாநாட்டில் கலந்து கொண்டு பெங்களூரு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தோழர் பாலன் அவர்கள் உரையாற்றுகையில்,

”ஓட்டுப் போடும் அந்த 5 நொடிகளுக்கு மட்டுமே நமக்கு வழங்கப்படும் இந்த 5 வினாடி ஜனநாயகத்தில், சட்டத்தின் ஆட்சி துப்பாக்கியின் ஆட்சியாக மாறிவிட்டது. இந்தியா முழுவதும் கடந்த 5 ஆண்டுகளாக இதுதான் நிலைமை. மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் இதே நிலைமைதான் கடந்த 60 ஆண்டுகளாக நீடிக்கிறது. அங்கு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இச்சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்தச் சட்டம் அரசியல் சாசனத்தின்படி செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஏகாதிபத்தியங்களுக்கு இந்தியாவை சூறையாட அனுமதிக்கும் தனியார்மயம் தாராளமயம் நடைமுறைப்படுத்தப்பட்ட போது, தடா சட்டம் அமல்படுத்தப்பட்டது. போராடியவர்களை, செயற்பாட்டாளர்களை ஒடுக்க அச்சட்டத்தில் போலீசுக்கு கட்டற்ற அதிகாரம் வழங்கப்பட்டது, இந்தச் சட்டமும் இந்தியாவின் அரசியல் சாசனத்தின்படி செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

படிக்க:
♦ பாசிசத்தின் இயற்கைக் கூட்டாளிதான் பாஜக | தோழர் மருதையன் உரை | காணொளி
♦ விரைவில் வெளிவருகிறது ! கார்ப்பரேட் – காவி பாசிசம் புதிய நூல் !

இந்தச் சட்டம் காலாவதியானதும், இதன் சரத்துகளை அப்படியே கொண்ட MCOCA, KCOCA,RCOCA, GCOCA என்பது போன்ற மாநிலந்தழுவிய ஒடுக்குமுறைச் சட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன. அதன் பின்னர், வாஜ்பாயி ஆட்சிக்காலத்தில் பொடா சட்டம் அமல்படுத்தப்பட்டது. காங்கிரசு கட்சி தான் ஆட்சிக்கு வந்தால் பொடாவை ரத்து செய்வதாகக் கூறியது. ஆட்சிக்கு வந்ததும் பொடாவை நீக்கி விட்டு ஊபா சட்டத்தைக் கொண்டுவந்தது. இன்றுவரை அச்சட்டம் நடைமுறையில் உள்ளது. மக்களுக்காக களத்தில் நிற்பவர்கள் மீது இன்று வரை இத்தகைய கருப்புச் சட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன.

ஒருபுறத்தில் மக்களை ஒடுக்குவதற்கான சட்டங்களை அங்கீகரிக்கும் நீதிமன்றம், மறுபக்கத்தில் அனைத்து மக்கள் நலத் திட்டங்கள் ரத்து செய்யப்படுவதையும் அங்கீகரிக்கிறது. இவை அனைத்தும் ஒன்றை மட்டுமே நமக்கு அப்பட்டமாகச் சொல்கின்றன. நீதிமன்றத்தில் தீர்வு என்றும் கிடைக்காது. மாறாக வீதியிலேதான் தீர்வு. ஆகவே கார்ப்பரேட் – காவி பாசிசத்தை முறியடிக்க வீதியில் இறங்கிப் போராடாமல் தீர்வு இல்லை” என்றார்.

முழு உரையையும் காண …

பாருங்கள் ! பகிருங்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க