தீஸ்தா செதால்வாட் : அரசியலமைப்புச் சட்டத்தின் காலாட்படை வீரர் – பீட்டர் துரைராஜ்

“Foot Soldier of the Constitution- A Memoir’ என்ற நூலை Left word Books வெளியிட்டுள்ளது. தீஸ்தா செதால்வாட் எழுதிய இந்த நூலின் தமிழாக்கத்தை ‘நினைவோடை – அரசியலமைப்புச் சட்டத்தின் காலாட்படை வீரர்’ என்ற பெயரில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. ச. வீரமணி – தஞ்சை ரமேஷ் மொழிபெயர்த்து உள்ளனர்.

தீஸ்தா செதால்வாட்டின் கொள்ளுதாத்தா ஜாலியன் வாலாபாக் படுகொலையில் ஜெனரல் டையரை குறுக்கு விசாரணை செய்தவர். இவருடைய தாத்தா எம்.சி செதால்வாட் இந்திய அரசாங்கத்தின் முதல் அரசு வழக்கறிஞர். ஒரு அரசு வழக்கறிஞர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தவர். இவருடைய நடவடிக்கையால் டி.டி.கிருஷ்ணமாச்சாரி (முந்த்ரா ஊழல்) செய்த செயல்கள் விமர்சிக்கப்பட்டன. இவருடைய அப்பா (அடுல் செதால்வாட்), பால்தாக்கரே மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று பொது நல வழக்கு தாக்கல் செய்தவர். இப்படிபட்ட பாரம்பரியத்திற்குச் சொந்தக்காரர்தான் தீஸ்தா செதால்வாட். இந்த நூலில் இவருடைய தன்வரலாறு (அவை சாகசங்கள்) எழுதப்பட்டுள்ளது. ‘வங்காள தேசத்தில் எல்லைகளைத் தாண்டி அச்சமின்றி பாயும் ஓர் ஆறு’ என்பதுதான் இவருடைய பெயர்காரணம்.

இவருடைய நினைவுக் குறிப்புகள் என்பது ஒவ்வொரு குடிமகனோடும் தொடர்பு கொண்டவை. இவர் எழுதியது முதலில் இந்தியா டுடே – இதழில், அவருடைய 14 ம் வயதில், வாசகர் கடிதம் பகுதியில் வெளியாகிறது; பின்னர் கல்லூரி மலரில் வெளியாகிறது. தி டெய்லி, பிசினஸ் இந்தியா, இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல இதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றி இருக்கிறார். அதனால்தானோ என்னவோ இந்த நூல் செறிவாக இருந்தாலும் படிக்க எளிதாக இருக்கிறது; வார்த்தைகள் வீணடிக்கப்படவில்லை.

1984- ம் ஆண்டு இந்திரா காந்தி இறந்த போது 3000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதில் குற்றவாளிகள் முறையாக தண்டிக்கப்பட்டு இருந்தால் 1993-ல் மும்பை கலவரம் நடைபெற்றிருக்காது. அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு இருந்தால் 2002 குஜராத் கலவரங்கள் நடைபெற்று இருக்காது. நமது நாட்டிலுள்ள அரசு இயந்திரங்கள், சிறுபான்மை ஆணையம், மனித உரிமை ஆணையம், நீதிமன்றங்கள், சட்டமன்றங்கள் போன்ற அமைப்புகளின் ‘திறன்’ இது போன்ற சமயங்களில்தான் தெரியவருகின்றன. குடிமக்களை பாதுகாப்பதில் இந்த அமைப்புகள் ஆற்றியுள்ள பங்கு என்ன? குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வாங்கித் தருவதில் இந்த அமைப்புகளின் திறன் எத்தகையது? இது குறித்த பார்வையை இந்த நூலைப்படிப்பதன் மூலம் ஒருவர் பெற இயலும்.

ராஜஸ்தான் வறட்சி, சீக்கியர் படுகொலை என இவரது செயல்பாட்டில் ஆரம்பம் முதலே ஒரு தொடர்ச்சி தெரிகிறது. மும்பைக் கலவரம் குறித்தும், குஜராத் கலவரம் குறித்தும் இவர் கொடுக்கும் சித்திரம் வித்தியாசமானது. இந்த நூலை அவசியம் படிக்க வேண்டும். ‘நீதிமன்றத் தீர்ப்புகளின் மீது சிறுநீரை கழிப்பேன்’ என்று கூறிய பால்தாக்கரே மீது அரசு எடுக்கவில்லை. இவருடைய தந்தை அடுல் பொதுநல வழக்கு தாக்கல் செய்கிறார். நீதிமன்றம் அவரை விடுவிக்கிறது. முஸ்லிம்களுக்கு எதிராக பால்தாக்கரே சொல்லுவதை முதல் பக்கத்தில் வெளியிடும் பத்திரிகைகள் இருக்கும்போது ஜனநாயகத்தை பாதுகாப்பது எப்படி? ஸ்ரீ கிருஷ்ணா ஆணையம் அளித்த பரிந்துரைகளை காங்கிரஸ் அரசும் அமலாக்கவில்லை. இதனால் நமது ஜனநாயக அமைப்புகளின் தோல்வி வெளிப்படவில்லையா?

கோத்ரா ரயில் சம்பவத்தினால்தான் பிப்ரவரி 28-ல் 2002-ல் குஜராத் கலவரம் தன்னெழுச்சியாக நடந்தது என்று சொல்லப்படுகிறது. அப்படி இல்லை என்று நிரூபிக்கிறது இந்த நூல். 2001 -ல் குஜராத் மாநில இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வி அடைந்தவுடன் கொண்டு வரப்பட்டவர்தான் நரேந்திர மோடி. 2002 -க்கு முன்னரே ‘முஸ்லிம் மாணவர்கள் ரம்ஜான், பக்ரீத் போன்ற நாட்களில் தேர்வு எழுத வேண்டி இருந்தது’. ‘போரா, கோஜா பிரிவு முஸ்லீம்களின் வர்த்தகத் துறை வெற்றியினால் பொறாமை உருவானது.  பொறுப்பு ஏற்றுக் கொள்ளாத, பெயரிடப்படாத , விஷத்தை கக்கும் துண்டறிக்கைகள் மூலம் தொடர்ந்து இனப்பகை கட்டமைக்கப்பட்டு வந்தது. முஸ்லிம்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில்தான் வசிக்க முடியும் என்ற தற்காப்பு மனநிலைக்கு வந்து விட்டனர். சமையல் எரிவாயு வன்முறையாளர்களுக்கு எப்படி கிடைத்தது. முஸ்லிம்கள் தங்கியிருந்த இடங்கள் எப்படி துல்லியமாக தாக்கப்பட்டன என்ற விபரங்களை எந்த விசாரணை அமைப்புகளும் கண்டு கொள்ள வில்லை. குஜராத் வன்முறைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள், அரசியல்வாதிகளைக் குறிப்பிட்டுக் காரண காரியங்களை விளக்கி விசாரிக்கச் சொல்லுகிறார்.

படிக்க:
நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்
பொள்ளாச்சி : ஃபேஸ்புக் பயன்பாடுதான் பெண்களுக்கு பிரச்சினையா ?

உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் உள்ள அதிகாரிகள் எப்படி குஜராத் அரசிடம் இருந்து இலட்சக் கணக்கில் பணப்பலன்களை பெற்றனர். எப்படி குற்றவாளிகளை தப்பிக்க விட்டனர். ஆவணங்களை, தொலைபேசித் தகவல்களை கண்டுகொள்ளாமல் விட்டனர். குற்றவாளிகளை விட , உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவில் இருந்த ‘ஆர்.கே .ராகவன்கள்’ போன்ற அதிகாரிகள் மீதுதான் நமக்கு கோபம் வருகிறது.

இவையெல்லாம் ஏதோ குஜராத்தில் மட்டும் நடக்கிறது என்று எண்ணிவிட வேண்டாம். இதுதான் மற்ற இடங்களிலும் நடக்கும்.

குஜராத் கலவரம். (கோப்புப் படம்)

பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட தீஸ்தா எடுத்து வைத்த முயற்சிகளுக்கு இந்த சமூகம் அவரைக் கோவில் கட்டி கும்பிட வேண்டும். எவ்வளவு அவதூறுகள். வழக்குகள். உயிரைப் பணயம் வைத்து அவர் செய்த பல விஷயங்களை அரசியல்கட்சிகள் கூட செய்யவில்லை. இவை அனைத்தும் இந்த நூலில் விவரிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் மோடி பிரதமராகிறார். விட்டுவிடுமா அரசாங்கம். இவரையும் , இவரது கணவரையும் பண மோசடி வழக்கில் கைது செய்ய முனைப்பு காட்டுகிறது. அவரை கைது செய்ய முனைந்த தருணங்களுக்கும், அவர் பாதிக்கப்பட்டோர் சார்பாக தாக்கல் செய்த வழக்குகள் விசாரணைக்கு வந்த சமயங்களுக்கும் உள்ள தொடர்பை காட்டுகிறார். அரசு எத்தகைய இழிசெயல்களில் ஈடுபட்டு இவரை அவதூறு செய்கிறது என்பதை சொல்லுகிறார்.

தன் கணவர் ஜாவித்தோடு இணைந்து வெளியிட்டு வரும் ‘கம்யூனலிசம் கம்பாட் இதழ் பற்றியும் இந்த நூல் சொல்லுகிறது. தான் வளர்ந்த சூழல், தன்னை உருவாக்கிய ஆளுமைகள் பற்றி ‘வேர்கள்’ அத்தியாயத்தில் கூறுகிறார்.

இவருடைய முயற்சியானால்தான் சட்ட மன்ற உறுப்பினராக இருந்து, பின்னர் அமைச்சரான மாயா கோட்னானி, பஜ்ரங் தளத்தைச் சார்ந்த பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட பலர் தண்டிக்கப்பட்டு உள்ளனர். (எந்தக் கொடுங் குற்றத்திற்கும் இவர்கள் மரண தண்டனை கோரவில்லை)

இதில் சம்மந்தப்பட்ட மற்ற குற்றவாளிகள் தப்பி இருக்கலாம்; அதிகாரத்தை அடைந்து இருக்கலாம். ஆனால், தீஸ்தா செதால்வாட் நடத்திக் கொண்டு இருப்பது ஒரு நெடிய போராட்டம். அது நிவாரண முகாமில் உள்ளவர்களுக்கு ரேஷன் வாங்கித் தருவதாக இருந்தாலும் சரி; மற்ற அமைப்புகளை நீதி கேட்கும் நெடும் போராட்டத்தில் ஈடுபடுத்துவதாக இருந்தாலும் சரி; இந்த நூல் ஒரு வகையில் இதிகாசமே . ராஜூ ராமச்சந்திரன், இந்திரா ஜெய்சிங், வி.ஆர்.கிருஷ்ண அய்யர், நீதிபதி எச்.சுரேஷ் ,ஜாகிரா ஷேக், மிகிர் தேசாய் போன்ற பலரைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன.

படிக்க:
தீஸ்தா நேர்காணல் : மோடியின் குற்றம் மறுக்க முடியாத ஆதாரம்
தீஸ்தா செதல்வாட் கைது முயற்சி : பாசிச மோடியின் பழிதீர்க்கும் வெறி !

குடிமக்களின் உயிர் ,உடமைகளை பாதுகாத்தற்காகவே இடமாற்றம், பதவி உயர்வு, ஓய்வூதியம் என பல வழிகளில் இன்னல்களைச் சந்தித்த அதிகாரிகள்; அதற்கு நேர் விரோதமான மற்றொரு வகை அதிகாரிகள், அவர்கள் அடைந்த பலன்கள் எல்லாம் குறிப்பிடப் பட்டுள்ளன.

ஜனநாயகத்தை வலிமைப் படுத்துவதில் இந்த நூல் முக்கியப் பங்காற்றும். பாரதி புத்தகாலயம் ஒரு முக்கியமான அரசியல் கடமையை நிறைவேற்றி இருக்கிறது. இது ஒரு முக்கியமான கையேடு என்பதில் ஐயமில்லை.

  • வெளியீடு – பாரதி புத்தகாலயம்
  • பக்கம் – 231
  • விலை: ரூ.200
  • இணையத்தில் வாங்க : thamizh books


கட்டுரையாளர்: பீட்டர் துரைராஜ்
நன்றி : The times tamil

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277