பொதுவாக ஒரு சராசரி தமிழர் தனது 30 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் நீரிழிவு தனக்கிருப்பதை அறிந்து கொள்கிறார். ஆக, மீதம் இருக்கும் தனது வாழ்நாளை நீரிழிவோடு தான் அவர் கழிக்க நேரிடுகிறது.

இதில் பலருக்கும் பின்வரும் நான் சொல்லும் வழக்கம் பொருந்தும் என்று நினைக்கிறேன்:

  • முதல் ஐந்து வருடம் : ஒரு மாத்திரை சாப்பிட்டாலே சர்க்கரை அளவுகள் குறைந்து நார்மலாக இருக்கும்.
  • அடுத்த ஐந்து வருடம் : இன்னும் சிறிது அதிகமாக சர்க்கரை அளவுகளை குறைக்க கூடிய மாத்திரைகள் தேவைப்படும்.
  • அதற்கடுத்த ஐந்து வருடம் : இரண்டு மூன்று மாத்திரைகள் எடுத்தாலும் சர்க்கரை அளவுகள் கட்டுப்பட மறுக்கும்.
  • இன்னும் சில வருடங்கள் சென்றால் : எதற்கும் சர்க்கரை கட்டுப்படாமல், இன்சுலின் ஊசி போட்டால் தான் சரி வரும் என்ற நிலை வரும்.

கடைசி காலத்தில் அந்த இன்சுலினும் வேலைக்கு ஆகாமல்.. எதைப் போட்டாலும் சர்க்கரை அளவுகள் தாறுமாறாக இருக்கும் சூழலை காண முடிகிறது.

இது ஏன் ?

இந்த காட்சியை நமது மதுரை மாநகரின் தண்ணீர் வளத்தை கொண்டு கூறுகிறேன். கதையை கேளுங்கள் ;

வைகையில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம். படம் – இணையத்திலிருந்து

மதுரை மாநகரில் எனது தாத்தாவும் பாட்டியும் குடியேறி வீடு கட்டியபோது ( 1960 -களின் கடைசியில்) அங்கு அவர்களுக்கு வீட்டிலேயே 20 அடி கிணறில் நல்ல சுத்தமான தண்ணீர் கிடைத்து வந்தது. அக்கம்பக்கம் இருக்கும் பல வீடுகளில் இருப்பவர்களுக்கும் அந்த கிணற்றின் வழி நல்ல குடிநீர் கிடைத்து வந்திருக்கிறது.

எனது தந்தைக்கு திருமணம் ஆன புதிதில் அந்த கிணறு வற்றிப்போனது,
வற்றிய கிணறு மண் கொண்டு அடைக்கப்பட்டது. ( 1980 -களின் கடைசியில்)
ஆனால் போர் போட்டால் நூறு அடியில் தண்ணீர் கிடைத்தது.

1990 மற்றும் 2000 காலங்களில் தண்ணீர் அளவு குறைந்து கொண்டே வந்து ஐநூறு அடி போட்டால் தான் தண்ணீர் கிடைக்கும் அதுவும் உப்பு நீரே கிடைத்தது.

அதே மதுரையில் உப்பு தண்ணீர் பெற போர் போட்டால் சுமார் ஆயிரம் அடி போட்டாலும் தண்ணீர் இல்லை காற்று தான் வருகிறது.

காரணம் என்ன ?

எனது தாத்தா காலத்தில் இப்போது இருக்கும் அளவு மதுரையில் ஜனத்தொகை இல்லை. ஜன நெருக்கடி இல்லை, இத்தனை பேர் தங்கள் வீடுகளில் போர் போடவில்லை. மதுரைக்கு தண்ணீர் தரும் கண்மாய்கள் அனைத்தும் நீர் நிரம்பி உயிர்ப்புடன் இருந்தன.

இன்று நிலை எப்படி இருக்கிறது ?

மதுரையின் ஜன நெருக்கடி மிக மிக அதிகமாகிவிட்டது. தண்ணீர் நிரம்பிய கண்மாய்கள் யாவும் ப்ளாட்டுகளாக்கப்பட்டு ஹவுசிங் போர்டுகளாக மாறிவிட்டன. அவற்றிற்கு தண்ணீர் தந்த கால்வாய்கள் யாவும் முகவரி இழந்து நிற்கதியாய் நிற்கின்றன.

இந்த காட்சியை நமது உடலுடன் ஒப்பீடு செய்யுங்கள் ஒருவர் அவரது உடலுக்கு தேவையானதை விட அதிகமாக மாவுச்சத்தை உண்டு கொண்டே இருக்கிறார்.
அந்த மாவுச்சத்தை செரிமானம் செய்ய இன்சுலினும் சுரந்து கொண்டே இருக்கிறது
ஒரு கட்டத்தில் அவர் நீரிழிவு நோயாளியாகிறார்.

படிக்க:
♦ சர்க்கரை நோய் – உடல்பருமனை கட்டுப்படுத்துவது சரிவிகித உணவா – பேலியோ உணவா ? மருத்துவர் BRJ கண்ணன்
♦ குழந்தையின்மை சிகிச்சையும் பார்ட்னர்ஷிப்பும் ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

ஏன் நீரிழிவு நோயாளி ஆனார் ? 

அவரது உடலால் அவர் உண்ணும் மாவுச்சத்தை செரிமானம் செய்யும் அளவு இன்சுலினை உற்பத்தி செய்ய இயலவில்லை. மேலும் அவருக்கு சுரக்கும் சிறிதளவு இன்சுலினும் சரியாக வேலை செய்யவில்லை .

அவருக்கு இன்சுலினை சரியாக வேலை செய்ய வைக்கும் மாத்திரைகள் தரப்படுகின்றன. கொஞ்ச நாள் சர்க்கரை கட்டுக்குள் இருக்கிறது. ஆனாலும் அவர் மாவுச்சத்தை அதிகமாக உண்பதை நிறுத்திய அல்லது குறைந்த பாடில்லை. மேலும் அவரது உடல் இன்சுலின் சுரப்பை குறைக்கிறது.

சர்க்கரை அளவுகள் மீண்டும் கட்டுக்குள் வரமாட்டேன் என்கிறது. தற்போது உடலின் இன்சுலினை அதிகப்படுத்தும் மாத்திரைகள் தரப்படுகின்றன. உடல் தன்னால் இயன்ற அளவு முழுத்திறனுடன் இன்சுலினை உற்பத்தி செய்து உண்ணும் மாவுச்சத்தை செரிமானம் செய்கிறது.

தற்போதும் அவர் மூன்று வேளையும் மாவுச்சத்து நிரம்பிய உணவுகளை தான் உண்டு வருகிறார். கணையத்தை சக்கையாக பிழியுமட்டும் பிழிந்து இன்சுலின் சுரந்து சுரந்து ஒரு கட்டத்தில் இன்சுலின் சுரப்பு நின்று விடுகிறது.

தற்போது தான் அந்த நோயாளிக்கு புத்தி வருகிறது. காரணம் தன் உடலில் இன்சுலின் இல்லாததால் மருத்துவர் இன்சுலினை வெளியில் இருந்து போடச்சொல்லும் நிலை வந்துவிட்டது.

தற்போது இதே விசயத்தை மதுரையுடன் ஒப்பிடுங்கள்

1970-களில் குறைவாக இருந்த ஜன நெருக்கடி சர்க்கரை நோயாளி குறைவாக மாவுச்சத்து எடுத்து வந்ததற்கு ஒப்பாகும். அந்த கால மக்களுக்கு தண்ணீர் மிக எளிதாக கிடைத்து வந்தது இன்சுலின் சுரப்பு நன்றாக இருக்கும் நோயாளிக்கு சமம்.

1980-களில் ஜன நெருக்கடி கூடியதால் தண்ணீர் பஞ்சம் ஏற்படத் தொடங்கியது
இன்சுலின் சுரப்பு குறைவதற்கு ஒப்பாகும்.

2000-களில் அனைத்து கண்மாய்களும் வரண்டு தண்ணீர் சுத்தமாக இல்லாமல் போனது இன்சுலின் சுரப்பு கிட்டத்தட்ட இல்லாமல் போனதற்கு ஒப்பாகும். தற்போது ஆயிரம் அடி போட்டாலும் பல இடங்களில் தண்ணீர் கிடைப்பதில்லை. இது உடல் இன்சுலினை சுத்தமாக சுரப்பதை நிறுத்தியதற்கு சமம். வீடுகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் வறட்சி காலங்களில் வெளியில் இருந்து வண்டிகளில் தண்ணீர் கொடுக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.

ஆகவே , கதை கூறும் கருத்து யாதெனில் தண்ணீரை திறம்பட சேமித்து, தண்ணீர் தரும் கண்மாய்களை அடைக்காமல் ப்ளாட்டுகள் போடாமல் இருந்திருந்தால், தற்போது தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் மதுரை இருந்திருக்கும். அதுபோலவே
நீரிழிவு வந்தது என்று தெரிந்த நாளில் இருந்தாவது மாவுச்சத்தை குறைத்து உண்டு வந்திருந்தால், தற்போது இன்சுலின் சுத்தமாக சுரப்பது நின்று … வெளியில் இருந்து இன்சுலின் போடும் நிலையும் வந்திருக்காது அல்லவா…

தண்ணீரையும் இன்சுலினையும் சிக்கனமாக உபயோகிப்போம்!

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க