”மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, வாக்காளர்களின் தீர்மானங்களை தமக்குச் சாதகமாக மாற்ற எந்தவிதமான வற்புறுத்தல்களையும் வேட்பாளர்கள் செய்யக் கூடாது. அதே போல் வாக்காளர்கள் வற்புறுத்தப்படுகின்றனரா என்பதையும் கண்காணிக்க வேண்டும்” என்கிறார் முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி. அவர் காகிதத்தில் எழுதப்பட்ட சட்டங்களைக் குறிப்பிடுகிறார். தேர்தல் காய்ச்சலில் நடுக்கம் கண்டிருக்கும் பாரதிய ஜனதாவிற்கு இச்சமயத்தில் சட்டங்களோ விதிமுறைகளோ முக்கியமல்ல – வெற்றி பெற வேண்டும். எப்படியாவது வெற்றி பெற்றே தீர வேண்டும் என்கிற நெருக்கடியில் உள்ளது அக்கட்சி.

முகநூலின் வாராந்திர ”ஆட் லைப்ரரி” அறிக்கையின் படி, மார்ச் 17 துவங்கி 23-ம் தேதி வரையிலான வாரத்தில் ”எனது முதல் வாக்கு மோடிக்கே” (‘My First Vote For Modi’) என்கிற மோடி ஆதரவு முகநூல் பக்கம் மட்டும் தேர்தல் விளம்பரங்களுக்காக 46.6 இலட்ச ரூபாய் செலவிட்டுள்ளது. குறிப்பிட்ட வாரத்தில் அரசியல் ரீதியிலான விளம்பரங்களுக்காக மட்டும் சுமார் 1.1 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த கணக்கு முதல் இருபது முகநூல் பக்கங்களின் செலவினங்களைக் குறித்தது மாத்திரமே. இந்தப் பட்டியலில் உள்ள முகநூல் பக்கங்கள் பெரும்பாலும் பாரதிய ஜனதா கட்சி சார்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.

பாரத் கி மன்கி பாத் ( ‘Bharat Ke Mann Ki Baat’ ), இந்தியன் பொலிடிக்கல் ஆக்‌ஷன் கமிட்டி (‘Indian Political Action Committee’), நேஷன் வித் நமோ (‘Nation with NaMo’) உள்ளிட்ட வெவ்வேறு பெயர்களில் துவங்கப்பட்டுள்ள முகநூல் பக்கங்கள், பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக விளம்பரங்களை வெளியிட்டு வாக்காளர்களை கவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. குறிப்பிட்ட ஒரு வாரகாலத்தில் பாரதிய ஜனதா ஆதரவு முகநூல் பக்கங்கள் 67 இலட்ச ரூபாயும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரசின் முகநூல் பக்கங்கள் 24 இலட்சமும், பிஜூ ஜனதா தள் ஆதரவு முகநூல் பக்கங்கள் 10.5 இலட்ச ரூபாயும், காங்கிரசு ஆதரவு பக்கங்கள் 8 இலட்ச ரூபாயும் செலவழித்துள்ளன.

முகநூலின் விளம்பர நூலகத்தின் மின்தரவுகளை ஆய்வு செய்து பார்த்த ஆல்ட் நியூஸ் இணையதளம், பாரதிய ஜனதா ஆதரவுப் பக்கங்கள் தேர்தலுக்கு மூன்று மாதங்கள் முன்பிருந்தே பிரச்சார வேலைகளைத் துவக்கி விட்டதை சுட்டிக்காட்டுகின்றது. குறிப்பாக வாக்காளர்களுக்கு “கவர்ச்சியான இலவசங்களை” அளிக்கவுள்ளதாக வாக்குறுதி அளித்துள்ளது “எனது முதல் வாக்கு மோடிக்கே” எனும் தளம். இலட்சிணைகள், லேப்டாப் பேக்குகள், டீ-சர்ட்டுகள், கைப்பேசிக்கான கவர்கள், தொப்பி உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்களை தரவுள்ளதாக இந்த இணையப் பக்கம் வாக்குறுதியளித்துள்ளது. ”மோடிக்கே உங்கள் முதல் வாக்கு என்பதை உறுதி கூறுங்கள்; ஆச்சர்யமான பரிசுகளை வெல்லுங்கள்” என்கிறது அந்தப் பக்கத்தின் விளம்பர வாசகம்.

பாரதிய ஜனதாவை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் பிற முகநூல் பக்கங்களும் இதே போன்ற பரிசுப் பொருட்களை வழங்கப் போவதாக விளம்பரங்கள் வெளியிட்டு வருவதை ஆல்ட் நியூஸ் செய்துள்ள ஆய்வு சுட்டிக் காட்டுகின்றது. மேலும், பரிசுப் பொருட்களாக அறிவிக்கப்பட்டுள்ளவை அனைத்தும் ஏற்கனவே நமோ செயலியில் (Namo App for Smart Phones) விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து இந்த முகநூல் பக்கங்கள் அனைத்தும் தங்களது முகவரியில் பாரதிய ஜனதாவின் தலைமை அலுவலகத்தையே குறிப்பிட்டுள்ளன.

இந்த விளம்பரங்கள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி தண்டனைக்குரியவை. வாக்காளர்களுக்கு பணமோ பரிசுப் பொருட்களோ கொடுத்து வாக்கு சேகரிப்பதைத் தடுக்க வேண்டிய கடமை தேர்தல் கமிசனுக்கு உண்டு. எனில், இந்த நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையம் ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா? இந்த செலவினங்களை பாரதிய ஜனதாவின் தேர்தல் செலவுகளில் சேர்க்கப்பட்டுள்ளதா? என்பன போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய தேர்தல் ஆணையமோ இதுவரை கள்ள மவுனமே சாதித்து வருகின்றது.

தமிழகத்தைப் பொருத்தவரை, நமக்கு இதெல்லாம் புதிதில்லை. வாக்குகளுக்கு பணம் கொடுக்க ஓட்டுக் கட்சிகள் கண்டுபிடித்துள்ள “விஞ்ஞானப்பூர்வமான” வழிகள் அனைத்தையும் நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். சென்ற சட்டமன்றத் தேர்தலின் போதும், அதற்குப் பின் புரட்சித் தலைவி ஆட்சியில் இருந்த போது நடந்த இடைத் தேர்தல்களின் போதும், போலீசாரே குறிப்பிட்ட பகுதிக்குள் பிற கட்சிகள் நுழைவதைத் தடுத்து விளக்குப் பிடித்துக் கொண்டிருக்க, ஆளும் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்தது குறித்த செய்திகள் ஏராளம் வெளியாகியுள்ளன. அம்மாவின் வழியில் சொந்தக் கம்பெனி நடத்தி வரும் டிடிவி தினகரன் இருபது ரூபாய் டோக்கனை வைத்து ஆர்.கே. நகர் தேர்தல் முடிவுகளைக் களவாடிய சாமர்த்தியத்தையும் நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால், பணப்பட்டுவாடாவை ”டிஜிட்டல்” மயமாக்கியிருக்கும் பாரதிய ஜனதா, அம்மாவின் தேர்தல் உத்திகளை ஒரு புதிய தளத்திற்கே உயர்த்தியுள்ளது. இதை ஏன் தேர்தல் கமிஷன் கண்டு கொள்ள மறுக்கிறது என சிலர் அங்கலாய்க்கின்றனர். இப்படி அங்கலாய்ப்பதாக இருந்தால் மோடி சார்பு தீர்ப்புகளை உதிர்க்கும் நீதிமன்றங்கள், அசீமானந்தாவை அவிழ்த்து விட்ட தேசிய புலனாய்வு முகமை, மிரட்டலுக்கான கருவிகளாய் உருமாறி இருக்கும் சி.பி.ஐ., வருமான வரித்துறை, சி.ஏ.ஜி உள்ளிட்ட மத்திய அமைப்புகள் என நமது அங்கலாய்ப்பிற்கு ஏராளமான துறைகள் வரிசை கட்டி நிற்கின்றன.

படிக்க:
ஃபேஸ்புக் பாதுகாப்பு : ஒரு முறை பயிரை மேய்ந்து விட்ட வேலி மறுமுறை மேயாதா ?
உங்கள் சிந்தனையை வடிவமைக்கும் விளம்பரங்கள்

கடந்த ஐந்தாண்டு கால மோடி ஆட்சியில் துளியளவாவது மரியாதையைக் காப்பாற்றி வைத்திருந்த அரசு உறுப்புகள் அனைத்தும் இன்று நிர்வாணமாய் நின்று கொண்டிருக்கின்றன. அதற்கு மேலும் ஒரு உதாரணமாய் மாறியுள்ளது தேர்தல் கமிஷன். ஜனநாயகத்தின் ஆகக் கடைசியான நம்பிக்கையாக லிபரல் அறிவுஜீவிகளால் நம்பப்படும் தேர்தல் அமைப்புமுறையும் சீரழிந்து விட்டது அம்பலமாகி வருகின்றது. இனிமேலும் இந்துத்துவவாதிகளை தேர்தலின் மூலம் மட்டுமே வீழ்த்தி விடமுடியும் என கருதுகிறீர்களா?

சாக்கியன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க