அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 14

அத்தியாயம் மூன்று : பாராட்டுக்குரிய சர் வில்லியம் பெட்டி
அ.அனிக்கின்

லக்கியத்திலும் விஞ்ஞானத்திலும் மாபெரும் புதுமைகளை ஏற்படுத்திய ஷேக்ஸ்பியரும் பேக்கனும் தாமஸ் மானுக்கு சமகாலத்தில் வாழ்ந்தவர்கள். அரசியல் பொருளாதாரத்தில் இது போன்ற புதுமைகளை ஏற்படுத்திய வில்லியம் பெட்டி இவர்களுக்கு ஒரு தலைமுறைக் காலத்துக்குப் பிறகு தோன்றினார்.

இவர்களுக்கு இடைக்காலத்தில் புதிய, 17-ம் நூற்றாண்டு பிறந்த பொழுது தோன்றிப் புகழ்பெற்றவர்கள் இராணுவத்தினரும் மத குருக்களுமே. நடுத்தர முதலாளிகளின் தலைவரும் வீர புருஷருமான ஓலிவெர் கிராம்வெல், அவரைக் காட்டிலும் அதிகத் தீவிரமான இடதுசாரிக் கொள்கையுடையவரும் அவரோடு அரசியலில் போட்டியிட்டவருமான ஜான் லில்பர்ன் ஆகியோர் வலது கையில் வாளும் இடது கையில் பைபிள் நூலும் வைத்துக் கொண்டு போர் புரிந்தார்கள். பதினேழாம் நூற்றாண்டில் ஏற்பட்ட அரசியல், சமூகப் புரட்சி அன்றைய வரலாற்று நிலைமைகளினால் மதத் தன்மையை மேற்கொண்டது. அது பரிசுத்தவாதத்தின் எளிமையான, கண்டிப்பான உடையை அணிந்து கொண்டது.

கிராம் வெல்லின் ஆட்சிக் காலத்திலேயே முதலாளி வர்க்கம் தனது புரட்சிகரமான வேகத்தைச் செலவழித்து ஓய்ந்து விட்டது. 1660-ம் வருடத்தில் அது புதிய மேன்மக்களோடு கூட்டணி சேர்ந்து ஸ்டுவர்ட் மரபை மறுபடியும் பதவிக்குக் கொண்டு வந்தது. கொலை செய்யப்பட்ட அரசரின் மகன் இரண்டாம் சார்ல்ஸ் என்ற பெயரில் அரியணையில் அமர்ந்தார். ஆனால் முடியாட்சி முன்பு இருந்தது போல இனிமேல் இருக்க முடியவில்லை; புரட்சி வீண் போகவில்லை. பழைய நிலப்பிரபுத்துவ மேன்மக்களுக்குப் பாதகமான வகையில் முதலாளிகள் தங்களுடைய நிலையைப் பலப் படுத்திக் கொண்டனர்.

வில்லியம் பெட்டி

புரட்சியின் இருபது வருடங்களில் (1641-1660) ஒரு புதிய தலைமுறை – தோன்றி வளர்ச்சியடைந்திருந்தது. புரட்சி அவர்களுடைய சிந்தனையை அதிகமாக -ஆனால் வெவ்வேறுவிதமாக பாதித்திருந்தது. அரசியலும் மதமும் (அவை பிரிக்க முடியாதபடி இணைந்திருந்தன) குறிப்பிட்ட அளவுக்கு ஒதுக்கப்பட்டன. நாற்பதுக்களிலும் ஐம்பதுகளிலும் இளைஞர்களாக இருந்தவர்கள் பைபிள் புத்தகத்தை அறிவின் முக்கியமான பிறப்பிடமாகக் காட்டுகின்ற மதத்தன்மை கொண்ட வாதங்களைக் கேட்டு அலுத்துப் போனார்கள். அவர்கள் புரட்சியிலிருந்து வித்தியாசமான ஒன்றை அடைந்திருந்தார்கள். அது முதலாளித்துவ சுதந்திரம், பகுத்தறிவு, முன்னேற்றம் என்பதாகும். விஞ்ஞானத்தில் மிகச் சிறந்த திறமையுடைய சிலர் வானத்தில் நட்சத்திரக் கூட்டத்தைப் போலத் தோன்றி ஒளி வீசினார்கள். இவர்களில் முதன்மையானவர்கள் பெளதிக விஞ்ஞானி ராபர்ட் பாயில், தத்துவஞானி ஜான் லாக், கடைசியாக மாபெரும் ஐசக் நியூட்டன் ஆகியோராவர்.

இந்தத் தலைமுறையையும் மக்கள் குழுவையும் சேர்ந்தவர் வில்லியம் பெட்டி. அவர் காலத்திய அறிஞர்களில் பெட்டி கெளரவமான இடத்தைப் பெற்றிருக்கிறார். மார்க்ஸ் குறிப்பிட்டது போல, இந்த ஆங்கில கனவான் அரசியல் பொருளாதாரத்தின் தந்தை. புள்ளியியலைக் கண்டுபிடித்தவர் அவர்தான் என்றும் சொல்லலாம்.

நூற்றாண்டுகளைக் கடந்து புகழோடு விளங்கும் பெட்டி

விஞ்ஞானத்தின் வரலாற்றில் சிலர் மறக்கப்படுவதும் பிற்காலத்தில் அவர்களுக்குப் புத்துயிர் கொடுக்கப்படுவதும் உண்டு. இப்படிப்பட்டவர்களில் ஒருவர் ரிச்சர்ட் கான்டில் லாக். இவர் 18-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்த குறிப்பிடத்தக்க பொருளாதார நிபுணர். சிறப்பு மிக்க பொருளாதார நிபுணர்களான பிரான்சுவா கெனே, ஜேம்ஸ் ஸ்டுவர்ட், ஆடம் ஸ்மித் ஆகியோர் இவரிடமிருந்து அதிகமாகக் கடன் வாங்கியிருக்கிறார்கள் என்று மார்க்ஸ் சுட்டிக் காட்டினார். இவரை அநேகமாக முற்றிலும் மறந்து விட்டார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் இவரை மறுபடியும் புதிதாகக் கண்டுபிடித்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

ஹெர்மன் ஹென்ரிஹ் கோஸ்ஸென் என்பவர் 1854-ம் வருடத்தில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். அது எவ்விதமான கவனத்தையும் பெறவில்லை. எனவே ஏமாற்றமடைந்த ஆசிரியர், நான்கு வருடங்களுக்குப் பிறகு கடைகளிலிருந்து தமது புத்தகங்களைத் திரும்பப் பெற்று அநேகமாக தமது முதல் பதிப்பு முழுவதையும் அழித்துவிட்டார். இதற்கு இருபது வருடங்களுக்குப் பிறகு ஜெவோன்ஸ் தற்செயலாக அதன் பிரதி ஒன்றைப் பார்த்தார்.

ஹெர்மன் ஹென்ரிஹ் கோஸ்ஸென் வெளியிட்ட நூலை வரலாற்றின் பக்கத்தில் மீட்ட வில்லியம் ஸ்டேன்லி ஜெவோன்ஸ்

கோஸ்ஸென் மரணமடைந்து பல வருடங்களாகி விட்டன. ஆனால் ஜெவோன்ஸ் அவரைப் ”புதிய அரசியல் பொருளாதாரத்தைக்” கண்டுபிடித்தவர் என்று பாராட்டினார். இன்று பொருளாதாரப் பண்டங்களின் பயன்பாடு பற்றிய இனத்தோடு – அக நிலையான, உளவியல் கருத்து நிலையிலிருந்து சம்பந்தப்பட்ட கோஸ்ஸென் விதிகள் அரசியல் பொருளாதாரம் பற்றிய எந்த முதலாளித்துவப் பாடபுத்தகத்திலும் வரலாற்றிலும் கணிசமான இடத்தைப் பெற்றிருக்கின்றன.

பெட்டியை மறுபடியும் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அவர் தம்முடைய காலத்திலேயே புகழ் அடைந்திருந்தார். ஆடம் ஸ்மித்துக்கு அவருடைய கருத்துக்கள் தெரிந்திருந்தன. ”பதினேழாம் நூற்றாண்டின் மிகவும் குறிப்பிடத்தக்க நபர்களில் ஒருவர் சர் வில்லியம் பெட்டி” என்று மாக்குலோஹ் 1845-ம் வருடத்தில் எழுதினார். உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தை நிறுவியர் பெட்டி என்று கூடச் சொன்னார்; அவருக்கும் ரிக்கார்டோவுக்கும் ஒரு நேர்கோடான வளர்ச்சியைக் காட்டினார்.

எனினும் மார்க்ஸ் மட்டுமே வில்லியம் பெட்டியை விஞ்ஞானத்துக்காக முழுமையாகக் கண்டுபிடித்தார். மார்க்ஸ் ஒரு புதிய அரசியல் பொருளாதாரத்தைப் படைத்து அந்த விஞ்ஞான வரலாற்றில் புதிய ஒளியைப் பாய்ச்சினார்; அதன் மூலம் இந்தச் சிறப்புமிக்க ஆங்கிலேயர் அதில் வகிக்கின்ற உண்மையான இடத்தையும் விளக்கினார். கண்ணால் பார்க்கக்கூடிய பொருளாதார நிகழ்வுகளை மட்டும் ஆராய்ந்து அவற்றை வர்ணிப்பதோடு நின்றுவிடாமல் முதலாளித்துவ உற்பத்திமுறையின் உள்விதிகளைப் பகுத்தாய்வு செய்து அதன் வளர்ச்சி விதியைத் தேடிய மூலச்சிறப்புடைய முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் தந்தை பெட்டி என்று கூறலாம். பெட்டி மற்றும் அவருடைய ஆதரவாளர்களின் கைகளில் இந்த விஞ்ஞானம் யதார்த்தத்தைப் புரிந்து கொள்வதற்கும் சமூக முன்னேற்றத்துக்காகப் பாடுபடுவதற்கும் ஏற்ற கருவியாக மாறியது.

பெட்டியின் குறிப்பிடத்தக்க, அசாதாரணமான ஆளுமை மார்க்சையும் எங்கெல்சையும் அதிகமாகக் கவர்ந்தது. ”பெட்டி தன்னை ஒரு புதிய விஞ்ஞானத்தின் ஸ்தாபகராகக் கருதுகிறார்…”, ” அவருடைய துணிச்சல் நிறைந்த மேதாவிலாசம்…”, ”மிகவும் தனித்தன்மையான நகைச்சுவை உணர்ச்சி . அவருடைய எழுத்துக்களில் நிரம்பியிருக் கிறது…”,(1) ”இந்தத் தவறிலும் கூட மேதாவிலாசம் அடங்கியிருக்கிறது.”(2) “அளவில் சிறிய தென்றபோதிலும் கருத்திலும் உள்ளடக்கத்திலும் இது தலை சிறந்த சாதனையாகும்”. மார்க்ஸ் தாம் எழுதிய பல புத்தகங்களில் எழுதியுள்ள மேற்கூறிய கருத்துக்கள் ”பொருளாதார ஆராய்ச்சியில் மிக அதிகமான தற்சிந்தனையும் சிறப்பும் கொண்ட”(3) பெட்டியைப் பற்றி அவருடைய அணுகுமுறையை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

படிக்க:
♦ பொள்ளாச்சி மாணவிகளை சீரழித்த அதிமுக பொறுக்கிகளை தூக்கிலிடு ! தமிழகமெங்கும் போராட்டம் !
♦ கரூர் : காவிக் கும்பலை கதறவிட்ட மக்கள் அதிகாரம் டீ – சர்ட் !

பெட்டியின் எழுத்துக்களுக்கு ஏற்பட்ட கதி அசதாரணமானதாகும். மாக்குலோஹ் ஒரு விசித்திரமான அம்சத்தைச் சுட்டிக்காட்டினார். பெட்டி வகித்த பாத்திரம் எவ்வளவு முக்கியமானதாக இருந்தபோதிலும் அவருடைய புத்தகங்கள் ஒருபோதும் முழுமையாக வெளியிடப்படவில்லை; பழைய அரை குறையான பதிப்புக்களாகவே அவை இருந்தன. 19 -ம் நூற்றாண்டின் மத்தியிலேயே அவை அபூர்வமாகக் கிடைக்கக் கூடிய புத்தகங்களாகவே கருதப்பட்டன.

மாக்குலோஹ் பெட்டி பற்றிய தம்முடைய குறிப்பில் தமது எளிய பணிவான நம்பிக்கையை வெளியிட்டிருந்தார்:

“பெட்டியின் சொத்துக்களையும் அவருடைய திறமையையும் மரபுரிமையாகப் பெற்றிருக்கும் அவருடைய சிறந்த வாரிசுகள், அவருடைய புத்தகங்களுக்கு முழுமையான பதிப்பு வெளியிடுவதைக் காட்டிலும் அவருக்குச் சிறந்த நினைவுச் சின்னத்தை ஏற்படுத்த முடியாது.”

எனினும் பெட்டியின் “சிறந்த வாரிசுகளான” ஷெல் பர்ன் மற்றும் லான் ஸ்டௌன் பிரபுக்கள் ஒரு எளிய கைவினைஞரின் மகனாகப் பிறந்து பணமும் புகழும் சேர்த்து (அவை எல்லாமே நியாயமான வழிகளில் தான் என்று சொல்ல முடியாது), ஒரு சமீபத்திய வாழ்க்கை வரலாற்றாசிரியர் சொல்வதைப் போல, ”பகட்டான, ஓரளவுக்குச் சந்தேகிக்கப்பட வேண்டிய பெயரைக் கொண்டிருந்த தங்கள் முன்னோரைப் பொதுவாக எல்லோருடைய காட்சிக்கும் வைப்பதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. – பெட்டியின் வாரிசுகளுக்கு இரண்டு நூற்றாண்டுக் காலம் இந்த அம்சம் பெரிதாகத் தெரிந்ததே தவிர, அவருடைய எழுத்துக்களின் விஞ்ஞான, வரலாற்று மதிப்பு முக்கியமானதாகத் தெரியவில்லை. 19-ம் நூற்றாண்டின் கடைசியில் தான் பெட்டியின் பொருளாதார நூல்களின் முதல் தொகுப்பு வெளியிடப்பட்டது. அதே சமயத்தில் அவருடைய சந்ததியினர் ஒருவர் அவரது வாழ்க்கை வரலாற்றையும் வெளியிட்டார்.

பெட்டியின் அரசியல் கருத்துக்களையும், அவருடைய சமூக, விஞ்ஞானப் பணிகளையும், அவர் காலத்திய மாபெரும் விஞ்ஞானிகளோடு அவருடைய உறவுகளைப் பற்றியும் இன்று நமக்குத் தெளிவான விவரங்கள் கிடைத்துள்ளன. அவருடைய வாழ்க்கையைப் பற்றி அதிகமான செய்திகள் இன்று தெரிய வந்துள்ளன. மாபெரும் மனிதர்களின் உருவப்படங்களைப் பொறுத்தவரை அவற்றைத் திருத்திக் காட்டுவது அவசியமல்ல; அவர்களுடைய குறைகளையும் பலவீனங்களையும் பூசிமெழுகுவதும் தேவையல்ல. இது வில்லியம் பெட்டிக்கு முழுமையாகப் பொருந்தும். மனித குல வரலாற்றில் அவர் ஒரு பெரிய ஐரிஷ் நிலவுடைமையாளராக, முன்யோசனை நிறைந்த (அவர் எப்பொழுதுமே வெற்றியடைந்த தாக ஒரு போதும் சொல்ல முடியாது) அரசவையாளராக அவர் நிலைத்திருக்க மாட்டார்; சமூகத்தைப் பற்றிய விஞ்ஞானத்தில் புதிய பாதைகளைத் திறந்து விட்ட, துணிச்சலான சிந்தனையாளர் என்ற முறையில் தான் அவர் புகழ் நிலைத்திருக்கும்.

மார்க்சியவாதிகள் மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தின் ஸ்தாபகர் என்று தான் பெட்டி யைப் பற்றி முதன்மையாக நினைப்பார்கள். பெட்டி ஒரு மாபெரும் மேதை, குறிப்பிடத்தக்க ஆளுமை கொண்டவர் என்பதை முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் அங்கீகரித்தாலும், அவரை ஸ்மித், ரிக்கார்டோ, மார்க்ஸ் ஆகியோரின் முன்னோடி என்று ஒத்துக் கொள்வதில்லை. ஆராய்ச்சியில் புள்ளியியல் முறையை உருவாக்கியவர் என்ற அளவில் தான் இந்த விஞ்ஞானத்தில் அவருக்கு இடம் ஒதுக்கப்படுகிறது.

பெட்டியின் எழுத்துக்களில் உழைப்பளவை மதிப்புத் தத்துவம் (அல்லது பொது முறையிலாவது மதிப்பைப் பற்றிய கருதுகோள்) இல்லை; மதிப்பிடத்தக்க கூலித் தத்துவம் இல்லை; எனவே அவர் உபரி மதிப்பைப் புரிந்து கொண்டிருக்கக் கூடிய பிரச்சினையே ஏற்படவில்லை என்று ஷூம்பீட்டர் எழுதுகிறார். “பொருளாதார விஞ்ஞானத்தின் ஸ்தாபகர் பெட்டி என்று மார்க்ஸ் பிறப்பித்த ஆணையே”(4) அவர் புகழுக்குக் காரணம்; வேறு சில முதலாளித்துவ அறிஞர்களும் அவரைப் பாராட்டியிருக்கின்றனர் – இது தான் இன்னொரு காரணம்; இந்த அறிஞர்கள் தாங்கள் செய்வது என்னவென்று தெரியாதவர்கள் என்று ஷூம்பீட்டர் கோடி காட்டுகிறார்.

முதலாளித்துவ அறிஞர்களால் எழுதப்பட்ட பல புத்தகங்கள் பெட்டி வாணிப ஊக்கக் கொள்கையை விளக்கியவர் என்று மட்டுமே காட்டுகின்றன. அந்தத் தரப்பினரில் அவர் அதிகமான திறமையும் வளர்ச்சியும் கொண்டவராக இருந்திருக்கலாம்; ஆனால் அதற்கு மேல் எந்தப் புகழுக்கும் உரியவரல்ல. புள்ளியியல் முறையைக் கண்டுபிடித்ததைத் தவிர வரிவிதிப்பு, சுங்கவரி போன்ற தனிப்பட்ட பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றி அவர் விளக்கியதாக அவரை அதிகபட்சமாகப் பாராட்டுவதுண்டு.

நவீன முதலாளித்துவ விஞ்ஞானத்தில் இந்தக் கருத்தே கோலோச்சுவதாகச் சொல்ல முடியாது. மற்ற கருத்துக்களும் உண்டு; பொருளாதார விஞ்ஞானத்துக்குப் பெட்டி ஆற்றிய பாத்திரம் இன்னும் அதிகமான வரலாற்றுப் பின்புலத்தில் சரியாக கணிக்கப்படுவதும் உண்டு. எனினும் ஷூம்பீட்டர் கருத்து பிரதானமான அணுகுமுறையைக் காட்டுகிறது; இது தற்செயலாக ஏற்பட்டதல்ல.

(தொடரும்…)

அடிக்குறிப்பு:

(1) K. Marx, A Contribution to the Critique of Political Economy, Moscow, 1970, pp. 52,53.

(2) பி. எங்கெல்ஸ், டூரிங்குக்கு மறுப்பு, முன்னேற்றப் பதிப்பகம், மா ஸ்கோ , 1979, பக்கம் 403 பார்க்க .

(3) Ibid.

(4) J. Schumpeter, History of Economic Analysis, N.-Y., 1955, p. 210.

கேள்விகள்:

1.இலக்கியத்தில் ஷேக்ஸ்பியரும், அறிவியலில் பேக்கனும் ஏற்படுத்திய மாபெரும் புதுமைகள் எவை?

2. “பதினேழாம் நூற்றாண்டில் ஏற்பட்ட அரசியல், சமூகப் புரட்சி அன்றைய வரலாற்று நிலைமைகளினால் மதத் தன்மையை மேற்கொண்டது.” – காரணம் என்ன?

3. பெட்டியை “இந்த ஆங்கில கனவான் அரசியல் பொருளாதாரத்தின் தந்தை” என்று கார்ல் மார்க்ஸ் பாராட்டுவதற்கு காரணம் என்ன?

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க