ளம் தம்பதியினர், ஐந்து விடலைப் பருவ மாணவர்கள், வீடு திரும்பும் திருநங்கை, சுனாமியால் பிழைத்து பெந்தகோஸ்தே பிரச்சாரம் செய்யும் நபர் என நான்கு கிளைக் கதைகள். நான்கையும் பிணைத்து செல்கிறது மையக் கதை. இரண்டு கதைகளில் காமமும், ஒன்றில் மூன்றாம் பாலினமும், நான்காவதில் மதமும் கதையின் கருத்தாக உணர்த்தப்படுகின்றன. எனினும் முதன்மையாக காமமே பேசப்படுகிறது.

விடலை மாணவர்கள் பலான படம் பார்க்கத் துவங்குகிறார்கள். அதில் ஒருவனது அம்மாவே நாயகியாக படத்தில் வருகிறாள். ஆத்திரத்தில் டிவியை உடைத்து விட்டு அம்மாவைக் கொல்ல விரைகிறான் அவன். படியில் ஏறும் போது தவறுதலாக அவன் வயிற்றிலேயே குத்திக் கொள்கிறான். அலறும் அம்மா ஆட்டோவில் மகனைக் காப்பாற்ற விரைகிறாள். அவனுக்கு ஒன்றுமில்லை என்று தேறுதல் சொல்கிறாள். மகனோ “போடி தே…முண்டை” என்று திட்டுகிறான். கடைசிக் காட்சியில் காமப் படங்கள் குறித்த தத்துவத்தை தாய் உபதேசிக்கிறாள்.

”இலட்சம் பேர் அந்தப் படங்களை பார்க்கும் போது நான்கு பேர் நடிக்கத்தான் செய்வார்கள், அது எனக்குத் தொழில், நான் மாரியம்மனாகவும் நடித்திருக்கிறேன். பலான படத்தில் விரும்பித்தான் நடித்தேன்” என்கிறாள். இவையெல்லாம் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் அல்லது இத்திரைக்கதையை உருவாக்கிய நான்கு மேதைகளின் கருத்துக்கள் (மிஷ்கின், நலன் குமாரசாமி, நீலன் சேகர், தியாகராஜன் குமாரராஜா).

உடைந்த டி.வியைப் பார்த்தால் அப்பா உதைப்பார் என அந்த மாணவனும் மற்ற நண்பர்களும் ஒரு சேட்டு வீட்டில் பணம் திருடுகிறார்கள். அங்கே ஒரு ஏலியன்ஸ் ஜீவராசியை நம்மூர் சேட்டுப் பெண் தோற்றத்தில் சந்திக்கிறார்கள். சேட்டுப் பெண்ணும் இந்த உலகில் அனைத்தும் ஒன்று. நம்மில் வேறுபாடு இல்லை என்பது போல உபதேசிக்கிறாள்.

போர்னோ உலகின் கொடூர அனுபவங்களை அறியாத அம்மாஞ்சியாக இயக்குநர் இருக்கிறாரா? இல்லை செக்ஸ் பிரச்சினைகளை துணிந்து பேசும் கலகக்காரராக காட்டிக் கொள்ள வெட்டிக் கெத்து காட்டுகிறாரா தெரியவில்லை. பலான படங்களிலோ இல்லை ஃபோர்னோ படங்களிலோ நடிப்பவர்களின் அவலக் கதைகள் ஏராளமிருக்கின்றன. அவர்கள் எவரும் அதை விரும்பி ஏற்று நடிப்பது இல்லை.

இலட்சம் பேர், நான்கு பேர் தியரியைப் பொருத்தினால் பொள்ளாச்சி வீடியோக்களை இலட்சம் பேர் பார்க்கும்போது நான்கு பொறுக்கிகள் அப்படி வீடியோ எடுக்க வேண்டியது கடமையாகிறது. குடிக்கிறவன் திருந்தி விட்டால் டாஸ்மாக் தானே மூடப்படும் என்பது போன்ற ஆபத்தான கிழட்டு உபதேசம் இது.

பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்து கொண்ட முகில் – வேம்பு கதையை எடுத்துக் கொள்வோம். திடீரென்று தனது கல்லூரியில் படித்த முன்னாள் காதலனை வரச்சொல்லி உறவு கொள்கிறாள் வேம்பு. அப்போது அந்த முன்னாள் காதலன் இறந்து போகிறான். இது தெரியவர முகில் மனைவியை கடிந்து கொள்வதோடு விசயம் வெளியே தெரிந்தால் மானம் போய்விடும் என பிணத்தை எங்காவது தெரியாமல் போட்டுவிட முனைகிறான். வேம்புவும் அவனோடு ஜீப்பில் பிணத்தோடு சுற்றுகிறாள்.

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா.

வேம்புவின் அந்த திடீர் உறவு எப்படி நடந்தது? பின்னர், அவளை உறவு கொள்ளச் சொல்லி மிரட்டும் இன்ஸ்பெக்டரிடம் முடியாது என்று கதறி அழுகிறாள் வேம்பு. இடையில் கணவனோடு விவாதம் வரும்போது காதலனோடு உறவு எப்படி நடந்தது என்றே தெரியவில்லை என்கிறாள். அது ஒரு விபத்து போலவும் சித்தரிக்கிறாள். அந்த உறவு திடீரென்று நடந்திருந்தாலும் தனது கணவனோடு சிந்தையில் பிரிவதை அவள் என்றோ ஆரம்பித்திருக்க வேண்டும். அந்த மெல்ல மெல்லவான மாற்றத்தின் தர்க்க விளைவே இந்த உறவு மீறல். காமம் என்பது திடீரென்று மீறலையோ, முரண்களையோ ஏற்படுத்திவிடும் ஒன்றல்ல. பாலுறவு நிகழ்ச்சிப் போக்கின் பரிணாமத்திற்கேற்பவே அது தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

வாழ்வில் இத்தகைய பாலியல் மீறல் திடீரென்று நடந்து விடும்போது அதை பெரிதுபடுத்துவதில் பொருள் இல்லை என்பதாக இந்த கிளைக்கதை உணர்த்துகிறது. கடைசிக் காட்சியில் வேம்புவும் முகிலும் சிரித்தவாறு நடக்கிறார்கள். வேம்புவின் பாத்திரம் அவ்வளவாக ‘வில்லத்த்தனமானதல்ல’ என்பதற்காகவே கடைசிக் காட்சிகளில் அவள் அழுது தீர்க்கிறாள். தன்னுடம்பை காப்பாற்ற கதறுகிறாள். கணவனோ அவளை பிளாக்மெயில் செய்யும் போலீசுக்கு அளிக்க தயார் செய்கிறான். ஒரேடியாக கள்ள உறவு சரிதான் என்று போயிருந்தால் நடுத்தர வர்க்கத்தின் சென்டிமெண்டை கிளற முடியாது என்று இயக்குநர் இங்கே தடுமாறியிருக்கிறார்.

அதே நேரம் காம மீறலை பெரிதுபடுத்தக் கூடாது என்பது புண்ணுக்கு புணுகு போடும் வேலை. காமமோ காதலோ, இருபால் உறவில் ஜனநாயகம் இருப்பதற்கேற்ப நாகரிகமாகவோ அநாகரிகமாகவோ நடக்கிறது. கணவனை விவாகரத்து செய்து காதலனை மணப்பது அநாகரிகமான ஒன்றல்ல. இத்தகைய வெளிப்படைத் தன்மை குறித்து பேசாமல் படுக்கையறையின் திரைமறைவில் பேசுவதால் இந்த கிளைக்கதையும் கிளுகிளுப்பை ஊட்டி விட்டு இறுதியில் ஷகிலா ‘காவியங்கள்’ கூறும் உபதேசமாய் முடிந்து போகிறது.

படிக்க:
தீண்டாமை வேண்டி வழக்கு போட்ட பாஸ்கர சேதுபதியின் காசில் அமெரிக்கா சென்ற விவேகானந்தர் !
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்

இந்த கிளைக்கதையில் முகில் ஆங்காங்கே இயக்குநரின் விருப்பத்திற்கேற்ப கருத்து கந்தசாமியாக அரசியல் பேசுகிறான் – அதுவும் அபத்தமாய்!

சாதி, மதம், தேசிய இனம் மூன்றின் பற்றும் ஒன்றுதான், ஒன்று சிறியது மற்றது பெரியது என்பதால் வேறுபாடு இல்லை. இது சரி என்றால் அது சரி, இது தவறு என்றால் அது தவறு என்று வாதிடுகிறான் முகில். இயக்குநரின் தத்துவ ஆராய்ச்சிப்படி மூன்றும் ஒருவகையில் குழு நலனோடு தொடர்புடையது. தன்னுடைய குழு உயர்ந்தது, மற்ற குழு தாழ்ந்தது என்ற அடிப்படையில் இவை மூன்றும் ஒன்றே என வாதிடுகிறார்.

இந்த கருத்தில் பாதி உண்மை இருப்பினும் அடிப்படையிலேயே மிகத்தவறான வாதமிது. பாதி உண்மைகள் முழுப் பொய்யை விட ஆபத்தானவை. சாதியோ மதமோ அகமணமுறையை கண்டிப்பான விதியாய் வைத்திருக்கிறது. அதன் வழி பெண்ணை சாதி மத குழுக்களின் கௌரவமாய் பணயம் வைத்து வேற்று குழுக்களோடு சண்டை போடுகிறது. தேவையெனில் மாற்று இன ஆணை மட்டுமல்ல, தன் இனப் பெண்ணையே பலி கொடுக்கவும் தயாராக இருக்கிறது.

(இடமிருந்து) : தியாகராஜன் குமாரராஜா, நீலன் சேகர், நலன் குமாரசாமி மற்றும் மிஷ்கின்.

தேசிய இனத்தின் பற்று இப்படிப்பட்டதல்ல. ஜனநாயக வழிப்பட்ட பரிமாண வளர்ச்சியிலேதான் தேசிய இனத்தின் உருவாக்கம் வரலாற்றில் நிகழ்ந்தது. இன்று ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்தால் தேசிய இனங்கள் ஒடுக்கப்படுவதால், அது வர்க்க ரீதியாக வல்லரசு எதிர்ப்பையும் கொண்டிருக்கிறது.

தமிழ்வழிக் கல்வியோ, நீதிமன்றத்தில் தமிழோ, அதிகார வர்க்க அலுவல்களில் தமிழைக் கோருவதோ இங்குள்ள தமிழக உழைக்கும் மக்களின் அடிப்படை உரிமை. அதனால் அது ஜனநாயக உரிமையும் கூட. தன் சாதிப் பெண் தன் சாதி ஆணைத்தான் மணக்க வேண்டும் என்பது எப்படிப் பார்த்தாலும் ஒரு ஜனநாயக கோரிக்கை அல்ல. லவ் ஜிகாத்தும் அப்படியே. தேசப்பற்றில் இனவாதம் கலக்கும் போது அது உரிமைகளை பேசும் ஜனநாயகத்தை விடுத்து ஒடுக்குவதை பேசும் இனவெறியாக சீரழிந்து போகிறது. எனவே, அனைத்தும் குழு நலனே, ஒன்று சிறியது, மற்றொன்று பெரியது என்று சமப்படுத்தி பார்ப்பது அபத்தமானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட.

எல்லாம் ஒன்று என்ற தத்துவம் ஏலியன்ஸ் பாத்திரத்தின் மூலமும் பேசப்படுகிறது. இந்த இடத்தில் இப்படத்தின் படைப்பாளிகள் அத்வைதத்தை கொண்டு வருகின்றனர். அனைத்து உயிர்களும் ஜீவாத்மாவாக இருப்பினும் இறைவன் எனும் பரமாத்மாவோடு வேறுபட்ட ஒன்றல்ல, இரண்டும் ஒன்றுதான். சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக ஆத்மா இருக்கிறது என்று ஆதிசங்கரர் படைத்த அத்வைதம் கூறுகிறது. இரண்டற்ற நிலை எனும் அத்வைதத்தின் படி கயிறாக பார்த்தால் கயிறு, பாம்பாக பார்த்தால் பாம்பு. கள்ள உறவாக பார்த்தால் கள்ள உறவு. மனிதனின் விலங்குணர்ச்சிப்படி பார்த்தால் இயற்கையான காமம்.

இயற்கையின் இயக்கவியலின்படி பார்த்தால் ஒட்டு மொத்த இயற்கையும் அதில் இருக்கின்ற கல், மனிதன், தாய், காதலி, குழந்தை அனைத்தும் ஒன்றுதான். எனினும் இந்த ஒன்று என்பது பல வேறுபாடுகளின் இருத்தல்களாலும் இயக்கங்களாலும், அந்த வேறுபட்ட இயக்கங்களின் உறவுகளாலும் பிணைக்கப்பட்ட ஒன்று. பல்வேறு பொருட்களின் தனித்தனி இயக்கத்தால் முழுமை பெற்ற இயக்கமே இயற்கை. அல்லது தனது இயக்கத்தின் போக்கில் ஒன்றிலிருந்து மற்றொன்றாய் மாறி முன்னதில் இருந்து மாறுபட்டு புதிய தனது தனித்தன்மையை பேணும் முழுமையாக இயற்கை இயங்குகிறது.

எல்லாம் ஒன்று என்பதால் நாம் மலத்தை புசித்து பசியாற்ற முடியாது. அல்லது கல்லையோ, கட்டையையோ தின்று உயிர் வாழ முடியாது. மலையும் நாமும் ஒன்று என மலை உச்சியில் இருந்து குதித்தால் தத்துவப்படி நீங்கள் இறந்து மண்ணோடு மண்ணாக கலந்து போய் இயற்கை ஒன்றே என நிரூபிக்கலாம். அந்த நிரூபித்தலை பார்ப்பதற்கு நீங்கள் உயிரோடு இருக்க மாட்டீர்கள். உங்கள் உயிரின் இயக்கம் நிறுத்தப்படுகிறது. பிறகு, அது வேறொரு தனிப் பொருளாக மாறுகிறது.

குரங்கு மூதாதையர் காலத்தில் இருந்து மனிதனாக மாறும்போது பாலியல் உறவுகளில் விதிகளோ, தண்டனைகளோ இல்லை. அம்மா மகன், சகோதர உறவு அனைத்தும் இருந்திருக்கின்றது. பிறகு இன்ன தாயின் குழந்தைகள் என அறியப்படும் வளர்ச்சி தோன்றி தாய்வழிச் சமூகம் தோன்றுகிறது. அதன் பின்னர் சொத்துக்களின் தோற்றத்தில் இந்த தந்தைக்கு பிறந்த வாரிசுகள் என வர்க்க சமூகம் தோன்றுகிறது. ஒட்டு மொத்த வரலாற்றில் தனக்கு பிடித்த இணையை காதலிக்கும் காதல் எனும் நாகரீக வளர்ச்சி, வரலாற்றுப் போக்கில் தோன்றுகிறது. பிறகு வர்க்க சமூகம் எனும் தளைகளோடு அந்த காதல் இன்றுவரை தடுமாறுகிறது. ஆணாதிக்க சமூகத்தில் தனது பொருளாதார பாதுகாப்பை முதன்மையாக கருதும் ஒரு பெண்ணுக்கு தெரிவு எனும் சுதந்திரம் முழுமையாக இல்லை. அந்த தளைகள் வெட்டப்படாமல் காதல் முழுமை பெறாது.

இப்படியான புரிதலின்றி ஏலியன்ஸ் பாத்திரத்தின் மூலம் இயக்குநர் அத்வைதம் பேசுகிறார். இந்த உலகமே இருமைகளின் வழி இயங்குகிறது. சமூகவியல் படிபார்த்தால், முதலாளி – தொழிலாளி, ஆதிக்க சாதி – அடக்கப்படும் சாதி, வல்லரசு நாடுகள் – மூன்றாம் உலக நாடுகள் என்றே மக்கள் போராடுகிறார்கள், வாழ்கிறார்கள். இதை எல்லாம் ஒன்று என்று  சமப்படுத்துவதற்கு ஒரு முரட்டு முட்டாள்தனம் வேண்டும்.

ஷில்பா பாத்திரத்தின் மூலம் விஜய் சேதுபதி ஒரு திருநங்கையாக நடித்ததற்கு கொண்டாடப்படுகிறார். இந்தக்கதையில் திருநங்கை மற்றும் அவள் அவனாய் இருந்த போது பிறந்த குழந்தை ராசுக்குட்டியுடனான உறவு படம் நெடுக உணர்ச்சிகரமாக காட்டப்படுகிறது. திருநங்கையாக மாறுவதற்கு நியாயம் பேசும் ஷில்பாவின் காட்சிகள் பார்வையாளர்களை ஒன்ற வைக்கின்றன. ஆனால், இந்த நியாயத்திற்காக ஏழெட்டு ஆண்டுகளாக ஓடிப்போன கணவனுக்காக காத்திருக்கும் ஜோதியின் நியாயம் உரிய அளவுக்கு பேசப்படவில்லை. காத்திருக்கும் ஜோதி குறித்து உறவுப் பெண்கள் புறம் பேசும் அளவுக்கு, ஷில்பா எனும் மாணிக்கம் குற்ற உணர்வு அடையவில்லை. ஒரு பெண்ணின் மனதை ஒரு பெண்தான் உணர முடியும் என்று ஒரு வரியில் ஷில்பா பேசுவதாக முடித்து விடுகிறார் இயக்குநர். இக்கதையில் ஷில்பாவின் பிரச்சினைகளை விட ஜோதியின் அவலம் அதிகம் என்று நமக்குத் தோன்றுகிறது. விஜய் சேதுபதி எனும் ஆண் நடிகரின் திருநங்கை பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதனாலும் ஜோதிக்கு இங்கு வெளிச்சம் இல்லை.

சமீபகாலமாக திருநங்கைகள் குறித்து  நிறைய படங்கள் பேசினாலும் அனைத்தும் அவர்கள் மீது மனிதாபிமானம் கொள்ளுமாறு ஒரே மாதிரி வருகின்றன. மற்றவர்கள் போல திருநங்கைகள் வாழமுடியவில்லை என்பதன் ஆழமான சித்தரிப்போ, காட்சிகளோ மற்ற படங்களைப் போல இங்கும் இல்லை. இப்படத்திலும் ஏழு ஆண்டுகள் கழித்து வரும் ஒரு திருநங்கையை அந்தக் குடும்பம் ஏற்கிறது என்பது பெரிய பிரச்சினைகள் இன்றி எளிதாகக் காட்டப்படுகிறது.  திருநங்கைகள் விபச்சாரத்திற்கு தள்ளப்படுவதோ, காவல் துறையால் வல்லுறவு கொள்ளப்படுவதோ இவற்றைக் காட்டிலும் அவர்களால் இயல்பாக திருமணம் செய்து வாழ முடியுமா வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்பதை சமூகத்திற்கு உணர்த்துவது இப்படம் கூறும் கோணத்தை விட முக்கியமானது. கைதட்டி காசு பார்த்து வாழும் திருநங்கைகளில் ஓரிருவர் காவல் துறையிலோ, சிவில் சர்வீஸ் துறையிலோ பதவியேற்று நுழையும் காலத்தில் நமது படங்கள் இன்னும் பழைய கிளிஷேவிலேயே சுற்றுகின்றன.

சுனாமியில் ‘ஆண்டவரால்’ காப்பாற்றப்பட்ட அற்புதத்தின் கதை கொஞ்சம் மிகையாக இருந்தாலும் ஒரு கவிதை போல வடிக்கப்பட்டிருக்கின்றது. அற்புதங்களால் நம்பிக்கை அடையும் அற்புதம் பிறகு அந்த நம்பிக்கையில் தடுமாறுவதை கச்சிதமாக காட்டியிருக்கிறார் இயக்குநர். எனினும் இங்கும் முடிவில் சராசரி சினிமாத்தனத்தை கொண்டு வருகிறார். சுரங்கப்பாதையில் சந்திக்கும் திருநங்கையின் கதை அற்புதத்திற்கு ஒரு வெளிச்சத்தை காட்டுகிறது. அவளையும் ஒரு கல்தான் சுனாமியில் இருந்து காப்பாற்றியிருக்கிறது என்பதை அறியும் போது தன்னை காப்பாற்றியதும் ஆண்டவரல்ல, கல்தானே என்று அவன் தடுமாறுகிறான்.

படிக்க:
நூல் அறிமுகம் : சினிமா – திரை விலகும் போது …
உங்களுக்குள் ஒரு பாலியல் குற்றவாளி ! – புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2016

மகனைக் காப்பாற்றாத ஆண்டவரின் கல்லை ஆத்திரத்தில் உடைக்கும் போது ஆண்டவரின் மண்டை உடைபட்டு வைரக்கற்கள் கொட்டுகின்றன. இப்போது மருத்துவமனையில் இருக்கும் காயம்பட்ட மகனை வைரம் தந்து ஆண்டவன் காப்பாறுகிறாரா என்று அற்புதம் மீண்டும் தடுமாறுகிறான். இறுதியில் நம்பிக்கையின் அப்பாவித்தனம் மட்டும் வெள்ளந்தியாக படத்தில் காட்டப்படுகிறது. வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு அழுது அரற்றுவதையே தீர்வாக வைத்திருக்கும் ஆபத்தான பெந்தகோஸ்தே இயக்கம் இங்கே அனுதாபத்துடன் பார்க்கப்படுகிறது. இது தவறு என்றால் மாட்டுக்கறி உண்டால், மாடு வாங்கினால் வெட்டுவோம் எனும் இந்துமதவெறி படமெடுத்து ஆடும் காலத்தில் இத்தகைய கிறித்தவ சான்று காலப் பொருத்தமற்றுப் போகிறது.

குளிர்சாதனப்பெட்டிக்குள் பிணம், டிவி விழுந்து இன்ஸ்பெக்டர் மரணம், நீலப்படம் பார்க்கும் போது அம்மா நடிப்பது, ஆண்டவரின் மண்டையில் வைரம் சிதறுவது என்று பல காட்சிகள் மலிவான சுவராஸ்யத்திற்காக காட்டப்படுகின்றன. இவற்றை தற்செயலான நிகழ்வுகள் ஒரு கதையினை எடுத்துச் செல்வதாக சிலர் வியாக்கியானம் செய்கிறார்கள். ஆனால் தற்செயலான விபத்துகளுக்கும் தற்செயலான மனித முடிவுகளுக்கும் பாரிய வேறுபாடு இருக்கின்றது. திடீரென எடுக்கப்படும் முடிவுகளுக்கு பின்னே ஒரு நீண்ட முனைப்பும், ஆழ்மனதில் அசைபோட்டவாறு சஞ்சலப்படுவதும் இருந்தே தீரும்.

சாரமாக யோசித்தால் இத்திரைப்படம் எவ்வகையிலும் ஒரு ஆழ்ந்த திரை அனுபவத்தை தரவில்லை. காட்சிகளில் மனம் ஒட்டாமல் சிந்தனை எரிச்சலடைகிறது. விடலைப் பருவ சிறுவர்களுக்கு அசைண்ட்மெண்ட் கொடுக்கும் ரவுடியின் காட்சி அப்படியே ஆரண்யகாண்டத்தை நினைவுபடுத்துகிறது. அந்தப்படத்திற்கு பிறகு நெடுங்காலம் அசைபோட்டு எடுக்கப்பட்ட இயக்குநரின் இந்தப்படம் தனது காலநீட்டிப்பிற்கு எந்த நியாயத்தையும் சேர்க்கவில்லை.

படம் நெடுகிலும் மூலம், பௌத்திரம் சுவரொட்டிகளாகட்டும், பாழடைந்த தெருக்கள், வண்ணம் மங்கிய  கட்டிடங்கள், சந்து பொந்துகள் அனைத்தும் பளிச்சிடும் பெயிண்டிங் போல சுத்தபத்தமாக இருக்கின்றன. மலிவான விறுவிறுப்புக்கு பொருத்தமாக யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை வினாடித்துடிப்பாக இசைக்கிறது. அவ்வகையில் அத்வைதத்திற்கு ஏற்ற வடிவம்தான் .

நமது புதிய இயக்குநர்கள் பலரும் வடிவத்தின் போக்கில் உள்ளடக்கத்தை உருவாக்குகிறார்கள் போலும். சமூக உள்ளடக்கத்தை புரிந்து கொள்ளாத இத்தகைய கதைகளால் யாருக்கு என்ன பயன்?

இளநம்பி