அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 15

கப்பல் ஊழியத்திலிருந்து நில உடைமையாளர் வரை !

அ.அனிக்கின்
 டேனியல் டிஃபோ என்ற ஆங்கில நாவலாசிரியர் படைத்த இராபின்சன் குரூசோ என்ற இளைஞன் வீட்டிலிருந்து வெளியேறி கடலுக்கு ஓடினான். அப்பொழுது ஆரம்பித்த அவனுடைய வீர சாகசச் செயல்கள் வாசகர்களை இரண்டரை நூற்றாண்டுகளாகக் கவர்ந்து வந்திருக்கின்றன.

தென் இங்கிலாந்தில் ரோம்ஸி என்ற இடத்திலிருந்த அந்தோனி பெட்டி என்பவர் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அவர் குடும்பத்தில் இதைப் போன்ற ஒரு சம்பவம் நடைபெற்றது. அவருடைய பதினான்கு வயதான மகன் வில்லியம் குடும்பத் தொழிலைச் செய்ய மறுத்தான்; சவுத்தாம்ப்டன் என்ற துறைமுக நகரத்துக்குப் போய் ஒரு கப்பலில் வேலைக்குச் சேர்ந்தான்.

இங்கிலாந்தில் 17, 18-ம் நூற்றாண்டுகளில் இளைஞர்கள் தமது சலிப்பான, உப்பு சப்பில்லாத வாழ்க்கைக்கு எதிர்ப்புக் காட்டுவதற்காகக் கடலுக்கு ஓடினார்கள்; கப்பல்களில் வேலைக்குச் சேர்ந்தார்கள். அது அவர்களுடைய எதிர்ப்பின் வழக்கமான வடிவம். இது முதலாளித்துவ வாழ்க்கை முறைக்கு எதிரான கலகம் அல்ல; அதற்கு மாறாக இந்த இளைஞர்களின் உள்ளங்களில் வீர சாகசங்களைக் கொண்ட வாழ்க்கைக்கான ஏக்கம், தாங்கள் பணக்காரர்களாக வேண்டும், புதிய முதலாளித்துவ உலகத்தில் தங்களுடைய சக்தியைக் காட்ட வேண்டும் என்ற ஆசையோடு அநேகமாக உணர்வுப்பூர்வமாகவே இணைக்கப்பட்டிருந்தது. இளைஞனான பெட்டியிடமும் இந்த அம்சம் தனிச்சிறப்பான வகையில் இருந்தது.

டேனியல் டிஃபோ எழுதிய புதினத்தின் தமிழாக்க நூலின் முகப்பு அட்டை.

இதற்கு ஒரு வருடத்துக்குப் பிறகு கப்பலில் அவருடைய கால் ஒடிந்து விட்டது. அந்தக் காலத்திலிருந்த குரூரமான வழக்கத்தின்படி பெட்டியை அருகிலிருந்த கடலோரத்தில் இறக்கி விட்டார்கள். அது பிரான்சின் வட பகுதியிலிருக்கும் நார்மண்டி கடற்கரை. பெட்டியின் திறமையும், செய்முறை இயல்பும், அதிர்ஷ்டமும் அவரைக் காப்பாற்றியது.

இராபின்சன் குரூசோவைப் போலவே பெட்டியும் தன்னுடைய சுயசரிதத்தில், கடற்கரையில் தன்னிடம் எவ்வளவு குறைந்த பணத்தைக் கொடுத்துவிட்டுப் போனார்கள், அதை அவர் எப்படிப் பயன்படுத்தினார், பலவிதமான சிறு சாமான்களை வாங்கி, அவற்றை அதிக விலைக்கு விற்று எப்படிப் பணத்தைப் பெருக்கினார் என்பதை மிகுந்த கவனத்தோடு எழுதியிருக்கிறார். அவர் தன்னுடைய உபயோகத்துக்காக இரண்டு முட்டுக் கட்டைகளையும் வாங்கியிருக்கிறார். ஆனால் சீக்கிரத்தில் அவற்றை எறிந்துவிட்டார்.

சில குழந்தைகள் “கருவிலே திருவுடையவை” என்று சொல்வதுண்டு. பெட்டியும் அப்படிப்பட்ட மேதை என்றுதான் சொல்ல வேண்டும். ரோம்ஸியில் அவர் படித்த பள்ளிக்கூடத்தில் குறைவாகத்தான் சொல்லிக் கொடுத்தார்கள் என்ற போதிலும் அவர் லத்தீன் மொழியில் நல்ல தேர்ச்சியைப் பெற்றிருந்தார். ஏசு சபையைச் சேர்ந்த பாதிரிமார்கள் கான் என்ற இடத்தில் நடத்தி வந்த கல்லூரியில் சேர்வதற்கு அவர் எழுதிய விண்ணப்பத்தை முழுவதும் லத்தீன மொழியில் கவிதையாகவே எழுதியிருந்தார்.

படிக்க:
♦ பாசிசத்தின் இயற்கைக் கூட்டாளிதான் பாஜக | தோழர் மருதையன் உரை | காணொளி
♦ சிறப்புக் கட்டுரை : பிரெஞ்சுப் புரட்சி – உலகம் தன் தலை மீது நின்ற காலம் !

அவர்கள் அந்த இளைஞனின் திறமையைக் கண்டு ஆச்சரியமடைந்தார்களோ அல்லது கத்தோலிக்கத் திருச்சபையில் ஒரு திறமைசாலியைச் சேர்த்துக்கொள்ள விரும்பினார்களோ, என்னவோ தெரியாது. அவரைக் கல்லூரியில் சேர்த்துக் கொண்டார்கள்; உபகாரச் சம்பளம் கொடுத்துப் படிக்க வைத்தார்கள். பெட்டி அங்கே இரண்டு வருடங்கள் படித்தார். “அங்கே லத்தீன், கிரேக்க, பிரெஞ்சு மொழிகளைக் கற்றேன். சாதாரண கணிதம், கடற்பயணத்துக்குத் தேவையான செய்முறை வடிவ கணிதம், வானவியல் ஆகியவற்றைப் படித்தேன்…,”(1) என்று அவர் எழுதுகிறார். பெட்டியின் கணித அறிவு அபாரமானது. அவர்தம் வாழ்க்கை முழுவதும் சிறந்த கணித அறிஞராக இருந்தார். 1640-ம் வருடத்தில் அவர் லண்டனில் கடல் பரப்பு பற்றிய விவரப்படங்களை வரைந்து வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார். பிறகு அவர் மூன்றாண்டுக் காலம் கடற்படையில் சேவை செய்தார்; கப்பலோட்டுவதிலும், நிலப்படங்கள் வரைவதிலும் அவரிடமிருந்த திறமை அங்கே மிகவும் பயன்பட்டது.

நாட்டிலேற்பட்ட புரட்சி, அரசியல் மற்றும் சித்தாந்தப் போராட்டம் இந்த சமயத்தில் உச்ச கட்டத்தை அடைந்தது. உள்நாட்டுப் போர் வெடித்தது. இருபது வயது நிரம்பிய பெட்டி முதலாளித்துவப் புரட்சி, பரிசுத்தவாதத் தரப்பிலேதான் இருந்தார். ஆனால் இந்தப் போராட்டத்தில் நேரடியாக ஈடுபடுவதற்கு அவர் சிறிதும் விரும்பவில்லை. விஞ்ஞானம் அவரை ஈர்த்தது. அவர் ஹாலந்துக்கும் பிரான்சுக்கும் சென்று மருத்துவ இயலைப் படித்தார்.

இவ்விதமான பலதுறைப் புலமை பெட்டியின் சொந்தத் திறமைக்கு உதாரணம்; மேலும் 17-ம் நூற்றாண்டில் அப்பொழுதுதான் விஞ்ஞானத்தைத் தனித் தனியான பிரிவுகளாகப் பகுப்பதைத் தொடங்கியிருந்தார்கள். எனவே அறிவின் பல துறைகளிலும் புலமை பெற்றிருப்பது அன்று அபூர்வமாக இருக்கவில்லை.

அதன் பிறகு மூன்று ஆண்டுகள் பெட்டி பல நாடுகளையும் சுற்றிப் பார்த்தார். சுறுசுறுப்பாகச் செயலாற்றினார்; தீவிரமாக அறிவைச் சேகரித்தார். ஆம்ஸ்டர்டாமில் ஒரு பொற்கொல்லருடைய கடையில் – அவர் மூக்குக் கண்ணாடிகளும் செய்து கொடுப்பார் – அவர் வேலை செய்தார். இங்கிலாந்தை விட்டுவந்து பாரிசில் தங்கியிருந்த தத்துவஞானி ஹாப்சுக்கு செயலாளராகப் பணியாற்றினார். இருபத்து நான்கு வயதிலேயே – அவர் முழுவளர்ச்சியடைந்த மனிதராக, விரிவான அறிவும் அதிகமான சுறுசுறுப்பும், இன்ப நுகர்ச்சியும் தனிப்பட்ட கவர்ச்சியும் கொண்டவராக விளங்கினார்.

இங்கிலாந்தை விட்டுவந்து பாரிசில் தங்கியிருந்த தத்துவஞானி ஹாப்ஸ்

அவர் இங்கிலாந்துக்குத் திரும்பி ஆக்ஸ்போர்டில் மருத்துவக் கல்வியைத் தொடர்ந்தார். அதே சமயத்தில் லண்டனில் வேலை பார்த்துக் கொண்டுமிருந்தார். இரண்டு நகரங்களிலுமே அவர் இளம் விஞ்ஞானிகளடங்கிய குழுவில் முக்கியமான உறுப்பினராக இருந்தார். இந்த விஞ்ஞானிகள் தங்களைப் பற்றி “கண்ணுக்குத் தென்படாத கல்லூரி” என்று வேடிக்கையாகச் சொல்லிக் கொண்டார்கள்; மறுவருகைக்குப் பிறகு அவர்கள் “இராயல் சொஸைட்டி” என்ற பெயர் கொண்ட புது யுகத்தின் முதல் விஞ்ஞானப் பேரவையை ஏற்படுத்தினார்கள்.

பெட்டி 1650-ம் ஆண்டில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெளதிகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். பிறகு அங்கேயே உடற்கூறு இயல் பேராசிரியராகவும் ஒரு கல்லூரியின் துணை முதல்வராகவும் பணியாற்றினார். அவர் குடியிருந்த வீட்டில் ”கண்ணுக்குத் தெரியாத கல்லூரியின் ” கூட்டங்கள் நடைபெற்றன.

இந்த விஞ்ஞானிகளின் கருத்துக்கள் – பெட்டி உள்பட – குறிப்பிடக்கூடிய வகையில் புரட்சிகரமானவை அல்ல. ஆனால் அப்பொழுது புரட்சி வெற்றியடைந்து குடியரசு அறிவிக்கப்பட்டிருந்தது (மே, 1649). அந்தப் புரட்சி தனது முத்திரையை அவர்களுடைய நடவடிக்கைகளிலும் பொறித்தது. அவர்கள் சமய மரபு முறைகளுக்கு விரோதமாக, விஞ்ஞான ஆராய்ச்சியில் பரிசோதனை முறைகளை ஆதரித்தார்கள். பெட்டி தன்னுடைய வாழ்க்கை முழுவதும் தம் காலத்திய புரட்சியின் வேகத்தையும் ஜனநாயக உணர்ச்சியையும் கைக்கொண்டிருந்தார்; பிற்காலத்தில் அதிகச் செல்வமுள்ள நிலவுடைமையாளராகவும் கனவானாகவும் மாறிய பிறகும்கூட இந்த உணர்ச்சி அவரிடம் அவ்வப்பொழுது வெடித்தது; அதனால் அரண்மனையில் அவருடைய முன்னேற்றம் தடைப்பட்டதும் உண்டு.

பெட்டி நல்ல மருத்துவராகவும் உடற்கூறு இயல் நிபுணராகவும் இருந்திருக்க வேண்டும். அந்த இளம் பேராசிரியர் மருத்துவத்தைப் பற்றி எழுதிய கட்டுரைகளிலிருந்தும், ஆக்ஸ்போர்டில் அவருக்குக் கிடைத்த வெற்றிகளிலிருந்தும் அதன் பிறகு அவர் வகித்த உயர்ந்த பதவியிலிருந்தும் இது தெரிகிறது. இந்த சமயத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் அவரைப் பற்றி ஏராளமானவர்கள் தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியது.

1650 -ம் வருட டிசம்பர் மாதத்தில் ஆக்ஸ்போர்டில், அந்தக் காலத்தின் காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள், பழக்க வழக்கங்களின்படி ஆன் கிரீன் என்ற ஒரு ஏழை விவசாயப் பெண் தூக்கிலிடப்பட்டாள். ஒரு இளம் கனவானால் கற்பழிக்கப்பட்டிருந்த அந்தப் பெண் தனக்குப் பிறந்த குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தாள். (அந்தக் குழந்தை உரிய காலத்துக்கு முன்பே பிறந்து இயற்கையான காரணங்களினால் செத்துவிட்டது. அந்தப் பெண் மீது எந்தக் குற்றமும் கிடையாது.) அவள் தூக்கிலிடப்பட்டு உயிர் போய்விட்டது என்று உறுதி செய்யப்பட்ட பிறகு அவளுடைய உடலைச் சவப்பெட்டியில் வைத்தனர்.

உடற்கூறு ஆராய்ச்சிகளுக்காகப் பிரேதத்தை எடுத்துக்கொண்டுபோக டாக்டர் பெட்டியும் அவருடைய உதவியாளரும் அங்கே வந்தனர். அந்தப் பெண்ணின் உடலில் சிறிதளவு உயிர் இருப்பதைக் கண்டு அவர்கள் திகைப்படைந்தனர். அவர்கள் உடனே மிகவும் பாடுபட்டு அவளுக்குப் புத்துயிர் கொடுத்தனர். இதன் பிறகு நடைபெற்ற சம்பவங்களும் அவற்றில் பெட்டியின் பங்கும் சுவாரசியமானவை; இவை அவருடைய இயல்புகளை நன்கு விளக்குகின்றன.

முதலாவதாக, அந்த அபூர்வமான நோயாளியின் உடலமைப்பு, உளவியல் பற்றி அவர் பல சோதனைகளைச் செய்து அவற்றைத் துல்லியமாகக் குறித்துக் கொண்டார்.

இரண்டாவதாக, அவர் மருத்துவத் திறமையோடு மனிதாபிமானத்தையும் காட்டினார். அந்தப் பெண்ணுக்கு நீதிமன்றத்திலிருந்து விடுதலை வாங்கிக் கொடுத்தது மட்டும்மல்லாமல் அவளுக்கு உதவியாக நிதி வசூலித்துக் கொடுத்தார்.

மூன்றாவதாக, இந்த சம்பவத்தை அவருக்கே உரிய திறமையோடு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அதிகமான விளம்பரத்தை அடைந்தார்.

1651-ம் வருடத்தில் டாக்டர் பெட்டி தன்னுடைய பதவியை விட்டு திடீரென்று விலகினார். அயர்லாந்தில் இருந்த ஆங்கிலப் படைகளின் பிரதம தளகர்த்தரிடம் மருத்துவர் வேலையில் சேர்ந்தார். 1652 செப்டம்பர் மாதத்தில் முதன் முறையாக அயர்லாந்தில் காலடி வைத்தார். இந்த திடீர் மாற்றத்துக்குக் காரணம் என்ன? அவரைப் போன்று துணிகரமான வாழ்க்கையை நாடிய சுறுசுறுப்பான இளைஞருக்கு ஆக்ஸ்போர்டில் பேராசிரியர் பதவி மிகவும் அமைதியானதாக, எதிர்கால முன்னேற்றத்துக்கு உதவி செய்ய முடியாததாக இருந்திருக்க வேண்டும்.

அயர்லாந்தில் ஏற்பட்ட கலகம் தோல்வியடைந்து, பத்து வருட கால யுத்தம், பசி, பட்டினிக்குப் பிறகு ஆங்கிலேயர்கள் அந்த நாட்டை மறுபடியும் பிடித்திருந்தார்கள். பெட்டி இந்த சமயத்தில் அயர்லாந்துக்கு வந்தார். இங்கிலாந்துக்கு எதிராகக் கலகம் செய்த ஐரிஷ் கத்தோலிக்கர்களின் பண்ணைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த யுத்தத்துக்குப் பணம் கொடுத்த லண்டனைச் சேர்ந்த பணக்காரர்களுக்கும், வெற்றியடைந்த படையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும் படைவீரர்களுக்கும் பணம் கொடுக்க பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களைப் பயன்படுத்துவதென்று கிராம்வெல் முடிவு செய்திருந்தார்.

அவற்றைப் பிரித்துக் கொடுப்பதற்கு முன்பாக பல கோடி ஏக்கர்களையும் அளந்து வரைபடத்தில் குறிக்க வேண்டியிருந்தது. (இதை உடனடியாகச் செய்ய வேண்டியிருந்தது; ஏனென்றால் இராணுவத்தினர் அமைதி குலைந்து, வெகுமதிகள் எங்கே என்று கூக்குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர்.) 17-ம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் இது பிரம்மாண்டமான கஷ்டங்கள் நிறைந்த வேலையாக இருந்தது. தேசப்படங்கள் இல்லை, கருவிகள் இல்லை; அனுபவமுள்ள நபர்களோ போக்குவரத்துச் சாதனங்களோ இல்லை. நிலங்களை அளக்கப் போனவர்களை விவசாயிகள் தாக்கிக் கொண்டிருந்தார்கள்…

இந்த நெருக்கடியான நிலைமையில், உடனடியாகப் பணம் சம்பாதிக்கவும் முன்னேற்றமடையவும் ஒரு அபூர்வமான வாய்ப்பு தோன்றியிருப்பதாகப் பெட்டி முடிவு செய்தார். அவர் இந்தப் பணியை மேற்கொண்டார். வரைபடம் தயாரிப்பதிலும் பூமியின் பரப்பைக் கணிப்பதிலும் அவர் பெற்றிருந்த அனுபவம் உதவி செய்தது. ஆனால் அதைத் தவிர, சுறுசுறுப்பும் வேகமும் சூழ்ச்சியும் அவசியமாக இருந்தன.

பெட்டி அரசாங்கத்தோடும் இராணுவத்தோடும் ”இராணுவ நிலங்களை அளந்து கொடுப்பதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டார். நிலத்துக்கு விலையாகப் படைவீரர் களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணம் அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் லண்டனிலிருந்து ஏராளமான கருவிகளை வரவழைத்தார்; ஆயிரம் நில அளவையாளர்களை அயர்லாந்துக்குக் கொண்டுவந்து பயிற்சி கொடுத்தார்; அயர்லாந்தின் நிலப்படங்களைத் தயாரித்தார். அயர்லாந்து நீதிமன்றங்களில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நிலத் தகராறுகளைப் பற்றி முடிவு செய்வதற்கு இந்தப் படங்களே உதவி செய்தன. இவ்வளவையும் அவர் ஒரு வருடத்துக்குச் சிறிது கூடுதலான காலத்தில் செய்து முடித்தார். அவர் எந்தக் காரியத்தையும் சிறப்பாக நிறைவேற்றக் கூடியவர்.

பெட்டிக்கு இப்பொழுது முப்பது வயதாகியிருந்தது. “இராணுவ நிலங்களை அளந்து கொடுப்பது”அவருக்குத் தங்கச் சுரங்கமாக மாறியிருந்தது. ஒரு அடக்கமான மருத்துவராக அயர்லாந்துக்கு வந்தவர் சில வருடங்களில் நாட்டிலேயே அதிகமான செல்வமும் செல்வாக்கும் கொண்டவராக மாறிவிட்டார்.

அவருடைய பிரமிக்கத்தக்க வளர்ச்சியில் சட்டரீதியானது எது? சட்டவிரோதமானது எது? பெட்டியின் வாழ்நாளில் இதைப் பற்றி மிகத் தீவிரமாக பலர் வாதிட்டார்கள். இது பற்றிய முடிவு ஓரளவுக்கு அவரவர்களுடைய கருத்து நிலையைப் பொறுத்ததாகும். அயர்லாந்தைக் கொள்ளையடித்தது சட்ட விரோதமானது. பெட்டி இந்த அடிப்படையில்தான் பாடுபட்டார்; ஆனால் அவர் தன்னைப் பொறுத்தவரை எழுத்தளவில் சட்டத்தின் ஒழுங்குமுறைகளை மீறவில்லை. அவர் கொள்ளையடிக்கவில்லை, கொள்ளையடித்த அரசாங்கத்திடமிருந்து அதிகமாகவே எடுத்துக்கொண்டார். அவர் திருடவில்லை; ஒவ்வொன்றையும் விலைக்குத்தான் வாங்கினார். அவர் ஆயுதங்களைப் பயன்படுத்தி நிலங்களிலிருந்து மக்களை விரட்டவில்லை; நீதிமன்ற உத்தரவைக் கொண்டுதான் அவர்களை வெளியேற்றினார். இதில் லஞ்சம், ஊழல் சிறிது கூட இல்லை என்று சொல்லிவிட முடியாது; ஆனால் இதுதானே அன்று இயற்கையாகக் கருதப்பட்டது.

படிக்க:
♦ எழுத்தாளரும் வாசகரும் சந்திப்பதே இல்லை !
♦ குழந்தைகள் என் ஆசிரியர்கள் , ஆசான்கள் என்கிறார் ஒரு ஆசிரியர் !

பெட்டியின் பேராற்றல் மிக்க சுறுசுறுப்பு, தன்னுடைய திறமையைக் காட்ட வேண்டும் என்ற துடிதுடிப்பு, வீர சாகசம்… இவை சீக்கிரமாகப் பெருஞ்செல்வத்தைத் திரட்ட வேண்டும் என்ற ஆசையில் வெளிப்பட்டன. நிலஅளவு செய்வதைப் பற்றிய ஒப்பந்தத்தை நிறைவேற்றியதில் அவருக்கு 9,000 பவுன் லாபம் கிடைத்ததாக அவரே சொல்லியிருக்கிறார். இராணுவத்திலிருந்த அதிகாரிகள், படைவீரர்கள் பலர் நிலம் ஒதுக்கப்படுகிற வரை காத்திருக்க விரும்பவில்லை; இன்னும் பலர் ஒதுக்கப்பட்ட நிலத்தில் உழைக்க விரும்பவில்லை. பெட்டி தமக்குக் கிடைத்த லாபப் பணத்தில் இவர்களுடைய நிலங்களை வாங்கினார். இதைத் தவிர, அரசாங்கமும் கொடுக்க வேண்டிய பணத்தில் ஒரு பகுதியை அவருக்கு நிலமாகக் கொடுத்தது.

மருத்துவர் பெட்டி எந்த முறைகளைக் கையாண்டு தம் சொத்துக்களைப் பெருக்கினார் என்பது நமக்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால் யாரும் நினைக்க முடியாத அளவுக்கு அவர் செல்வத்தைத் திரட்டினார்; அயர்லாந்தின் பல்வேறு பகுதிகளில் அவருக்கு ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள் இருந்தன. பிற்காலத்தில் அவை இன்னும் அதிகரித்தன. அதே சமயத்தில் அவர் அயர்லாந்தின் ஆளுநர் பதவியை வகித்த ஹென்ரி கிராம்வெல்லின் நம்பிக்கையான உதவியாளராகவும் காரியதரிசியாகவும் இருந்தார். ஹென்ரி கிராம்வெல் இங்கிலாந்தை ஆட்சி செய்த ஓலிவெர் கிராம்வெல்லின் இளைய மகன் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

பெட்டியின் விரோதிகளும் அவரை விரும்பாதவர்களும் பலவிதமான சூழ்ச்சிகளைச் செய்த போதிலும் இரண்டு அல்லது மூன்று வருட காலம் பெட்டிக்கு ஆபத்து ஏற்படவில்லை. ஆனால் 1658 -ம் வருடத்தில் ஓலிவெர் கிராம்வெல் மரணமடைந்தார். அவர் மகனுடைய நிலை மென்மேலும் ஆபத்தானதாயிற்று. இந்தச் சூழ்நிலையில் அவருக்கு விருப்பமில்லா விட்டாலும் கூட நிர்ப்பந்தத்தின் காரணமாக பெட்டியின் நடவடிக்கைகளைப் பற்றி ஆராய்வதற்கு ஒரு விசேஷ விசாரணைக் குழுவை நியமித்தார். அந்த விசாரணைக் குழுவில் பெட்டியின் நண்பர்கள் பலர் இடம் பெற்றிருந்தது உண்மையே.

பெட்டி தன்னுடைய கருத்துக்களுக்காகப் போராடும் பொழுது காட்டிய சுறுசுறுப்பு, நுணுக்கமான திறமை, மேதாவிலாசம் ஆகியவற்றில் சிறிது கூடக் குறையாமல் தன்னுடைய செல்வத்தையும் நற்பெயரையும் காப்பாற்றிக் கொள்வதற்குப் போராடினார். அவர் தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பதை விசாரணைக் குழுவுக்கு முன்பாக மட்டுமல்லாமல் லண்டனிலுள்ள நாடாளுமன்றத்திலும் (அவர் அதன் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்) நிரூபித்தார்.

அவர் இந்தப் போராட்டத்திலிருந்து முழு வெற்றியோடு வெளியே வரவில்லை என்றாலும், இழப்புகள் ஏதுமில்லாமல் வெளியே வந்தார். 1660-ம் வருடத்தில் மறுவருகைக்கு முந்திய சில மாதங்களின் போது நிலவிய அரசியல் – குழப்பம் பெட்டி விவகாரத்தை மிகவும் பின்னுக்குத் தள்ளிவிட்டது. அது அவருக்கும் மிகச் சாதகமாக இருந்தது.

மறுவருகைக்குச் சற்று முந்திய காலத்தில் ஹென்ரி கிராம்வெல்லும் அவருடைய அந்தரங்க உதவியாளரும் அரச பரம்பரையின் முக்கியமான ஆதரவாளர்களில் சிலருக்கு அரிய சேவைகளைச் செய்தார்கள். இரண்டாம் சார்ல்ஸ் இங்கிலாந்துக்குத் திரும்பிய பொழுது இந்த நபர்கள் அதிகாரத்தைப் பெற்றார்கள். ஹென்ரி கிராம்வெல் கெளரவமாகத் தனி வாழ்க்கையில் ஈடுபடுவதற்கும் பெட்டி அரண்மனை வட்டாரத்துக்குள் நுழைவதற்கும் அவர்கள் உதவி செய்தார்கள். 1661-ம் வருடத்தில் துணி நெசவாளியின் மகனான பெட்டிக்கு ‘சர்’ பட்டம் வழங்கப்பட்டது; அவர் சர் வில்லியம் பெட்டி ஆனார். இது அவருடைய வெற்றிகளின் உச்சகட்டம். அவருக்கு அரசருடைய ஆதரவு இருந்தது; அவருடைய எதிரிகள் அவமானமடைந்து விட்டார்கள்; அவரிடம் பணமும், செல்வாக்கும் சுதந்திரமும் இருந்தது…

ஹென்ரி கிராம்வெல்
ஹென்ரி கிராம்வெல்

அரசர் சார்ல்ஸ் இரண்டு சந்தர்ப்பங்களில் அவரைப் பிரபுவாக்க விரும்பினார் என்று அரசாங்க ஆவணங்களிலிருந்தும் பெட்டியின் கடிதங்களிலிருந்தும் தெரிந்து கொள்கிறோம். பெட்டி இந்த சமயத்தில் தன்னுடைய துணிச்சலான பொருளாதாரத் திட்டங்களை அமுலாக்கக் கூடிய வகையில் தனக்கு மெய்யான அதிகாரமுள்ள அரசாங்கப் பதவி கொடுக்க வேண்டுமென்று அரசரையும் அரண்மனை வட்டாரங்களையும் நச்சரித்துக் கொண்டிருந்தார். எனவே தன்னுடைய வேண்டுகோளைப் புறக்கணிக்கும் நோக்கத்தில்தான் தன்னைப் பிரபுவாக்க உத்தேசிக்கிறார்கள் என்று கருதினார். அதுவும் நியாயமான எண்ணம்தான். அரசர் மனமுவந்து தரவிரும்பிய பிரபு பட்டத்தை பெட்டி ஏன் மறுத்தார் என்பதைப் பற்றி அவர் ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த விளக்கம் பெட்டியின் ஆளுமையையும் அவருடைய இயல்பையும் நன்கு எடுத்துக்காட்டுகிறது. ”நான் குறைவான ஆனால் உண்மையான மதிப்புடைய செப்புக் காசாக இருப்பேனே தவிர அரைக் கிரவுன் நாணயமாக இருக்க மாட்டேன். என்ன தான் தங்கமுலாம் பூசினாலும் அது பித்தளைக் காசுதானே…”(2) அரண்மனையின் பல அடுக்கு ஏற்றவரிசையில் பெட்டி மிகவும் கீழான அந்தஸ்தையே வகித்தார்.

சர் வில்லியம் பெட்டி மரணமடைந்து ஒரு வருட காலத்துக்குப் பிறகு அவருடைய மூத்த மகன் சார்ல்சுக்கு ஷெல் பர்ன் பிரபு என்ற பட்டம் வழங்கப்பட்டது. எனினும் அது அயர்லாந்தின் பிரபுப் பட்டமாதலால் லண்டனிலிருக்கும் பிரபுக்கள் சபையில் உறுப்பினராக முடியாது. கடைசியில் பெட்டியின் கொள்ளுப் பேரனுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது. அவர் லான் ஸ்டௌன் பிரபு என்ற பட்டத்தைப் பெற்று பிரபுக்கள் சபையின் உறுப்பினரானார்; முக்கியமான அரசியல்வாதியாகவும் விக் கட்சியின் தலைவராகவும் இருந்தார்.

நிற்க. இருபதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஆளும் வர்க்கத்தினருக்கு அரிய சேவைகளைச் செய்த பிரபலமான பொருளாதார நிபுணர்களுக்கு, அவர்களுடைய விஞ்ஞானப் பணிகளுக்காக பிரபுப் பட்டம் கொடுக்கப்படுகிறது. அவ்வாறு கெய்ன்சுக்கு பிரபுப் பட்டம் கொடுக்கப்பட்டது. ” அரசியல் பொருளாதாரத்தின் மேற்குடியினரில் ” அவர் முதல்வர்.

(தொடரும்…)

அடிக்குறிப்பு:
(1) E. Strauss, Sir William Petty. Portrait of a Genius, London, 1954, p. 24.
(2) Dictionary of National Biography, ed. by L. Stephen and S. Lee, Vol. 45, p. 116.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க