கார்ப்பரேட் – காவி பாசிசம் – எதிர்த்து நில் ! என்ற திருச்சி மாநாட்டின் அறைகூவலையொட்டி நெல்லையில் மக்கள் அதிகாரம் சார்பாக 11.04.19 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இப்பொதுக் கூட்டத்திற்கு நெல்லை பகுதி மக்கள் அதிகாரம் தோழர் செ.முருகன் தலைமை வகித்தார். தோழர் அன்பு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். சி.ராஜூ சிறப்புரை ஆற்றினார். இறுதியாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தோழர் முருகன் தனது தலைமையுரையில், கார்ப்பரேட் – காவி பாசிசம் மிக கொடூரமான ஆபத்து எனவும், எனவே அதை முறியடிக்க எந்த தடைகளையும் தாண்டிச் செல்ல வேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பேசினார். விவசாயிகளின் பிரச்சினையை ஏறிட்டும் பார்க்காத அதிகாரிகள், தாமிரபரணியில் கோக் நிறுவனத்திற்கு தண்ணீர் எடுக்க ஒத்துழைப்பதை சுட்டிக்காட்டிப் பேசினார்.

மேலும் தொடர்ந்து தென்மாவட்டங்களில் நிலவி வரும் அரசின் அடக்குமுறைகளைச் சுட்டிக்காட்டிப் பேசினார். இந்த அடக்குமுறைகளையெல்லாம் முறியடிக்கும் வல்லமை இந்த மண்ணிற்கு உண்டு, ஏனெனில் சுதந்திரப் போரின் பல தியாகிகளை இந்த மண் ஈன்றெடுத்துள்ளது. அந்த வழியில் நாமும் பயணிப்போம் என்று கூறி தனது உரையை முடித்தார்.

அடுத்து சிறப்புரையாற்றிய தோழர் சி.ராஜூ கார்ப்பரேட் காவி பாசிசத்தை முறியடிப்பதற்கு தேர்தல் பயன்படாது. அரசின் எல்லா நிர்வாக அமைப்புகளையும் பாசிஸ்டுகள் கைப்பற்றிக் கொண்ட சூழலில் மக்கள் போராட்டங்கள் மூலமாகத்தான் முறியடிக்க முடியும் என்பதை நிறுவிப் பேசினார். கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு அதிகார வர்க்கம் எப்படி கிரிமினல் கும்பலைப் போல கைக்கூலியாக வேலை செய்கிறது என்பதைப் பற்றிப் பேசினார்.

அதிகார வர்க்கத்தை மக்கள் தேர்ந்தெடுக்க முடியாது. திருப்பி அழைக்கவும் முடியாது. அரசின் கொள்கைகளை மக்கள் முடிவு செய்ய முடியாது. இவற்றிற்கெல்லாம் தேர்தல் வைப்பார்களா? என்று கேள்வி எழுப்பினார். ஆக மிகக் கொடூரமான கார்ப்பரேட் காவி பாசிசத்தையும் வீழ்த்துவதற்கான களத்தில் முன்னே நிற்பதற்கு மக்கள் அதிகாரம் தயாராக உள்ளது. பின்தொடர மக்கள் தயாராக வேண்டும் என்று அறைகூவல் விடுத்து தனது உரையை முடித்தார்.

தோழர் ராஜு உரை :

 

இறுதியாக, ம.க.இ.க கலைக்குழுவின் கலைநிகழ்ச்சிகள் வந்திருந்தவர்களுக்கு அரசியல் உணர்வூட்டின. நிகழ்ச்சி முடிந்த பின்னரும் புதிதாக வந்த நிறைய பேர் ஆர்வத்தோடு வந்து பேசிச் சென்றனர்.

காவல்துறை அனுமதி மறுத்து, நீதிமன்றத்தில் இரண்டு வாய்தா வாங்கி இறுதியாக நான்கு நாட்களுக்கு முன்புதான் அனுமதி கிடைத்தது. அதுவும் 2 மணி நேரம் மட்டுமே பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்று உத்தரவு. நகர் முழுக்க ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் தேர்தலைக் காரணம் காட்டி போலீசால் மொத்தமாக கிழிக்கப்பட்டன. நிகழ்ச்சி தொடங்கும் போதே 30 -க்கும் மேற்பட்ட உளவுத் துறையினரும், 80 -க்கும் காவல்துறையினரும் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் குவிந்து விட்டனர்.

மக்கள் அதிகாரம்இத்தனை ஒடுக்குமுறைகளையும் கடந்து நெல்லை மக்களின் திரளான பங்கேற்போடும் ஆர்வத்தோடும் பொதுக்கூட்டம் சிறப்புற நடந்து முடிந்தது. கார்ப்பரேட் காவி பாசிசத்தை எதிர்த்து நிற்பதற்கான உறுதியை பொதுக்கூட்டம் வந்திருந்தவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் என்பதில் மிகையில்லை.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க