சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 10

சி.என்.அண்ணாதுரை
காட்சி : 14

இடம் : ஆஸ்ரமம்.
உறுப்பினர்கள் : காகப்பட்டர் – ரங்குபட்டர் – சிஷ்யர்கள்.

(சிஷ்யர்கள் வேதம் ஓதிக் கொண்டிருக்கின்றனர். காது கொடுத்துக் கேட்க முடியாத நிலையில் ரங்குபட்டர் வந்து..)

ரங்குபட்டர் : ஏண்டாப்பா பிரகஸ்பதிகளே ! காது குடையறது ! போதும், நீங்க போட்ட கூச்சல். அரிதுயில் செய்யும் ஸ்ரீமன் நாராயணமூர்த்தி காதில் கூட விழுந்திருக்கும். போதும், நிறுத்திவிட்டுப் போய் சமையல் காரியத்தைக் கவனியுங்கோ. சதா சர்வ காலமும் ஆகா ஊகூண்ணு கூவிண்டிருக்கிறது போதும்… போங்கள்…

சிஷ்யன் : குரு பாடம் படியுங்கள் என்கிறார்…

ரங்குபட்டர் : இப்போ இந்த குரு சொல்றார்; போதும், நீங்கள் பாடம் படிச்சதுண்ணு . எழுந்திருங்கள். மகா பெரிய ஞானஸ்தாள்தான்.

(சீடர்கள் போக)

தலைவலி வந்துடறது இங்கே. காலை முதல் மாலை வரை ஒரே காது குடைச்சல். இந்தப் ப்ரகிருதிகள் ப்ராணனை வாட்டிண்டிருக்க இந்தக் கருமம் எப்பத்தாந் தருமோ தெரியல்லே நமக்கு. இந்தக் குருவுக்கோ …

(காகப்பட்டர் வருகிறார்)

காகப்பட்டர் : ரங்குபட்டர் என்னடாப்பா குருவுக்கு அர்ச்சனை?

(ரங்குபட்டர் அவர் காலில் விழுந்து)

ரங்குபட்டர் : நான் ஒண்ணும் அபசாரமா பேசிடலே ஸ்வாமி

காகப்பட்டர் : ரங்குபட்டர் இந்த உபசாரமெல்லாம் வேண்டாம். நெடு நாட்களாக நோக்கு விசாரம் இருக்கு என்பது தெரியும் நேக்கு.

ரங்குபட்டர் : என் மனசை அறிஞ்சிண்டிருக்கேள். மகான் அல்லவோ தாங்கள் விசாரம் இருப்பது உண்மைதான். ஆனால்…

காகப்பட்டர் : ஆனால் என்ன?

ரங்குபட்டர் : அந்த விசாரம் என் பொருட்டல்ல. சகல சாஸ்திர சம்பன்னராகிய தங்கள் பொருட்டுத்தான் விசாரப்படுகிறேன்.

காகப்பட்டர் : என் பொருட்டு என்னடாப்பா விசாரம்?

ரங்குபட்டர் : ஏனிராது குரு சாமான்யளெல்லாம் எவ்வளவோ சம்பத்துக்களுடன் வாழறா. அரண்மனைகளிலே வாசம் செய்துண்டு. நந்தவனங்களிலே அப்சரஸ் போன்ற ஸ்திரீ ரத்னங்களோடு உலாவிண்டு.

(இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டு ஒரு சீடன் நிற்பதைக் கவனித்த ரங்குபட்டர் அவனைப் பார்த்து) டேய், மண்டு நாங்கள் ஏதாவது பேசிண்டிருந்தா நீ கேட்டிண்டிருக்கணுமோ? போடா உள்ளே…

(சீடன் போகிறான்)

கேட்டேளோ அப்சரஸ் போன்ற ஸ்திரீ ரத்னங்களோட உலாவிண்டு ஆனந்தமா காலம் கழிக்கிறா…

காகப்பட்டர் : ஆமாம்… அதனால் என்ன? அதற்குத்தான் ராஜயோகம் என்று பெயர்.

ரங்குபட்டர் : பெயர் எதுவானாலும் இருக்கட்டும் ஸ்வாமி. அவ்விதமான ஆனந்தம் கிஞ்சித்தேனும் என் போன்றவாளுக்குத் தேவையில்லை. நான் சாமத்துக்கும் யஜுருக்கும் வித்யாசம் தெரியாத மண்டு. ஆனால் நாலு வேதத்தையும் நாற்பத்தெட்டுவித பாஷ்யத்தோடு உபதேசிக்கக்கூடிய தங்களைப் போன்ற தன்யாளுக்கு இந்த ராஜபோகத்திலே ஆயிரத்திலே ஒரு பங்கு இருக்கப்படாதோ? இல்லையே என்பதுதான் நேக்குள்ள விசாரம். . .

காகப்பட்டர் : டே, ரங்குபட்டர். உன் குரு பக்தி இருக்கே. அது கேட்க நேக்கு பரம்மானந்தமா இருக்கு. இருக்கட்டும்; ராஜபோகம் இருக்கே, அது என்ன பிரமாதம்..

ரங்குபட்டர் : என்ன ஸ்வாமி இது. சாமான்யாளுக்குச் சொல்றதையே நேக்கும் சொல்றளே நானுங்கூடத்தான் தங்கள் உபதேசத்தின்படி லோகம் மாயை, ஆனந்தம் என்பது அநித்யம், போக போகாதிகள் வீண் சொப்பனம், இந்திரியச் சேட்டைகள் ஆகாது என்றெல்லாம் பாமராளுக்குக் கூறுகிறேன். அதே விஷயத்தை நேக்கும் சொல்றேளே ! மாயா வாதம் மனத் திருப்தி தருமா?

காகப்பட்டர் : நான் மாயைப் பற்றித் சொல்லவில்லை. ராஜபோகம் நிலையானதுதான்; சந்தோஷமானதுதான். ஆனா ப்ரமாதமில்லே. ஏன் அப்படிச் சொல்றேன் என்கிறியோ? அந்த ராஜபோகத்துக்கு லவலேசமும் குறைந்ததல்ல நமக்கு இருப்பது…

ரங்குபட்டர் : இந்தப் பர்ணசாலையை அரண்மனையாகவும், இந்தச் சீடர்களைச் சேடிகளாகவும் நினைத்துக் கொள்ள வேண்டுமென்கிறீராக்கும்.

எவன் ஜெயித்தாலும் தோற்றாலும் நமக்குக் கவலை கிடையாது. சண்டைக்குக் கிளம்பும்போது ராஜன் நம்முடைய ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டுதான் போவான். அவன் யுத்த களத்திலே மாண்டு போகிறான் என்று வைத்துக் கொள். ஜெயித்த ராஜா முதலில் நம்மை நமஸ்கரித்து, நம்முடைய ஆசிர்வாதம் பெற்ற பிறகுதான் மகுடம் புனைவான்.

காகப்பட்டர் : இல்லை. ஒரு ராஜாவுக்கு ஒரு ராஜ்யம் நமக்கோ எல்லா ராஜ்யங்களும் சொந்தம். அரசனுக்கு ஒரு அரண்மனை. அத்தனை அரண்மனைகளிலும் நாம் கம்பீரமாகச் செல்லலாம். ஒரு ராஜா மற்றொரு ராஜாவிடத்திலே அன்பு காட்டுவான் மேலுக்கு. உள்ளே பகை புகையும். சமயம் வாய்த்த போது சத்ரு ஆவான். நமக்கோ எல்லா ராஜாக்களும் நமஸ்காரம் செய்வா. ஒரு ராஜாவும் நம்மைத் சத்ருவா கருதமாட்டான்.

ஒரு ராஜாவுக்கு ராஜபோகம் இருப்பது போலவே ரணயோகமும் உண்டு. அதாவது சண்டை வந்துவிடும். ஆபத்து வரும். நமக்கோ ராஜாதி ராஜாக்கள் ரணகளத்திலே மண்டை பிளக்க சண்டை போட்டுக் கொண்டாலும் கவலை இல்லை. யுத்தம் நமக்குக் கிடையாது. யுத்த சமயத்திலே வெட்டு, குத்து யார் யாருக்கோ இருக்கும். நம்மை அண்டாது. எவன் ஜெயித்தாலும் தோற்றாலும் நமக்குக் கவலை கிடையாது. சண்டைக்குக் கிளம்பும்போது ராஜன் நம்முடைய ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டுதான் போவான். அவன் யுத்த களத்திலே மாண்டு போகிறான் என்று வைத்துக் கொள். ஜெயித்த ராஜா முதலில் நம்மை நமஸ்கரித்து, நம்முடைய ஆசிர்வாதம் பெற்ற பிறகுதான் மகுடம் புனைவான். பைத்தியக்காரா! ராஜபோகம் ஆனந்தத்துக்கு மட்டுமல்லடா ; ஆபத்துக்கும் அது இருப்பிடம்

(புலித்தோலைக் காட்டி) இதோ பார் இது என்ன?

ரங்குபட்டர் : என்ன ஸ்வாமி இது! என்னை முட்டாள் என்று எண்ணிக் கொண்டாலும் பரவாயில்லை. கேவலம் குருடன் என்று தீர்மானித்து விட்டீர் போலிருக்கிறதே இது என்னவென்று கேட்கிறீரே இது புலித்தோல் இது கூடவா தெரியாது.

காகப்பட்டர் : இது தெரிகிறதே தவிர இது உபதேசம் செய்கிற பாடம் தெரியவில்லையே நோக்கு.

ரங்குபட்டர் : என்ன புலித்தோல் உபதேசம் செய்கிறதா?

காகப்பட்டர் : ஏன் செய்யவில்லை? அரச போகத்துக்கும், ஆரிய யோகத்துக்கும் உள்ள தாரதம்யத்தைத்தானே புலித் தோல் உபதேசம் செய்கிறது.

ரங்குபட்டர் : என்ன ஸ்வாமி இது வேடிக்கை பேசுகிறீர்.

காகப்பட்டர் : ரங்குபட்டர் வேடிக்கை இல்லை. புலித்தோலைப் பார். இது நமக்கு ஆசனம். சொர்ண சிங்காதனத்தின் மீதிருந்து செங்கோல் செலுத்துகிற மகாராஜனும் கூட இந்தப் புலித்தோல் ஆசனத்தில் அமரும் நமக்கு மரியாதை காட்டுவான். இது கேவலம், மிருகத்தின் தோல். ஆனால், மன்னாதி மன்னரும் இதன் முன் மண்டியிடுகிறார்கள்.
இல்லையா?

ரங்குபட்டர் : ஆமாம் குருவே

காகப்பட்டர் : இப்போது யோசித்துப்பார். தங்க சிம்மாசனத்தில் அமர்ந்தாலும் நமது திருப்பாதத்தை வணங்கும் ராஜனுடைய யோகம் பெரிதா? தோலின் மீதமர்ந்து – அரசர்களுடைய முடியைக் காலிலே காணும் நம்முடைய யோகம் பெரிதா?

ரங்குபட்டர் : உண்மைதான் குருவே !

காகப்பட்டர் : அதுமட்டுமல்ல அரசர்களை அஞ்சலி செய்யச் சொல்லும் இந்த அற்புதமான ஆசனம் இருக்கிறதே இது ஒரு காலத்தில் ஆரண்யத்திலே உலவிக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் நாம் அதன் அருகே கூட செல்ல முடியாது. முடியுமோ ?

ரங்குபட்டர் : எலியைக் கண்டாலே சில சமயம் மிரள்கிறோமோ புலியிடம் பயமில்லாமல் இருக்குமா ஸ்வாமி?

காகப்பட்டர் : அப்படிப்பட்ட புலியின் தோல் மீது நாம் உட்கார்ந்திருக்கிறோம். பூபதிகள் நமக்குப் பூஜை செய்கிறார்கள். முட்டாளே இது உண்மையான யோகமா? ராஜபோகம் உண்மையா?

ரங்குபட்டர் : விஷயம் பிரமாதமாய் இருக்கிறதே !

காகப்பட்டர் : இன்னமும் கேள்! இவ்வளவு திவ்யமான ஆசனத்தை நாம் அனாயாசமாகப் பெற்றோம். இல்லையா? காட்டிலே புலி உலாவிற்று. அதை வேட்டையாடியது நாமல்ல. புலியின் பற்களால் கடியுண்டவர்கள். நகங்களால் கீறுபட்டவர்கள். ஏன், புலிக்கே இரையானவர்கள் வேறு வேறு. கடைசியில் புலியை எவனோ கொன்றான். எவ்வளவோ கஷ்டத்துக்குப் பிறகு. யாரவன்? – தெரியாது. புலியைக் கொன்ற வீரனை மக்கள் மறந்துவிடுவார். ஆனால், அந்தப் புலித்தோல் நமக்குத் தானமாகத் தரப்பட்டதும் அதன் மீது அமரும் நமக்கு மக்களும் மன்னரும் மரியாதை செய்கின்றனர். பார்த்தாயா, நமக்கிருக்கும் யோகம் எப்படிப்பட்டது என்பதை . ராஜபோகம் ரமணீயமானது தான். ஆனால், அது படமெடுத்தாடும் நாகம் போன்றது. எந்தச் சமயத்தில் விஷப்பல் பதியுமோ என்ற பயத்தோடு தான் எந்த அரசனும் இருக்க வேண்டும். நமக்கு இருக்கும் யோகம் அப்படியல்ல. துன்பமில்லாத இன்பம். மாசு இல்லாத மாணிக்கம். முள்ளில்லாத ரோஜா – இந்த மகத்தான வித்தியாசத்தைத் தெரிந்துக் கொள். ராஜாவாக இருப்பதைவிட ரிஷியாக இருப்பதே மேல். அரச வாழ்வை விட ஆஸ்ரம வாழ்வு அனந்த கோடி தடவை மேல், அசடே! ஆரியனாகப் பிறந்தும் அரச போகத்திலே ஆசை வைக்கிறாயே. ஆரியம் விதைக்காது விளையும் கழனி. வெட்டாது ஊற்றெடுக்கும் தடாகம்…

ரங்குபட்டர் : குருவே! உணர்ந்து கொண்டேன். உண்மையிலேயே நான் ராஜ போகம் சிலாக்கியமானது என்று தான் எண்ணிக் கொண்டிருந்தேன். தாங்கள் செய்த உபதேசத்தால் தெளிவு பெற்றேன். அரச போகம், ஆரிய யோகத்துக்கு ஈடாகாது.

காகப்பட்டர் : உணர்ந்து கொண்டாயா ? ஆரிய யோகம் எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொண்டாயல்லவா?

ரங்குபட்டர் : ஆகா! நன்றாகத் தெரிந்து கொண்டேன். ஆரிய யோகம் சாமான்யமானதல்ல. தாங்கள் கூறியபடி, அது முள்ளில்லாத ரோஜாதான்.

காகப்பட்டர் : ரோஜா மட்டுமல்ல. அது வாடாத மல்லி.

ரங்குபட்டர் : பொருத்தமான உபமானம். அது வாடாத மல்லிகை தான்.

காகப்பட்டர் : அதுவும் நாம் தேடாதது.

ரங்குபட்டர் : ஆமாம்! அதைப் பெற நாம் அலைத்து தேடி அலுப்ப தில்லைதான்.

காகப்பட்டர் : அப்படிப்பட்ட ஆரிய வாழ்வை அற்பமென்று கருதினாயே!

ரங்குபட்டர் : நான் அசடன் குருவே. அண்ட சராசரங்களிலும் ஆரிய யோகத்துக்கு ஈடேதும் கிடையாது என்பதை இப்போது அறிந்து கொண்டேன்.

காகப்பட்டர் : தன்யனானாய் ரங்குபட்டர்! தலைமுறை தலைமுறையாக நமக்குக் கிடைத்துள்ள இந்த வாழ்வு சாமான்ய மானதல்ல; சகலருக்கும் சித்திக்கக் கூடியதுமல்ல..

ரங்குபட்டர் : குருதேவா! அதிக உபதேசம் ஏன்… ஆரியம் சாமான்யமானதல்ல. அது விலையில்லா மாணிக்கம்; முதலில்லா வியாபாரம்.

காகப்பட்டர் : டேய், ரங்குபட்டர்! அசடோ! முதல்லா வியாபாரம் என்று சொல்லாதே. அர்த்தம் அவ்வளவு நன்னா இராது.

ரங்குபட்டர் : வெளியே சொல்வேனா குரு. நமக்குள் கூறிக் கொண்டதுதானே.

காட்சி : 15
இடம் : பாலாஜி வீடு
உறுப்பினர்கள் : பாலாஜி, பகதூர்.

பாலாஜி : பகதூர்! பாடங்களை விரைவாய் கற்றுக் கொள்ளணும், தெரிந்ததா? இப்படி நெட்டை மரம் போல் நின்று கொண்டிருந்தாயோ, இந்துமதியை அவன் தட்டிக்கிட்டுப் போய்விடுவான்.

பகதூர் : பாலாஜி, எனக்குச் சில சமயங்களிலே இந்துவைக் பார்க்கக்கூட பயமா இருக்கு,

பாலாஜி : என்னடா பயம்? அவ பொம்பளைதானே?

பகதூர் : அவ பார்வை ஒரு விதமா இருக்கு பாலாஜி.

பாலாஜி : எப்படிடா இருக்கு ஏமாளி?

பகதூர் : டேய், பகதூர் உன் சேஷ்டைகளைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஜாக்கிரதையாக நடந்து கொள்’ அப்படின்னு பயங்காட்டுவது போல் இருக்கு பாலாஜி.

பாலாஜி : அது வெறும் பாவனைடா, பாவனை அவளுக்கு அந்தப் பய மோகன் மேலே கொஞ்சம் அன்பு. அவனோ ராஜ்ய காரியங்களிலேயே மூழ்கிக் கெடக்கிறான். ஆகவே அவனிடத்திலே ஆசை குறையும். நீ மட்டும் கொஞ்சம் சமார்த்தியமாக நடந்து கொண்டால் ஜெயம் நிச்சயம்.

படிக்க:
தேர்தல் ஆணையமே … நடையைக் கட்டு !
நோட்டால குத்துனாலும் குத்துவேன்… தாமரையில குத்த மாட்டேன் | காணொளி

பகதூர் : சண்டையிலே கூட சீக்கிரமா ஜெயிச்சுடலாம் போல இருக்கு. இந்தக் காதல் விஷயம் அவ்வளவு சுலபமா இல்லியே.

பாலாஜி : சரி சரி பேசிக்கிட்டே பொழுதை ஒட்டாதே, ஆரம்பி, பாடத்தைக் கடைசி வரை பதுமையாவே பேசிக்கிட்டிருந்தா போதுமா? பதுமை பாடம் முடிச்சதும் நிஜமாகவே ஒரு பெண்ணிடம் இந்தப் பாடத்தை நடத்த வேண்டும். அந்தப் பாடம் முடிந்த பிறகு இந்து மதியிடமே உன் திறமையைக் காட்ட வேண்டும்.

பகதூர் : சரி, பாலாஜி ஆரம்பிக்கிறேன். முக்கனியே! சக்கரையே!

பாலாஜி : பகதூர்! அந்தப் பாடம் வேண்டாம். காதல் சம்பாஷணை நடத்துவோம். நான் பதுமைக்குப் பின்புறமிருந்து பேசுவேன். ஆம், அதாவது நீ காதலன்; நான் காதலி .

பகதூர் : அய்யோ நீ காதலியாகிவிட்டால் எனக்குக் காதலே வேண்டாம்டா பாலாஜி.

பாலாஜி : போதும், வாயை மூடிக்கொண்டு பேசு.

பகதூர் : வாயை மூடிக்கொண்டு எப்படிப் பேசுவது?

பாலாஜி : ம்…. நேரமாகிறது.

பகதூர் : சரி கண்ணே கனிரசமே! உன்னை நான் காதலிக்கிறேன்.

பாலாஜி : என்னையா?

பகதூர் : ஆம். உன்னைத்தான் உல்லாசி! உன்னைத்தான் உயிரே!

பாலாஜி : உண்மையாகவா?

பகதூர் : ஆம். இந்தச் சோலையிலே, அதோ, கொஞ்சி விளையாடும் கிளிகள் சாட்சி. கூவும் குயில்கள் சாட்சி. உன்னை நான் உண்மையாகவே காதலிக்கிறேன்.

பாலாஜி : டேய், பகதூர்! இவ்வளவு உருக்கமா பேசிட்டாயோ, இந்துமதி உனக்குத்தான் சம்மதித்து விடுவாள். உன்பாடு அதிர்ஷ்டம்தான். வா, போவோம்.

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி: சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க