சிவப்பை உயர்த்திப்பிடி லெனினை உணர்ந்து படி!

(ஏப்ரல் – 22 தோழர் லெனின் பிறந்தநாள்)

வீழா திமிர்
எங்கள் விளாதிமிர் !

மனிதப் பேரன்பின்
உலக இதயம்
எனின்,
அது லெனின் !

மார்க்சிய நாகரிகத்தின்
அறிவியல் தொடர்ச்சி
எங்கள் லெனின்.

உலகைப் பொதுமையாக்கும்
ஒவ்வொரு மகிழ்ச்சியிலும்
லெனின் பிறக்கிறார்,
உலகை அருமையாக்கும்
ஒவ்வொரு இயற்கை
மலர்ச்சியிலும்
லெனின் சிரிக்கிறார்.

தழுவிச் செல்லும் தருணத்தில்
புதிய சூழலை உணர வைக்கும்
மென்காற்றின் மெய்ப்பொருள்
எங்கள் லெனின்.

நழுவி விழும் வேகத்திலும்
நிலத்தில் உணர்வூட்டும்
அருவியின் பயன் மொழி
எங்கள் லெனின்.

என்ன ஒரு துல்லியம்!
என்ன ஒரு ஒத்திசைவு!
காற்றில் அடங்கா
புரட்சியின் இசையூற்று
எங்கள் லெனின்.

என்ன ஒரு கூர்மை
என்ன ஒரு ஓர்மை
சொற்களில் அடங்கா
மானுடப் புத்துணர்வின்
இயங்கியல் கவிதை
எங்கள் லெனின்.

இன்னும்
முன்னூறு ஆண்டுகளானாலும்
மனிதத் துயரங்களுக்கு
மாற்று காண வக்கில்லாதது
முதலாளித்துவம்

வெறும்
இருபதே ஆண்டுகளில்
மனித குலத்திற்கே
பாட்டாளி வர்க்க பலத்துடன்
மகிழ்ச்சிகுரிய
புது உலகை படைத்துக்காட்டியவர்
எங்கள் லெனின்.

புரட்சி எனும்
அருங்கலையின்
பெருவிசை
எங்கள் லெனின்…
பற்றிக்கொண்டது
பாட்டாளி வர்க்கம்
இனி விட்டு விலகாது,
கம்யூனிசமே… வெல்லும்!

உலகின் நாடி நரம்பெங்கும்
சிவப்பு.
உழைக்கும் வர்க்கத்தின்
ஒவ்வொரு களத்திலும்
திமிறி எழும்
எங்கள் லெனின் உவப்பு!

சிலைகளை சிதைக்கலாம்,
சிதைக்க சிதைக்க
சிவப்பே பெருகும்..
மறைக்க மறைக்க
மார்க்சிய – லெனினியம் பரவும்…

வெட்டிப் பிளந்துள்ளம்
தொட்டுப் பார்ப்பினும்
அங்கே
எட்டிப் பார்ப்பது
எங்கள் லெனினே!

தட்டிப் பறித்து
தத்துவப் புரட்டுகள் செய்யினும்
அதையும்
எட்டி உதைத்து
மீண்டும் எழுவது லெனினே!

உதிரம் மட்டுமல்ல
உலகின் விடியல் சிவப்புதான்
இதை உணர்த்தும் திசையெனில்
அது லெனின்.

எங்கள் லெனின்,
புரட்சிக்கு குறைவாக
வேறெதையும் விரும்பாதவர்
பொதுமை நலமன்றி
வேறெதற்கும் இணங்காதவர்.
லெனின்
அடிமையாய் வாழ
யாரையும் அனுமதிக்காதவர்
புரட்சியின் வழியன்றி
பிரிதொன்றும் படியாதவர்!

லெனின்
உறங்குவதில்லை
நம்மையும்
உறங்க விடுவதில்லை

புரட்சியின்
ஒவ்வொரு துடிப்பிலும்
உழைக்கும் வர்க்கத்தின் ஒவ்வொரு விழிப்பிலும்
மானுட விடியலின்
பெருங்காதல் அவரானவர்.

விழிப்போடிருப்போம்
லெனினைக் கற்போம்
கம்யூனிசம் படைப்போம்!

துரை. சண்முகம்


இதையும் பாருங்க:

இளைஞர்களிடம் அதிகரித்து வரும் அரசியல் ஆர்வம் | துரை சண்முகம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க