முதல் உலகப் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த நேரம் அது! பிளக்கானோவ், காவுத்ஸ்கி உள்ளிட்ட ‘மாபெரும்’ தலைவர்களை உள்ளடக்கிய கம்யூனிஸ்ட் அகிலத்தின் பெரும்பான்மையினர் தங்களது “தந்தையர் நாட்டை” போரில் ஆதரிப்பது என முடிவெடுத்தனர். போர் உருவாக்கியிருந்த பேய்த்தனமான தேசிய வெறியின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சமயம் அது.

முதல் உலகப் போரை, ஏகாதிபத்தியங்கள் காலனிகளை தங்களுக்குள் மறுபங்கீடு செய்ய நடத்தும் ஆக்கிரமிப்புப் போர் என்று கூறி, பரந்துபட்ட மக்களுக்கு போர் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பை முன் வைத்து ஒரு உள்நாட்டுப் போராக இதை உருவாக்கி புரட்சி செய்ய வேண்டும் என்றார் லெனின்.

ஏகாதிபத்தியங்களின் காலடியில் மண்டியிட்டு கிட்டத்தட்ட தம்மையே அவர்களிடம் அர்ப்பணித்த இரண்டாம் அகிலத் தலைவர்களை கடுமையாகச் சாடினார் லெனின். இந்தப் போராட்டத்தை நடத்தும்போது, மொத்த அகிலத்திலும் லெனின் சிறுபான்மையானவர் தான்.

படிக்க :
♦ ரசியப் புரட்சியாளர்களுக்கு வழிகாட்டிய மார்க்ஸ் எங்கெல்ஸ் || தோழர் லெனின்
♦ தோழர் லெனின் 151-வது பிறந்த தினம் || கருத்துப்படம்

ஆனாலும், “கோட்பாட்டு அடிப்படியிலான ஒரு கொள்கை மட்டுமே சரியானதொரு கொள்கையாக இருக்க முடியும்” என கோட்பாட்டை உயர்த்திப் பிடித்து அதற்காக உறுதியாக நின்று போராடினார். இரண்டாம் உலகப் போரை ரசியாவில் உள்நாட்டுப் போராக மாற்றியதில் வெற்றி பெற்றார். அதன் விளைவுதான் ரசிய சோசலிசப் புரட்சி.

நிகழ்வுகளை கூர்நோக்கி, அவற்றின் அடிநாதத்தைப் புரிந்து கொண்டு, பொது நீரோட்டம் உருவாக்கும் மாயைகளை எல்லாம் களைந்துவிட்டு, அரசு – ஆளும் வர்க்கம் ஆகியவற்றின் நகர்வுகளை பாட்டாளி வர்க்கப் பார்வை கொண்டு பரிசீலித்ததன் வெளிப்பாடுதான் புரட்சி குறித்த தோழர் லெனினின் பார்வை.

அரசு பற்றிய மார்க்சிய கோட்பாட்டை மறந்து காவுத்ஸ்கி, பிளக்கானோவ் போன்ற பிரபலங்கள் தேசிய வெறிக்கு ஆட்பட்ட போது, லெனின் தேசிய வெறியை அம்பலப்படுத்தி புறந்தள்ளினார். அதற்கான அடிப்படை, மார்க்சிய கோட்பாட்டில் அவர் கொண்ட பற்றுறுதியில் வீற்றிருக்கிறது. அதுதான் லெனினை ஒரு சிறந்த சித்தாந்தவாதியாக நிலைநிறுத்தியது.

லெனினின் தீர்க்கமான விசாலமானக் கோட்பாட்டு அறிவு என்பது, அவரிடம் இயல்பிலேயே குடிகொண்டிருந்த தர்க்க ரீதியான கற்றலில் இருந்து கிடைத்ததுதான். லெனின் மார்க்சியத்தை தர்க்க ரீதியில் பயின்றார்.

அப்படிப் பயின்றதால் கிடைக்கப் பெற்ற கோட்பாட்டு உறுதிதான் லெனினை சிறந்த தர்க்க ஆற்றல் கொண்டவராக உருவாக்கியது. லெனினின் விவாதங்கள் குறித்து தோழர் ஸ்டாலின் குறிப்பிடுகையில், “லெனினின் வாதங்கள், எளிமையாகவும், தெளிவாகவும் இருக்கும். அவரது தர்க்க ஆற்றல் கேட்பவர்களை இறுகப் பற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது. அவரது வாதங்கள் கேட்பவர்களைப் பற்றிப் படர்ந்து அவர்களை சுற்றி இறுக வளைத்துக் கொள்ளும். அவருடன் வாதிப்பவர்களுக்கு இரண்டே வாய்ப்புகள்தான். ஒன்று அவர்கள் லெனினிடம் சரணடந்தாக வேண்டும் அல்லது அவர் முன் அப்பட்டமாக தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும்”, என்று கூறுகிறார்.

கோட்பாட்டில் அவருக்கு இருக்கும் மேதாவிலாசமும் பற்றுறுதியும், வெற்றி பெறும் போது மமதை கொள்வதில் இருந்தும், தோல்வியடையும் போது புலம்பி அழுவதில் இருந்தும் அவரைக் காத்தது.

விவாதங்களில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கப் போவது பெரும்பான்மை ஆதரவு பெறுவதுதான். சரியான கோட்பாடு, எல்லா சமயங்களிலும் பெரும்பான்மையின் ஆதரவைப் பெற்றுவிடுவதில்லை. பல சமயங்களில் பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற முடியாமல் போகலாம்.

நமது கோட்பாடு சரியாக இருக்கையில், அது பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற முடியாமல் போகும்போது, துவள்வதற்கு அங்கு எதுவும் இல்லை. மாறாக, சரியான கோட்பாட்டை பெரும்பான்மையினர் ஏற்றுக் கொள்ளும் வகையில் நின்று போராடுவதற்கு உத்வேகத்தைத் தான் அந்தத் தோல்வி நமக்குத் தர வேண்டும் என்பார் லெனின்.

தோல்வியைக் கண்டு அஞ்சி புலம்புபவர்களிடம், “தோழர்களே, புலம்பாதீர்கள். நாம் வெற்றி பெற்றே தீருவோம். ஏனெனில், நம்முடைய நிலைப்பாடு சரியானது” என்று கடுமையாகச் சொல்வார் லெனின்.

அதே போல வெற்றியின் மமதையில் பேசும் தோழர்களிடமும் கடுமை காட்டியிருக்கிறார் லெனின்.

வெற்றி மயக்கம் கொண்டு மமதை அடையக் கூடாது என்பது முதல் விசயம். வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் என்பது இரண்டாவது விசயம். எதிரி தோற்கடிக்கப்பட்டுள்ளானே தவிர, எந்தவிதத்திலும் ஒழிந்துவிடவில்லை; எதிரிக்கு மரண அடி கொடுக்க வேண்டும் என்பது மூன்றாவது விசயம்” என்று குறிப்பிடுகிறார் லெனின்.

கோட்பாட்டில் உறுதியாக நிற்பதும், வெற்றி தோல்விகளினூடாக சஞ்சலமின்றி பயணிப்பதும் மட்டும் புரட்சியை நோக்கி இட்டுச் சென்றுவிடுமா? வாய்ப்பே இல்லை.

படிக்க :
♦ புரட்சிக்குப் போதுமானதாக கட்சி நிறுவனம் இருக்க வேண்டும் ! | லெனின்

♦ லெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் !

லெனின் மக்களின் மீது முழுமையாக நம்பிக்கை வைத்தார். அவர் ஒருபோதும் மக்களின் புரட்சிகர எழுச்சியையும், கிளர்ச்சியையும் அவை எவ்வளவு பெரிய தோல்விகளைத் தந்திருந்தாலும் சாடியதில்லை.

“ … மக்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள், அவர்களது செயல்பாடுகளைப் புரிந்தறிய முயலுங்கள், மக்களது போராட்டங்களின் நடைமுறை அனுபவத்தை கவனமாக கற்றாய்வு செய்யுங்கள் என்பதே லெனினுடைய இடையறாத ஆணையாக இருந்தது.

மக்கள் திரளினரின் படைப்பாற்றலில் நம்பிக்கை தன்னெழுச்சியான போராட்டப் போக்கைப் புரிந்து கொள்ளவும், அதன் இயக்கத்தை பாட்டாளி வரக்கப் புரட்சிப் பாதையில் செலுத்தவும் லெனினுக்கு உதவிய அவரது செயற்பாடுகளின் சிறப்பம்சம் இதுவே.” என்று லெனின் மக்கள் மீது வைத்திருந்த நம்பிக்கை குறித்து குறிப்பிடுகிறார் தோழர் ஸ்டாலின்.

ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அரசாங்கத்தை எதிர்த்து நடத்தப்படவிருக்கும் புரட்சியைத் துவக்குவது என்பது சாதாரண விசயமல்ல. சிறிய தவறும் கூட மிகப்பெரிய பேரழிவையும் பின்னடைவையும் ஏற்படுத்தும் அபாயம் மிக்கது. மேற்கூறிய தோழர் லெனினின் பண்புகள் தான் அவரை புரட்சியின் தலைவராக உயர்த்தியது. ஒரு புரட்சியைச் சாதிக்கச் செய்தது.

லெனின் ரசியாவில் சாதித்த புரட்சியை, இந்தியாவில் சாதிக்க அணிதிரள்வோம் !

வினவு

உதவிய நூல் 
லெனின் : ஒரு மலைக் கழுகு – தோழர் ஸ்டாலின் உரை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க