லைநகர் தில்லியைக் குறித்து நாம் அறிந்திருப்பது சொற்பமே. குடியரசு தினங்களின் போது அந்த அகன்ற சாலையில் பவனி வரும் படைவரிசைகள், திரைப்படங்களில் பார்த்திருக்கும் காந்தி குல்லாய் வைத்த அரசியல்வாதிகளும், அவர்கள் பயணிக்கும் சிவப்பு விளக்கு வைத்த அம்பாசிடர் கார்களும்… இது ஒரு சித்திரம். மற்றபடி அங்கே சென்று வருபவர்களோ, “வெயில் காலத்தில் தகிக்கும், குளிர் காலத்தில் உறைந்து போகும்” என்பது போல் சொல்லக் கேட்டிருப்போம்.

தில்லியின் வாழ்க்கை எப்படியிருக்கும் ?

அதிலும் குறிப்பாக நடுத்தர வர்க்க, உழைக்கும் மக்களின் வாழ்க்கையைக் குறித்து நாம் மிகச் சொற்பமாகவே வாசித்திருப்போம். தி வயர் இணையதளத்தில் வெளியாகி இருக்கும் இந்தக் கட்டுரை ( ‘At Night, Our Verandah Turns Into a Bedroom’: Life in Delhi’s Working-Class Settlement ) நமக்கு ஒரு புதிய சித்திரத்தை வழங்குகின்றது. தெற்கு தில்லியின் தக்‌ஷின்புரியைச் சேர்ந்த இக்‌ஷிதா என்கிற பெண் எழுதியுள்ள நூலின் ஒரு பகுதி இது. இந்தக் கட்டுரையில் அவர் தனது வீட்டை வருணிக்கிறார். அந்த வருணனையின் ஊடாக தங்கள் வாழ்க்கை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை நமக்கு விளங்க வைக்கிறார்.

வயர் கட்டுரையின் சுருக்கமான தமிழாக்கம் இனி.

***

ரவு ஒன்பது மணி. நான் என் வீட்டில் கட்டிலின் மீது அமர்ந்துள்ளேன். எனக்கு நேர் எதிரே உள்ளது வாயிற் கதவு. கதவு பிங்க் நிறம்; சுவர்கள் நீல நிறம். எனக்கு இடது புறம் உள்ள சுவரில் துர்கா மாதாவின் பெரிய படம் ஒன்று தொங்கிக்கொண்டிருக்கிறது. அதற்கு எதிராக உள்ள சுவரில் எங்கள் குடும்ப உறுப்பினர்களின் படங்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த சுவருக்கு பக்கத்திலேயே இரண்டு அலமாரிகள். ஒன்றில் பாட்டியின் பொருட்களும் மற்றொன்றில் அம்மாவின் பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. அலமாரிகளுக்கு பக்கத்தில் படுதாக்களால் மூடப்பட்ட நான்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பெட்டிகளுக்கு பக்கத்திலேயே ஒரு குளிர்சாதனப் பெட்டி. பெட்டிகளுக்கு மேலும், குளிர்சாதனப் பெட்டியின் மேலும், அலமாரிகளின் மேலும் சில சில்லறைப் பொருட்கள். இவையனைத்தும் பூக்கள் அச்சிடப்பட்ட திரைச்சீலையால் மறைக்கப்பட்டிருக்கிறது. நான் அமர்ந்திருக்கும் கட்டிலை அடுத்து ஒரு வெள்ளை நிற மேசை உள்ளது. அதன் மேல் தான் எங்கள் பள்ளிப் பொதிகளை வைப்போம்.

கட்டிலின் மற்றொரு பக்கம் பிங்க் நிற விரிப்பால் மூடப்பட்ட தையல் இயந்திரம் உள்ளது. பாட்டி தனது சாய்வு நாற்காலியை கட்டிலுக்கு பக்கத்தில் தான் வைத்திருப்பாள். அப்படி வைத்திருக்கும் போது வாயிற்கதவை முழுவதுமாக திறக்க முடியாது; இடித்துக் கொள்ளும்.

எனக்கு நேர் எதிரே உள்ள சுவரில் மூன்று அடுக்கு கொண்ட அலமாரி ஒன்று உள்ளது. அதில் கீழ்ப்புறத்தில் இருக்கும் அடுக்கில் தான் காஸ் அடுப்பு உள்ளது. அது கொஞ்சம் அகலமான அடுக்கு. அதில் மசாலாப் பொருட்கள் போட்டு வைக்கும் இரண்டு கூடைகளும் திணித்து வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு மேல் இருக்கும் அடுக்குகளில் சமயல் பாத்திரங்கள் இருக்கின்றன. அதில் ஒரு அடுக்கில் சற்றே பெரிய பாத்திரங்கள்.

dakshinpuri-new-delhi

அந்த அலமாரிக்கு கீழே காஸ் சிலிண்டர் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பக்கத்திலேயே அரிசி போட்டு வைக்கும் அண்டா ஒன்று. அந்த அலமாரிக்கு பக்கத்திலேயே தண்ணீர் கேன் உள்ளது. இந்த அலமாரியின் மேலிருந்து முதல் அடுக்கில் சமைத்த பண்டங்கள் வைக்கப்பட்டிருக்கும். அதே அடுக்கில் பெரிய பொரிக்கான் சட்டிகளும் இருக்கும். எப்போதாவது விருந்தாளிகள் வந்தால் மட்டும் அவற்றைப் பயன்படுத்துவோம். மற்ற நேரங்களில் அவை வெறும் காட்சிப் பொருட்கள் தாம். அதே அறையில்தான் சமையல் செய்வது, சமைத்த பாத்திரங்களைக் கழுவுவது எல்லாம்.

வாயிற்கதவுக்கு வெளியே பாத்ரூம் ஒன்று உள்ளது. யாராவது பாத்திரங்கள் கழுவிக் கொண்டிருந்தால் பாத்ரூமிற்குச் செல்ல முடியாது. அதில் கழிவறையும், குளியலறையும் ஒன்றுதான். கழிவறையைப் பயன்படுத்துவதில் சிக்கல் இல்லை; ஆனால் குளிக்க வேண்டும் என்றால் கழிவறைக் கோப்பையின் மீது நிற்க வேண்டும். அந்த அறையில் ஒரே ஒரு சிறிய பக்கெட் தான் இருக்கும். பெரிய பக்கெட்டுக்கோ மற்றும் ஒரு பக்கெட்டுக்கோ அந்த அறையினுள் இடம் இருக்காது.

படிக்க:
வெனிசுலா – தண்ணீர் கிடைக்காமல் அல்லாடும் மக்கள் | படக்கட்டுரை
♦ டெல்லி பாலியல் வன்முறை – குற்றம் : தூண்டியது யார் ?

பாத்ரூமின் கதவு உட்புறமாக திறக்கும்; வாயிற்கதவு வெளிப்புறமாக திறக்கும். இரண்டு ஜன்னல்கள் உள்ளன ஒன்று வாயிற்கதவுக்கு மேல் மற்றொன்று கழிவறையின் உள் இருக்கும் சிறிய ஜன்னல். கழிவறையின் வழியே தான் காற்றோட்டம் வந்தாக வேண்டும். கழிவறைக் கதவறை மூடி விட்டால் வீட்டினுள் காற்றோட்டம் இருக்காது.

இரவு நேரங்களில் இந்த ஒரே தாழ்வாரம்தான் (வராண்டா) படுக்கை அறையாகவும் மாறும்.

இரவு எல்லோரும் சாப்பிட்ட பின், அம்மா ஒரு பெரிய தரை விரிப்பை விரிப்பாள். அறையின் தரை பல இடங்களில் பெயர்ந்து இருக்கும். அலமாரியின் கீழ் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் பெரிய தரை விரிப்பை அம்மாவால் முழுவதுமாக விரிக்க முடியாது. அதன் ஓரங்களை மடித்து சுருட்டிக் கொள்ள வேண்டும். அதன் ஒரு பகுதியை தையல் இயந்திரத்தின் கீழ் சொருகிக் கொள்ள வேண்டும்.

இனி நாங்கள் இந்த அறையை படுப்பதற்கோ  தொலைக்காட்சி பார்ப்பதற்கோ பயன்படுத்திக் கொள்ளலாம். பாட்டிக்கு கட்டில். எங்கள் மூவருக்கும் தரை. இரவு நான் புரண்டு படுத்து காலை நீட்டினால் தையல் இயந்திரத்தில் இடிக்கும். முதலில் இதனால் எனக்கு விழிப்பு வந்து விடும். பின்னர் சுருண்டு படுக்க பழகிக் கொண்டேன். ஒரு முறை அம்மா தூங்கும் போது காலை நீட்டி இருக்கிறாள். அவளது கால் அலமாரிக்கு கீழே சிக்கிக் கொண்டது. அவளால் இழுக்க முடியவில்லை. பின் நாங்கள் எல்லாம் சேர்ந்து அவளது காலை வெளியே இழுத்தோம். அப்போது நாங்கள் எங்கள் அம்மாவைப் பார்த்து சிரித்தது நினைவில் உள்ளது. அதன்பின் அவள் எச்சரிக்கையாக தூங்கப் பழகிக் கொண்டாள். நாங்கள் உறங்கினாலும் எங்கள் உடல்கள் உறங்குவதில்லை.

எங்களது இளைய சகோதரன் எங்கள் மூவரோடுதான் உறங்குவான். இப்போது அவன் வளர்ந்து விட்டான். என்றாலும், வேறு வழியின்றி நெருக்கியடித்து தூங்க பழகிக் கொண்டோம். எப்போதாவது எங்கள் அத்தை வீட்டிற்கு வந்தால் நாங்கள் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு தூங்கச் சென்று விடுவோம்.

எங்கள் வீட்டில் இருக்கும் கட்டில் பாட்டிக்குத் தான் என்றாலும், அப்பா வரும் போது அவருக்குக் கொடுத்து விடுவோம். அவர் இரவு பாத்ரூமிற்கு செல்ல வேண்டுமென்றால் அவரது ஒரு காலை எனது தலையனையின் மீது வைத்து மற்றொரு காலால் இடையில் இருக்கும் போர்வைகளை நகர்த்தி வழி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதெல்லாம் நான் விழித்துக் கொள்வேன்.

ஒரு முறை நாங்கள் எல்லாம் கட்டிலின் மீது அமர்ந்து தொலைக்காட்சியின் குலாம் சீரியலை பார்த்துக் கொண்டிருந்தோம். கட்டிலின் மீது சாய்ந்து கொண்டே கீழே அமர்ந்திருந்த என் இளைய சகோதரி அமிஷா நகம் வெட்டிக் கொண்டிருந்தாள். அலமாரியின் மீது சாய்ந்து அமர்ந்திருந்த பாட்டி தனது தலை முக்காடை சரி செய்து கொண்டிருந்தாள்.

சீரியல் முடிந்த பின் அம்மா எழுந்து வெளியே சென்று பார்த்து விட்டு கதவுகளை அடைத்தாள். பின் எரிந்து கொண்டிருந்த குழல் விளக்கை அணைத்தாள். அரை இருளில் ஆழ்ந்தது. எல்லோரும் உறங்கச் செல்லும் முன் அம்மா கடைசியாகச் சொன்னாள் “காலை சீக்கிரம் எழுப்பி விடுங்கள். நீரு மேடம் என்னை சீக்கிரம் வரச் சொல்லி இருக்கிறார்” அத்துடன் அறை அமைதியானது; அந்த நாளும் முடிவுற்றது.

சாக்கியன்
கட்டுரையாளர் : இக்‌ஷிதா
தமிழாக்கம்  : சாக்கியன்
நன்றி : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க