பரீஸ் பொலெவோய்

உண்மை மனிதனின் கதை | முதல் பாகம் | அத்தியாயம் – 10

ன்றைய தினம் வெண்பனியில் நூற்றைம்பது அடிகள் கூட முன்னேற அவனுக்கு வாய்க்கவில்லை. மாலைக் கருக்கல் அவனைத் தடை செய்து விட்டது. மறுபடி ஒரு பழைய அடிக் கட்டையைத் தேர்ந்தெடுத்து அதைச் சுற்றிலும் சுள்ளிகளைக் குவித்து, துப்பாக்கித் தோட்டாவால் செய்த அருமை சிகரெட் கொழுவியை எடுத்து பற்ற வைக்க முயன்றான். அது எரியவில்லை. இன்னொரு தரம் முயன்றான். அவன் உடல் சில்லிற்றுப் போயிற்று. கொழுவியில் பெட்ரோல் தீர்ந்துபோய் விட்டது. அதைக் குலுக்கினான். எஞ்சிய பெட்ரோல் ஆவியை வெளிக் கொணர்வதற்காக ஊதினான். ஒன்றும் பயனில்லை. இருட்டிவிட்டது. பொருத்து சக்கரத்துக்கு அடியிலிருந்து சிதறிய நெருப்புப் பொறிகள் சிறு மின்னல்கள் போல, அவன் முகத்தை சூழ்ந்திருந்த இருளை கண நேரத்துக்கு விலக்கின. சிக்கிமுக்கிக் கல் தேய்ந்து விட்டது, நெருப்பு மூட்டமுடியவில்லை.

தட்டித் தடவித் தவழ்ந்து அடர்த்தியான இளம்பைன் மரக்கன்றின் அடியை அடைந்து, நூல் உருண்டைப்போல சுருண்டு, மோவாயை முழங்கால்களில் புதைத்துக் கொண்டு முட்டுகளைக் கைகளால் அறுகக் கட்டியவாறு, காட்டின் சந்தடிகளைக் கேட்ட படியே முடங்க வேண்டியதாயிற்று. அந்த இரவில் புகலற்ற சோர்வு அலெக்ஸேயை ஒருகால் ஆட்கொண்டிருக்கும். ஆனால், உறங்கிய காட்டில் பீரங்கி வெடிகளின் ஓசைகள் முன்னைவிடத் துலக்கமாகக் கேட்டன. குண்டுகள் சுடப்படுகையில் உண்டாகும் குட்டையான அடியோசைகளையும் குண்டுகள் வெடிக்கும் போது ஏற்படும் ஆழ்ந்த சிதறொலிகளையும் தனிப் பிரித்து அறியத் தான் தொடங்கி விட்டதாகக் கூட அலெக்ஸேயிக்குத் தோன்றியது.

விளங்காத கலவரமும் துயரமும் உலுப்பக் காலையில் விழித்துக் கொண்டு அலெக்ஸேய் உடனே நினைத்துப் பார்த்தான்: “என்னதான் நடந்து விட்டது? கெட்ட கனவு கண்டேனா?” என்று. அப்போது அவனுக்கு ஞாபகம் வந்தது சிகரெட் கொளுவியைப் பற்றி. ஆனால் வெயில் கொஞ்சலாக வெப்பமூட்டத் தொடங்கி, சுற்றும் இருந்தவையாவும் – மங்கிய மணல் மணலான வெண்பனியும், பைன் மரங்களும், ஊசியிலைகளுமேக்கூட – மினு மினுத்துப் பளிச்சிட்டதும், பெரிய விபத்தாகப்படவில்லை. இன்னும் மோசமாயிருந்தது வேறொன்று. இறுகப் பிணைத்திருந்த மரத்துப் போன கைகளைப் பிரித்ததும் தன்னால் எழுந்து நிற்க முடியாது என்பதை அவன் உணர்ந்தான். எழுந்திருப்பதற்கு சில வீண் முயற்ச்சிகள் செய்கையில் அவனது ஊன்றுகோல் முறிந்துவிட்டது. சாக்குப்போலத் தரையில் துவண்டு விழுந்தான் அவன். மரத்த அங்கங்கள் சரி நிலைக்கு வர இடமளிப்பதற்காகப் புரண்டு நிமிர்ந்து படுத்தான். ஊசியிலைப் பைன் மரக் கிளைகளின் ஊடாக ஆழங்காணமுடியாத நீலவானை நோக்கலானான். தூய வெண்மையான, மென்தூவி போன்ற, தங்க முலாம் பூசிய சுருட்டை விளிம்புகள் கொண்ட மேகங்கள் அதிலே விரைந்து சென்றன. இப்போது அங்கங்கள் கொஞ்சங்கொஞ்சமாகச் சரியாகத் தொடங்கியிருந்தன. ஆனால், கால்களுக்கு என்னவோ நேர்ந்துவிட்டது. அவற்றால் எழுந்து நிற்கவே முடியவில்லை. பைன் மரத்தைப் பிடித்துக் கொண்டு எழுந்து நிற்க அலெக்ஸேய் இன்னும் ஒரு முறை முயன்றான். கடைசியாக இதில் அவனுக்கு வெற்றிகிடைத்தது. ஆனால், கால்களை மரத்தின் பக்கம் கொண்டுவர முயற்சி செய்ததுமே பலவீனம் காரணமாகவும் உள்ளங்கால்களில் ஏற்பட்ட ஏதோ பயங்கரமான, புதிய நமைச்சலுடன் கூடிய வலி காரணமாகவும் விழுந்துவிட்டான்.

இது தான் முடிவா என்ன? இங்கே, பைன் மரங்களுக்கு அடியில், இப்படியே மடிந்து போவதுதானா? இங்கே அவனுடைய உடலை விலங்குகள் கறவிக் குதறித் தின்று எலும்புகளை மட்டுமே விட்டுவைக்கும். அந்த எலும்புகளைக் கூட எவனும் ஒரு போதும் காணமாட்டான், அடக்கம் செய்ய மாட்டானே! சோர்வு திமிற முடியாதபடி அவனைத் தரையோடு தரையாக அழுத்தியது. ஆனால், தொலைவில் முழங்கிற்று பீரங்கிக் குண்டுவீச்சு. அங்கே சண்டை நடந்து கொண்டிருந்தது. அங்கே தன்னவர்கள் இருந்தார்கள். இந்த கடைசி எட்டு, பத்து கிலோ மீட்டர் தொலைவைக் கடப்பதற்கு வேண்டிய வலிமை அவனிடம் இருக்காதா என்ன?

இது தான் முடிவா என்ன?
இங்கே, பைன் மரங்களுக்கு அடியில், இப்படியே மடிந்து போவதுதானா? இங்கே அவனுடைய உடலை விலங்குகள் கறவிக் குதறித் தின்று எலும்புகளை மட்டுமே விட்டுவைக்கும்.
அந்த எலும்புகளைக் கூட
எவனும் ஒரு போதும் காணமாட்டான்,
அடக்கம் செய்ய மாட்டானே!

பீரங்கிக் குண்டு வீச்சு கவர்ந்து இழுத்தது, உற்சாகம் ஊட்டிற்று, அவனை வற்புறுத்தி அழைத்தது. அந்த அழைப்புக்கு அவன் பதில் அளித்தான். கைகளையும் முழங்கால்களையும் ஊன்றி எழுந்து, கிழக்கு நோக்கித் தவழ்ந்து செல்லலானான். தொடக்கத்தில் தொலைவில் நடந்த சண்டை ஓசைகளால் மயக்கப்பட்டு வசமின்றிச் சென்றான். பின்னர் சுய உணர்வுடன் முன்னேறினான். காட்டில் இந்த மாதிரி முன்னேறுவது ஊன்று கோலின் உதவியுடன் செல்வதைவிட எளிது. பாதங்கள் இப்போது எந்தச் சுமையையும் தாங்க வேண்டியிருக்கவில்லை ஆதலால் குறைவாகவே வலிக்கின்றன. விலங்கு போல் தவழ்ந்து செல்வதால் எவ்வளவோ அதிக விரைவாகத் தன்னால் முன்னேற முடியும் என்பதை எல்லாம் அவன் புரிந்து கொண்டான். மகிழ்ச்சி காரணமாக உருண்டை ஒன்று நெஞ்சில் கிளம்பித் தொண்டையில் அடைத்துக் கொள்வதை மீண்டும் அவன் உணர்ந்தான். தனக்குத்தானே அல்ல, இத்தகைய நம்ப முடியாத இயக்கத்தின் வெற்றியைச் சந்தேகித்த பூஞ்சை உள்ளம் படைத்த வேறு எவனுக்கோ போல அவன் இரைந்து சொன்னான்:

“பரவாயில்லை, பெரியவரே, இப்போது எல்லாம் ஒழுங்குக்கு வந்துவிடும்!”

ஓர் இடைநிறுத்தத்தின் போது அவன் குளிரில் விரைத்துப் போன அங்கங்களைக் கக்கத்துக்கிடையே வைத்துச் சூடு படுத்திக்கொண்டான். அப்புறம் பிர் மரப்பட்டையை நகங்கள் பிய்ந்து போகும்படி உரித்து நீண்ட வெண்பட்டை நார்கள் சிலவற்றை எடுத்துக் கொண்டான். கம்பளி லேஞ்சித் துண்டுகளை பூட்சுகளுக்கு உள்ளிருந்து வெளியே எடுத்தான். அவற்றைக் கைகளில் சுற்றிக் கொண்டான். உள்ளங்கைகள் மேல் செருப்பின் அடித்தோலின் வடிவில் மரப்பட்டையை வைத்து பிர்மர் நார்களால் அதை இணைத்துக் கட்டிக்கொண்டான். பின்பு இராணுவ மருத்துவப் பைகளில் இருந்த பட்டித் துணிகளை அதன் மேல் சுற்றி இறுக்கினான். வலது கையில் மிகவும் செளகரியமான அகன்ற அடித்தாங்கல் அமைந்துவிட்டது. இடது கையிலோ பற்களால் சுற்றிக் கட்டுப்போட வேண்டியிருந்த படியால் கட்டு அவ்வளவு நன்றாக வாய்க்கவில்லை. எனினும் கைகள் செருப்புகள் அணிந்து இருந்தன. இயங்குவது முன்பை விடச் சுலபமாக இருப்பதை உணர்ந்தவாறு அலெக்ஸேய் மேலே தவழ்ந்து சென்றான். அடுத்த நிறுத்தத்தில் முழங்கால் மீதும் மரப்பட்டைத் துண்டுகளை வைத்துக் கட்டிக் கொண்டான்.

நடுப்பகலில் கதகதப்பு உடம்பில் உறைக்கத் தொடங்கியது. அதற்குள் அலெக்ஸேய் கைகளால் கணிசமான “அடிகள்” முன்னேறியிருந்தான். பீரங்கிக் குண்டு வீச்சு – அவன் அதை நெருங்கிவிட்டதாலோ, அல்லது செவிப்புலனின் ஏதேனும் ஏமாற்றுக் காரணமாகவோ தெரியவில்லை – முன்னிலும் உரக்க ஒலித்தது. நிரம்ப வெப்பமாக இருந்தமையால் அவன் தனது விமானி உடுப்பின் “ஜிப்பை” நெகிழ்த்த வேண்டியதாயிற்று.

பாசி அடர்ந்த சதுப்புத் தரையின் குறுக்காக அவன் தவழ்ந்து சென்றான். அதில் வெண்பனிக்கு அடியிலிருந்து வெளித் துருத்திக் கொண்டிருந்தன பசிய மேடுகள். அங்கே விதி அவனுக்கு இன்னொரு பரிசை ஆயத்தமாக வைத்திருந்தது. ஈர்ப்பும் மென்மையும் உள்ள வெளிறிய பாசிமீது மெருகூட்டியவை போல பளபளத்த கூரிய இலைகள் இங்கொன்றும் அங்கொன்றுமாக இருந்த மெல்லிய நூல் போன்ற தண்டுகளை அவன் கண்டான். இந்த இலைகளின் நடு நடுவே, மேட்டின் மேற்பரப்பின் மீதே கிடந்தன கருஞ்சிவப்பான கிரான் பெர்ரிப் பழங்கள். கொஞ்சம் நசுங்கியிருந்தாலும் சாறு நிறைந்தவை அவை. அலெக்ஸேய் குனிந்தான். வெல்வெட் போன்ற மென்மையும் வெதுவெதுப்பும் சதுப்பு நில ஈர மணமும் கொண்ட பாசியிலிருந்து பெர்ரிப் பழங்களை ஒன்றன் பின் ஒன்றாக உதடுகளாலேயேக் கவ்விப் பறித்துத் தின்னத் தொடங்கினான்.

வெண்பனியின் கீழ் இருந்த கிரான் பெர்ரிப் பழங்களின் இனிப்பும் புளிப்புமான இனிய சுவை, சில நாட்களுக்குப் பிறகு அவன் முதல் தடவை உண்ட இந்த உண்மையான உணவு அவன் வயிற்றில் இசிவு வலியை உண்டாக்கியது. ஆனால், அறுப்பது போன்ற இந்தக் குத்துவலி நிற்கும் வரைக் காத்திருக்க அவனுக்கு சக்தி பற்றவில்லை. ஒவ்வொருத் திட்டாகத் தவழ்ந்து ஏறி, வாய்ப்பாக இருந்து கொண்டு, இனிப்பும் புளிப்புமான மணமுள்ள பழங்களைக் கரடி போன்று நாக்காலும் உதடுகளாலும் லாவி லாவித் தின்றான். இந்த மாதிரிச் சிலத் திட்டுக்களை காலி செய்துவிட்டான். வெண்பனி உருகியதால் தேங்கியிருந்த வசந்தகாலக் குளிர்நீர் அவனுடைய பூட்சுகளுக்குள் கசிந்து ஈரமாக்கிற்று. கால்களிலோ, காந்தும் கொடிய வலி உண்டாயிற்று. களைப்பினால் உடல் சோர்ந்தது. ஆனால் அவனோ, இவற்றில் எதையும் உணரவில்லை. வாயில் ஓரளவு இனிப்பு கலந்த கடும் புளிப்பையும் வயிற்றில் இனிய கனத்தையும் மட்டுமே அவன் உணர்ந்தான்.

அவனுக்குக் குமட்டல் எடுத்தது. ஆனால், அவனால் ஆசையை அடக்க முடியவில்லை. மறுபடியும் பழங்களைத் திரட்டுவதில் முனைந்தான். தான் செய்திருந்த செருப்புக்களைக் கைகளிலிருந்து கழற்றினான். பெர்ரிப் பழங்களைப் பறித்து டப்பாவிலும் தலைக் காப்பிலும் அவற்றைச் செம்மச் செம்ம நிறைத்துக் கொண்டான். நாடாக்களால் தலைக்காப்பை இடுப்பு வாறுடன் சேர்த்துக் கட்டிக்கொண்டான். உடல் முழுவதையும் ஆட்கொண்ட கடும் உறக்க மயக்கத்தை அரும்பாடுப்பட்டுப் போக்கிக் கொண்டு தவழ்ந்து மேலே சென்றான்.

இரவில் முதிய பிர் மர விதானத்தின் அடியை அடைந்து, கிரான் பெர்ரிப் பழங்களைத் தின்றான், மரப் பட்டைகளையும் பிர் கூம்புக்கனி விதைகளையும் சவைத்தான். எச்சரிக்கையும் கலவரமும் நிறைந்த உறக்கத்தில் ஆழ்ந்தான். யாரோ ஓசை செய்யாமல் இருளில் தன் அருகே பதுங்கி வருவது போல அவனுக்கு அநேகதடவைத் தோன்றியது. அவன் கண்களை விழித்து, சட்டென எச்சரிக்கை அடைந்து ரிவால்வரைக் கையில் பிடித்தவாறு அசையாது உட்கார்ந்திருந்தான். விழும் கூம்புக் கனிகளின் சத்தம், லேசாக உறைந்து இறுகும் வெண்பனியின் சரசரப்பு, வெண்பனிக்கு அடியிலிருந்து பெருகும் சிற்றோடையின் மெல்லிய கல கலவொலி, எல்லாமே அவனுக்கு நடுக்கம் உண்டாக்கின.

விடியும் தருவாயில்தான் ஆழ்ந்த தூக்கம் அவனை ஆட்கொண்டுவிட்டது. நன்றாக வெளிச்சம் ஆனபிறகு, தான் எந்த மரத்தடியில் உறங்கினானோ அதைச் சுற்றிலும் நரிக்கால்களின் அடித்தடங்களைக் கண்டான். அவற்றின் நடுவே, தரையில் இழுபட்ட வாலின் நீண்ட அடையாளம் தென்பட்டது.

ஓகோ, இதுவா அவனைத் தூங்க விடாமல் தொந்தரவுச் செய்தது! நரி அவனைச் சுற்றியும் அருகாகவும் நடந்தது, சற்று உட்கார்ந்து விட்டுப் பின்னும் நடந்தது என்பது தடங்களிலிருந்தது தெரிந்தது.

படிக்க:
சைவ சமயத்தின் மீதான கம்பனின் கருத்தியல் குண்டுவெடிப்புகள் !
மே தின சிறப்புக் கதை : சிலந்தியும் ஈயும் !

அலெக்ஸேயின் மனத்தில் கெட்ட சிந்தனை உதயமாயிற்று. தந்திரமுள்ள இந்தப் பிராணி, மனிதனின் சாவை முன் கூட்டி உணர்ந்து கொள்கிறது என்றும், சாவு விதிக்கப்பட்டவனைப் பின்பற்றத் தொடங்குகிறது என்றும் வேட்டைக்காரர்கள் சொல்வார்கள். கோழைத்தனமுள்ள இந்த ஊனுண்ணியை இந்த முன்னுணர்வுதான் அவனுடன் பிணைத்திருக்கிறதோ?

திடீரென அலெக்ஸேய் எச்சரிக்கை அடைந்தான். கிழக்கேயிருந்து இடைவிடாது கேட்டுக் கொண்டிருந்த பீரங்கி குண்டுகளின் அதிரொலியின் ஊடாக, மெஷின்கன் குண்டு வரிசைகளின் சடசடப்பு சட்டெனத் துலக்கமாக அவன் காதுகளுக்கு எட்டிற்று.

களைப்பை அக்கணமே உதறி எறிந்து விட்டு, நரியையும் இளைப்பாறலையும் மறந்துவிட்டு, அவன் மீண்டும் காட்டுக்கு உள்ளே தவழ்ந்து முன்னேறினான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க