அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 17

அரசியல் பொருளாதாரத்தின் கொலம்பஸ்
அ.அனிக்கின்

மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படையான விஞ்ஞானக் கோட்பாட்டைப் பெட்டி வளர்ச்சியடையாத வடிவத்தில் எடுத்துக் கூறினார். கூலியும் உபரி மதிப்பும் (நில வாரம், லாபம், வட்டி) ஒரு பண்டத்தின் விலையில் தலைகீழ் நிலையில் உறவு கொண்டிருக்கின்றன; கடைசியில் அதன் விலையை நிர்ணயிப்பது அதற்காகச் செலவிடப்பட்டிருக்கும் உழைப்பின் அளவு தான் என்று அவர் கூறினார்.

உற்பத்தி மட்டம் மாறாத நிலையில் இருக்கும் பொழுது கூலியை உயர்த்துவது உபரி மதிப்பை பாதிக்கும்; அதைப் போல உபரி மதிப்பை அதிகரிப்பது கூலியை பாதிக்கும். இதிலிருந்து ஒரு பக்கத்தில் தொழிலாளர்களின் வர்க்க நலன்களுக்கும் மறு பக்கத்தில் நில உடைமையாளர்கள், முதலாளிகளின் வர்க்க நலன்களுக்கும் இடையே உள்ள அடிப்படையான எதிர்ப்பை அங்கீகரிப்பதற்கு ஒரு காலடி எடுத்து வைத்தால் போதும். இந்த இறுதி முடிவையே மூலச் சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தில் ரிக்கார்டோ செய்தார். பெட்டி இந்தக் கருத்துக்கு மிகவும் நெருக்கமாக ஒரு வேளை ஆய்வுரையில் அவ்வாறு வராதிருக்கலாம் – பிரபலமான அரசியல் கணிதம் என்ற நூலில் வருகிறார். இதை அவர் 1670-களில் எழுதினார்; இப்புத்தகத்திலும் கூட இந்தக் கருத்து கருவடிவத்தில் தான் இருக்கிறது.

எனினும் மொத்தமாகப் பார்க்கும் பொழுது, பெட்டி அரசியல் கணிதத்தின்பால் கொண்டிருந்த தீவிரமான ஆர்வம் அவரைத் தமது பொருளாதாரத் தத்துவத்தை வளர்க்க முடியாதபடி செய்தது ; முதலாளித்துவப் பொருளாதாரத்தின் அடிப்படையான விதிகளை அவர் புரிந்து கொள்ள முடியாதபடி செய்தது. ஆய்வுரையிலிருந்த பல சிறப்பான ஊகங்களை அவர் மேலும் வளர்த்துச் செல்லவில்லை. இப்பொழுது எண்கள் அவரைக் கவர்ந்தன. எல்லாவற்றுக்கும் அவையே திறவு கோலாகத் தோன்றின.

அவருடைய தனித்தன்மையைக் குறிக்கும் சொற்றொடர் ஆய்வுரையில் முன்பே இடம் பெற்றிருந்தது . ”முதலில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய வேலை கணக்கிடுவதே…” இது அவருக்கு ஒரு பொன் மொழியாக, மந்திரமாக மாறியது . கணக்கிட வேண்டும்; எல்லாம் தெளிவாகிவிடும் என்றார், புள்ளியியலை உருவாக்கியவர்கள் அதனுடைய அபாரமான சக்தியில் குழந்தைத்தனமான நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

நாம் மேலே கொடுத்திருப்பது பெட்டியின் முக்கியமான பொருளாதாரப் புத்தகங்களின் மொத்த உள்ளடக்கமும் அல்ல. அது இதைக் காட்டிலும் வளமானது. அவர் அன்று முற்போக்காக இருந்த முதலாளி வர்க்கத்தின் உலகப் பார்வையைத் தம்முடைய கருத்துக்களில் எடுத்துக் கூறினார். உற்பத்தியின் கோணத்திலிருந்து முதலாளித்துவ உற்பத்தியை ஆராய்ந்து பொருளாதார நிகழ்வுகளை முதன் முறையாக மதிப்பிட்டவர் பெட்டி. இதுதான் வாணிப ஊக்கக் கொள்கையினரைக் காட்டிலும் அவரிடமிருந்த மாபெரும் சாதகம். அதனால் அவர் மக்கள் தொகையில் உற்பத்தியில் சம்பந்தமில்லாத பகுதியினர் மீது விமரிசனப் போக்கைக் கடைப்பிடிக்கிறார்; அவர்களில் மதகுருக்கள், வழக்குரைஞர்கள், அதிகாரிகள் ஆகியோரைக் குறிப்பிட்டு எழுதுகிறார். வியாபாரிகள், கடைக்காரர்களிலும், தங்களால் யாருக்கும் பயனில்லாமல் இருக்கின்றவர்களை அகற்றி அவர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்று ஊகிக்கிறார்.

படிக்க:
Trust WHO ஆவணப்படம் : உலக சுகாதார நிறுவனத்தின் மறுபக்கம் !
♦ சோஷலிசம் என்பது வெறும் போதனை மட்டுமே அல்ல | மார்க்ஸ் பிறந்தார் இறுதி பகுதி

மக்கள் தொகையில் உற்பத்தியில் ஈடுபடாத குழுவினரைப் பற்றி விமர்சன ரீதியான அணுகுமுறையைக் கடைப் பிடிப்பது மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தின் உயிரோட்டமாக மாறியது.

ஒரு மனிதரை உருவாக்குவது அவருடைய நடைச் சிறப்பு என்பது பழைய பிரெஞ்சுப் பழமொழி. பெட்டியின் இலக்கிய நடை அசாதாரணமான வகையில் புதுமையும் தற்சிந்தனையும் கொண்டு விளங்கியது. இத்தனைக்கும் அவர் இலக்கிய நுட்பங்களிலும் உத்திகளிலும் தேர்ச்சி உடையவரல்ல. அவர் சுருக்கமாக, நேரடியாக, எத்தகைய சொல்லலங்காரமும் இல்லாமல் எழுதினார். துணிச்சலான கருத்துக்களை துணிச்சலான, கட்டுத்தளைகளை மீறிய நடையில் எழுதினார்; சுற்றி வளைக்காமல் சொல்ல விரும்பிய கருத்தை மட்டும் எளிமையான சொற்களில் சொன்னார். அவர் எழுதிய மிக நீளமான புத்தகம் கூட எண்பது பக்கங்களில் முடிந்து விடுகிறது.

விஞ்ஞானப் பேரவையின் ஸ்தாபக உறுப்பினர்களில் பெட்டியும் ஒருவர். அதன் சாஸனத்தில் ”… சோதனைகளைப் பற்றிய எல்லா அறிக்கைகளிலும்….. நடந்தவை மட்டும், முன்னுரை, விளக்கம், சொல்லணிகள் முதலியன இல்லாமல் வெளிப்படையாகப் பதிவு செய்யப்பட வேண்டும்” என்று விதிக்கப்பட்டிருந்தது.

இது இயற்கை விஞ்ஞானத்துக்கு மட்டுமல்லாமல் சமூக விஞ்ஞானத்துக்கும் பொருந்தக் கூடியதென்று பெட்டி கருதி அதை அப்படியே பின்பற்ற முயன்றார். அவர் எழுதியவற்றில் பல ”பரிசோதனைகளைப் பற்றிய அறிக்கைகளை” நமக்கு நினைவுபடுத்துகின்றன. (நவீன பொருளியலாளர்களும் பிற சமூக விஞ்ஞானங்களைச் சேர்ந்த நிபுணர்களும் இந்த விதியைப் பின்பற்றுவது தவறல்ல.)
பெட்டியின் புத்தகங்களின் எளிமையான நடை அவருடைய குறிப்பிடத்தக்க ஆளுமையை, கட்டுப்படுத்த முடியாத சுபாவத்தை, அரசியல் வேகத்தை நாம் பார்க்க முடியாது தடுப்பதில்லை.

பணக்கார நில உடைமையாளரான பெட்டி பெரிய டோபாவும், தரையில் புரளும் பட்டு அங்கியும் அணிந்த போதிலும் (அவருடைய வாழ்க்கையின் பிற்பகுதியில் வரையப்பட்ட ஓவியங்களில் ஒன்றில் அவர் இப்படித் தோற்றமளிக்கிறார்) பெருமளவுக்குக் கரடுமுரடான சாமான்யராகவும், ஓரளவுக்குக் கிண்டலான பேச்சுடைய மருத்துவராகவும் கடைசிவரை இருந்தார். அவரிடம் அதிகமான செல்வம் இருந்தது, பட்டங்கள் இருந்தன; ஆனால் அவர் முடிவில்லாதபடி சிந்தனையில் மட்டுமல்லாமல் உடலாலும் பாடுபட்டார்.

அவருக்குக் கப்பல் கட்டுவதில் தீவிரமான ஆசை இருந்தது; எப்பொழுதும் புது விதமான கப்பல்களைப் பற்றித் திட்டங்கள் தீட்டிக் கொண்டும் முடிவில்லாமல் கட்டிக்கொண்டும் இருந்தார். அவருடைய தனிப்பட்ட கூறுகள் அவரிடம் காணப்பட்ட நேரெதிர்ப் பண்புகளைப் பகுதியளவுக்கு விளக்குகின்றன. சோம்பேறிகளையும் அடுத்தவரைச் சுரண்டி வாழ்பவர்களையும் அவர் வெறுத்தார். முடியாட்சியைப் பற்றியும் கூட அவர் கறாரான அணுகுமுறையைக் கடைப்பிடித்தார். அரசவையோடு நெருக்கமாக இருப்பதற்கு அவர் முயற்சி செய்தார்; அதே சமயத்தில் அவருடைய எழுத்துக்கள் அரசருக்கோ அல்லது அரசாங்கத்துக்கோ மகிழ்வூட்டியிருக்க முடியாது. அரசர்கள் பிற நாடுகளை ஆக்கிரமிக்கின்ற யுத்தங்களை விரும்புகிறார்கள்; அவர்களைத் தடுப்பதற்குரிய சிறந்த வழி அவர்களுக்கு எந்த வகையிலும் பணம் கொடுக்காமலிருப்பதே என்று அவர் எழுதியது அதற்கு உதாரணம்.

(தொடரும்…)

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க