சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 14

சி.என்.அண்ணாதுரை
காட்சி : 20

இடம் : இந்துமதி தனிஅறை
உறுப்பினர்கள் : இந்துமதி.

(இந்துமதி தனிமையில் சோகமாய்ப் பாடுகிறாள்)

காட்சி : 21
இடம் : தர்பார்
உறுப்பினர்கள் : சிவாஜி, மோகன், தளபதிகள், வீரர்கள்.

(கோட்டை உடைத்தல்)

தளபதி – 1 : காகப்பட்டரின் மறுமொழி கிடைத்துவிட்டதாமே? சாஸ்திர சம்மதம் பெற்ற மார்க்கம் இருக்கிறதாமே?

சிவாஜி : ஆமாம்! சூத்திரனை க்ஷத்திரியனாக்குகிறாராம். அதற்கு ஒரு சடங்கு இருக்கிறதாம்.

மோகன் : பறவைக்கு இறக்கையை ஒட்டிவிடப் பார்க்கிறார்கள். சூட்சி பலித்துவிட்டது.

சிவாஜி : இதிலே சூட்சி என்ன இருக்கிறது? அவர்கள் சாஸ்திரத்தைத் தானே கூறுகிறார்கள்?

மோகன் : ஆமாம்! சாஸ்திரத்தைதான். ஆனால், யாருடைய சாஸ்திரம்? எதிரிகளிடம் இந்த நாடு சிக்கிய போது, அந்த சாஸ்திரம் உதவவில்லையே? யாரும் அதன் துணையைத் தேடவில்லையே? கங்கைக் கரைக்கா ஓடினோம். களத்திலே என்ன செய்வது, எப்படிப் போரிடுவது என்று கேட்க ? மராட்டியரின் தோள் வலிமையும், அவர்கள் ஏந்திய வாளின் கூர்மையும், அப்போது தேவைப்பட்டது. இப்போது மன்னர்களை மண்டியிட வைத்த மாவீரனுக்கு சாஸ்திரத்தைக் காட்டுகிறார்கள். சாஸ்திரத்தை !

தளபதி – 1 : அதைத் தவிர வேறு வழி காணோமே?

மோகன் : எங்கே போக வழி வேண்டும் தோழரே? வீரபுரிக்கு மார்க்கம் வெகு தெளிவாக இருக்கிறது. விவேக புரிக்கும் அப்படித்தான். ஆனால் வைதீகபுரிக்குத் தான் – வளைந்த பாதை இருக்கிறது.

தளபதி – 1 : காகப்பட்டர் நமது தலைவரை க்ஷத்திரியராக்க இசையும் போது, நமக்கென்ன கஷ்டம்? சிக்கல் தீர்ந்து விட்டது என்றல்லவா தெரிகிறது.

மோகன் : அதை நான் மறுக்கிறேன் மாதவரே! பலமாக மறுக்கிறேன். சிக்கல் தீரவில்லை; சிக்கல் பலமாகிறது. வீர சிவாஜியின் வெற்றிகள் அத்தனையும் வீண் என்பதை நாம் பிற்காலச் சந்ததிக்குச் சாசனமாக்குகிறோம். போரிலே புலியாக இருந்தார். ஆனால் வைதீகபுரியிலே சிக்கினார் சிவாஜி என்று வருங்காலத்தில் மக்கள் கூறத்தான் போகின்றனர். நெடுங்காலத்துக்குப் பிறகும் போரிடவோ, ஆளவோ, உழைக்கவோ, ஊருக்கு உதவி செய்யவோ, வீரமோ, தீரமோ , தகுதியோ, திறமையோ அற்றக் கூட்டம் பெருமையுடன் தலை நிமிர்ந்து கூறத்தான் போகின்றது. மாவீரன், மராட்டியம் பெற்றெடுத்த தீரன், களத்திலே சூரன் சிவாஜி. ஆனால் எமது காகப்பட்டரிடம் அடைக்கலம் புகுந்த பிறகே அரியாசனம் ஏற முடிந்தது. எமது ஆதிபத்தியத்தைப் பாரீர் என்று பேசத்தான் போகிறது.

வீரத் தலைவனே! வேண்டாம். வேண்டாம், இந்த விபரீத காரியம். மராட்டியத்தின் மானத்தைக் காக்கத் தயங்காதீர். மணிமுடி தரிக்க உமக்கு எந்த ஜடாதரியின் தயவும் தேவையில்லை

சிவாஜி : தயவல்ல! ஆசீர்வாதம் தானே அது! அதைப் பெறுவதிலே இழிவு என்ன?

தளபதி – 1 : சாஸ்திரப் பலத்தைத்தான் தேடுகிறோம்.

மோகன் : மகனை இழந்தாலும் மனம் தளராத மாதர்கள் மராட்டியத்திலே இருக்கிறார்கள். வீரர்கள் ஏராளமாக உள்ளனர். தியாகப் புருஷர்கள் இருக்கிறார்கள். இவர்களால் வரும் பலம் உங்களுக்குப் பலமாகத் தோன்றவில்லை. மகராஜ்! பச்சிளங் குழந்தைக்குப் பாடுவது போல் இருக்கிறது தங்களுடைய வாதம். காகப்பட்டர் தங்களைச் க்ஷத்திரியராக்குகிறார். தாங்கள் தோன்றிய திருக்குலத்தையல்ல. அந்தக் குலம் என்றும் சூத்திரக் குலமாகவே இருக்குமே. தங்களை எங்களிடமிருந்து பிரித்து விடுகிறார். தாங்கள் பிறந்த குலம் தாழ்ந்தது. நாடாளத் தகுதியற்றது என்று தாங்களே ஒத்துக் கொள்ளும்படி சொல்கிறார்.

பெற்ற தாயைப் பிச்சைக்காரியாக்கிவிட்டு, மகன் பெருநிதி பெற்று வாழ்ந்தால் அவனை பெரியோன் என்று பேதையும் கூறானே. குடியானவர் குலத்துக்கு என்ன மாசு? நமது குலத்தைக் குறை கூறும் ஏட்டை நாம் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்று அவர்கள் காட்டும் ஏட்டின் துணைகொண்டு, நாம் நாட்டை மீட்டிருந்தால் அதற்கு நாம் மதிப்பளிக்கலாம். எதிரிகள் நம்மைத் தாக்கிய போது அந்த ஏடு கேடயமாக இல்லை, வாளாக இல்லை, வாளையிடும் உறையாகக் கூடப் பலனளிக்க வில்லையே! ஏன் அந்த ஏடு மகராஜ்?

சிவாஜி : சந்திரமோகன்! ஆரியர்களின் அபிப்பிராயப்படி நடப்பதால் நீ இவ்வளவு அதிருப்தி கொள்ளலாமா? நானும் முதலிலே கோபித்துக் கொண்டேன். ஆனால் இப்போது காக்கப்பட்டரின் யோசனை இருதரப்பாருக்கும் திருப்திகரமாக இருக்கிறது என்றே எண்ணுகிறேன். சாஸ்த்திர சம்பிரதாயமும் நிலைக்கும். உன் போன்ற உள்ள தோழர்களின் அபிலாஷையும் நிறைவேறும்.

மோகன் : மராட்டியத் திலகமே மன்னிக்க வேண்டும். நான் வெற்றி வீரன் சிவாஜி ஆவதை விரும்பி வந்தேனே ஒழிய, ஆரிய தாசனான பிறகு அரியாசனம் ஏறும் துர்ப்பாக்கிய காட்சியைக் காண வரவில்லை. மகராஜ் ஆரிய சிரேஷ்டர் என்று அர்ச்சிக்கிறீர். ஒரு ஆற்றலற்ற கூட்டத்தை பார்ட்டாரி தேசத்துப் புரவிகள் மீதமர்ந்து. தகதகவெனும் கவசம் பூண்டு, பளபளக்கும் கடகம் ஏந்தி, போர்க் குணம் படைத்த மக்கள் இங்குப் புயலெனக் கிளம்பிய பொழுது, காய்ந்த புல்லைக் கையிலேந்தி திரிந்த கூட்டம் என்ன செய்தது? தாங்கள் யார்? தங்களுடைய வீர தீரம் எத்தகையது? தாங்கள் எங்கள் கண்களுக்கு மராட்டிய நாட்டிலே மார்தட்டி நின்று, மகத்தான போராட்டங்களை நடத்திய மாவீரராக காட்சியளிக்கிறீர். கட்கமெடுத்து, புரவி மீதேறி, காடு மலை கடந்து சென்று, கடும் போரிட்ட வீரன். ஆனால் அவர்கள் கண்களுக்கு ஒரு சூத்திரராகத் தெரிகிறீர். கண்ணிலும், கருத்திலும் கடும் விஷம் இருக்கிறது காவலா!

மராட்டிய மண்டலத்தைக் கமண்டல நீர் தெளித்து அவர்கள் உண்டாக்கவில்லை. மராட்டியரின் ரத்தத்தைச் சிந்தி இந்த மண்டலத்தைப் பெற்றோம். யாக குண்டத்தின் விளைவல்ல மராட்டியம். தியாகத் தீயிலே தோன்றிய தேசம். இந்த வேலையை வேதம் ஓதும் அவர்கள் செய்யவில்லை. நாம் செய்தோம்; நம்மை நிந்திக்கிறார்கள், சூத்திரர்கள் என்று. அதை நாம் ஏற்றுக் கொள்வதா, மன்னா! இது நமது வீழ்ச்சியின் அறிகுறி என்பேன்.

தளபதி – 2 : தளபதிகளே ! மராட்டிய மண்டலத்திற்கு ஒரு மன்னன் தேவை. மக்களின் விருப்பம் மட்டுமல்ல, பரத கண்டம் முழுவதும் இதே பேச்சாக உள்ளது. ஆகவே நாம் சில்லறை விஷயங்களைப் பேசிக்கொண்டு சிக்கலை வளர்த்துக் கொள்வது நல்லதல்ல. காகப்பட்டரை வரவழைத்து, அவர் கூறும் சடங்கு செய்து, நமது தலைவரை முடிசூட்டிக் கொள்ளச் செய்வதே முறை.

மோகன் : தளபதிகளே! மிக மிக சாமான்யக் குடியிலே பிறந்த சிவாஜி. ஒரு பெரிய அரசை, மராட்டிய சாம்ராஜ்யத்தைத் தன் தோள் வலிமையால் கண்டார். அவரது மின்னும் வாள் ஒளி வீசாத இடமில்லை . அவருடைய படையின் பரணி கேட்காத நாளில்லை. அவருடைய கண்ணோட்டம் அடிமைத்தனத்தைப் போக்கிற்று காடுகளிலே கூடாரங்கள், மலைகளிலே கோட்டைகள், குகைகளிலே பாசறைகள். யாரால் ஏற்பட்டன? நமது இனத்தின் பங்கத்தைப் போக்கிய சிங்கத்தால், அந்தச் சிங்கம் சிலந்திக் கூட்டிலே சிக்குவதா? ஈட்டிக்கு மார்பு காட்டுகின்ற இணையில்லா வீரன், உலர்ந்த சருகு கண்டு உடல் துடிக்க நிற்பதா? மார்பு வாள் வடுவுடன் விளங்க, மராட்டியத்திலே மண்ணோடு குருதி கலந்து குழைய, மராட்டியக் குடும்பங்களிலே தாய்மார்கள் கோவெனக் கதற, போரிட்டு நிறுவியது மராட்டிய சாம்ராஜ்யம். மலை, காடு, நதி, படை எதுவும் தடுக்கவில்லை சிவாஜியை! ஆனால் ஆரியர்கள் தடுக்கின்றனர். எவ்வளவு விசித்திரம். வேதனை தரும் விசித்திரம். கூண்டிலே சிக்கிய புலி, தூண்டிலிலே சிக்கிய மீன், வலையிலே வீழ்ந்த மான், வர்ணாஸ்ரமத்திலே வீழ்ந்த வீரன் – இந்த வேதனை தரும் காட்சியையா நான் காணவேண்டும்? ஐயோ, மராட்டியமே! உன் நிலை இப்படியா குலைய வேண்டும்? ஒரு சிறு கூட்டத்திடம் சிக்கிச் சீரழிகிறாயே.

சிவாஜி : மக்களின் மனப்போக்கைக் கவனிக்க வேண்டாமா?

மோகன்: மக்களின் மனம்! தாங்கள் வீரமாகக் கிளம்புவதற்கு முன்பு மக்களின் மனம் இனி என்றென்றும் நாட்டிற்கு விடுதலை கிடையாது; விடுதலை பெற முடியாது என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தனர். போரிடக் கிளம்பிய நீர், புதுமையைக் கண்டீர். கோழையும் வீரனானான் ; கோட்டைகள் தூளாயின; கொட்டினோம் வெற்றி முரசு, பறக்கிறது, சுதந்திரக் கொடி.

சிவாஜி : மோகனா! காகப்பட்டரின் யோசனையை மறுத்தால், என்ன நேரிடும் என்பதை எண்ணிப் பார்க்காமலே பேசுகிறாய் .

மோகன் : என்ன நேரிடும்? காகப்பட்டர் தமது ரத, கஜ, துரக பதாதிகளுடன் மராட்டியத்தின் மீது படையெடுத்து விடுவார். நாம் அவரது அசகாய சூரர்களால் தோற்கடிக்கப்பட்டு விடுவோம்! அதுவா சத்திரபதி தங்கள் சிந்தை கலங்குவதற்குக் காரணம்?

சிவாஜி : மோகன்! நீ என்னைக் கேலி செய்கிறாய்! நான் நெடுநேரமாக உனது பேச்சுக்கு இடமளித்து வந்தேன். இனி வாதிடப் போவதில்லை. நான் காகப்பட்டரை வரவழைப்பதென்று தீர்மானித்து விட்டேன். தீர யோசித்துத்தான் இந்த முடிவுக்கு வந்தேன். இனி நீ போகலாம்; காகப்பட்டரை வரவழைக்க ஏற்பாடுகள் தயாராகட்டும்.

(மோகன் தலை குனிந்து நிற்கிறான். சபை கலைகிறது. மோகன் போகிறான். சிவாஜி உலவியப்படி)

சந்திரமோகன் கூறுவது அவ்வளவும் உண்மைதான்!

(கோட்டைகளைப் பார்த்து)

அதோ தோர்ணா, அந்தக் கோட்டையைப் பிடிக்க நடந்த பயங்கரச் சண்டையை நினைத்துக் கொண்டால், ஆபத்தைத் துரும்பாக எண்ணிய சிவாஜியின் நிலைமையை இன்றைய நிலையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால்…..? எனக்கே வெட்கமாகத்தான் இருக்கிறது.

“சத்திரபதி இந்தக் கணவாயின் பக்கம் போகக்கூடாது.”

”ஏன்?”

“எதிரியின் படை பலம் அதிகம்.”

“கோழைகள் விலகட்டும், வீரர்கள் பின் தொடரட்டும்.”

”கொட்டு முரசு” என்று உத்தரவிட்டுப் பாய்ந்து சென்று வெற்றி பெற்ற புரந்தர். எதிரியே ஆச்சரியம் அடையும்படியான அபார வீரத்துடன் வெற்றி பெற்ற ராஜகிரி, மராட்டிய கீர்த்தியின் உறைவிடம் போலுள்ள கல்யாண்…

கோட்டைகள் வெற்றியின் சின்னங்கள் ; வீரத்தின் அறிகுறிகள்; அந்த சிவாஜியா நான்? அஞ்சா நெஞ்சன் எங்கே? பஞ்சையிடம் பணியப்போகும் நான் எங்கே ? ஒழிந்தது. அந்த சிவாஜி மங்கிவிட்டான். எதற்கும் அடிபணியும் சிவாஜி உலாவுகிறான். தோர்ணா! புரந்தர்! ராஜகிரி! என் கண்முன் இருக்க வேண்டாம்.

(கோட்டைகளை உடைத்து )  சிதறுகின்றன சிறுசிறு துண்டுகளாக. வீரத்தின் சின்னங்கள். என் மனக்கோட்டை பொடிப் பொடியாகிறது.

(மெளனமாக உலவிவிட்டு)

சந்திரமோகா! நீ எல்லாம் அறிந்திருக்கிறாய் வெட்டு ஒன்று; துண்டு இரண்டாகப் போகிறாய்; வீரன். ஆனால் என் நிலையை மட்டும் உணரவில்லை. ஒரு வினாடியில் காகப்பட்டர் வேண்டாம், மகுடாபிஷேகம் இன்று நடக்குமென்று உத்தரவு பிறப்பித்து விடலாம். மராட்டியம் மறுக்காது. ஆனால் மறுகணம் முதல் என்ன நடைபெறும்? இந்த மண்டலத்திலும், வேறு பல மண்டலங்களிலும் ஆஸ்ரமவாசிகள் ஆரம்பிப்பார் தமது பிரச்சாரத்தை.

படிக்க:
சாதி உங்களுக்கு என்ன செய்தது ?
மோடி : அடிமைகளின் மகாராஜா ! மகாராஜாக்களின் அடிமை !! புதிய கலாச்சாரம் மின்னிதழ்

‘மராட்டிய மண்டலாதிபதி சாஸ்திர விரோதி! சம்பிரதாய வைரி! சனாதனத்தைக் கெடுத்தவன்! அவனுடைய ராஜ்யம் பாவ பூமி!’என்று கூறுவர்.

அவர்கள் பூதேவர்கள்! மக்கள் அப்படித்தானே எண்ணுகிறார்கள். அந்த மக்கள் பிறகு மராட்டிய மண்டலத்தை உள்ளிருந்து கெடுத்துவிடுவர். நான் இன்று பட்டாச்சாரிக்குப் பணியாவிட்டால், அந்தப் பாதகர்கள் பாமரரை நாளை என் மீது ஏவிவிடுவர். மராட்டியனைக் கொண்டே மராட்டியனை அழிப்பர். பரத கண்டம் முழுவதும் ‘சிவாஜி நீச்சன், சாஸ்திர சம்மதமில்லாது ராஜ்யம் ஸ்தாபித்தான். அவனுக்குச் சர்வ நாசம் சம்பவிக்கும். – இமயம் முதல் குமரி வரை எனக்கு எதிர்ப்பு, ஏளனம் கிளம்பும். என்ன செய்வேன்? மராட்டியத்தை அவர்கள் சும்மா விட மாட்டார்களே. ஒருபுறம் வெளிநாட்டார் எதிர்ப்பு ; வேறொரு புறம் வேறு வேந்தர்களின் எதிர்ப்பு! மராட்டியத்திலேயே எதிர்ப்பு. எத்தனை கணைகளைத்தான் மராட்டிய மாதா தாங்குவாள். மோகன் நான் பணிந்துதான் ஆகவேண்டும்; வீழ்ச்சிக்குத் தான்! ஆனால் வேறு வழியில்லை; வேறு வகையில்லை.

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி: சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க