”நீதி செத்து விட்டது. நீதிபதிகள் வாழ்க” என்கிறது வயர் இணையதளத்தில் வெளியான கட்டுரை ஒன்றின் தலைப்பு. இன்றைக்கு இந்திய நீதித்துறை வந்து சேர்ந்திருக்கும் இழிந்த நிலைக்கு அந்தத் தலைப்பு மிகவும் பொருத்தமானது. “பாமர மக்களின் இறுதி நம்பிக்கை” எனச் சொல்லப்பட்ட நீதித்துறை தன்னளவில் ஒரு கட்டப்பஞ்சாயத்துக் கும்பலாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை புரியாதவர்களுக்கும் புரிய வைத்திருக்கின்றன கடந்த மூன்று வார நிகழ்வுகள்.

உச்ச நீதிமன்றத்தில் பணிபுரிந்து தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள பெண் ஊழியர் ஒருவர் கடந்த ஏப்ரல் 19-ம் தேதியன்று பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை எழுப்புகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் 10 மற்றும் 11-ம் தேதிகளில் தனக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறலை வாக்குமூலமாக (affidavit) தயாரித்து உச்சநீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளுக்கும், ஊடகங்களுக்கும் அனுப்புகிறார். இவ்வாறான பாலியல் அத்துமீறல்கள் குறித்த புகார்கள் எழும் போதெல்லாம் கூடவே தோன்றும் ஒரு கேள்வி, ”ஏன் இத்தனை தாமதமாக குற்றச்சாட்டு எழுப்பப்படுகின்றது?” என்பதே. அந்தக் கேள்விக்கான விடையை அவரது வாக்குமூலத்திலிருந்தே நாம் பார்க்கலாம். அந்த வாக்குமூலம் ஒரு உண்மைக் கதையைச் சொல்கிறது. அது உண்மையானது மட்டுமல்ல துயரமானது.

இது தனக்கு இழைக்கப்பட்ட அநீக்கு நீதி வேண்டியதால் அல்ல – மாறாக அந்த அநீதிக்கு உடன்பட்டுப் போகவில்லை என்பதால் ஒரு குடும்பமே வல்லூறுகளால் சிதைக்கப்பட்ட கதை. வேலை இழப்புகள், பொருளாதார இழப்பு, உடல் ரீதியிலும், உளவியல் ரீதியிலும் சித்திரவதைகள், பொய் வழக்குகள் என நீளும் அதிகாரத்தின் இரத்த வெறி பிடித்த கரங்கள் ஒரு குடும்பத்தை நிர்கதியாக்கிய கதை. அனைத்து முனைகளிலும் நம்பிக்கை இழந்த அந்தப் பெண் இப்போது “நான் இழப்பதற்கு ஒன்றுமே இல்லை.. தேவையெல்லாம் நீதி ஒன்றுதான்” என ஓடுவதை நிறுத்தி விட்டு தன்னைத் துரத்திக் கொண்டிருக்கும் வேட்டை நாய்களை எதிர்நோக்கித் திரும்பியிருக்கிறார்.

♦ ♦ ♦

தில்லியைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு இப்போது 35 வயது. ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட தலித். திருமணமான புதிதில் தனியார் துறையில் வேலை பார்த்து வந்துள்ளார். கணவருக்கு காவல்துறையில் வேலை – கான்ஸ்டபிள். ஒரு பெண் குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் ஆனபோது வேலையிலும் தொடர்ந்து கொண்டு குழந்தையையும் பராமரிப்பது சிரமமாக இருக்கவே வேலையை இராஜினாமா செய்கிறார். குழந்தையை கவனித்துக் கொண்டே அரசு வேலைக்கு முயற்சித்து வந்தவருக்கு, உச்ச நீதிமன்றத்தில் ஒரு பணி வாய்ப்பு இருப்பது தொடர்பான பத்திரிகை விளம்பரம் கணவரின் மூலம் தெரிய வருகிறது.

அந்தப் பணிக்கு விண்ணப்பித்து அதற்கான தேர்வில் வெல்லும் அந்தப் பெண், 2014-ம் ஆண்டு மே மாதம் பணியில் சேர்கிறார். உச்சநீதிமன்றத்தில் பணி என்றதும், சட்டம் குறித்த படிப்பு அவசியம் எனக் கருதி 2015-ம் ஆண்டு சட்டக் கல்லூரியிலும் சேர்கிறார். உச்சநீதிமன்ற நூலகத்தில் தட்டச்சு செய்வது மற்றும் ஆவணப் பராமரிப்பு, நீதிபதிகளுக்குத் தேவையான நூல்களை எடுத்துக் கொடுப்பது போன்றவை இவருக்கான பணி. இதையடுத்து நீதிபதிகளின் அவைகளில் வாய்ப்பும் இவருக்குக் கிடைக்கிறது. 2014-15 மற்றும் 2015-16 ஆகிய வருடங்களில் இவரது செயல்பாடு சிறப்பாக இருந்ததாக, அந்தந்த வருடங்களின் பணி மதிப்பீட்டு ஆவணங்களில் (appraisal) குறிப்பிடப்பட்டுள்ளது.

2016 அக்டோபர் மாதம், நீதிபதி ரஞ்சன் கோகோயின் அவையில் பணியமர்த்தப்படுகிறார். அதன்பின் மெல்ல மெல்ல இவர்மேல் நீதிபதியின் அக்கறை திரும்புகின்றது. குறிப்பான புத்தகங்களைத் தேடி எடுத்துக் கொடுப்பது, தீர்ப்பு விவரங்களை தேடிக் கொடுப்பது என நேரடியாக நீதிபதியே சில வேலைகளை அளிக்கிறார். ஒரு கட்டத்தில் இவரோடு பேசுவதற்காக செல்பேசி ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். வெகு சிலருடன் மட்டுமே தொடர்பு கொள்ளும் செல்பேசி எண்ணில் இருந்து வாட்சப் மூலம் பேசத் துவங்கியிருக்கிறார் கோகோய்.

அந்த செல்பேசியை எப்படிப் பயன்படுத்துவது என்பதற்கும் ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார் நீதிபதி. குடும்பத்தினர், நண்பர்களின் முன் பேசக் கூடாது, வாட்சப் மூலம் மட்டுமே பேச வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். வாட்சப்பில் பேசுவது மறையாக்கம் செய்யப்பட்டிருக்கும் என்பதோடு அதை பதிவு செய்வதும் எளிதல்ல என்பது குறிப்பிடத்தக்கது. வேலை நேரத்தில் பேசுவதைத் தாண்டி இரவு நேரங்களிலும் ஏதாவது ஒரு முகாந்திரத்தை ஏற்படுத்திக் கொண்டு பேசி வந்துள்ளார் கோகோய்.

2018 ஆகஸ்ட் மாதம் முதல் அந்தப் பெண்ணின் பணியிடத்தை தனது இருப்பிட அலுவலகத்திற்கே மாற்றியுள்ளார் கோகோய். அவர் நீதிமன்றத்திற்கு கிளம்புவதற்கு முன்பே பணிக்கு வரவேண்டும், நீதிமன்றத்தில் இருந்து வீடு திரும்பிய பின்னரே இவர் கிளம்பிச் செல்ல முடியும். ஒரு கட்டத்தில் ஒவ்வொரு நாள் காலையிலும் “காலை வணக்கம்” என்றும் இரவு வீடு திரும்பியதை தெரிவிக்கவும் வாட்சப் மூலம் மெசேஜ் அனுப்ப வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மதிப்பு மிக்க ஒரு பதவியில் இருக்கிறவர், 64 வயதனவர் என்பதால் நீதிபதியின் இது மாதிரியான கோரிக்கைகளுக்கு உள்நோக்கம் எதுவும் இருப்பதாக அந்தப் பெண் சந்தேகிக்கவில்லை. மாறாக, வேலையில் ஜூனியரான தனக்கு ஒரு தலைமை நீதிபதியின் கீழ் பணிபுரிய வாய்ப்புக் கிடைத்திருப்பதையும், அதன் மூலம் சட்ட நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ள முடிவதையும் எண்ணி அவர் பெருமிதம் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையே கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், எதிர்கால திட்டங்கள் குறித்து நீதிபதி கேட்டறிந்துள்ளார். அதன்படி அவரது மாற்றுத்திறனாளி சகோதரர் ஒருவர் வேலையின்றி இருப்பதை அறிந்து கொண்ட தலைமை நீதிபதி, தனது பதவிக்கென இருக்கும் ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி அவருக்கு வேலை வாங்கிக் கொடுத்துள்ளார். அக்டோபர் 3-ம் (2018) தேதி தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட ரஞ்சன் கோகோய், சரியாக ஒரே வாரத்தில் அந்தப் பெண்ணின் சகோதரருக்கு வேலை வாங்கிக் கொடுத்துள்ளார்.

அக்டோபர் 10-ம் தேதி பணி நியமன உத்தரவுடன் தனது வீட்டுக்கு வந்த நீதிபதி அந்தப் பெண்ணை தனது அலுவலகத்திற்கு வரவழைத்துள்ளார். மருத்துவ பரிசோதனையின் படி அவரது சகோதரருக்கு போதிய உடல் தகுதி இல்லை என்றாலும் தனது செல்வாக்கின் மூலம் வேலை வாங்கிக் கொடுத்திருப்பதாக சொன்ன நிதிபதி, இதற்காக எனக்கு என்ன செய்யப் போகிறாய் எனக் கேட்டுள்ளார். அதற்கு பதிலாக நன்றியுடன் இருப்பேன் என அந்தப் பெண் தெரிவித்திருக்கிறார்.

அப்போது தனது இருக்கையில் இருந்து எழுந்து அந்தப் பெண்ணை நெருங்கிய தலைமை நீதிபதி அவரது முதுகை வருடிக் கொடுத்து, கன்னத்தைக் கிள்ளியிருக்கிறார். நீதிபதியின் செயலால் உறைந்து போயிருக்கிறார் அந்தப் பெண். அதை கவனித்த நீதிபதி, இப்படித்தான் என் மகளிடமும் நடந்து கொள்வேன் என சிரித்தபடி கூறியுள்ளார். மேலும், தனக்கு என்ன கைமாறு செய்யப் போகிறாய் என்பதை மறுநாள் எழுதி எடுத்து வருமாறு கூறிச் சென்றுள்ளார்.

இதற்கு மறுநாள், அக்டோபர் 11-ம் தேதி காலை, அந்தப் பெண்ணை தனது அலுவலக அறைக்கு அழைத்த நீதிபதி மீண்டும் அதே பேச்சை எடுத்துள்ளார் – “எனக்கு என்ன கைமாறு செய்யப் போகிறாய்?”. மீண்டும் அந்தப் பெண் உங்களுக்கு நன்றியுடையவர்களாக எங்கள் குடும்பம் இருக்கும் எனக் கூறியிருக்கிறார். நீதிபதி சொன்னது போல் ஒரு துண்டுச் சீட்டில் எழுதி எடுத்துச் சென்றுள்ளார். அதை ஏறெடுத்துப் பார்க்காத தலைமை நீதிபதி, அந்தப் பெண்ணின் அருகில் சென்று கட்டிப்பிடித்துக் கொண்டே “எனக்கு இதுதான் தேவை” என்றுள்ளார். அதிர்ச்சியில் என்ன செய்வதெனத் தெரியாமல் ஒரு கணம் உறைந்து விட்ட அந்தப் பெண் உடனே சுதாரித்துக் கொண்டு நீதிபதியைப் பிடித்து தள்ளி விட்டுள்ளார். அதில் ரஞ்சன் கோகோயின் தலை புத்தக அலமாரியில் இடித்துக் கொண்டிருக்கிறது. உடனே அங்கிருந்து வெளியேறி தனது அலுவலக அறைக்குச் சென்றுள்ளார் அந்த பெண்.

நாட்டிலேயே உச்சபட்ச அதிகாரம் கொண்ட ஒருவர் – இந்த நாட்டின் தலைமை நீதிபதியே தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்ட அதிர்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியாமல் உடைந்து போயிருக்கிறார் அந்தப் பெண். சிறிது நேரம் கழித்து தனது அலுவல் அறைக்கு வருமாறு நீதிபதி அழைக்கவே அங்கே சென்றுள்ளார். அங்கே நடந்ததை அப்படியே மறந்து விடும்படியும், வெளியே சொன்னால் உனது குடும்பம் நிம்மதியாக இருக்காது என்றும் நீதிபதி மிரட்டியுள்ளார். மேலும், அவரது கையில் ஒரு வெள்ளைத் தாளைக் கொடுத்து தான் சொல்லும்படி எழுதுமாறு கேட்டுள்ளார். என்ன செய்வதெனத் தெரியாத குழப்பத்தில் அந்தப் பெண் நீதிபதி சொல்வதை எழுதியுள்ளார். அந்த சம்பவத்தையே தலைகீழாக திருப்பி, அந்தப் பெண் தான் நீதிபதியிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதைப் போல் சித்தரிக்கும் விதமாக கோகோய் எழுதி வாங்கியுள்ளார்.

அன்றைக்கு இரவு வீடு திரும்பியவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது

♦ ♦ ♦

திலக் நகர் காவல் நிலைய பொறுப்பதிகாரி அந்தப் பெண்ணின் அக்கம் பக்கம் வீட்டாரிடமும், அவர் இருந்த குடியிருப்பின் நலச் சங்கத் தலைவரிடமும் தொலைபேசியில் அழைத்து அவருக்கும் அவரது கணவருக்கும் ஏதேனும் பிரச்சினைகள் இருந்ததா என விசாரித்துள்ளார். பணி முடிந்து வீடு திரும்பிய அப்பெண்ணிடம் இவ்வாறு விசாரிக்கப்பட்டதை அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இனிமேலும் தலைமை நீதிபதியின் வீட்டில் பணி புரிய முடியாது என முடிவெடுத்த அப்பெண் உடனே ரஞ்சன் கோகோயை அழைத்து தனது முடிவைத் தெரிவிக்க முயன்றுள்ளார். தொலைபேசியை நீதிபதி எடுக்கவில்லை; ஆனால் சிறிது நேரம் கழித்து நீதிபதியின் உதவியாளர் அழைத்து இரவு நேரங்களில் நீதிபதியை அழைக்கக் கூடாது என மிரட்டியுள்ளார்.

மறுநாளில் இருந்து நீதிபதியின் நடத்தையில் பெரும் மாற்றங்கள் தெரியத் துவங்கியுள்ளது. எப்போதும் தனியே அழைத்துப் பேசும் நீதிபதி, அன்றிலிருந்து யாராவது ஒருவரை உடன் வைத்துக் கொண்டே பேசியிருக்கிறார். அறையின் கதவைத் திறந்தே வைத்திருக்கிறார். மற்றபடி வழக்கம் போல் “காலை வணக்கம்” தெரிவித்து மெசேஜ் அனுப்ப வேண்டும் எனவும், மற்ற வேலைகளும் எப்போதும் போல் நடக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். தொடர்ந்த நாட்கள் மிக இறுக்கமாகச் சென்றுள்ளன. அக்டோபர் 22 (2018) தசரா விடுமுறைகளுக்குப் பின் நீதிமன்றம் செயல்படத் துவங்கிய முதல் நாளிலேயே அந்தப் பெண் பணியிட மாறுதல் செய்யப்படுகிறார்.

சில நாட்கள் கழித்து அந்த பெண்ணின் புதிய வேலை இடத்திற்கு வேறு இரண்டு நீதிபதிகளோடு சென்ற ரஞ்சன் கோகோய், அவரது வேலையை அனைவரின் முன்பும் பாராட்டி பேசியுள்ளார். பிறகு தனியே அழைத்து மீண்டும் தனது நீதி அவையில் பணிபுரிய முடியுமா எனக் கேட்டுள்ளார். அதை மறுத்து விட்ட அப்பெண், தான் தற்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலையே திருப்தியளிப்பதாகச் சொல்லியுள்ளார்.

அதைத் தொடர்ந்து அவர் பிரச்சினைகளின் நீண்ட வரிசை ஒன்றை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. குறுகிய நாட்களுக்குள் ஒவ்வொரு துறையாக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். நவம்பர் 16-ம் தேதியன்று அவரது இருக்கையை எடுத்து பொருட்கள் நிர்வகிக்கும் அறைக்குள் போட்டிருக்கிறார்கள். நவம்பர் 17-ம் தேதி (சனிக்கிழமை) நீதிமன்றம் அரை நாள் செயல்படும். அன்றைக்கு அவரின் மகளுடைய பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்காக அரை நாள் விடுப்பு எடுத்துள்ளார்.

அன்றைக்கு மாலை அவரை உடனடியாக நீதிமன்றம் வருமாறு அழைத்துள்ளனர். ஆனால், குழந்தையை அழைத்துச் செல்ல கணவர் வரவில்லை என்பதைச் சொல்லி வர முடியாத நிலையை விளக்கியிருக்கிறார். நவம்பர் 19-ம் தேதி உச்சநீதிமன்றப் பதிவாளர் நடத்தை விதிகளின் கீழ் விளக்க கடிதம் (மெமோ) ஒன்றை அனுப்பியுள்ளார். அதாவது, முறையற்ற விடுமுறை எடுப்பது, பணியிட மாற்றத்துக்கு உட்பட மறுப்பது, உயரதிகாரிகளின் உத்தரவுகளுக்கு கீழ்படிய மறுப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என அதில் கேட்டுள்ளார் உச்சநீதிமன்ற பதிவாளர். இதற்கு 22-ம் தேதி பதிலளித்த அப்பெண், தான் உயரதிகாரிகளின் உத்தரவுகள் எதையும் மீறவில்லை எனவும், பணியிட இருக்கை மாற்றத்திற்காக யாரையும் அணுகவில்லை எனவும், 17-ம் தேதி குழந்தையின் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்காக விடுப்பு கேட்டிருந்ததையும் தனது பதிலில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், அவரது பதில் திருப்தியளிக்கவில்லை என மற்றும் ஒரு மெமோ அனுப்பியுள்ளார் பதிவாளர். மறுநாள் அவரிடம் பணி இடைநீக்க உத்தரவை அளித்துள்ளனர். டிசம்பர் பத்தாம் தேதி துறைவாரியான நடவடிக்கை மற்றும் விசாரணை குறித்த கடிதம் ஒன்று வந்துள்ளது. அதற்கு பதிலளித்த அப்பெண், தன் சார்பில் வாதாட ராஜ்யசபை ஊழியர் லக்‌ஷ்மன் சிங் நெகியை அனுமதிக்க வேண்டியுள்ளார் – இது சட்டப்பூர்வமாக அனுமதிக்கக் கூடியதே என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், அவ்வாறான அனுமதி அவருக்கு கிட்டவில்லை.

இதற்கிடையே டிசம்பர் 17-ம் தேதியன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பு வந்துள்ளது. குறிப்பிட்ட நாளில் விசாரணைக்காக உச்சநீதிமன்ற வளாகம் சென்ற அந்தப் பெண்ணுக்கு திடீரென அச்சத் தாக்குதல் (panic attack) ஏற்பட்டுள்ளது. மயங்கி விழுந்த அவரை அங்கிருந்த ஊழியர்கள் ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், மயக்கடைவதற்கு முன்பே தான் வளாகத்திற்குள் வந்து விட்ட தகவலை அலுவலக உதவியாளரின் மூலம் விசாரணை அதிகாரிக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

படிக்க:
“ராடாரேந்திர மோடி !” – மோடியை வறுத்தெடுத்த வலைத்தளவாசிகள் !
ஒரு விரல் புரட்சியால் ஈரானிடம் எண்ணெய் வாங்க முடியுமா ?

அதற்கு மறுநாள் விசாரணை அதிகாரி கடிதம் ஒன்றை அனுப்புகிறார். அதில் விசாரணைக்கு அவர் வரவில்லை எனவும், குற்றம் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது (ஏப்ரல் 19-ம் தேதி) அந்தப் பெண் அனுப்பிய வாக்குமூலப் பிரமாணத்தில் அவர் மருத்துவமனைக்கு மயங்கிய நிலையில் கொண்டு செல்லப்பட்டது குறித்தும், தனது நிலை அங்கிருந்த ஊழியர்களுக்கு தெரிந்தது குறித்தும், மருத்துவமனையின் பரிசோதனை அறிக்கை போன்றவற்றையும் இணைத்துள்ளார். இறுதியாக டிசம்பர் 21-ம் தேதி அவரது வேலை பறிக்கப்படுகிறது.

திட்டமிடப்பட்ட சதி நோக்குடன் அந்தப் பெண்ணின் வேலை பறிக்கப்பட்டதோடு வேட்டை நாய்களின் வெறி அடங்கவில்லை. அவரது குடும்பத்தினரும் அநியாயமான முறையில் பழிவாங்கப்பட்டுள்ளனர்.

♦ ♦ ♦

டிசம்பர் 28ம் தேதி தில்லி காவல் துறையில் பணிபுரிந்து வந்த அவரது கணவர் மற்றும் சகோதரர் எவ்வித காரணங்களும் சொல்லப்படாமல் பணி இடை நீக்கம் செய்யப்படுகின்றனர். தனிப்பட்ட முறையில் அவர்கள் என்ன காரணம் என்று கேட்ட போது, “மேலிடத்தில் இருந்து வரும் அழுத்தம்” என்று சொல்லப்பட்டுள்ளது. அன்றைக்கே உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் அலுவலகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவரைத் தொடர்பு கொள்ளும் அப்பெண்ணின் கணவர், “தங்கள் வாழ்க்கையே சீரழிந்து போய் விட்டது”, எனக் கதறி ரஞ்சன் கோகோயைச் சந்திக்க உதவுமாறு கேட்டுள்ளார். தனக்கு ஏதும் தெரியாது என்று தொலைபேசியைத் தொடர்பைத் துண்டித்துக் கொண்ட அந்த அதிகாரி, அதன் பின் இவரது எண்ணை பிளாக் செய்துள்ளார்.

டிசம்பர் 28-ம் தேதி பணி இடைநீக்கம் செய்யப்பட்ட அவருக்கு அதற்கான விளக்கம் ஜனவரி 2-ம் தேதிதான் அதிகார்ப்பூர்வமாக மாவட்ட கண்காணிப்பாளரிடம் இருந்து கிடைக்கிறது. அதாவது, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் அலுவலகத்திற்கு தேவையற்ற முறையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதே பணி இடை நீக்கத்திற்கு காரணம் என்றது அந்த விளக்க கடிதம். மீண்டும் ஜனவரி 9-ம் தேதி மற்றுமொரு விளக்க கடிதம் அளிக்கப்படுகிறது; அதில், அப்பெண்ணின் கணவருக்கும் சகோதரருக்கும் உள்ளூர் சூதாட்டக் கும்பலோடு தொடர்பு இருந்ததே பணி இடை நீக்கத்திற்கு காரணம் என்கிறது. மேலும் 2012-ம் ஆண்டு இவர்களுக்கு எதிராக பதியப்பட்ட வழக்கும் ஒரு காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும், அந்த வழக்கு அப்போதே தீர்க்கப்பட்டு விட்டது என்கிறார் அப்பெண்.

ஜனவரி 10-ம் தேதி திலக் மார்க் காவல் நிலைய பொறுப்பதிகாரியிடம் இருந்து அப்பெண்ணின் கணவருக்கு அழைப்பு வருகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டால் எல்லா பிரச்சினையும் தீர்ந்து விடும் என்று அந்த அதிகாரி ஆலோசனை கூறுகிறார். அதற்குத் தயார் என முன்வரும் கணவர், அந்த உரையாடலை பதிவு செய்து வைத்துக் கொள்கிறார். ஜனவரி 11-ம் தேதி மீண்டும் திலக் மார்க் காவல் நிலையத்திற்கு கணவருடன் செல்கிறார் அப்பெண். பொறுப்பதிகாரி சோலங்கி தனது தொலைபேசியின் மூலம் உச்சநீதிமன்றப் பதிவாளர் தீபக் ஜெயினிடம் எப்படி எப்போது தலைமை நீதிபதி வீட்டுக்குச் செல்வது எனக் கேட்கிறார். பின்னர் தனது சொந்தக் காரில் இவர்களை நீதிபதியின் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.

நீதிபதியின் வீட்டிற்கு இவர்கள் சென்றபோது அங்கே ரஞ்சன் கோகோய் இல்லை. மாறாக உச்சநீதிமன்ற பதிவாளர் தீபக் ஜெயினும் கோகோயின் மனைவியும் இருந்துள்ளனர். இவர்களைப் பார்த்த கோகோயின் மனைவி, “மூக்கு தரையில் பட குப்புற விழுந்து மன்னிப்புக் கேள்” எனக் கேட்டிருக்கிறார். அதன்படி மன்னிப்புக் கேட்டுள்ளனர் இருவரும். மீண்டும் அவர்களைக் காவல் நிலையம் அழைத்து வந்த சோலங்கி, இனிமேல் பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்றும் மீண்டும் பழைய வாழ்க்கை கிடைத்து விடும் என்றெல்லாம் உறுதி கூறுகிறார். மேலும், இந்தப் பிரச்சினை குறித்து யாரிடமும் பேசக் கூடாது என்றெல்லாம் அறிவுறுத்துகிறார். இந்த உரையாடலையும் தம்பதியினர் பதிவு செய்து வைத்துள்ளனர்.

ஆனால் சொன்னபடி எந்த வகையிலும் பிரச்சினைகள் ஓய்ந்தபாடில்லை. ஜனவரி 14-ம் தேதி அவருடைய மாற்றுத் திறனாளி சகோதரரின் வேலை பறிக்கப்படுகிறது. தொடர்ந்த நாட்களில் அச்சத் தாக்குதலும், உளவியல் அழுத்தங்களும் அதிகரிக்கின்றன. ஒருகட்டத்தில் அவருடைய ஒரு காது கேட்கும் திறனை இழக்கிறது. கோகோயின் மனைவியை அந்தப் பெண் சந்தித்த பின், சரியாக ஐம்பது நாட்கள் கழித்து (மார்ச் 3-ம் தேதி) தில்லி திலக் மார்க் காவல் நிலையத்தில் அந்தப் பெண்ணின் மீது முதல் தகவல் அறிக்கை ஒன்று பதிவு செய்யப்படுகிறது. அதாவது ஹரியாணாவைச் சேர்ந்த நவீன் குமார் என்பவரிடம் உச்சநீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக லஞ்சம் பெற்று ஏமாற்றியதாகப் புகார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், லஞ்சம் கொடுப்பதே குற்றம் என்ற நிலையில் புகாரளித்தவரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, ராஜஸ்தானில் உள்ள தனது பூர்வீக கிராமத்திற்கு குடும்பத்துடன் சென்றிருந்த அந்தப் பெண்ணை கைது செய்ய ஒரு விசேட போலீசு படை அங்கே விரைகிறது. அந்தப் பெண், அவரது கணவர், வழக்குடன் எந்த தொடர்பும் இல்லாத அவரது சகோதரி என அனைவரையும் விலங்கு பூட்டிக் கைது செய்கிறது போலீசு. இதில் அந்தப் பெண்ணின் காலில் விலங்கைப் பூட்டி அதை போலீசு ஜீப்பின் இருக்கையோடு பிணைத்த நிலையில் அங்கிருந்து தில்லிக்கு அழைத்து வந்துள்ளனர். ஏறக்குறைய ஒரு பயங்கரவாதக் கும்பலைக் கையாள்வதைப் போல் அந்தக் குடும்பத்தை அன்றைக்கு அலைக்கழித்துள்ளது போலீசு.

அதன்பின் திகாரில் அடைக்கப்பட்ட அந்தப் பெண்ணின் மேல் உடல் ரீதியிலும் உளவியல் ரீதியிலும் ஏராளமான சித்திரவதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதற்கிடையே தற்போது கேரவன், தி வயர், லீஃப்லெட் போன்ற பத்திரிகையைச் சேர்ந்த நிருபர்கள் புகாரளித்த நவீன் குமாரைச் சந்தித்து பேசியுள்ளனர். வழக்கு குறித்தும், தனது புகார் குறித்தும் முன்னுக்குப் பின் முரணாக பேசும் நவீன் குமார், இந்த வழக்கை நடத்த வேண்டும் என்பதிலோ, ஏமாற்றப்பட்ட தனக்கு “நீதி” கிடைக்க வேண்டும் என்பதிலோ எந்த முனைப்பும் காட்டவில்லை என்பதை பத்திரிகையாளர்கள் பதிவு செய்துள்ளனர். மிகத் துலக்கமாகத் தெரியும் உண்மை என்னவென்றால், அந்தப் பெண்ணை வேட்டையாடும் ஒரே நோக்கத்திற்காகவே இந்த வழக்கை ஜோடித்துள்ளனர்.

சிறையில் இருந்து பிணையில் வெளி வந்திருக்கும் அந்தப் பெண் இப்போது ஒரு முடிவுக்கு வந்து விட்டார். இழப்பதற்கு எதுவுமே இல்லாத வகையில் அவரிடமிருந்த அனைத்தும் பறிக்கப்பட்டு விட்டன. வேலைகள் பறிக்கப்பட்டு பொருளாதார ரீதியில் நொறுக்கப்பட்டு விட்ட அந்தக் குடும்பத்தின் நிம்மதியும் சீர்குலைக்கப்பட்டு விட்டது. வயர், கேரவன் உள்ளிட்ட பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துள்ள அந்தப் பெண்ணிடம் ”தலித் பின்னணி கொண்ட நீங்கள் சமூகத்தில் ஒரு இடத்தைப் பிடிக்க நிறைய போராடியிருப்பீர்கள், அதைப் பற்றி சொல்லுங்கள்” என கேட்டனர் பத்திரிகையாளர்கள். அதற்கு அந்தப் பெண் அளித்த பதில் –

“சாதியைத் தெரிந்து கொண்ட பின் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். அதன் பின் உங்களுக்கு எந்த முக்கியத்துவமும் கிடைக்காது. உங்கள் வேலையில் அசாதாரணமான சாதனைகள் புரியாவிட்டால் வாழ்க்கையில் எதுவுமே கிடைக்காது. நான் எனது சாதி அடையாளத்தை பின்னுக்குப் போட்டு விட்டு மற்ற “சாதாரண மனிதர்களைப்” போல் நடக்க வேண்டும் என்றே முயற்சித்தேன்.

எனக்கு தனியார் பள்ளியில் கல்வி கிடைக்கவில்லை. எங்களைப் போன்றவர்கள் எங்கே போய் படிக்க முடியுமோ அங்கே படித்தேன் – அரசுப் பள்ளியில்தான் படித்தேன். சில நேரம் இதையெல்லாம் நான் மறைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. நீங்கள் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்பது தெரிந்தால் மற்றவர்கள் உங்களை விட்டு விலகிச் சென்று விடுவார்கள்.”

பேட்டியின் மற்றோர் இடத்தில்….

”நான் ஒரு விளையாட்டு வீராங்கனை. கூடைப் பந்தாட்டம் மற்றும் நீச்சல் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். நான் எதைச் செய்தாலும், அதில் 100 சதவீத திறமையை வெளிப்படுத்துவேன். கோகோயின் அலுவலகத்திலும் அப்படித்தான். எனது 100 சதவீத திறமையை வேலையில் வெளிப்படுத்தினேன்”

சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவிலிருந்து போராடி தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வைத்திருந்தார் அந்தப் பெண். இன்றைக்கு அவையத்தனையும் அதிகாரப் பசி கொண்ட ஓநாய்கள் குதறிப் போட்டு விட்டன. அவரே சொல்வது போல் இனி அவர் இழப்பதற்கு ஒன்றுமே இல்லை; ஆனால் அடைவதற்கு நீதி உள்ளது.

ஆனால் அவருக்கு நீதி கிடைக்குமா?

♦ ♦ ♦

ந்தப் பெண்ணின் வாக்குமூலம் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் அனைவருக்கும், பத்திரிகையாளர்களுக்கும் அனுப்பப்பட்டு அவை பொதுவெளியிலும் வெளியாகின. உடனடியாக தன்னையும் உள்ளடக்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒன்றை ஏற்படுத்திய ரஞ்சன் கோகோய், தன் மீதான புகாரை தானே விசாரித்தார். இது கிராமத்து நாட்டாமைகளின் பஞ்சாயத்துகளில் கூட காணக் கிடைக்காத ஒரு காட்சி. விசாரணையின் முடிவில் தன்னுடைய சொற்ப வங்கிக் கையிருப்பை தனது யோக்கியதாம்சத்துக்கு சாட்சியாக சுட்டிக்காட்டினார் ரஞ்சன் கோகோய். மேலும், பத்திரிகைகள் இந்தக் குற்றச்சாட்டுகளை விவாதிக்கக் கூடாதென்றும், புகாரை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட மற்றுமொரு அமர்வு அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

முதலாவதாக அமைக்கப்பட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வால், மற்றுமொரு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வும், இந்த விவகாரத்தில் தலைமை நீதிபதியை வீழ்த்தும் சதி இருப்பதாக போடப்பட்ட பொதுநல வழக்கை விசாரிக்க மூன்றாவதாக ஒரு அமர்வும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் இரண்டாவதாக அமைக்கப்பட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நீதிபதிகள் பாப்டே, ரமணா மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோரை கொண்டு அமைக்கப்பட்டது. இதில் நீதிபதி ரமணா ரஞ்சன் கோகோய்க்கு நெருக்கமானவர் என்பதையும், பாலியல் புகாரை விசாரிக்கும் கமிட்டியில் பெரும்பான்மையாக ஆண்களே இருப்பதையும் சுட்டிக்காட்டி அந்தப் பெண் ஆட்சேபித்தார். அதையடுத்து ரமணா அந்த அமர்விலிருந்து விலகிக் கொள்ள, அந்த இடத்திற்கு தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் “மனசாட்சி” புகழ் இந்திரா பானர்ஜி நியமிக்கப்படுகிறார்.

இந்த அமர்வு இரண்டுமுறை அந்தப் பெண்ணை அழைத்து விசாரித்துள்ளது. முதல் நாளன்று நடந்த விவகாரங்களை அப்படியே சொல்லுமாறு அவரிடம் கேட்டுவிட்டு இந்த வழக்கின் சாதகபாதகங்கள், என்னென்ன சாத்தியங்கள் உள்ளன என்பதைப் பற்றியெல்லாம் “எடுத்து” எடுத்து சொல்லியிருக்கிறார்கள். இரண்டாம் நாள் அந்தப் பெண்ணை மிரட்டும் விதமாக கறாராக பேசியிருக்கின்றனர். இந்த விசாரணையின் போது அந்தப் பெண் தன்னுடன் ஒரு வழக்குரைஞரை வைத்துக் கொள்ளவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விவாதிக்கப்படும் விசயங்களில் நிறைய சட்ட மொழியில் இருப்பதால் ஒரு வழக்குரைஞர் தேவை என்பதை முதல் நாளில் இருந்தே அந்தப் பெண் வலியுறுத்தி உள்ளார். மேலும், கடந்த சில மாதங்களாக நடந்த கொடூரங்களின் விளைவாக ஏற்பட்ட மன அழுத்தத்தில் தனது ஒரு காது கேட்கும் திறனை முற்றிலுமாக இழந்து விட்டதால் தன்னுடன் ஒரு வழக்கறிஞர் இருந்தால்தான் நீதிபதிகள் கேட்கும் கேள்விகளைப் புரிந்து கொண்டு பதில் அளிக்க முடியும் என்றும் முன்வைத்துள்ளார்.

அதே போல் விசாரணையின் விவரங்கள், விசாரணையின் போது தனது தரப்பில் சொல்லப்பட்டவைகளை பதிவு செய்து அளிக்க வேண்டும் என்றும், ரஞ்சன் கோகோய் தன்னிடம் தொலைபேசியில் பேசிய விவரங்களை தொலைத்தொடர்புத் துறையிடம் இருந்து பெற்று அதையும் சாட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அந்தப் பெண் கோரியுள்ளார். இவையனைத்தும் நியாயமான கோரிக்கைகள். எனினும் இவையனைத்தையும் மேன்மை தங்கிய நீதிபதிகள் நிராகரித்துள்ளனர். வேறு வழியின்றி மூன்றாம் விசாரணையின் போது தனக்கு இந்த அமர்வின் மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி விசாரணையில் இருந்து விலகியுள்ளார் அந்தப் பெண்.

அதன் பின் ரஞ்சன் கோகோயையும் விசாரிப்பதாக ஒரு நாடகத்தை நடத்தி விட்டு “அவர் மேல் எந்தக் குற்றமும் இல்லை” என்பதை அந்த அமர்வு ஒருதலைபட்சமான முறையில் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் அந்தப் பெண் தன்னந்தனியாக ஒரு தரப்பாக நிற்க அவருக்கு எதிராக உச்சநீதிமன்ற நீதிபதிகள், தலைமை நீதிபதி, உச்சநீதிமன்ற பதிவாளர், காவல் துறை என அரசின் உறுப்புகள் அனைத்தும் ஒரே தரப்பாக கரம் கோர்த்து நின்றன.

பாதிக்கப்பட்ட, காது கேளாத ஒரு பெண்ணுக்கு வழக்கறிஞரை அமர்த்தும் உரிமையைக் கூட மறுத்து விட்டு ஒரு தலைப்பட்சமாக நடந்த விசாரணையையும், இந்த தீர்ப்பையும் கண்டித்து ஜனநாயகத்தில் இன்னும் நம்பிக்கை கொண்டவர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர் – அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்தது போலீசு.

அக்டோபர் 10 மற்றும் 11-ம் தேதிகளில் ரஞ்சன் கோகோயின் வீட்டில் உள்ள அலுவலக அறையின் பூட்டிய கதவுகளுக்குப் பின்னே நடந்தவைகளுக்கு சாட்சிகள் இல்லை. ஆனால், அந்தக் கதவு திறந்த பின் அதற்கு வெளியே நடந்த அனைத்திற்கும் சந்தர்ப்ப சாட்சியங்கள் உள்ளன. அந்தப் பெண் ஓட ஓட விரட்டப்பட்டுள்ளார்; அவரது குடும்பமே குறிவைத்து தாக்கப்பட்டிருக்கிறது. அவரது குற்றச்சாட்டை குற்றவாளிகளே முன்னின்று விசாரித்து தங்களுக்கே சாதகமான தீர்ப்பை எழுதிக் கொண்டனர். இவையனைத்தும் பட்டப்பகல் வெளிச்சத்தில் நடந்துள்ளது.

படிக்க:
இந்தியாவின் சிறந்த விஞ்ஞானி : செல்லூர் ராஜுவா ? மோடியா ? கருத்துக் கணிப்பு
மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகள் நினைவை நெஞ்சிலேந்துவோம் ! தூத்துக்குடி மக்கள் அறைகூவல் !

இப்படி வேட்டையாடப்படுவதற்கு அந்தப் பெண் செய்த குற்றம் என்ன? ஜனநாயகத்தின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட “தூணின்” முன் அடிபணிந்து போக மறுத்ததைத் தவிர அந்தப் பெண் யாதொரு குற்றத்தையும் செய்திருக்கவில்லை. எனினும் அவர் ஓட ஓட விரட்டப்பட்டுள்ளார். அவர் கடும் உழைப்பின் மூலம் உருவாக்கிய அனைத்தும் அழித்து நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. யார் தரப்பில் நியாயம் உள்ளது, யார் தரப்பில் உண்மை உள்ளது என்பதற்கு இந்த சந்தர்ப்ப சாட்சியங்களே போதுமானவை.

இயேசுவின் புகழ்பெற்ற பிரசங்கம் ஒன்றில் இவ்வாறாகச் சொல்வார் – ”உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்? அது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது, அதை வெளியே கொட்டிப்போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்” என்றார்.

அனைத்தையும் இழந்து விட்டு நீதியும் மறுக்கப்பட்டு அழுது கொண்டிருக்கும் அந்தப் பெண்ணின் கண்ணீர்  இந்திய நீதித்துறை சாரமற்றுப் போய் விட்டதை நமக்கு உணர்த்துகின்றது.

♦ ♦ ♦

னநாயகத்துக்கு ஆபத்து என்று பத்திரிகையாளர்களை அழைத்துக் குரல் கொடுத்த 4 நீதிபதிகளில் கோகோயும் ஒருவர். இதற்கு முந்தைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை எதிர்த்துத்தான் அவர் குரல் கொடுத்தார்.

போலி மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பான வழக்கில், லஞ்சம் வாங்கிக்கொடுத்த இடைத்தரகரான ஒரு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை கையும் களவுமாகப் பிடித்து விட்டது சிபிஐ. மருத்துவக் கல்லூரி தீர்ப்பை வழங்கியவரை தீபக் மிஸ்ரா. குற்றச்சாட்டே அவருக்கு எதிராகத்தான் என்பது தெளிவாகத் தெரிந்த நிலையிலும் தனக்கு எதிரான வழக்கை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்று அவரே தீர்மானித்ததுதான் அன்றைய பிரச்சினை. இந்த ஊழலில் தீபக் மிஸ்ரா மோடி அரசிடம் சிக்கிக்கொண்டிருந்த நிலையில்தான், லோயா மரணம் தொடர்பான வழக்கிற்கு உச்ச நீதிமன்றம் சமாதி கட்டியது. அவரை நாடாளுமன்றக் கண்டனத்திலிருந்து காப்பாற்றி விட்டது மோடி அரசு.

அதற்கு முந்தைய தலைமை நீதிபதி தத்து ஜெயலலிதாவுக்கு ஒரு வரியில் பிணை வழங்கிய உத்தமர். அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருந்தார் என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கட்ஜு ஆதாரங்களுடன் குற்றம் சாட்டினார். எதுவும் நடக்கவில்லை.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளில் மூன்றில் ஒரு பங்கினர் மேல் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடுத்து போடப்பட்ட வழக்கு பல ஆண்டுகளாக அங்கே தூங்குகிறது.

நாலும் மூணும் எட்டு என்று ஜெயலலிதாவுக்கு தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதி குமாரசாமி மட்டுமல்ல, எண்ணற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் புகார்கள் உள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களும், ஊழல் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், தொழில் முறை கிரிமினல்களும் மபியா கும்பல்களும் நீதியை விலை பேசி வாங்குவது நாடறிந்த ரகசியம்.

உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியவர்களும், அதனை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்களும்தான் துன்புறுத்தப் பட்டிருக்கின்றனரேயன்றி, எந்த நீதிபதியும் தண்டிக்கப்பட்டதில்லை.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலுமாக மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஒப்புதலின்றி உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்கவியலாது என்ற சட்டப் பாதுகாப்பு, நீதித்துறையின் சுதந்திரத்தைப் பேணும் பொருட்டும், ஜனநாயகத்தின் மற்ற இரு தூண்களான நாடாளுமன்றமும், நிர்வாக எந்திரமும் அத்து மீறும்போது, அரசமைப்பு சட்டத்தையும் மக்கள் உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கத்துக்காகத்தான் வழங்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் அரசமைப்பு சட்டத்துக்கும் மக்கள் உரிமைகளுக்கும் எதிராகவும், கார்ப்பரேட் கொள்ளைகளுக்கும் அரச பயங்கரவாதத்துக்கும் ஆதரவாகவும்தான் எண்ணற்ற தீர்ப்புகளை நீதிமன்றங்கள் வழங்கியிருக்கின்றன. 20 லட்சம் பழங்குடி மக்களை வெளியேற்றும் தீர்ப்பு, நர்மதா அணைக்கட்டு தீர்ப்பு, கூடங்குளம் தீர்ப்பு, ஆதார் தீர்ப்பு, நீட் தீர்ப்பு, அப்சல் குரு – எழுவர் விடுதலை தீர்ப்புகள், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு ஆதரவான தீர்ப்பு, பாபர் மசூதி நிலத்தை அபகரிக்கும் தீர்ப்பு, தில்லை கோயிலை தீட்சிதருக்கு வழங்கும் தீர்ப்பு, அனைத்து சாதியினரையும் அரச்சகராக்க மறுக்கும் தீர்ப்பு, பார்ப்பனிய ஆதிக்கத்தை நியாயப்படுத்தும் தீர்ப்புகள் என்று இவற்றைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

மக்களுக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் வழங்கப்படும் தீர்ப்புகளை அரசுகள் அமல்படுத்துவதே இல்லை. அவற்றை  நீதிமன்றங்கள் கண்டு கொள்வதும் இல்லை. ஐகோர்ட் அதிரடி, சுப்ரீம் கோர்ட் சாட்டையடி என்ற மாலைப் பத்திரிகை சுவரொட்டிகளையும் நீதிமன்ற தீர்ப்புகளைத் தொடர்ந்து நடைபெறும் தொலைக்காட்சி விவாதங்களையும் நம்புகிறவர்கள் பாமரத்தனமான மூடர்கள் என்றே சொல்ல வேண்டும்.

ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் ஒருவரையொருவர் பிளாக்மெயில் செய்து தங்களது ஊழல்களையும் முறைகேடுகளையும் மறைத்துக் கொள்வதற்குத்தான் தாங்கள் பெற்றிருக்கும் சிறப்புரிமைகளைப் பயன்படுத்துகிறார்களேயன்றி மக்கள் நலனுக்காக அல்ல.

கோகோய் விவகாரத்தில் அந்த பரிதாபத்துக்குரிய பெண்ணை வேட்டையாடுவதில் போலீசு நீதிபதிக்குத் துணை நின்றிருப்பதும், “நீதித்துறையின் மாண்பைக் காப்பாற்ற” மோடி அரசு கோகோயை ஆதரிப்பதும், ஆகப்பெரும்பான்மையான ஊடகங்கள் பிரச்சினையை அடக்கி வாசிப்பதும் மேற்சொன்ன உண்மையைத்தான் நிரூபிக்கின்றன.

இந்த அரசுக்கட்டமைப்பின் உறுப்புகள் தமது நோக்கங்களாகவும், தாங்கள் பெற்றிருக்கும் அதிகாரத்துக்கான நியாயங்களாகவும் கூறி வந்த அனைத்தும் அம்பலமாகிவிட்டன. இந்த அரசுக்கட்டமைப்பு முழுவதும் திவாலாகி நிலைகுலைந்து தோற்றுவிட்டது.

இந்த சூழல் இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதம். அரசமைப்பின் உறுப்புகளில் சங்க பரிவாரத்தினரை நிரப்புவதன் மூலம் அவற்றைக் காவிமயமாக்குவது ஒரு வழி. அதை எதிர்த்து சில கட்சிகளும் அறிவுத்துறையினரும்  குரலாவது எழுப்புகிறார்கள்.

ஊழல்-கிரிமினல்மயமாகியிருக்கும் நீதிபதிகளையும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும், அமைச்சர்களையும், போலீசு அதிகாரிகளையும் தங்கள் கையாட்களாக மாற்றிக்கொள்வதன் மூலம் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வது இன்னொரு வழி. இந்தக் கட்டமைப்பின் அங்கமாக இருக்கும் கட்சிகள் எதுவும் இதை எதிர்த்துக் குரல் எழுப்ப இயலாது. எல்லாக் கட்சிகளும் கோகோய் விவகாரத்தில் மவுனம் சாதிப்பது இதற்கு இன்னொரு சான்று.

இந்த அரசுக் கட்டமைவுக்கு வெளியே, நிறுவப்படும் மக்கள் அதிகாரம்தான் தீர்வு – இந்தக் கட்டமைப்புக்குள் தீர்வு தேட இயலாது என்று கூறுவதை காரிய சாத்தியமற்றது என்றும், இதற்கு உள்ளேதான் தீர்வைத் தேடவேண்டும் என்றும்  கூறுபவர்கள் இந்தப் பெண்ணுக்குப் பதில் சொல்லட்டும்.

“உங்களிடம் எனக்கு நீதி கிடைக்காது” என்று மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடம் முகத்தில் அறைந்தாற்போல கூறிவிட்டு நீதிமன்ற அறையை விட்டு வெளியே வந்திருக்கிறார் அந்த தலித் பெண்.

நீதி வேண்டுபவர்கள் இந்த அரசுக் கட்டமைப்புக்கு வெளியே அதனைத் தேடுங்கள் என்பதுதான் இந்தப் பெண்ணின் கதையிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய நீதி.

சாக்கியன்