மெக் டொனால்ட் நிறுவனத்தின் மீது கடந்த 21.05.2019 அன்று புதியதாக 25 சட்டரீதியான மற்றும் ஒழுங்குமுறை மீறல் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தின் மீது குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில், பணியிடங்களில் நடைபெறும் பாலியல் தொந்தரவுகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, புகார் அளிக்கும் ஊழியர்களைப் பழிவாங்குவது ஆகியவை அடங்கும்.

அமெரிக்க குடிமைச் சுதந்திரத்திற்கான சங்கம் (American Civil Liberties Union (ACLU)), “Fight for $15” என்ற தொழிலாளர் அமைப்பு மற்றும் பெண்களுக்கான சட்ட உதவி மையம் நடத்தும் ”Time’s Up Fund” ஆகிய அமைப்புகள்தான் மெக் டொனல்ட்ஸ் மீது இந்த வழக்கைப் போட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகளில் குறிப்பாக பணியிடங்களில் விருப்பமின்றித் தொடுதல், ஆபாசமாக நடந்து கொள்ளுதல், ஆபாசமாக பேசுதல் ஆகியவை அடக்கம்.

அமெரிக்காவின் சிகாகோ நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மெக்-டொனால்ட் நிறுவனம், அமெரிக்காவெங்கும் சுமார் 14,000–க்கும் அதிகமான இடங்களில் உள்ளது. சுமார் 8,50,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

இவற்றில் 90%-க்கும் அதிகமானவை மெக்டொனால்ட் நிறுவனத்தின் தனியுரிமை பெற்ற கிளைக் கடைகளாகும் (Franchised). இத்தகைய இடங்களில் பணிபுரியும் ஊழியர்கள் நடந்துகொள்வதற்கு தம்மைப் பொறுப்பாக்கக் கூடாது என்ற வாதத்தையே நெடுநாட்களாகக் கூறி வருகிறது மெக்-டொனால்ட்ஸ் நிறுவனம்.  அதனால் அவற்றில் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைக்கோ, அல்லது அவர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதற்கோ, நாங்கள் பொறுப்பல்ல என்கிறது மெக்டொனால்ட் நிர்வாகம்.

மெக்டொனால்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான ஸ்டீவ் ஈஸ்டர்ப்ரூக் இதுகுறித்துக் கூறுகையில், “எங்கள் நிறுவனம் பணியாளர்கள் மீதான தொந்தரவு குறித்த தெளிவான கொள்கைகள் வகுத்துள்ளது; பெரும்பாலான தனியுரிமை கடைகளை (Franchised) நடத்துபவர்களுக்கும் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது; பணியாற்றும் ஊழியர்களுக்கான பயிற்சிகள் மற்றும் புகார்கள் அளிப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.

படிக்க:
ஊழியர்களுக்கு மெக்டொனால்ட்ஸின் கொலைவெறி பட்ஜெட் !
♦ அரியானாவில் திருட்டுத்தனமாக பயிரிடப்படும் பி.டி. கத்திரிக்காய் !

அதுமட்டுமல்லாது தொழிலாளர் கோரிக்கைகளை ஆதரிக்கும் அமெரிக்காவின் இலினொய் மாகண செனட்டர் டாமி டக்வொர்த் மற்றும் பிரபல ‘டாப் செஃப்’ நிகழ்ச்சி தொகுப்பாளரான பத்மா லக்‌ஷ்மி ஆகியோருக்கு ஈஸ்டர்புரூக் கடந்த வாரத்தில் எழுதியுள்ள கடிதத்தில், “மெக்டொனல்ட் நிறுவனம் ஒரு விசயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறது. பணியிடத்தில் நம்பிக்கையுடனும் – பாதுகாப்பாகவும் உணர்வதையும், ஊழியர்கள் மதிப்பு மரியாதையுடன் நடத்தப்படுவதையும் நாங்கள் தொடர்ச்சியான உத்திரவாதப்படுத்துகிறோம்” என கூறியுள்ளார்.

பதிவு செய்யப்பட்ட 25 வழக்குகளில், இரண்டு வழக்குகள் ஏற்கெனவே ஊழியர்களால் பதிவு செய்யப்பட்டவை மற்றும் ஒரு வழக்கு, “சரிசமமான வேலைவாய்ப்பு ஆணையத்தின்” ( Equal Employment Opportunity Commission (EEOC) ) மூலம் பதிவு செய்யப்பட்டது ஆகும்.

கடந்த செப்டம்பர், 2018 -ல் நடைபெற்ற போராட்டம்.

கடந்த மூன்று வருடங்களில் மட்டும் மெக்-டொனால்ட் நிறுவனமானது இது போன்று 50 வழக்குகளை எதிர்கொண்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் முக்கியமான 10 நகரங்களில் மெக்டொனால்ட் நிறுவனத்தில் நிகழும் பாலியல் அத்துமீறலைக் கண்டித்து, தொழிலாளர்கள் ஒரு முழுநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தியிருக்கின்றனர்.

சான்ஃபோர்ட், ஃபுளோரிடாவில் மொக்டொனால்ட் நிறுவனத்தில் ஒரு மணி நேரத்துக்கு 9.06 டாலர் என்ற ஊதியத்தில் பணியாற்றியவர் ஜமிலியா ஃபேர்லி (Jamelia Fairley). தனித்து வாழும் தாயான இவர், தன் சக ஊழியரால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளார். பின்னர் இது குறித்து இவர் EEOC-வில் புகார் செய்துள்ளார்.

இந்தப் புகாருக்குப் பிறகு தொல்லை கொடுத்த அந்த நபர் வேலைநீக்கம் செய்யப்படாமல் இடமாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளார். அதே நேரம் ஒரு வாரத்திற்கு 25 மணிநேரம் என இவருக்கு வழங்கப்பட்ட பணியானது 7 மணிநேரமாக குறைக்கப்பட்டிருக்கிறது.

“வாரம் 67 டாலர் வைத்துக்கொண்டு, என் இரண்டுவயது குழந்தையை வளர்க்க முடியவில்லை” என்கிறார் ஜமிலியா.

இது குறித்து பெண்களுக்கான சட்ட உதவி மையம் நடத்தும் ”Time’s Up fund” அமைப்பின் இயக்குநர் ஷரின் தேஜ்னி (Sharyn Tejani) கூறுகையில்,  “பணியிடங்கள் என்பது வாழ்க்கையை வாழ்வதற்காக, பாலியல் அத்துமீறல்களைப் பொறுத்துக் கொள்ளும் இடமாக இருக்கக் கூடாது. மெக்டொனால்ட் நிறுவனத்திற்கான இறுதிக்காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது” எனக் கூறினார்.

இந்தியா – வங்கதேசம் போன்ற வளரும் நாடுகளாகட்டும் அல்லது அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளாகட்டும், ஆணாதிக்கமும் ஒடுக்குமுறை சிந்தனையும் பெண்களுக்கான பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது…

அருள்


நன்றி:  தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க