சாதி பற்றி ஏராளமான ஆய்வுகள் வந்துள்ளன. இன்னும் வந்து கொண்டேயிருக்கின்றன. அனைத்திந்திய அளவிலும் தமிழ்மண்ணிலும் அதன் தோற்றுவாய் குறித்து இன்னும் நுண்ணிய ஆய்வுகள் தேவைப்ப்டுகின்றன. இச்சிறுநூல் அத்திசையில் ஒரு முக்கியமான முன்னெடுப்பை நிகழ்த்துகிறது. தமிழ்ச்சமூகத்தில் இயங்கும் சாதியத்தின் அகக்கட்டுமானத்தை இந்நூலில் மானுடவியல் அறிஞர் தோழர் பக்தவச்சல பாரதி கட்டுடைத்துப் பார்க்கிறார். சாதியற்ற ‘குடிச்சமூகமாக’ இருந்து சாதிக்கு அருகாமையில் வந்து நின்று பின் செங்குத்துப் படிநிலைகளோடு கூடிய சாதியாக மாறிய தமிழ்ச்சமூகத்தின் அகவரலாற்றை இந்நூல் தரவுகளோடு விளக்குகிறது.

பிராமணியக் கோட்பாடு மட்டுமன்றி, பொருளியல் கட்டமைப்பு எவ்விதம் சாதியத்தின் தோற்றத்துக்கு ஒரு முக்கிய காரணியாக விளங்கியது என்பதையும் இந்நூல் விவாதிக்கிறது.

அண்ணல் அம்பேத்கார், ஹோகார்ட், துய்மோன் ஆகிய மூவர் முன் வைத்த சாதியின் தோற்றம் குறித்த கோட்பாடுகளை ஒப்பீட்டாய்வு செய்து தமிழ்ச்சமூகத்தில் சாதி தோன்றி வலுப்பட்ட வரலாற்றை அக மற்றும் புறச்சான்றுகளோடு பேசுகிற இந்நூல் பல புதிய திறப்புகளைக் கொண்டுள்ளது. இன்னும் புதிய விவாதங்களுக்குச் சாளரங்களைத் திறந்து விடுகிறது. (ச. தமிழ்ச்செல்வன் எழுதியுள்ள அறிமுகப் பகுதியிலிருந்து…)

சாதி என்பது இந்தியத் துணைக் கண்டத்தில் வேதகாலம் தொடங்கி வளர்ந்துவிட்ட ஒரு தனித்துவமான சமூக வடிவம். சாதியமைப்பின் எளிமையான வடிவம் ஆப்பிரிக்கா, பிஜி, ஜப்பான், தொங்கா, சமோவா, தென் பசிபித் தீவுகள் முதலான பகுதிகளில் உள்ளது. இலங்கையில் சற்று அடர்த்தியான வடிவமாக உள்ளது. அதன் சிக்கலான வடிவம் (complex form) இந்தியாவில் மட்டுமே உள்ளது. இந்தச் சமூக முறையில் நன்மைகளைவிடத் தீமைகள் மிகுதி. அகமணம், படிநிலை, மூடிய தன்மை , தீட்டு, தீண்டாமை, ஒதுக்குதல், ஒடுக்குதல் முதலானவை இதன் கொடூரமான பண்புகளாகும்.

தமிழ்ச் சூழலில் சாதியத்தின் வன்மத்தை ஒழிப்பதற்கு நீண்டகாலக் கருத்தியல் முன்னெடுப்புகளும் செயல்திட்டங்களும் முன்வைக்கப்பட்டன. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் முன்னெடுத்த திட்டங்கள் மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தாலும், முழுமையான சமூக மாற்றத்தைக் காணவில்லை. ஆனால், சாதியம் புதிய புதிய வடிங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சாதியற்ற தமிழராய் வாழ்வது இன்னும் சாத்தியப்படவில்லை. உடனடியான எதிர்காலத்திலும் அத்தகைய சூழல் தென்படவில்லை. அதனால் இன்னும் தொடர்ச்சியான முன்னெடுப்புகள் அவசியமாகின்றன.

… அனைத்திந்திய அளவிலும் தமிழ்ச் சூழலிலும் சாதியத்தின் படிமலர்ச்சியை மேலும் நுண்ணாய்வு செய்ய வேண்டும். அதன் தோற்றுவாய் ஆராயப்பட வேண்டும். அடுத்தடுத்த வளர்ச்சி நிலைகள் பற்றிய தெளிவும் தேவை. சாதி பற்றி ஏராளமாக எழுதப்பட்டுள்ளன. எண்ணற்ற தளங்களில் விவாதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அதன் அகவயக் கட்டுமானத்தைக் கட்டுடைக்க வேண்டியுள்ளது. அணுவைப் பிளந்ததால் அதன் உட்கூறுகளைக் காண முடிந்தது. அது போலச் சாதியத்தின் அணுவை நாம் அகவயமாக நின்று கட்டுடைக்க வேண்டும். தளப்பார்வையில் (synchronic) கிடைத்துள்ள கட்டுமானத்தைக் காலப்பார்வையோடும் (diachronic), தொடர்நிலை உறவில் (Syntagmatic relationship) கண்டவற்றைச் செங்குத்து உறவோடும் (paradigmatic Relationship) இணைத்துக் கட்டுடைக்க வேண்டியுள்ளது.

இந்தக் குறுநூலின் நோக்கம் மேற்கூறிய எல்லாவற்றையும் பேசி விடுவதன்று. இவையெல்லாம் விரிவான களங்கள். ஒரு புள்ளியில் நின்று மிகச் சுருக்கமாக விவாதிப்பதே இந்த நூலின் நோக்கமாகும். ஆதியில் தமிழ்ச்சமூகம் ‘குடி’ சமூகமாக இருந்தது என்றும், அது பாண் சமூகத்தை (பாணர்கள் சமூகம்) ஒரு துணைச் சமூக அமைப்பாக (para – Social system) ஏற்றுக் கொண்டிருந்தது என்றும், அது வீரயுகக் காலத்திற்கான தேவைகளை நிறைவு செய்தது என்றும் இந்த நூல் விவாதிக்கிறது. (நூலின் அறிமுக பகுதியிலிருந்து…)

ஆதியில் ஆரியர்கள் இந்தியாவிற்குள் இரண்டு அலைகளாக வந்தடைந்தனர் என்ற கோட்பாடு (two wave theory) ஏற்றுக்கொள்ளத்தக்கதாய் உள்ளது. ஒரு அலை யில் வந்தவர்கள் இத்துணைக் கண்டத்தின் பூர்வகுடிகளுடன் முரண்பட்ட அணுகுமுறையில் உறவாடினார்கள். இன்னொரு அலையாக வந்தவர்கள் இணக்கமான அணுகுமுறையுடன் சேர்ந்து வாழ முற்பட்டனர். மேற்கு வங்க பிராமணர்கள் உள்ளிட்ட இன்னும் சில குழுவினர் இந்த வகையைச் சேர்ந்தவர்கள். இன்றைக்கும் ஒப்பிட்டுப் பார்த்தால் மேற்கு வங்கப் பிராமணர்கள் திருமணத்திலேயே மீன் குழம்பு பரிமாறுகிறார்கள்; புலால் உண்கின்றனர். தென்னிந்தியச் சமூகத்தாரின் பழக்க வழக்கங்களோடு நெருங்கிக் காணப்படுகின்றனர்.

ஆரியர்கள் ஒரு கட்டத்தில் இங்குள்ள மண்ணின் மைந்தர்களால் அச்சத்திற்கு ஆளாகியிருந்தார்கள். இன ரீதி யாக அவர்கள் வேறுபட்டிருந்ததால், அந்த வேறுபாட்டால் பாதிக்கப்படாமல் இருக்க சடங்கியல் பணிகளைச் செய்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் தங்களின் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளவும் நன்கு தகவமையத் தொடங்கினார்கள் (ஹால் 1986: 62-3), இதன் பொருட்டு அவர்கள் செய்து வந்த சடங்கியல் கலை (குறிப்பாக யாக, வேள்விச் சடங்குகள்) தனித்துவமானதாக இருந்ததால் அது அவர்களுக்குக் கைகொடுத்தது; அரசர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது.

தமிழ் வேந்தர்களும் சங்க காலத்திலேயே பிராமணர்களை ஆதரிக்கத் தொடங்கினார்கள் பிராமணர்களின் வேள்வி, யாகங்கள் மீது கவரப்பட்டார்கள். பிந்தையகாலத் தமிழ் வேந்தர்கள் அவர்களை அரசுமுறை பூசகர்களாகவே நியமித்துக் கொண்டார்கள். இதன் மூலம் அரசர்களுக்கு நெருக்கமானவர்களாக மாறியதுடன் சதுர்வேதி மங்கலங்கள், அக்ரஹாரங்கள், தேவதான மானியங்கள், பிரம்மதேயங்கள் எனும் வகைகளில் நிலத்தைத் தானமாகப் பெற்றார்கள். தமக்குக் கிடைத்த அந்நிலங்களில் பயிரிடுவதற்கு வேளாண் குடியினரை நியமித்தார்கள். பிராமணர்களுக்குக் குடியாக ஆனவர்களே பின்னாளில் ‘குடியானவர்’ என்றாகினர்.

தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும் பற்றி ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள் நொபொரு கராஷிமாவும், எ. சுப்பராயலுவும் (2017: iv) ஒரு கருத்தை வலியுறுத்துகின்றனர். சாதி உருவாக்கத்துக்கு மனுதர்ம பிராமணியக் கோட்பாட்டை ஒரு முக்கிய காரணியாகக் குறிப்பிட்டாலும், அடிப்படையில் பொருளாதாரமே ஒரு முக்கிய காரணியாக வரலாறு காட்டும் நிலவுடைமை ஒருவரின் சமூக, நிலைப்பாட்டையும் அதிகாரத்தையும் நிர்ணயித்தது என்கின்றனர்.

படிக்க:
மருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் !
இந்து சாதி அமைப்புதான் முதலாளித்துவத்தின் தாய் – அருந்ததி ராய்

சாதியமைப்பின் இன்னொரு பரிமாணத்தையும் நாம் பொருளியல் கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும். சாதியமைப்பு அடிப்படையில் தொழிற் புரட்சிக்கு முந்தையது (pre-industrial). சந்தைப் பொருளாதார முறை தோன்றுவதற்கு முந்தையது (pre market 5 NSTEIn), பணப் பொருளாதாரம் தோன்றுவதற்கு முந்தையது (Pre market System) தொழில், சந்தை , பணம் ஏதும் இல்லாத அந்தக் காலகட்டத்தில் சமூக வாழ்வு முழுமை பெறுவதற்குப் பல்வேறு குடிகளும் தங்கள் ஊழியங்களையும் தாம் கொண்டிருந்த பொருட்களையும் (goods and services) மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். பூசகர்கள் சடங்குத் தொழிலை மற்றவர்களுக்குப் பகிர்ந்தார்கள். துணி வெளுப்போர் மற்றவர்களுக்குச் சலவை ஊழியத்தை அளித்தார்கள். அம்பட்டர் சவர வேலையைச் செய்தார்கள். விவசாயிகள் தம்மிடம் இருந்த தானியங்களையும் உணவுப் பொருட்களையும் மற்றவர்களுக்குக் கொடுத்தார்கள்.

இவ்வாறு குடிகள் தங்கள் ஊழியங்களையும் பொருட்களையும் பரிமாறிக் கொண்ட குடி ஊழிய முறை’ (jajmani system) பணம் தோன்றுவதற்கு முன்னர் இருந்தது. இவ்வாறே சந்தைப் பொருளாதார முறை தோன்றுவதற்கு முன்னர் குடி ஊழிய முறையே பொருளியல் தேவைகளை நிறைவு செய்தது. மொத்தமாகச் சொல்லப்போனால் தொழில்துறை தோன்றுவதற்கு முந்தைய, பணப் பொருளாதாரம் தோன்றுவதற்கு முந்தைய நிலையில் சமூகத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருந்த சமூக வடிவமாகக் குடி ஊழிய முறை இருந்தது. இதன் சமூக வடிவமே சாதிமுறை. (நூலிலிருந்து பக். 67-68)

நூல் : சாதியற்ற தமிழர் சாதியத் தமிழர்
ஆசிரியர் : பக்தவச்சல பாரதி

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி எண்: 044 – 2433 2424.
மின்னஞ்சல் : thamizhbooks@gmail.com

பக்கங்கள்: 72
விலை: ரூ 60.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

இணையத்தில் வாங்க : puthinambooks | periyarbooks | commonfolks

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க