NGK : செல்வராகவன் – சூர்யா கூட்டணி Hangover-ல் ஒரு அரசியல் படம் !

பார்வையாளர்கள் அனைவரும் முட்டாள்கள் என்று உறுதியாக நம்பும் ஒரு இயக்குநர்தான் இத்தகைய அபத்தங்களை ‘அழகென்று’ எடுக்க முடியும்.

2

டப்பாடிகள் ஆளும் காலத்தில் கமலஹாசன்களுக்கு அரசியலில் குதிக்கும் தைரியம் வந்திருக்கிறது அல்லவா! போலவே செல்வராகவன்களுக்கும் அரசியல் படம் பண்ண ஒரு மூடு வந்திருக்கிறது.

பேண்ட் டீ-ஷர்ட்டில் தோள்பை சகிதம் விவசாயம் பார்க்கிறார் சூர்யா. ஒரு மழைக்காலத்தில் களத்துமேட்டில் பணியாற்றிவிட்டு கக்கூஸ் குழாய் வழியாக வீட்டு மாடிக்கு வருகிறார். என்ன இருந்தாலும் குடும்பம் என்று ஒன்று இருக்கிறதே, இப்படியா நேரம் காலம் பார்க்காமல் விவசாயம் பார்ப்பது என்று தாய் கோபத்துடன் அமர்ந்திருக்கிறார். தாரமோ காதல் பொங்க காத்திருக்கிறார். தாயின் முன்னாலேயே இருவரும் குச்சி ஐஸை மாறி மாறி சப்பி தமது அன்னியோன்யத்தை காட்டுகிறார்கள். தமிழ் சினிமாவில் இத்தகைய காவியக் காதல் காட்சியை இதற்கு முன் எந்தக் கொம்பனும் காட்டியதில்லை என்பது மட்டும் சத்தியம்.

தாமதமாக வந்ததை தாயிடம் விளக்கும் போதுதான் தெரிகிறது சூர்யா ஒரு இயற்கை விவசாயியாம். அதாவது ஆர்கானிக் விவசாயமாம். எம் டெக் படித்து விட்டு அதிக ஊதிய வேலையை தியாகம் செய்து இயற்கை விவசாயம் செய்கிறாராம் அவர். காவிரியில் நீரில்லை, கஜா புயலால் வாழ்வில்லை, வெள்ளாமைக்கு விலையில்லை என்று அல்லும் பகலும் விவசாயத்தோடு மல்லுக் கட்டும் விவசாயிகளை இதற்கு மேல் பரிகாசம் செய்யும் தைரியம் செல்வராகவனிடம் இருக்கவே செய்கிறது.

படுக்கையில் கணவனின் மண்வாசனையை மோந்து பார்க்கிறாராம் சாய் பல்லவி. உச்சி வெயிலில் கருத்துச் சுருங்கிய முதுகில் தேங்காய் எண்ணெய் போட்டு தேய்த்து வலியை குறைக்கும் விவசாயிகள் நாட்டில் இப்படி ஒரு ரொமான்ஸ் ஃபேன்டசியாக காட்டுகிறார் இயக்குநர். சூர்யாவைப் பார்த்து அவரது ஊரில் – திருவில்லிபுத்தூராம் – ஐநூறு இளைஞர்கள் இயற்கை விவசாயம் பார்க்கிறார்களாம். அனேகமாக பசுமை விகடன் வியாபாரத்திற்கு இந்தப் படம் ஒரு நல்ல விளம்பரப் படமாக இருக்கும்.

இயற்கை விவசாயமோ இல்லை பூச்சி கொல்லி மருந்து – உரம் போடும் செயற்கை விவசாயமோ அனைத்தும் குடும்ப வாரிசுகள் பட்டணத்தில் பணியாற்றி அனுப்பும் பணத்தில் அப்படி இப்படி என்று ஓடிக் கொண்டிருக்கிறது. அதிலும் ஆயிரெத்தெட்டு பிரச்சினைகள். விவசாயிகளின் பிரச்சினைகளை உள்ளது உள்ளபடி காட்டாவிட்டாலும் அதை இப்படியா நல்லதொரு ஹார்லிக்ஸ் குடும்பமாக காட்டுவது? மாட்டுக்கால் சூப்பில் மால்டோவா கலந்து குடித்தால் எவ்வளவு கொடுமையாக இருக்கும்?

படிக்க:
♦ சூப்பர் டீலக்ஸ் : அரதப் பழசான அத்வைதம் | திரை விமர்சனம்
♦ சிறப்புக் கட்டுரை : விகடனுக்கு மட்டும் விவசாயத்தில் இலாபம் ஏன் ?

ஐ.டி துறையிலும் இன்னபிற சேவைத் துறையிலும் ஐந்து, ஆறு இலக்க சம்பளம் வாங்கும் பிரிவினரிடம் சில நிலத்தரகர்கள் உசிலம்பட்டி அருகே பண்ணை விவசாயம், ஒரு குடும்பத்தை அங்கே பணியில் அமர்த்தி தென்னை, பலா, மா, நெல், புல் என்று வளர்த்தால் வருடத்திற்கு இத்தனை இலட்சம் நிச்சயம் என்று ஆர்ட்பேப்பரில் அடித்த மாதிரிகளைக் காட்டுகிறார்கள். இந்த ஆர்ட் பேப்பரில் ஏற்கனவே நிலம் வாங்கிய முன்னோடிகள் தான் கெட்ட மந்தி வனத்தைக் கெடுத்த கதையாக பக்கத்து இருக்கைக்காரர்களையும் கெடுத்து மார்கெட் செய்கிறார்கள். இறுதியில் ஐ.டி துறையினர் பலர் சைடு பிசினசாக விவசாயம் பார்க்கிறார்கள். வருடம் ஒரு முறையோ இல்லை இரு முறையோ அந்த பண்ணை விவசாயத்தை நேரில் பார்த்து இரவில் அருகாமை லாட்ஜில் கனவு கண்டு விட்டு சென்னை திரும்புவார்கள் இந்த ‘விவசாயிகள்’.

அதைத்தான் செல்வராகவன் கஷ்டப்பட்டு கதை விவாதத்தில் கண்டு கொண்டு இரக்கமே இல்லாமல் நம்மிடமும் சொல்கிறார். பனங்கருப்பட்டியை ஆர்கானிக் பொருள் என்று ஒரு ஆர்கானிக் கடையில் வாங்கி நாம் மட்டும் சுத்த பத்தமாக சுகாதரமாக வாழ்கிறோம் என்று நம்பும் நடுத்தர வர்க்கம் இருக்கும் வரை இந்தக் கதைகள் எடுபடாமலா போய்விடும். சரி, எந்த ஊரில் பனைமரத்திற்கு ஊரம் போடுகிறார்கள்?

இயற்கை விவசாயத்தோடு ஊர் சமூகநலப் பணிகளையும் பார்க்கிறாராம் சூர்யா. இந்தக் காட்சிகளெல்லாம் படத்துக்கு முன்னர் வரும் எடப்பாடி அரசின் விளம்பரம் போலவும், இல்லை அந்தக் காலத்து விசுப் படங்கள் போலவும் பார்வையாளர்களைக் குதறுகிறது. இதுவே படமாக இருப்பதால் “சீக்கிரம் படத்தைப் போடுப்பா” என்று ஆபரேட்டரிடம் சொல்ல முடியவில்லை என்பது ஒரு சோகம்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இறந்து போன அரசு ஊழியர்களின் வாரிசுகள் வேலை வேண்டி விண்ணப்பங்களோடு காத்திருக்கிறார்கள். ஆர்கானிக் விவசாயம் பார்க்கும் சூர்யாவுக்கு இந்த காத்திருத்தலின் வலியோ அதன் பின்னணியோ தெரியவில்லை. அந்த அளவுக்கு பொது அறிவு அவரிடம் வற்றிப் போய் இருக்கிறது. எம்.எல்.ஏ -வின் உதவியாளரும் சூர்யாவின் நண்பருமான குமார் இதெல்லாம் ஒரு மேட்டரா என்று ஒரு கவுன்சிலரின் உதவியோடு வேலை வாங்கிக் கொடுக்கிறார். அப்போதுதான் சூர்யாவிடம் “ஒரு கவுன்சிலருக்கே இவ்வளவு பவர் என்றால்…….” என்றொரு ஒரு பல்ப் எரிகிறது.

பிறகு அவர் எம்.எல்.ஏ இளவரசனிடம் வேலைக்கு சேர்ந்து கட்சியில் இணைகிறார். இந்தக் கட்சி தி.மு.க போலவும், ஆளும் கட்சி அதிமுக போலவும் உணர்த்தப்படுகிறது. எம்.எல்.ஏ இளவரசன் சூர்யாவை எடுபிடி வேலைகளைச் செய்யச் சொல்கிறார். கதையின் நாயகனும், எம்.டெக் இளைஞருமான சூர்யா ஆரம்பத்தில் கையறு நிலையில் இருந்தாலும் விரைவிலேயே இதெல்லாம் செஞ்சால்தால் அரசியலில் ஒரு ஆளாக முடியும் என்று அமாவாசை போல சர்ரென்று ஏணியில் ஏறுகிறார்.

இதைத் தூக்கலாக காட்ட வேண்டும் என்பதற்காக எம்.எல்.ஏ-வின் கழிப்பறையை மாநகராட்சி கழிப்பறையை விட படு மோசமாகக் காட்டுகிறார்கள். எந்த எம்.எல்.ஏ இப்படி ஒரு மோசமான கழிப்பறையில் கழிக்கிறார் என்று தெரியவில்லை. பிறகு கட்சித் தலைவர், தலைவரது ஐ.டி -விங் தலைவர் வானதி ஆகியோரிடம் அறிமுகமாகிறார் சூர்யா. அவரது செல்வாக்கு அதிகரிப்பது கண்டு எதிர்க்கட்சி தலைவராக பொன்வண்ணன் மட்டுமல்ல ஆளும் கட்சி முதல்வரும் திகைக்கிறார்கள். அவரைக் கொல்ல முயற்சிக்கிறார்கள். இறுதியில் அனைத்தையும் வென்று அடுத்து வரும் தேர்தலில் 90 சீட்டுக்களை வென்ற சூர்யா அதற்கடுத்த தேர்தலில் முதல்வராக ஆகியிருப்பார். அதை வேறு பாகம் 2 என்று எடுத்துக் கொல்வார்களா தெரியவில்லை.

படிக்க:
♦ “The Hour of Lynching” – ரக்பர்கான் படுகொலையை மறக்கக் கூடாது !
♦ கொடி திரைவிமர்சனம் : கன்டெய்னர் காலத்தில் ஒரு கவுன்சிலர் கடி !

இடையில் ஐ.டி விங் வானதியோடு ஃபாரினில் ஒரு டூயட்டும் போடுகிறார் சூர்யா. மண் வாசனையை மோந்து பார்த்த மனைவி சாய்பல்லவி இந்த சென்ட் வாசனையை வைத்து ஒரு படு சோகம் கொள்கிறார். இந்த நேரங்களில் சூர்யா எப்படி சமாளிக்கிறார் என்பதை சிவாஜி கணேசன் கூட தத்ரூபமாக நடித்திருக்க முடியாது. அப்படி ஒரு நடிப்பு. ஐ.டி விங்கிற்கும், ஆர்கானிக் விவசாயத்திற்கும் உறவு ஏற்பட்டதா இல்லையா என்பதை நாம் கண்டு பிடிக்க முடியாத அளவு இந்தக் காட்சிகளை ஒரு கனவான் போல கொண்டு செல்கிறார் இயக்குநர். ஒரு கனவுப் பாட்டு வேண்டும் அதில் வானதி குட்டைப் பாவாடையுடன் ஆட வேண்டும் என்பதற்காக யோசித்திருப்பார்கள் போலும். போகட்டும்.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, ரத்தம், வன்முறை இன்னபிற டெம்பிளேட்டுக்களோடு 20 வருடங்களுக்கு முன் வந்த தெலுங்குப்படம் கூட செல்வராகவன் படத்தை விட நிச்சயம் மேம்பட்டதாக இருக்கும். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் இன்னபிற செல்வராகவன் படங்களில் வரும் கதாபாத்திரங்களின் அதீத உணர்ச்சிகள், அக்கப்போர்கள் இங்கும் படுத்தி எடுக்கின்றன. சூர்யா முறைப்பது, பேசுவது, உறுமுவது, உள்ளொன்று வைத்து புறமொன்று நடப்பது என்று காட்சிக்கு காட்சி குழப்புகிறார். பார்வையாளர்கள் அனைவரும் முட்டாள்கள் என்று உறுதியாக நம்பும் ஒரு இயக்குநர்தான் இத்தகைய அபத்தங்களை ‘அழகென்று’ எடுக்க முடியும்.

கட்சிகளின் குறுக்கு வழிமுறைகளில் போனால்தான் ஆளாக முடியும் என்று எதிர்மறை பாத்திரமாய் சூர்யா மாறுகிறாரா, மாறவில்லையா என்னதான் சொல்ல வருகிறார் என்று ஏகப்பட்ட குழப்பத்தோடு பார்வையாளர்கள் அதிர்ச்சியில் அதாவது இதெல்லாம் ஒரு கதையா இல்லை வதையா என்று உறைந்து போகிறார்கள். எந்தக் காட்சிக்கும் ஒரு உச்சு, ஒரு கைதட்டல், ஒரு ஆர்ப்பாட்டம் எதுவுமில்லை.

இந்தப் படத்திற்கு தோழர் ஒருவரோடு டிக்கெட் எடுக்கும் போது தியேட்டர் ஊழியர் பால்கனியா, முதல் வகுப்பா என்று கேட்ட போது – இரண்டின் வேறு பாடு வெறும் பத்து ரூபாய்தான் – முதல் வகுப்பே கொடுங்கள் பால்கனி சென்றால் ஜனங்களைப் பார்க்க முடியாது என்றார் அந்தத் தோழர். உண்மைதான், படம் பார்க்க வந்தோர் முப்பதைத் தாண்டாது. இவ்வளவிற்கும் படம் வெளியாகி நான்கைந்து நாட்கள் கூட ஆகவில்லை.

அரசியல் கட்சிகள் – அரசியல்வாதிகள் பற்றி அந்தக்கால ஆனந்த விகடன் ஜோக்குகளையே ஒரு ஹாரர் பாணியில் கொடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி அச்சுறுத்துகிறது இந்தப்படம். எந்தக் காட்சியிலும், பாத்திரத்திலும், கதையோட்டத்திலும் நம்பகத்தன்மையோ இல்லை நியாயப்படுத்தலோ எந்த எழவுமில்லை. விடலைப் பருவ சேட்டைகளை படமெடுக்கத் தெரிந்த செல்வராகவன் எடப்பாடி ஆள்வதால் இப்படி ஒரு அரசியல் படுமெடுக்க தனக்குத் தெரியும் என்று நம்பியிருக்கிறார். அந்த நம்புதலுக்கு சூர்யாவாடு சேர்த்து முதலீடு செய்ய அம்பானியின் ரிலையன்ஸ் முடிவு செய்திருக்கிறது. படத்தின் பட்ஜெட் 75 கோடி ரூபாயாம். ஒரு மாபெரும்  கழிப்பறை செட், ஒரு மாபெரும் சந்தை செட், ஒரு மாபெரும் பொதுக்கூட்ட செட் போன்றவைகளைக் கழித்தால் கூட இந்தக் கருமாந்திரத்திற்கு 75 கோடி ரூபாயும், அந்த கருமாந்திரத்தைக் காண நாம் நூறு ரூபாய் செலவழித்ததையும் மன்னிக்கவே முடியாது.

ஹாலிவுட்டின் “ஹேங்கோவர்” (Hangover) படங்களைப் பார்த்திருப்பீர்கள். கும்பலாய் சரக்கடித்து விட்டால் நடக்கும் முக்திநிலை முட்டாள்தனங்கள்தான் அந்த வார்த்தையின் பொருள். ஆங்கிலப் படத்தில் அதைக் காமடியாகச் சொல்லியிருப்பார்கள். என்ஜிகே படத்தில் அது ‘சீரியஸாக’ வருகிறது. சீரியஸான விசயம் கும்பல் குடி மனநிலையில் உருவானால் அது எந்த உணர்ச்சிகளுக்கும் அப்பாற்பட்ட ‘விடுதலை’ நிலை அடையும். “நந்த கோபால் குமரன்” படத்தின் படைப்பாளிகள் கதை விவாதத்தில் இப்படி ஹேங்ஓவராக திரைக்கதையை கிண்டி கிழங்கெடுத்திருக்கிறார்கள் போலும். படைப்பாளிகள் என்று பன்மையில் சொன்னாலும் படையின் தளபதி இயக்குநர் செல்வராகவன்தான்.

வெறுத்துப் போய் படம் பார்க்க போகலாம் என்றால் அதற்கு கூட இந்தப் படம் தகுதியில்லை. மீறிச் சென்றால் ‘யாம் பெற்ற இன்பத்தை நீங்களும் பெறலாம்’, வாழ்த்துக்கள்!


மதன்