அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 21

காலமும் மனிதனும் – பாகம் 2
அ. அனிக்கின்
அ.அனிக்கின்

பெட்டி தனக்கு எதிராக அரசவையிலும் அயர்லாந்தின் ஆளுநர்களோடும் நீதிமன்றங்களோடும் சதிச்செயல்களில் ஈடுபட்ட எதிரிகளைப் பற்றியே அதிகமாக எரிச்சலடைந்தார். அவர் தமது கடைசி இருபது வருடங்களில் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களில் கசப்புமிக்க குற்றச்சாட்டுகளையும் எரிச்சலான ஏமாற்றங்களையும் அதிகமாக எழுதியிருக்கிறார்.

சில சமயங்களில் அவர் சின்னப் புத்தி உடையவராக, அற்பமான விஷயங்களைப் பற்றிப் புகார் செய்பவராக, வசவுகளைப் பொழிபவராக இருக்கிறார். ஆனால் சீக்கிரமே அவருடைய இயல்பான நம்பிக்கையும் நகைச்சுவையும் அவரை ஆட்கொள்கிறது. அவர் உடனே திட்டங்களைத் தயாரிக்கிறார், அறிக்கைகளைச் சமர்ப்பிக்கிறார். மறுபடியும் தோல்வியைத் தழுவுகிறார்.

1660-ம் வருடத்திலிருந்தே லண்டனில் பாதி நேரம் அயர்லாந்தில் பாதி நேரம் என்ற வகையில் அவருடைய வாழ்க்கை கழிந்தது. 1685-ம் வருடத்தில்தான் அவர் தன்னுடைய குடும்பத்தோடு லண்டனுக்குப் போனார். அவருடைய உடைமைகளையும் – இவற்றில் ஐம்பத்து மூன்று பெட்டிகளில் அவர் வைத்திருந்த ஆவணங்கள் மிக முக்கியமானவை – தன்னோடு பத்திரமாகக் கொண்டு போனார். அந்த வருடத்தில் இரண்டாம் சார்ல்ஸ் இறந்து விட்டதால் இரண்டாம் ஜேம்ஸ் அரசரானார். புதிய அரசர் பெட்டியோடு சுமுகமாக இருப்பது போலத் தோன்றியது; வயோதிகரான பெட்டி புது வேகத்தோடு தயாரித்துக் கொடுத்த திட்டங்களை அவர் கருணையோடு பெற்றுக் கொண்டார். ஆனால் இது வெறும் மாயத்தோற்றம் என்பது சீக்கிரமே தெளிவாகியது.

இரண்டாம் ஜேம்ஸ்

1687-ம் வருடத்தில் பெட்டி காலில் அதிகமான வலியினால் பாதிக்கப்பட்டார். பிறகு உள்ளே கட்டி ஏற்பட்டு அழுகிப் போயிருப்பது தெரிந்தது. இதன் காரணமாக அந்த வருடம் டிசம்பர் மாதத்தில் அவர் மரணமடைந்தார். அவருடைய சொந்த ஊராகிய ரோம்ஸியில் அவர் உடல் புதைக்கப்பட்டது .

பெட்டி தன்னுடைய நெருங்கிய நண்பரான சர் இராபர்ட் சவுத்வெல்லுக்கு எழுதிய கடைசிக் கடிதங்கள் அதிகமாக அக்கறை காட்டக் கூடியனவாக இருக்கின்றன. அவர் தன்னுடைய மரணத்துக்கு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பு இவற்றை எழுதியிருந்தார். இக்கடிதங்களில் சுயநலம், அற்பமான விவகாரங்கள், தனிப்பட்ட ஆசைகள் ஆகியவற்றால் பாதிக்கப்படாத பெட்டியின் நம்பிக்கைகளைக் காண்கிறோம். பெட்டி தன் குடும்ப விவகாரங்களை கவனிக்காமல் வாழ்க்கைக்குச் சிறிது கூட சம்பந்தமில்லாதவற்றில் நேரத்தைக் கழிப்பதை சவுத்வெல் லேசாகக் கடிந்து கொண்டார் (இந்தச் சமயத்தில் பெட்டி பாதி குருடாகிப் போன நோயாளியாக இருந்தார். ஆனால் சமீபத்தில் நியூட்டன் எழுதிய இயற்கைத் தத்துவஞானத்தின் கணித அடிப்படைகள் என்ற புத்தகத்தைப் படித்துக் காட்டச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தார்).

இந்தக் கடிதங்களிலும் சர் வில்லியமின் இயல்பான தன்மையைப் பார்க்கிறோம். தன்னுடைய மூத்த மகன் சார்ல்ஸ் அந்தப் புத்தகத்தைப் புரிந்து கொண்டால் 200 பவுன் கொடுப்பதாகச் சொல்கிறார். அவர் தன்னுடைய குழந்தைகளை அதிகமாக நேசித்தார்; அவர்கள் எப்படி வளர வேண்டுமென்பதில் அதிகமான அக்கறை காட்டினார். அவர்களைப் பற்றி பெட்டி பின் வருமாறு எழுதினார்: ”என் மகளுக்கு அதிகமான செல்வத்தைக் கொடுத்து விட்டுப் போக வேண்டுமென்பதற்காக நான் வியர்வை சிந்தப் பாடுபட மாட்டேன்; சோம்பேறித் தேனீக்களுக்கு நான் தேனாக இருக்கப் போவதில்லை. என் மகன், அவன் அதிகமாக நேசிக்கின்ற மனைவியின் சொத்துக்களுக்குள்ளாகவே வாழ்க்கை நடத்த வேண்டுமென்று விரும்புகிறேன்.” வாழ்க்கையின் இலட்சியத்தைப் பற்றிப் பின்வருமாறு எழுதுகிறார்: ”… இப்படிப் பலனில்லாத உழைப்பில் நான் தொடர்ந்து ஈடுபடுவது ஏன் என்று நீங்கள் கேட்கலாம்… இவை எனக்கு ஆனந்தத்தைத் தருகின்ற பணிகள்; பகுத்தறிவைப் பயன்படுத்தி நன்கு ஆராய்ச்சி செய்வது மிக உயர்வானது; அது தேவதைகளுக் குரியது …” (1)

சர் வில்லியம் பெட்டியின் சமகாலத்தவர்களிடம் அவர் மூன்று வகையான பெயர் பெற்றிருந்தார். முதலாவதாக, புலமைமிக்க அறிஞர், எழுத்தாளர் என்றும்; இரண்டாவதாக, சோர்வில்லாத திட்டம் தயாரிக்கிறவர், கற்பனைக் காட்சியாளர் என்றும்; மூன்றாவதாக, கபடமான சூழ்ச்சிக்காரர், பேராசைக்காரர், தன்னுடைய நோக்கம் நிறைவேறுவதற்காக எந்த வழியையும் பின்பற்றக் கூடியவர் என்றும் அவரை வர்ணித்தார்கள். மூன்றாவதாகக் குறிப்பிடப்பட்ட பெயர், அயர்லாந்தில் நிலங்களை அளந்த காலத்திலிருந்து அவர் மரணமடைகிற வரை அவரைப் பின் தொடர்ந்தது. அதற்கு ஆதாரமில்லை என்றும் சொல்ல முடியாது.

படிக்க:
முதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்
♦ பிரான்ஸ் : ஆரம்பப் பள்ளியில் சேர்க்கப்பட்ட ஆடுகள் !

பெட்டியின் வாழ்க்கையின் பின்பாதியை சொத்துக்களுக்கு அதிபதியாகவும் சாமர்த்தியமான வியாபாரியாகவும் இருந்த ஒருவரின் வாழ்க்கை வரலாறு என்ற முறையில் இப்பொழுது பார்ப்போம்.

1656 – 57ம் வருடங்கள் அவருடைய வாழ்க்கையின் திருப்புமுனையாகும். கீழ் மட்டத்தில் அறிவுஜீவியாக இருந்த ஒருவர் லாப வேட்டைக்காரராக, வீர சாகஸக்காரராக மாறி, கடைசியில் செல்வம் படைத்த நிலவுடைமையாளரானார். இந்த மாற்றம் லண்டனிலும் ஆக்ஸ்போர்டிலும் விஞ்ஞானிகளான அவருடைய நண்பர்களுக்கு மகிழ்ச்சி இல்லாத வகையில் ஆச்சரியத்தைக் கொடுத்தது.

அவர்களுடைய எதிர்ப்பு பெட்டியின் நிதானத்தைக் குலைத்தது; அவருக்கு வேதனையைக் கொடுத்தது. பாயில் என்ற விஞ்ஞானியின் கருத்துக்களை அவர் அதிகமாக மதித்தபடியால், தயவு செய்து அவசரப்பட்டு முடிவு செய்ய வேண்டாம், என்ன நடந்தது என்பதை நேரில் விளக்கிக் கூறுவதற்கு வாய்ப்புக் கொடுங்கள் என்று அவருக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொண்டிருந்தார். பிற்காலத்தில் இந்த மனஸ்தாபம் ஓரளவுக்கு மாறிவிட்டதென்றாலும் அதன் சுவடுகள் இருந்தன.

மறுவருகைக்குப் பிறகு தான் அபகரித்த நிலங்களைத் தன்னிடமே வைத்துக் கொள்வதற்காகப் பெட்டி மிகவும் தீவிரமாக முயற்சி செய்ய நேரிட்டது. முந்திய நிலவுடைமையாளர்களில் சிலர் புது அரசாங்கத்திடம் செல்வாக்குடையவர்களாக இருந்ததனால் நிலங்களைத் திரும்பப் பெறுவதற்கு எல்லா முயற்சிகளையும் செய்தார்கள். பெட்டி இந்தப் போராட்டத்தில் ஆத்திரத்தோடு தீவிரமாக ஈடுபட்டார்; தமது நேரத்தையும் திறமையையும் இதில் அதிகமாகச் செலவிட்டார். பல பகுதிகளிலும் சிதறிக்கிடந்த தம்முடைய நிலங்களைத் தக்க வைப்பதில் அவர் மொத்தத்தில் வெற்றியடைந்தார்; ஆனால் வழக்குகளுக்கு முடிவேயில்லாமல் அவர் பெருந்துன்பத்துக்கு ஆளானார்.

இவை மட்டுமல்ல. பெட்டி தன்னுடைய கோட்பாடுகளுக்கு மாறாகவும் நண்பர்களின் ஆலோசனைகளுக்கு விரோதமாகவும் ஒரு புதிய காரியத்தில் ஈடுபட்டார். அவர் “வரி வேட்டைக்காரர்கள்” கோஷ்டியில் சேர்ந்தார். இவர்கள் பெரும் பணக்காரர்கள், அரசாங்கத்திடம் பணத்தைக் கொடுத்து வரி விதிக்கும் உரிமையை விலைக்கு வாங்கி, அதைக் கொண்டு அதிகமான வரி விதித்துப் பணத்தை அறுவடை செய்பவர்கள். பெட்டி தம்முடைய புத்தகங்களில் இந்த முறையானது தொழில் முயற்சியையும் உற்பத்தியையும் நசுக்கி விடுகிறது என்று கண்டித்து எழுதியிருக்கிறார்; இதில் ஈடுபடுபவர்களை கொள்ளைக்காரர்கள், இரத்தத்தை உறிஞ்சுபவர்கள் என்று பகிரங்கமாகத் திட்டியிருக்கிறார்.

எனினும் அவர் இப்பொழுது அவர்களோடு கூட்டுச் சேர்ந்தார், தன் பங்குத் தொகையையும் கட்டினார்! வெகு சீக்கிரத்தில் அவருக்கும் அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது: அவரால் கொடுத்த பணத்தைத் திரும்ப வாங்க முடியவில்லை. எனவே வழக்குத் தொடர்ந்தார். அவர் இதுவரை ஈடுபட்டிருந்த வழக்குகளில் இதுதான் அதிகக் கசப்பானது, பொருளற்றது. இந்த வழக்கில் அவர் நன்றாகச் சிக்கிக் கொண்ட பொழுது நண்பர்கள் அவருக்காக வருத்தப்பட்டார்கள்; விரோதிகள் பழி வாங்கிவிட்டோம் என்று ஆனந்தப்பட்டார்கள்.

1677-ம் வருடத்தில் நீதிமன்றத்தை அவமதித்ததாக அவர் குறைவான காலத்துக்கு சிறையிலடைக்கப்பட்டார். அவர் அரசாங்கத்தில் பெரிய பதவிக்காக நெடுங்காலமாகப் பாடுபட்டு வந்திருக்கிறார். இனி மேல் அத்தகைய பதவி கிடைப்பதற்கான கடைசி வாய்ப்புக்களையும் இத்தகைய பழிகளினால் அவர் இழந்தார். அவருடைய திட்டங்களை நிறைவேற்றுவதற்காக அவர் விரும்பிய பதவி மறுக்கப்பட்டது.

சொத்துக்களின் அதிபதி சொத்துக்களுக்கு அடிமையானார், பெட்டி தம்முடைய கடிதங்களில் ஒன்றில் காற்றுக்கு எதிர்த் திசையில் படகைச் செலுத்தி ஓய்ந்து போன ஒரு அடிமைக்குத் தன்னை ஒப்பிடுகிறார். பணம், வாரம், வரி வேட்டை என்ற மோசமான உலகத்தில் தன்னுடைய ஆற்றலையும் சக்தியையும் செலவிட்டு ஓய்ந்து போன ஒரு திறமைசாலியின் சோகக்கதை – முதலாளித்துவ சோகக்கதை இது.

அவருடைய சமகாலத்தவர்கள் இந்த சோகக்கதையை உணர்ந்தார்கள் – ஆனால் அதைப் பற்றி வேறு வகையான முடிவுக்கு வந்தார்கள் என்பது இயற்கையே. பெட்டியின் மகத்தான திறமைகளுக்கும் அரசியலிலும் அரசாங்கத்திலும் அவருக்குக் கிடைத்த குறைவான வெற்றிகளுக்கும் உள்ள வேறுபாட்டை நினைத்து ஆச்சரியமடைந்தார்கள். அரசு விவகாரங்களைப் பற்றி இவரைக் காட்டிலும் சிறப்பான அறிவுடைய வேறொரு நபரைக் கற்பனை செய்யக் கூட முடியாது என்று ஜான் எவெலின் எழுதினார். ”நாட்டின் உற்பத்திகளை மேற்பார்வையிடுவதற்கும் வர்த்தகத்தைப் பெருக்குவதற்கும் உலகம் பூராவிலும் இவருக்குச் சமமாக யாரும் கிடையாது. நான் அரசனாக இருந்தால், இவரைக் குறைந்தபட்சம் என்னுடைய இரண்டாவது அமைச்சராகவாவது வைத்துக் கொள்வேன்.”

படிக்க:
மூலதனத்தின் தத்துவஞானம் : பாட்டாளி வர்க்கம் ஒரு வலிமையான தத்துவ ஆயுதத்தைப் பெறுகிறது !
♦ இதோ இவள்தான் பாவெல் விலாசவின் தாய் !

எனினும் கடற்படைத் தலைமையகத்தில் ஒரு சாதாரணமான பதவிக்கு மேல் வேறு எதுவும் பெட்டிக்குக் கிடைக்கவில்லை …..

தன்னுடைய மூளையையும் சக்தியையும் கசக்கிப் பிழிந்த அன்றாட வேலைகளின் அற்பமான தன்மையைப் பெட்டி ஒருபோதும் பார்க்காதிருக்கவில்லை. அவர் சில சமயங்களில் தன்னையே கிண்டல் செய்து சிரித்துக் கொண்டார். ஆனால் அந்த நச்சுச் சுழலை விட்டு வெளியே வருவதற்கு அவரால் முடியவில்லை. அவருடைய எழுத்துக்களில் இருக்கும் மணிச்சுருக்கம் பாராட்டுக்குரியது; மேலும் அது அவருடைய இயல்பைச் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது. அதே சமயத்தில் அவர் மற்ற விஷயங்களில் அதிகமான கவனம் செலுத்தியதன் விளைவு அது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

1682-ம் வருடத்தில், ஆங்கில நாணயங்களை மறுபடியும் அச்சுப் பதிப்பது பற்றி ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் சம்பந்தமாக ஒரு சிறு பிரசுரத்தை பணத்தைப் பற்றி சில தகவல்கள் என்ற தலைப்பில் வெளியிட்டார். அதில் முப்பத்திரண்டு கேள்விகளும் அவற்றுக்குச் சுருக்கமான பதில்களும் அடங்கியிருக்கின்றன. பணத்தைப் பற்றிய விஞ்ஞானத் தத்துவத்தின் இரும்புச் சட்டம், இதனைத் தாங்கி நிற்கும் அமைப்பு என்று இந்தப் பிரசுரத்தைச் சொல்லலாம். அதன் விரிவுகள், விவரங்கள், விளக்கங்கள், பல்வேறு பகுதிகளுக்கும் பிரச்சினைகளுக்கும் இடையே பிரிவுகள் ஆகிய மற்ற பொருள்களைச் சேர்த்துப் பூசிக் கட்டிடத்தை அமைக்க வேண்டும்.

இந்தக் குறிப்புகள் ஹாலிபாக்ஸ் பிரபுவுக்காக எழுதப்பட்டவை; பெட்டியின் வாழ்நாளில் இவை வெளியிடப்படவில்லை. இந்த அடக்கமான குறிப்புகளைப் பற்றி மார்க்ஸ், ”தட்டுத் தடங்கலின்றி எழுதி முடிக்கப்பட்ட புத்தகம்… ஒரே கல்லில் செதுக்கப்பட்டது என்று கூடச் சொல்லலாம். அவருடைய மற்ற புத்தகங்களில் காணப்படுகின்ற வாணிப ஊக்கக் கொள்கையின் கடைசிச் சுவடுகள் கூட, இப்புத்தகத்தில் முழுமையாக மறைந்து விட்டன. உருவத்திலும் உள்ளடக்கத்திலும் இந்தச் சிறிய நூல் ஒரு உண்மையான கலைப் பொருள்”…(2) என்று குறிப்பிட்டார்.

பெட்டி உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தைத் தன்னுடைய கருத்து நிலையாக ஏற்றுக் கொண்டு, பணத்தை எக்காலத்துக்கும் உரிய சம்மதிப்பு என்ற பணியை நிறைவேற்றுகின்ற விசேஷமான பண்டமாகக் கருதுகிறார். எல்லாப் பண்டங்களையும் போல அதன் மதிப்பும் உழைப்பினால் உருவாக்கப்படுகிறது; விலையுயர்ந்த உலோகங்களை வெட்டி எடுப்பதில் செலவழிக்கப்படுகின்ற உழைப்பின் அளவைக் கொண்டு அதன் பரிவர்த்தனை மதிப்பு அளவுரீதியாக நிர்ணயிக்கப்படுகிறது.

செலாவணிக்குத் தேவையான பணத்தின் அளவு பண வர்த்தகத்தின் மொத்தத் தொகையினால் – அதாவது கடைசி நிலையில் கைவரப்பெற்ற பண்டங்களின் அளவு, அவற்றின் விலைகள், பல்வேறு நடவடிக்கைகளிலும் பண அளவுகளின் செலாவணி வேகவீதம் (செலாவணியின் வேகம்) ஆகியவற்றால் – நிர்ணயிக்கப்படுகிறது. முழு மதிப்புடைய பணத்தின் ஒரு பகுதிக்கு வங்கியினால் வெளியிடப்படும் காகிதப் பணத்தை உபயோகப்படுத்தலாம்.

இதற்குப் பின் வந்த இரண்டு நூற்றாண்டுகளிலும் பணம், கடன் ஆகியவற்றைப் பற்றிய தத்துவம் இந்தப் பிரசுரத்திலும் (வேறு சில புத்தகங்களிலும்) பெட்டி எழுதிய கருத்துக்களின் சுற்றுவட்டத்துக்குள்ளாகவே பெருமளவுக்கு வளர்ச்சியடைந்தது அல்லது இந்தக் கருத்துக்களோடு நடத்தப்பட்ட வாதங்களில் வளர்ச்சியடைந்தது.

பெட்டி இந்தச் சிறிய பிரசுரத்தில் தம் கருத்துக்களை மணிச்சுருக்கமாகவும், திருத்தமுறாத நிலையிலும் எழுதியிருந்தார். எனினும் அவர் தத்துவச் சிந்தனையில் எத்தகைய ஆற்றலைக் கொண்டிருந்தார் என்பதை இந்தப் பிரசுரம் எடுத்துக்காட்டுகிறது. அவர் அதிகமாகச் சாதித்திருக்க முடியும்; அதில் ஒரு சிறு பகுதியைத்தான் அவர் செய்து முடித்தார். இப்படிப் பல பேர்களைப் பற்றிச் சொல்ல முடியும் என்றாலும், பெட்டியைப் பொறுத்தவரையில் இது குறிப்பான பொருத்தத்தையும் முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கிறது.

 

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1) E. Strauss, Sir William Petty. London, 1954, pp. 168-170.
(2) பி. எங்கெல்ஸ், டூரிங்குக்கு மறுப்பு, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1979, பக்கங்கள் 402-403 பார்க்க.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 198

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க