உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 3

ரு வாரமாக இரண்டாம் வார்டில் நான்கு பேர் இருந்தார்கள். ஆனால், ஒரு நாள் க்ளாவ்தியா மிஹாய்லவ்னா கவலையில் ஆழ்ந்தவளாக இரண்டு மருத்துவமனை ஊழியர்களுடன் வந்து இன்னொரு நோயாளிக்கு இடம் கொடுப்பதற்காக அவர்கள் கொஞ்சம் நகர்ந்து கொள்ள வேண்டும் என்று அறிவித்தாள். ஸ்தெபான் இவானவிச்சின் கட்டில் ஜன்னலின் அருகே நகர்த்தப்பட்டது. இதனால் அவர் பெருமகிழ்ச்சி அடைந்தார். குக்கூஷ்கின், ஸ்தெபான் இவானவிச்சின் பக்கத்தில் மூலைக்கு மாற்றப்பட்டான். இவ்வாறு காலியான இடத்தில் ஒரு கட்டில் போடப்பட்டது.

இந்தச் சமயத்தில் ஐந்தாவது நோயாளி கொண்டு வரப்பட்டான்.

அவன் மிகவும் கனமான ஆள் போலும். ஏனெனில் ஊழியர்களின் அடிவைப்புக்கு இசைய வெகுவாக வளைந்து தாழ்ந்தவாறு ஸ்டிரெச்சர் கிரீச்சிட்டது. தலையணை மீது தன் வசமற்ற நிலையில் புரண்டது மழுங்கச் சிரைக்கப்பட்ட உருண்டைத் தலை. மெழுகு பூசப்பட்டது போன்று மஞ்சள் பாரித்த உப்பிய முகம் உயிரற்றுக் காட்சி தந்தது. பருத்த வெளிறிய உதடுகளில் வேதனை உறைந்து நின்றது.

புதியவன் உணர்விழந்து இருந்ததுபோலத் தோன்றியது. ஆனால், ஸ்டிரெச்சர் தரையில் வைக்கப்பட்டதுமே நோயாளி கண்களைத் திறந்தான். முழங்கைகளை ஊன்றி நிமிர்ந்து வார்டை ஆவலுடன் நோட்டமிட்டான். ஸ்தெபான் இவானவிச்சை நோக்கி எதற்காகவோ கண்சிமிட்டினான் – ‘வாழ்க்கை எப்படி, மோசமில்லையே’ என்று கேட்பது போல. பின்பு கட்டைக் குரலில் இறுமினான். அவனது கனத்த உடலில் பலத்த அடிபட்டிருந்தது, அதனால் அவனுக்குக் கொடிய வலி உண்டாயிற்று என்பது தெரிந்தது. ஊதிப்போயிருந்த இந்தப் பருத்த மனிதனை முதல் பார்வையிலிருந்தே மெரேஸ்யெவுக்கு எதனாலோ பிடிக்கவில்லை. இரண்டு ஊழியர்களும் மருத்துவத்தாதிகளும் சேர்ந்து முயன்று மிகுந்து சிரமத்துடன் அவனைத் தூக்கிக் கட்டிலில் கிடத்தியதை மெரேஸ்யேவ் பகைமையுடன் கவனித்தான். புதியவனின் அடிமரம் போன்ற காலை ஊழியர்கள் எக்கச்சக்கமாகப் புரட்டியபோது அவனது முகம் திடீரென்று வெளிறியதையும் குப்பென்று வியர்த்துவிட்டதையும் வெளிறிய உதடுகள் வேதனையுடன் சுளித்ததையும் அலெக்ஸேய் கண்டான். ஆயினும் புதியவன் பற்களை நெருநெருக்க மட்டுமே செய்தான்.

கட்டிலில் கிடத்தப்பட்டதும் அவன் கம்பளி அடித் துணியின் ஓரத்தைக் கம்பளி விளிம்புக்கு வெளியே ஒழுங்காக இழுத்துவிட்டான், தன்னுடன் எடுத்துவரப்பட்ட புத்தகங்களையும் குறிப்பு நோட்டுக்களையும் சிறு மேஜை மேல் அடுக்கி வைத்தான், மேஜையின் அடித்தட்டில் பற்பசை, ஒடிகொலொன், சவர சாதனங்கள், சோப்புப் பெட்டி முதலியவற்றைக் கச்சிதமாக வைத்தான். பின்பு தன்னுடைய இந்த வேலைகளை நிர்வாக நோக்குடன் பார்வையிட்டான். அக்கணமே தான் வசதியாக ஏற்பாடு செய்துகொண்டதாக உணர்ந்தவன்போல, அதிர்ந்து ஒலிக்கும் கட்டைக்குரலில் முழங்கினான்:

“எங்கே, அறிமுகம் செய்து கொள்வோம். ரெஜிமெண்டுக் கமிஸார் ஸெம்யோன் வரபியோவ் நான். அமைதியான ஆள், புகை குடிக்காதவன். உங்கள் குழுவில் என்னைச் சேர்த்துக் கொள்ள வேண்டுகிறேன்.”

வார்டில் இருந்த மற்றவர்களை நிதானமாக, ஆர்வத்துடன் பார்வையிட்டான். அவனுடைய குறுகிய, பொன்னிறமான, மிகவும் உன்னிப்புள்ள விழிகள் தன்னைக் கூர்ந்து ஆராய்வதை மெரேஸ்யேவ் கண்டு கொண்டான்.

“நான் உங்களுடன் கொஞ்ச காலமே இருப்பேன். யாருக்கு எப்படியோ தெரியாது, ஆனால், எனக்கு இங்கே படுத்துக்கிடக்க நேரம் இல்லை. என் குதிரைப்படையினர் என்னை எதிர்பார்த்திருக்கிறார்கள். இதோ பனிக்கட்டி அகன்று விடும், பாதைகள் வளரும் – அவ்வளவுதான், நான் புறப்பட்டுவிடுவேன்.”

படிக்க:
மீண்டும் கும்பல் வன்முறைகளைத் தொடங்கிய இந்துத்துவ கும்பல் !
பாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன ?

“நாங்கள் எல்லோருமே இங்கே கொஞ்சகாலந்தான் இருப்போம். பருவநிலை சீர்பட்டதுமே நாங்களும் புறப்பட்டு விடுவோம்… ஐம்பதாவது வார்டுக்கு, கால்களை முன்னே நீட்டியவாறு” என்று சுவர்புறம் ஒரேடியாகத் திரும்பிக்கொண்டு பதில் சொன்னான் குக்கூஷ்கின்.

மருத்துவமனையில் ஐம்பதாவது வார்டு இருக்கவில்லை. நோயாளிகள் சவ அறையைத் தங்களுக்குள் அப்படி அழைத்தார்கள். கமிஸாருக்கு இதைப் பற்றித் தெரிந்திருக்க முடியாது எனினும் இந்தக் கிண்டலின் ஏக்கம் நிறைந்த அர்த்தத்தை அவர் சட்டெனப் புரிந்துகொண்டார். இதற்காக அவர் வருத்தப்பட்டுக் கொள்ளவில்லை. குக்கூஷ்கினை வியப்புடன் நோக்கி, “உங்களுக்கு என்ன வயது, அருமை நண்பரே? அட தாடியே, தாடியே! வேளைக்கு முன்பே ஏனோ முதுமை அடைந்துவிட்டீர்கள் நீங்கள்” என்று மட்டுமே கூறினார்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க