சுதந்திர இந்தியாவின் முதல் அரசியல் கொலையான காந்தியைக் கொன்ற இந்து பயங்கரவாதி கோட்சே-வை கொண்டாடத் தொடங்கியிருக்கிறது சங்க பரிவாரக் கும்பல்.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிகழும் கோட்சே கொண்டாட்டங்கள், மீதமிருக்கும் ஐந்தாண்டுகளில் வெகுமக்கள் கொண்டாட்டமாக மாற்றப்படலாம். அதற்குரிய எத்தனிப்புகள் வெளிப்படையாகவே புலப்படுகின்றன.

காந்தியவாதிகள் எந்தப் புள்ளியிலிருந்து விலகினார்கள்? சமூகத்தில் செல்வாக்குடன் இருந்த காந்தியம் தனது செல்வாக்கை இழந்தது எப்படி? காந்தியின் பேரன் துஷார் காந்தி இதற்கு பதில் தேட முயற்சித்திருக்கிறார்.

காந்தியின் 150-வது பிறந்த நாளைக் கொண்டாட இருக்கும் வேளையில், இந்தியாவைப் பிரிக்கும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்துக்கு எதிராக போராட வேண்டும் என்கிறார் காந்தியின் கொள்ளுப் பேரனின் மகனான துஷார் காந்தி.

துஷார் காந்தி

காந்தியின் மனைவியான கஸ்தூரிபா காந்தியின் 150-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் போர்பந்தரில் நடந்த இரண்டு நாள் நிகழ்ச்சியில் துஷார் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், காந்திய தத்துவத்தை நம்பும் காந்தியவாதிகளுக்கும் காந்தியின் பணியாளர்களுக்கும் வேறுபாடு உள்ளது என்றார்.

காந்தியவாதிகள் நடுநிலையாக இருக்கலாம். ஆனால், காந்தியின் பணியாளர்கள் என நம்புகிறவர்களால் அப்படி இருக்க முடியாது. காந்தி எந்த தத்துவத்துக்கு ஆதரவாக நின்றாரோ அதை அச்சுறுத்தும் ஆர்.எஸ்.எஸ்.-ன் நிலை மேலோங்கியுள்ள நிலையில் அவர்கள் அப்படி இருக்க முடியாது எனவும் துஷார் காந்தி பேசினார்.

“நான் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளை வெறுக்கவில்லை. ஆனால், ஆர்.எஸ்.எஸ்.-ஐ எதிர்க்கிறேன். நாட்டை பிளவுபடுத்தும் அந்த சிந்தாந்தத்தை எதிர்க்கிறேன். மற்றவர்கள் அதைச் செய்யவில்லை என நான் சொல்லவில்லை. நாம் அவர்களையும்தான் எதிர்க்கிறோம். நாம் போராட வேண்டும்; இல்லையெனில் நாம் காந்தியின் பணியாளர்கள் என நம்மை அழைத்துக் கொள்வதில் பொருள் இல்லை” என அவர் பேசினார்.

காந்தியவாதிகள், ஜனநாயகத்தைக் காக்கும் பணியில் தங்களுடைய பங்கை செலுத்த வேண்டும் என்று சொன்ன அவர், “மக்கள் வருவார்கள், போவார்கள். உறுதியான ஜனநாயகத்தில், சின்னங்கள் என்னை அச்சுறுத்தமுடியாது. சர்வாதிகாரியாக மாறிய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை நாம் வீட்டுக்கு அனுப்பினோம். அந்த உறுதி இன்றும் குறையவில்லை என நம்புகிறேன். ஆனால், அந்த உறுதி, பலவீனப்பட்டுள்ளது. அதை நாம் மீண்டும் உறுதியாக்க வேண்டும்” என உரையாற்றினார்.

படிக்க:
♦ காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் கோட்சே – ஆதாரங்கள்
♦ தாகூருக்கு காவி வண்ணம் பூசும் சங் பரிவாரங்கள் !

நாக்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆர்.எஸ்.எஸ். தலைமைதான் காந்தியைக் கொன்றது என்கிற துஷார், “Let’s Kill Gandhi என்ற என்னுடைய நூலில் காந்தியைக் கொல்ல காரணம் என நாதுராம் கோட்சே சொன்ன குற்றச்சாட்டுக்களை அம்பலப்படுத்தியிருக்கிறேன். அதே குற்றச்சாட்டுக்களை சங் பரிவாரங்கள் இப்போதும் சொல்கின்றன. அவர்களுக்கு மறுப்பு சொல்லியே ஆக வேண்டும். என்னுடைய ஒவ்வொரு உரையிலும், கோட்சே காந்தியை கொன்றவர் என்றால், அந்தக் கொலையைச் செய்ய ஆணையிட்டது ஆர்.எஸ்.எஸ். என்பதை மறக்காமல் சொல்வேன்” என வெளிப்படையாகவே ஆர்.எஸ்.எஸ். மீது கடும் விமர்சனங்களை வைத்திருக்கிறார்.

நாட்டின் தந்தையான காந்தியின் பணிகளை இளம் தன்னார்வலர்களுக்கு காந்திய கல்வி நிறுவனங்கள் பணிக்க வேண்டும் எனவும் துஷார் கோரிக்கை வைத்தார். “பாபு மற்றும் பா (கஸ்தூரிபா)வின் 150-வது பிறந்த ஆண்டு விழாவை நாம் எப்படி வீணாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பது குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும்” எனவும் அவர் பேசினார்.

காந்தி பிறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு ஏப்ரல் 11, 1869-ம் ஆண்டு பிறந்த கஸ்தூரிபாவை, காந்தியின் மனைவி என்று மட்டுமே நினைவு கூர்கிறோம்; கஸ்தூரிபாவிற்கு வரலாற்றில் போதிய இடம் தரப்படாமல் போய்விட்டது.

“கஸ்தூரிபா எதற்காக நின்றாரோ அதை நாம் மறந்து கொண்டிருக்கிறோம். என்னுடைய பெற்றோர் அவருடைய சரிதையை எழுதினார்கள். அவர்கள் கஸ்தூரிபாவை காந்தியின் மனைவியாக மட்டும் எழுதியதற்காக நான் எதிர்த்தேன். 1942-ம் ஆண்டு நடந்த “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் காந்தியின் உரையை படித்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலேயே அவர் மரணமும் அடைந்தார். அவர் வீரமரணம் அடைந்தவர். ஆனால் அவரை அப்படி நாம் அங்கீகரிக்கவே இல்லை. அரசு எதுவும் செய்யவில்லை என்பதல்ல, காந்தியர்கள், மோகன்வாதிகளாக மட்டுமே இருந்தார்கள் என்பதுதான் காரணம்” எனவும் குற்றம்சாட்டினார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய வரலாற்றாசிரியர் நரோத்தம் பாலன், காந்தியர்கள் தங்களுடைய பாதையிலிருந்து விலகியதாலேயே சமூகத்தில் அவர்களால் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என்றார். காந்திய கல்வி நிறுவனங்களோடு தொடர்புடைய அவர்களை தங்களுடைய ஆன்மாவை தேடிக் கண்டடையும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

வினவு செய்திப் பிரிவு
கட்டுரை : Gopal Kateshiya
அனிதா
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க